சரசு
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 9676
பழைய ப்ளாட்ஃபாரத்தில் அந்த அளவுக்கு அதிக கூட்டமில்லை. கடைகள் நடத்துபவர்களும், உணவு விடுதிகள் நடத்திக் கொண்டிருந்தவர்களும், நடந்து கொண்டு விற்பனை செய்து கொண்டிருந்தவர்களும் புதிய ப்ளாட்ஃபார்ம் கட்டியவுடன் அங்கு மாறிவிட்டிருந்தார்கள். சிதிலமடைந்து போயிருந்த சிமெண்ட் தரையில் முன்பு எப்போதோ இறக்கப்பட்ட மீன் கூடைகளிலிருந்து ஒழுகிய கறுப்பு திரவம் படர்ந்து படிந்திருந்தது. அதைச் சுற்றி ஈக்கள் பறந்து கொண்டிருந்தன.
அருகிலிருந்த கான்க்ரீட்டாலான பெஞ்சில் காக்கிசட்டை அணிந்த ஒரு மனிதன் கவிழ்ந்து படுத்து உறங்கிக் கொண்டிருந்தான். அவன் ஒருவேளை இரயில்வேயில் பணிபுரிபவனாக இருக்கலாம். அதைத் தாண்டி இருந்த எல்லா பெஞ்சுகளும் ஆள் யாரும் இல்லாமல் வெறுமனே கிடந்தன.
பாசஞ்சர் வண்டி பழைய பிளாட்ஃபாரத்தில்தான் வந்து நிற்கும். அதில் ஏறக்கூடிய பயணிகள் மிகவும் குறைவாக இருந்தார்கள். பயணிகள் அறையில் வேண்டுமென்றால் போய் உட்கார்ந்திருக் கலாம். வேண்டாம். காலியாக கிடந்த ஒரு பெஞ்சில் சிறிய சூட்கேஸை வைத்தவாறு இரும்பாலான தூணுக்குப் பக்கத்தில் சிகரெட் புகைத்துக் கொண்டு அவன் நின்றிருந்தான்.
அவனுக்குத் தெரிந்தவர்கள் யாரும் அங்கு இல்லை. அந்த வகையில் அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். யாராவது பார்த்தால் எங்கு போகிறீர்கள்- எப்போது திரும்பி வருவீர்கள்- என்ன விசேஷம் என்றெல்லாம் கேட்கத்தான் செய்வார்கள்.
எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும் மனிதர்களுக்கு எப்போதும் மற்றவர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதில் மட்டும் அதிக ஆர்வம் இருந்துகொண்டே இருக்கும்.
அந்தப் பக்கத்தில் இருந்த புதிய ப்ளாட்ஃபாரத்தில் மெயில் வண்டியில் பயணம் செய்யப் போகிற பயணிகளின் ஆரவாரம் அதிகரித்துக் கொண்டேயிருந்தது.
அவன் தன்னுடைய மனதை தானே அமைதியாக இருக்கும்படி திட்டிக் கொண்டிருந்தான். அப்படியே யாராவது பார்த்தால்தான் என்ன? இன்றும் நேற்றும் மட்டுமா அவன் பயணம் செய்து கொண்டிருக்கிறான்? அவன் பயணம் செய்கிறான். போகும்போது ஏதாவதொரு சிறிய ஸ்டேஷனில் தனக்குத் தெரிந்த யாராவது ஒருவரைப் பார்க்கிறான். பேசுகிறான். சில நேரங்களில் அவன் மட்டும் தனியே பயணம் செய்யக்கூடிய சூழ்நிலையும் உண்டாகிறது. அதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை. சந்தேகப்படுவதற்கும் தான்.
வேண்டுமென்றால் உண்மையைச் சொல்லலாம்:
"சரஸ்வதி என் கஸின் தான். அவ பஞ்சாயத்து அலுவலகத்துல க்ளார்க்கா இருக்கா.’’
வேண்டுமென்றால்-
முன்பொருமுறை புகைவண்டியில் அவர்கள் ஒன்றாகப் பயணம் செய்திருக்கிறார்கள்.
கல்லூரியில் படிக்கிற காலத்தில் மாமா இடமாற்றம் கிடைத்து நகரத்திற்கு வந்தார். சரஸ்வதியின் படிப்பு முடிந்த வருடம் அது. குதிரை வண்டிக்காரர்கள் வண்டிகளை நிறுத்தும் இடத்திற்குப் பக்கத்தில் செட்டிகள் வசிக்கக்கூடிய வீடுகளுக்கு நடுவில் இருந்த ஒரு பெரிய வீட்டில் அப்போது அவன் இருந்தான்.
உதட்டில் திரைப்படப் பாடல்களும் மனதில் ஷ்யாமளா மேனனைப் பற்றிய இனிய கனவுகளுடனும் அவன் நடந்து திரிந்த நாட்கள் அவை. எனினும், சாயங்கால நேரம் வந்துவிட்டால் முகத்தைக் கழுவி, சிறிது பவுடர் பூசி சைக்கிளுடன் அவன் கிளம்பிவிடுவான்.
"எங்கே?’’
"சும்மா சுத்திட்டு வருவேன்.’’
மாமா எக்சைஸ் அலுவலகத்தில் காவலாளியாக இருந்தார். அப்போது "மாமாவோட வீடு வரை’’ என்று தைரியமாகக் கூற முடியவில்லை.
எட்டு மணிக்குப் பிறகுதான் ஹாஸ்டலுக்குத் திரும்பிச் செல்வான்.
