சரசு - Page 5
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 9676
வேகமாக வந்த ரிக்ஷாக்காரர்களையும் கூலிக் காரர்களையும் தாண்டி, இருபக்கங்களிலும் பார்க்காமல் அவர்கள் வெளியே வந்தார்கள்.
முதலில் பார்த்த வாடகைக் காரில் ஏறி உட்கார்ந்தபோது, சரசுவின் பெரியம்மாவின் வீடு அருகில்தான் இருக்கிறது என்பது ஞாபகத்தில் வந்தது. அங்கு போவதாகச் சொல்லிவிட்டுத்தான் அவள் வீட்டிலிருந்து கிளம்பியிருக்கிறாள்.
“எங்கே சார்?''
“டவுனுக்கு விடு.''
நகரத்தின் ஆரம்பத்தில் மேடாக இருக்குமிடத்தில் இருக்கும் நன்கு தெரிந்த ஹோட்டலை நெருங்கியவுடன் காரை நிறுத்தும்படி அவன் சொன்னான்.
வாடகைக்காரனிடம் தேவையில்லாமல் ஒரு பொய்யைச் சொன்னான்:
“ஒரு ஃபோன் பண்ணிட்டு வர்றேன்.''
கவுண்டருக்குப் பக்கத்தில் பணியாள் ஜான் நின்றிருந்தான். சாயங்காலம் வந்துவிட்டால் அவன் குடிக்க ஆரம்பித்து விடுவான். வந்திருப்பது யாரென்று தெரிந்து அவன் சிரித்தபோது மனம் குளிர்ந்த மாதிரி இருந்தது.
“அறை இருக்குல்ல?''
மேனேஜர் கேட்டார்:
"சிங்கிளா டபுளா?’’
“டபுள்.''
திரும்பி வந்து கார் கதவைத் திறந்து சரசுவிடம் அவன் சொன்னான்: “இறங்கு...''
ஹோட்டலின் மாடியிலும் அந்தப் பகுதியிலும் இருந்தவர்கள் தன்னை கவனிக்கலாம் என்பதையும் அவன் உணர்ந்திருந்தான். எங்கிருந்தோ ஒரு பெண்ணை அங்கு தள்ளிக்கொண்டு வருகிறான் என்று அவர்கள் நினைத்திருக்கலாம்.
படிகளில் ஏறி மாடியை அடைந்தபோது பணியாள் அறையின் கதவைத் திறந்து விட்டிருந்தான். உள்ளே நுழைந்து அவனிடம் பத்து ரூபாய் கொடுத்துவிட்டு சொன்னான்:
“அந்தத் தோல் பையையும் பெட்டியையும் எடுத்திட்டு வா. இதை மாற்றி வாடகைக்கார்காரன்கிட்ட எவ்வளவு கொடுக்கணும்னு கேட்டு கொடு.''
ஒல்லியான மூக்கையும் நெற்றியில் குறியையும் கொண்டிருந்த வளைந்து போயிருந்த அந்த மனிதன் தன்னுடைய ஓரக் கண்ணால் சரசுவைப் பார்ப்பதை தான் கவனிக்காதது மாதிரி அவன் காட்டிக் கொண்டான். ஜான் மனதில் கனக்கு போட்டிருப்பான். இரவின் பிற்பகுதி நேரத்தில் வாடகைக்கார்களில் "கூட்டிக் கொடுப்பவர்கள்’’ அழைத்துக் கொண்டு வரும் விற்பனைச் சரக்குகளுடன் அவன் சரசுவை மனதில் ஒப்பிட்டுப் பார்த்திருக்கலாம். யார்மீதோ அவனுக்கு கோபம் வந்தது.
“உட்காரு.''
அவள் அமைதியாக நாற்காலியில் உட்கார்ந்தாள்.
பெரியம்மாவின் வீட்டுக்குப் போகாததைப் பற்றி விளக்க மெதுவும் கொடுக்கவில்லை.
ஜான் திரும்பி வந்து மெத்தையின் விரிப்புகளை மாற்றினான்.
கடிகாரத்தைப் பார்த்தான். மணி ஏழு பத்து.
“ரெண்டு பேருக்கு சாப்பாடு.''
புத்தகத்தை விரித்தபோது சரியான பெயரையும் முகவரியையும் எழுதினான். கடைசி காலி இடத்தில் "குடும்பத்துடன்' என்றெழுதிச் சேர்த்தபோது, பணியாளின் முகத்தில் மீண்டும் மெல்லிய சிரிப்பு மலர்வதை அவன் பார்த்தான்.
“வேற எதுவும் வேண்டாமா சார்?''
“ம்... பீர் கொண்டு வா. குளிர்ச்சியான பீர்.''
மேஜைமீது புட்டிகளையும், இரண்டு கண்ணாடி டம்ளர்களையும் வைத்தபோது அவன் சொன்னான்:
“ஒரு டம்ளர் போதும்.''
அவன் கதவை அடைத்துவிட்டு வெளியே சென்ற பிறகு சரசுவிற்கு முதுகைக் காட்டியவாறு அவன் புட்டியைத் திறந்து டம்ளரை நிறைத்தான். நுரை வெளியே வழிந்தது.
தான் குடிக்கும் விஷயம் சரசுவிற்குத் தெரியுமா? ஒரே மூச்சில் டம்ளரை காலி செய்துவிட்டு, எதிர்பக்கமிருந்த மெத்தையில் வந்து உட்கார்ந்துகொண்டு அவன் சிகரெட்டைப் பற்ற வைத்தான்.
“இது வெறும் பீர்தான். உடம்புக்கு இதைக் குடிப்பதால் எந்த பிரச்சினையும் இல்ல...''
