சோனாகாச்சி
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7605
கணவன் மீது உயிரையே வைத்திருப்பவளும் வசதி படைத்தவளுமான ஒரு மனைவியும், ஏழு வயது கொண்ட ஒரு மகனும் அவனுக்கு இருந்தார்கள். சண்டை, சச்சரவு எதுவுமே இல்லாத வீட்டுச் சூழ்நிலை... எனினும், ஞாயிற்றுக்கிழமை மதிய தூக்கத்தை விட்டு கண் விழித்து எழுந்தபோது, தனக்கு அறிமுகமாகியிருந்த ஒரே விலைமகளான அமலாவை அவன் நினைத்துப் பார்த்தான். கல்கத்தாவிற்குப் பயணம் செய்து, இரண்டு நாட்களாவது அவளுக்கு அருகில் இருக்க வேண்டுமென்று அவன் மிகவும் விருப்பப்பட்டான்.
தூங்கிக் கொண்டிருந்த தன் மனைவியின் சதைப்பிடிப்பான கை, கால்களிலிருந்து வேகமாக கண்களை எடுத்துக்கொண்ட அவன், அமலாவின் மெலிந்த உடலின் அசாதாரணமான அழகை, ஒரு வேதனையுடன் நினைத்துப் பார்த்தான். வெயில் பட்டு வாடிப்போன ஆம்பல் மலரின் தண்டைப் போல கருத்து தளர்ந்துபோய் காணப்பட்ட அந்தக் கைகளில் தான் ஓய்வு எடுப்பதை மனதில் நினைத்துப் பார்த்தபோது, அவனுடைய அடிவயிறு சந்தோஷம் கொண்டு வேதனை எடுத்தது. “ஓ அமலா... என் அமலா...'' அவன் முணுமுணுத்தான்.
அவனுடைய மனைவியின் கண்கள் திறந்தன. பயமே இல்லாத கண்கள்... சந்தேகங்கள் இல்லாத கண்கள். “என்ன சொன்னீங்க?'' அவள் கேட்டாள். வெட்கத்துடன் பாவாடையை இறக்கிவிட்டுக் கொண்டு அவள் தன் கணவனைப் பார்த்துப் புன்னகைத்தாள். இனிப்பான கனிகள் வளர்ந்திருக்கும் தோட்டத்தைப்போல அவள் இருந்தாள். மரத்தில் காற்றும் வெயிலும் பட்டு பழுத்த ஒரு மாம்பழம்.
“நான் கல்கத்தாவிற்குப் போகணும். ஒரு வாரம் கழித்துத்தான் திரும்பி வருவேன்.'' அவன் உறுதியான குரலில் சொன்னான்.
“ம்... வர்றப்போ நானும் மகனும் சாப்பிடுவதற்கு ரசகுல்லாவும் சந்தேஷும் வாங்கிக் கொண்டு வரணும்.'' மனைவி தூக்கத்தின் சாயலுடன் முணுமுணுத்தாள்.
அவன் அமலாவை நினைத்துப் பார்த்தான்.
கல்கத்தாவிலிருந்து இடம் மாற்றம் கிடைத்த நாளன்றுதான் முதன் முறையாக ஒரு விலை மகளிர் இல்லத்திற்குச் செல்ல வேண்டும் என்று அவன் முடிவெடுத்தான். பெங்காலி பெண்கொடிகளின் வசீகரத் தன்மையைப் பற்றி அவனுடைய நண்பர்கள் மது அருந்தும் வேளையில் பாராட்டிப் பேசுவதை அவன் பல நேரங்களில் கேட்டிருக்கிறான். ஒரு முறையாவது அவர்களின் செயலைப் பின் பற்ற வேண்டும் என்று அவனுக்குத் தோன்றியது. கன்னித் தன்மையை விடாமல் இருக்கும் ஆணுக்கு ஒரு குற்ற உணர்வு உண்டாவதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. யாரையும் துணைக்கு அழைக்காமல் அவன் சோனாகாச்சிக்குச் சென்றான். கையில் ஆயிரத்து முந்நூறு ரூபாய்கள் இருந்தன. அமலாவைச் சுட்டிக் காட்டியபோது, அங்கிருந்த வயதான பெண் சொன்னாள்: “முந்நூறு தந்தால் போதும்.''
அவளுடைய தலை முடியின் வாசனையைப் பற்றிக் கூறியபோது அமலா சிரித்தாள்.
“நான் கேசரஞ்சன் தைலத்தைத் தேய்க்கிறேன். அதன் வாசனைதான்.'' அவள் சொன்னாள். “காலை வரை என்னுடன் இருக்க வேண்டு மென்றால், கிழவி ஆயிரத்து இருநூறு ரூபாய் வாங்குவாங்க.'' அமலா சொன்னாள்.
அவன் பணத்தை எண்ணிக் கொடுத்தான். அதை கையில் வாங்கிக் கொண்டு அமலா கிழவியைத் தேடிச் சென்றபோது, அவன் படுக்கையில் எழுந்து உட்கார்ந்து கொண்டு சுற்றிலும் பார்த்தான். நிலைக் கண்ணாடி தொங்கிக் கொண்டிருந்த சுவர்... செயற்கை ரோஜா மலர்கள்... கொசுவின் ரத்தக்கறை படிந்த படுக்கை விரிப்பு... அவனுக்கு தன்மீதே வெறுப்பு உண்டானது.
