சோனாகாச்சி - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7604
அவளுடைய தலைமுடிக்குள் தன்னுடைய முகத்தை மறைத்துக் கொள்வதற்கு... அவளுடைய இருமல் சத்தத்தைக் கேட்பதற்கு... அவளுடைய நெருக்கத்தை மெதுவாக அனுபவித்து சந்தோஷப்படுவதற்கு...
கல்கத்தா முற்றிலுமாக மாறிப்போய் விட்டதைப்போல அவனுக்குத் தோன்றியது. நன்கு தெரிந்த கட்டடங்களுக்கு பதிலாக ஃப்ளாட்டுகள் எல்லா இடங்களிலும் உயர்ந்து நின்றிருந்தன. விலை மாதர்கள் இல்லத்தைச் சேர்ந்தவர்கள் தந்திருந்த முகவரியைத் தேடி அவன் சாயங்கால நேரத்தில் சிறிது நேரம் அலைந்து திரிந்தான். அமலா சொந்தமாக ஒரு வீட்டை வாங்கியிருக்க வேண்டும்; அவள் வசதி படைத்த ஒரு விலைமகளாக ஆகிவிட்டிருக்க வேண்டும். இவ்வாறு அவன் சிந்தித்தான்.
முன்பு சலவைத் தொழிலாளர்கள் வசித்துக் கொண்டிருந்த ஒரு காலனியில், துத்தநாகப் பட்டையால் மேற்கூரை வேயப்பட்ட ஒரு வீட்டில் அமலா வசித்துக் கொண்டிருந்தாள். வெளியே அழுக்கு படிந்த கோழியின் முடியும் மீனின் செதில்களும் இறைந்து கிடக்கும் வாசல். மேலும் கீழும் மூச்சு விட்டுக் கொண்டிருக்கும் மெலிந்து போன நாய்.
“அமலா!'' அவன் அழைத்தான்.
“யார் அது?'' உள்ளேயிருந்து ஒரு பெண்ணின் குரல்.
அமலா கண்களைச் சுருக்கிக்கொண்டு அவனை உற்றுப் பார்த்தாள்.
“என்னை மறந்து விட்டாயா? ராஜேந்திரன்... என்னுடன் சேர்ந்து படுத்திருப்பது ஒரு இளம் வயது தோழியுடன் சேர்ந்து படுத்தி ருப்பதைப்போல இருக்கிறது என்று நீ சொன்னது ஞாபகத்தில் இல்லையா?'' அவன் கேட்டான்.
“நான் என்னுடைய வியாபாரத்தை நிறுத்திவிட்டேன். பழைய கதைகள் எனக்கு ஞாபகத்தில் இல்லை.'' அவள் சொன்னாள்.
“வியாபாரம்! நான் வியாபாரத்திற்காக வரவில்லை. வெறுமனே உனக்கு அருகில் படுத்திருப்பதற்காக. உன்னைத் தொடாமல் படுப்பேன்- உன் தலை முடியின் கேசரஞ்சன் தைலத்தின் வாசனையை முகர்ந்து கொண்டு...'' அவன் மேலும் மூச்சு விட்டுக் கொண்டே சொன்னான்.
அமலா அதிகமாக வெளிறிப் போய் காணப்பட்டாள். அவளுடைய தோலுக்குக் கீழே விளக்குகள் பற்றி எரிந்து கொண்டிருப்பதைப்போல அவனுக்குத் தோன்றியது. அவளுடைய கைகளில் நரம்புகள் புடைத்துக் கொண்டிருந்தன.
“என்னை உள்ளே நுழைய அனுமதி.'' அவன் சொன்னான்.
அமலா கதவை நன்கு திறந்தாள். அவள் ஒரு கசங்கிய பருத்திப் புடவையை அணிந்திருந்தாள். இரவிக்கை அணியவில்லை.
“அப்பாவி மனிதா... உங்களுக்கு என்ன பிரயோஜனம்?'' அமலா சிரித்தாள்.
“பிரயோஜனமா?'' அவன் கேட்டான்.
“நான் எப்போதோ வியாபாரத்தை நிறுத்திவிட்டேன். எனக்கு டி.பி. நோய் வந்திருச்சு. அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் இரண்டு இடுப்பு எலும்புகளை நீக்கிட்டாங்க. அதற்குப் பிறகும் நான் நிறுத்தாமல் இருமிக் கொண்டு இருக்கிறேன்.'' அவள் சொன்னாள்.
“எனக்கு அருகில் வா.'' அவன் சொன்னான். பந்தயக் குதிரையைப் போல மேலும் கீழும் மூச்சு விட்டவாறு அவள் அவனை நெருங்கினாள்.
“இனி என்னால் எதுவும் செய்ய முடியாது. டி.பி. நோய் வந்து, நான் மிகவும் தளர்ந்து போய்விட்டேன்.'' அவள் சொன்னாள்.
மறுநாள் சூரியன் உதயமாகும் வரை அவன் அந்தப் பெண்ணைக் கட்டிப்பிடித்துக் கொண்டு படுத்திருந்தான். எனினும், அவளுக்கு அவன் ஒரு அறிமுகமற்ற மனிதனாகவே இருந்தான்.
“எனக்கு உங்களுடைய முகம் ஞாபகத்திலேயே இல்லை.'' அவள் ஒரு கவலையுடன் சொன்னாள்.
“நீ யாருடைய முகத்தையாவது ஞாபகத்தில் வைத்திருக்கிறாயா?'' அவன் கேட்டான்.
“இல்லை... எனக்கு யாருடைய முகமும் ஞாபகத்தில் இல்லை.'' கறுத்த பற்களை வெளிப்படுத்திக் கொண்டே அந்த அப்பாவிப் பெண் சொன்னாள்.