வெறுமனே ஒரு சமாதானம்... அதைக் கேட்டு அவள் சிரித்தாளா என்ன?
அவள் அவனைப் பற்றி மேலும் கொஞ்சம் தெரிந்து கொள்கிறாள். யாராலும் அவனை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. "சரசு, யாரும் யாரையும் புரிந்துகொள்ள முடியல.’’ அவன் தனக்குள் கூறிக்கொண்டான்: "இந்த அழகான ஹோட்டல் அறையில் நீயும் நானும் மட்டும் தனியா இருக்கோம். ஒரு நேரத்தில் உன் கனவுகளின் மையமாக இருந்த (அப்படி நான் இருந்தேனா?) மனிதன் உனக்கு இதோ முழுமையா கிடைச்சிருக்கு. சில மணி நேரங்கள்னாகூட இந்த மவுனம் என்னை பாடாய்ப் படுத்துது.’’
டம்ளர் மீண்டும் நிறைந்து, காலியாயின. புட்டிகள் வாசல் வழியாகப் பயணம் செய்தன.
சாதம் வந்தபோது அவன் சொன்னான்:
“நீ சாப்பிடு.''
“ராஜு அத்தான், நீங்க சாப்பிட்ட பிறகு நான் சாப்பிடுறேன்.''
இது வீடு அல்ல. சடங்குகள் இங்கு தேவையில்லை.
“சாப்பிடு.''
அவள் சாப்பிட உட்கார்ந்தாள். பிரம்பால் செய்யப்பட்ட சிறிய டீப்பாயை கட்டிலுக்குப் பக்கத்தில் நகர்த்திய அவன் ஒவ்வொரு மடக்காக குடித்து உள்ளே தள்ளினான்.
“முடிஞ்சதா?''
“முடிஞ்சது''.
“இவ்வளவு சீக்கிரமாவா?''
"நீ நல்லா சாப்பிடணும். உன் உடம்பைப் பார்க்குறப்போ எனக்கு ரொம்பவும் சங்கடமா இருக்கு. மறைந்துபோன உடல் அழகு மீண்டும் திரும்பி வர்றதை நான் பார்க்குறேன். சதைப்பிடிப்பின் தாள லயங்களின் வெளிப்பாடுகள்.' அவன் தனக்குள் பேசிக் கொண்டான்.
வியர்வையில் குளித்தபோதுதான் மின்விசிறி இயங்கவில்லை என்பதே அவனுக்குப் புரிந்தது. ஸ்விட்சைப் போட்டான். குளிர்ச்சி பரவியது.
அவன் மீண்டும் அவளைப் பற்றிய நினைவில் மூழ்கினான்: "சரசு, நீ என்னை நினைச்சு ஆச்சரியப்படுறியா? மழைக்காலத்தில் மழை விடாம பெய்யிறப்போ, இருண்ட படிகளுக்கு மத்தியில் மனப் பூர்வமாக சந்திக்கிற மாதிரி சூழ்நிலையை உண்டாக்கி, கட்டிப் பிடிச்சு உணர்ச்சிகளை ஒருவரோடொருவர் பரிமாறி கட்டுப் பாட்டைவிட்டு விலகி நிற்கிறப்போ... ஞாபகத்துல இருக்கா, சரசு? கொஞ்சம்கூட நன்றியில்லாம அப்போ நான் சொன்னேன். "இனிமேல இந்த விஷயம் நடக்கக்கூடாது’’ன்னு... அதற்குப் பிறகும் இருட்டில் ஒளிந்து நின்ன என்னை உனக்குத் தெரியல. உனக்கு மட்டுமில்ல. வேற யாருக்குமே. பாகிக்கும் புரியல. முழு உலகமும் எதிர்த்தப்போ அவளையே மனசுல நினைச்சு, அவபேரைச் சொல்லிக்கிட்டு நான் திரிஞ்சேன். கள்ளக்கடத்தல் வியாபாரமும் மர வியாபாரமும் செய்து பணம் நிறைய கையில வந்தப்போ, எதிர்ப்புகள் பின் வாங்கினப்போ, அவளை மிதித்து தாண்டிப் போன என்னை அவளால புரிஞ்சிக்க முடியல. அஸ்தாவிற்கும் மரியாவுக்கும் என்னைப் புரிஞ்சிக்க முடியல.
மூலையில் ஆறாம் நம்பர் அறை இது. சுகம் விற்பனை செய்யக்கூடிய தரகர்கள் இந்த அறைக் கதவை எனக்காக எத்தனையோ முறை தட்டியிருக்காங்க.
சரசு, உன்னை நினைச்சு நான் அழ விரும்புறேன்.
பாகியை நினைச்சு...
மரியாவை நினைச்சு...
ஆஷ்தா ஸலோனனை நினைச்சு...
பலவற்றையும் மறந்துவிட்ட நான் அழுவதற்கும் மறந்து போனேன். சிரிக்கவும்தான்.
இழந்துவிட்ட பெரிய தருணங்கள்.'
அவன் தனக்குள் பேசிக்கொண்டே போனான்.
“சாப்பிடலையா?''
“நான் என்ன சொல்லிக்கிட்டு இருந்தேன்?''
“எதுவும் சொல்லல.''
மீண்டும் அவனுடைய மன ஓட்டம்-
"அகலமான இரட்டைக் கட்டிலில் பாபுவும் ஷீபாவும் தாயுடன் படுத்து உறங்கிகிட்டு இருக்காங்க. அதுக்குப் பக்கத்துல கையை நீட்டினா ஆட்டக்கூடிய தூரத்துல இருந்த தொட்டிலில் கட்டப் பட்டிருந்த கொசு வலைக்குள் ஒன்பது மாத சாரு தூங்கிக்கிட்டு இருக்கா.