“கொசு அல்ல... மூட்டைப் பூச்சி... என் உடலின் பல இடங்களிலும் தடித்துப் போய் இருப்பது மூட்டைப் பூச்சி கடித்ததுதான்.'' அமலா சொன்னாள். பொழுதுபோக்கிற்காக தான் ஏதோ சொன்னோம் என்பதைப்போல அவள் குலுங்கிக் குலுங்கி சிரித்தாள். பல்லாயிரக் கணக்கான மூட்டைப் பூச்சிகளும் பேன்களும் தன்னுடைய தலை முடியிலும் உடலிலும் ஓடித் திரிவதைப்போல அந்த நிமிடத்தில் அவனுக்குத் தோன்றியது. எனினும், அவன் அங்கேயேதான் படுத்தான். காலையில் வானம் வெளுப்பது வரை அவளுடைய கூந்தலை வாசனை பிடித்துக்கொண்டு அவளுடைய அணைப்பிற்குள் சிக்கிக்கொண்டு படுத்திருந்தான்.
“இங்கு சாதாரணமாக வருபவர்கள் எல்லாரும் செந்நாய்கள்தான். என்னைக் கடித்து ஒரு வழி பண்ணி விடுவார்கள். உங்களுடன் சேர்ந்து கொண்டு இப்படிப் படுத்திருக்குறப்போ, என் இளம் வயது தோழியான மீராவுடன் சேர்ந்து நான் படுத்துக்கிடப்பதைப்போல தோன்றுகிறது'' என்றாள் அமலா.
அவன் ஒரு ஆணாகத்தானே அமலாவை நெருங்கினான்? அவன் தேடிக் கொண்டிருந்தது ஒரு இளம் வயது தோழியை மட்டுமா? எப்போதோ மரணத்தைத் தழுவிவிட்ட அவனுடைய அன்னையின் தலைமுடியையா அவன் வாசனை பிடித்து அறிந்து கொண்டான்?
“உங்களுக்கு பெரிய ஒரு தொகை கையை விட்டு இழக்க நேரிட்டுவிட்டது. நீங்கள் ஏன் வெறுமனே படுத்து சிந்தித்துக் கொண்டிருக்க வேண்டும்?'' அமலா கேட்டாள். அவளுடைய பற்கள் வெற்றிலை போட்டது காரணமாக இருக்க வேண்டும்- சிவந்து காணப்பட்டது. நெற்றியில் வைக்கப்பட்டிருந்த குங்குமம் வியர்வையில் நனைந்துவிட்டிருந்தது. இடையில் அடிக்கொரு தரம் அவள் இருமினாள்.
“எனக்கு சயரோகம் எதுவும் இல்லை. பயப்பட வேண்டாம். போன வாரம் மூன்று நாட்கள் காய்ச்சல் இருந்தது. இருமல் முழுமையாக விட்டுப் போகவில்லை.'' அவள் சொன்னாள். காலையில் அங்கிருந்து கிளம்பியபோது, ஜன்னலுக்கு அருகில் அமலாவின் முகம் ஒரு லில்லி மலரைப்போல மலர்ந்து நின்று கொண்டிருப்பதை அவன் பார்த்தான். தெருவின் கடைசி வரை அவளுடைய கண்கள் அவனையே தொடர்ந்து கொண்டிருந்தன. இனி வருவீர்கள் அல்லவா என்று அவள் கேட்க வில்லை. கேட்டிருந்தால், “இல்லை'' என்று கூறுவதற்கு அவனிடம் தைரியம் இல்லை.
அதற்குப் பிறகு அவனுடைய உத்தியோகப் பதவி, விலை மகளிர் இல்லங்களுக்கோ மது அருந்தும் இடத்திற்கோ செல்வதற்கு முடியாத நிலையை உண்டாக்கியது. அவன் எல்லாருக்கும் தெரியக்கூடிய ஒரு ஆளாக ஆகிவிட்டான். அவனுடைய முகம் வார இதழ்களிலும் பத்திரிகைகளிலும் வர ஆரம்பித்தது.
அவனுடைய மனைவியின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தொழிற்சாலைகளை நடத்தக் கூடியவர்களாக இருந்தார்கள். முற்றிலும் வேறுபட்ட ஒரு சூழ்நிலையில் பிறந்த அவனுக்கு, நல்ல குணத்தைக் கொண்டவளும், அழகான தோற்றத்தைக் கொண்டவளுமான ஒரு பெண்ணை தனக்கு திருமணம் செய்து தருவார்கள் என்று அவன் எதிர்பார்க்கவேயில்லை. திருமண வாழ்க்கை சண்டை, சச்சரவே இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அவன் கடுமையாக முயற்சித்தான். முயற்சி வெற்றி பெற்றது.
எனினும், அந்த ஞாயிற்றுக்கிழமை சுகமான தூக்கத்திலிருந்து கண் விழித்து எழுந்தபோது, அமலாவை மீண்டும் கட்டிப்பிடித்து அணைக்கவில்லையென்றால் தன்னுடைய பிறவி வீணாகிவிடும் என்று அவன் பயந்தான். அவளுடைய மெலிந்த மணிக்கட்டில் விரல் நுனிகளை வைத்து அழுத்துவதற்கு...