மாமா மாலை நேரத்தில் வீடு திரும்புவார். காக்கி ஆடைகளை மாற்றிக் கொண்டே அவர் கேட்பார்.
"யாருடி அது?’’
"அது... ராஜன்.’’
தொண்டை வறண்டு போய்விடும். எக்சைஸ் அலுவலகத்தில் காவலாளியாகப் பணியாற்றினாலும் மாமா ஒரு முரட்டுத்தனமான மனிதர் என்பதை அவன் நன்கு அறிவான். மாமா என்ன கூறுவார்? முன்பு எப்போதும் இல்லாத ஒரு பாசம் இப்போது எங்கிருந்து வந்தது?
அத்தை சாப்பிடுவதற்கு அவனை அழைத்தாலும் அவன் செல்ல மாட்டான். அத்தையிடமும் சந்திரனிடமும் விடை பெற்றுக் கொண்டு கிளம்பி விடுவான். உள்ளேயிருக்கும் இருப்பதிலேயே விசாலமான ஒரு அறையின் சுவரில் தலையைச் சாய்த்து வைத்துக்கொண்டு, கால்களை நீட்டியவாறு மாமா சொருகிய கண்களுடன் படுத்திருப்பார். கஞ்சாவின் மணம் கலந்திருக்கும் புகை அந்த அறையில் மேகத்தைப்போல தங்கியிருக்கும்.
போகும்போது பின்னால் திரும்பி அவன் ஒருமுறை பார்ப்பான்.
கிராமத்தில் நடக்கும் திருவிழாவைப் பார்ப்பதற்காகப் பிள்ளைகள் புறப்பட்டார்கள். தேங்காய் எண்ணெய் கடத்திக் கொண்டு போனதைப் பிடித்த வழக்கில் மாமா நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல வேண்டும். அதனால் கிராமத்திற்கு அவர் போக முடியாது. அப்போது அத்தை வழி கண்டுபிடித்தாள்.
"ராஜனுக்கு சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை தானே? ராஜன் பிள்ளைகளை அழைச்சிட்டுப்போய் விட்டுட்டு வரட்டும்.’’
முதலில் தயக்கமாகத்தான் இருந்தது. பார்த்தால் வெறுப்பு வருகிற இந்தப் பிள்ளைகளுடன் எப்படிப் போவது? ஆனால், முடியாது என்று கூறவும் முடியவில்லை. சரசுவும் இருக்கிறாள். இரண்டாகப் பிரிக்கப்பட்ட கூந்தலில் பன்னீர் மலர்களைச் சூடி தொங்கவிட்டு, கண்ணுக்கு மையிட்டு காட்சியளிக்கும் ஷ்யாமளாவை மனதில் நினைத்துக் கொண்டிருந்த அந்தக் காலகட்டத்தில் சரசுவும் இருந்தாள். எப்போதும் புன்னகைத்துக் கொண்டிருக்கும் சரசு.
நான்கு பேரும் போவதற்குத் தயாராக இருந்தார்கள். கடைசியில் புறப்பட வேண்டிய நேரத்தில் சரஸ்வதி மட்டும் போவதாக முடிவானது.
குதிரை வண்டியில் ஏறி உட்கார்ந்தபோது எல்லாரும் பார்த்த வாறு நின்றிருந்தார்கள். தான் நல்லவன் என்பதை எல்லாருக்கும் காட்ட வேண்டும் என்பதற்காக அவன் முடிந்தவரை விலகியே இருந்தான்.
பயணச்சீட்டு எடுக்க வேண்டிய நேரம் வந்தபோது ஒரு எண்ணம் மனதில் தோன்றியது. கையில் மாமா தந்ததற்கு மேலே கொஞ்சம் பணம் இருந்தது. இன்டர்க்ளாஸ் பயணச்சீட்டு வாங்கினான்.
மூன்று மணி நேரங்கள் நீண்டிருந்த பயணத்தில் இரண்டு பேர் மட்டும் தனியாக இருந்தார்கள். கடன் வாங்கியிருந்த கூலிங்கிளாஸ் வழியாக தாவணி அணிந்திருந்த சரசுவை அவளுக்குத் தெரியாமல் பார்த்தவாறு மனதில் உற்சாகத்துடன் அவன் சிகரெட் புகைத்து, வரைந்து கறுப்பாக்கிய தன் மீசையைத் தடவிக்கொண்டே பந்தாவாக உட்கார்ந்திருந்தான். ஒவ்வொரு ஸ்டேஷனை வண்டி அடையும்போதும் அவன் வெளியே எட்டிப் பார்ப்பான். தனக்குத் தெரிந்தவர்கள் யாராவது வெளியே இருக்கிறார்களா என்பதைப் பார்ப்பதற்குத்தான்.
இப்போதும் ஞாபகத்தில் இருக்கிறது. வெளுத்து மெலிந்து காணப்பட்ட ஒரு ரயில்வே அதிகாரி ஜன்னலுக்கு அருகில் நின்று சரசுவைப் பார்த்தார். அணிந்திருக்கும் ஆடைகளைக் கழற்றிப் பார்ப்பதைப் போன்ற ஒரு பார்வை. அதற்குப் பிறகுதான் அவர் அவனைப் பார்த்தார். அவர் பிறகு பல்லை இளித்துக் கொண்டே நடந்து சென்று தூரத்தில் நின்று கொண்டிருந்த ஒரு வெள்ளை கோட் அணிந்திருந்த மனிதனிடம் போய் என்னவோ மெதுவான குரலில் சொல்லிக் கொண்டிருந்தார்.