பணத்தை விட மதிப்புள்ளவன் மனிதன் - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6987
அந்தச் சிறிய நகரத்தில் குதிரை வண்டியைத் தேடக்கூடிய ஆட்கள் இருந்ததால், எந்தவித பிரச்சினைகளும் இல்லாமல் அந்த புதுமணத் தம்பதிகள் வாழ்ந்தார்கள். வாழ்க்கை அப்படி ஓடிக்கொண்டிருக்கும்போது, அம்மிணி கர்ப்பம் தரித்தாள்.
மாதங்கள் பூர்த்தியாயின. அம்மிணிக்கு பிரசவ வலி எடுக்க ஆரம்பித்தது. ஒரு நாள் கடந்த பிறகும் பிரசவம் ஆகாமல் இருந்ததால், பாச்சன் மிகுந்த பதைபதைப்பிற்கு ஆளாகிவிட்டான். பிரசவம் பார்க்கும் பெண் என்னவெல்லாமோ செய்தாள். அது எல்லாமே அம்மிணியை ஆபத்தை நோக்கி அழைத்துச் செல்லவே பயன்பட்டது. அம்மிணியின் வீட்டைச் சேர்ந்தவர்கள் சொன்னார்கள் என்பதற்காக மந்திரவாதம்கூட அவன் செய்து பார்த்தான். அதற்குப் பிறகும் அவள் பிரசவம் ஆகவில்லை.
மூன்றாவது நாள் இரவு வந்தபோது, பாச்சன் பைத்தியம் பிடித்தவனைப் போல ஆகிவிட்டான். டாக்டரை அழைத்துக் கொண்டு வருவது நல்லது என்று சிலர் சொன்னார்கள். அதே நேரத்தில் சொத்தை விற்காமல் டாக்டரை அழைத்து வருவது என்பது நடக்கக்கூடிய விஷயமல்ல என்றும் சிலர் கூறினார்கள். பாச்சன் யாரிடமும் எதுவும் பேசாமல், சாலையில் போய் நின்றான்.
இரவு எட்டுமணி ஆனபோது, வழக்கம்போல டாக்டரின் கார் அந்த வழியே வந்தது. பாச்சன் சாலையின் நடுவில் போய் நின்றிருந்தான். கார் நின்றது. பாச்சன் டாக்டரிடம் தன்னுடைய வீட்டுக்கு வரும்படி கெஞ்சினான். பதைபதைப்பான குரலில் அவன் சொன்னான்:
"ஒரு தாயையும் ஒரு குழந்தையையும்... ஐயா நீங்கதான் காப்பாத்தணும்.''
மனமே இல்லாமல் டாக்டர் காரை விட்டு இறங்கி பாச்சனின் வீட்டை நோக்கி நடந்தார். வெளியே நின்றவாறு உள்ளே எட்டிப் பார்த்தார். ஒன்றிரண்டு கேள்விகள் கேட்டார். கடைசியில் சொன்னார்:
"நாளைக்கு மருத்துவமனைக்குக் கொண்டு வா. பார்க்கலாம்.''
அவர் சாலையை நோக்கி நடந்தார். பாச்சன் அவருக்குப் பின்னால் ஓடினான்.
"அய்யா, காப்பாத்துங்க.''
"நாளைக்கு மருத்துவமனைக்கு வா.'' டாக்டர் அலட்சியமாக சொன்னார்.
"நாளைக்கு...'' முழுமையாகக் கூறி முடிப்பதற்குள் பாச்சன் தேம்பித் தேம்பி அழுதான்.
"இறக்கலைன்னா, அங்கே கொண்டு வா.'' அவர் காரில் ஏறினார்.
"அய்யா, காப்பாத்துங்க. நாங்க ஏழைங்க...''
"நான் பணம் செலவழிச்சு படிச்சிருக்கேன்.'' நகர்ந்து கொண்டிருந்த காரில் இருந்தவாறு டாக்டர் சொன்னார்.
"அய்யா... பணத்தைவிட மனிதன் மதிப்புள்ளவன் இல்லியா?'' பாச்சன் சொன்னான்.
டாக்டரின் காதில் அது விழுந்ததோ என்னவோ! கார் வேகமாகப் பாய்ந்தோடியது.
மறுநாள் காலையில் தன்னுடைய கார் அந்த வழியே வந்தபோது, பாச்சனின் வீட்டுக்கு முன்னால் சோகத்துடன் ஆட்கள் கூட்டமாக நின்று கொண்டிருப்பதை டாக்டர் பார்த்தார். ஓட்டுநர் சொன்னான்.
"இறந்துட்டா போல இருக்கு...''
"ம்...'' டாக்டர் அலட்சியமாக முனகினார்.
ஐந்தாறு மாதங்கள் கடந்தன. டாக்டர் தினமும், நான்கு முறை அந்த வழியே பயணம் செய்வார். அவர் அந்த மண் வீட்டைப் பார்ப்பதேயில்லை. அதைப் பற்றி அவர் நினைப்பதுமில்லை. ஆனால், அந்தக் கார் அந்த வழியே போகும்போதெல்லாம் அந்த மண் வீட்டிலிருந்த இரண்டு கண்கள் அந்தக் காரை வெறித்துப் பார்த்துக் கொண்டேயிருக்கும்.
அன்று அந்த கார் நீர் நிறைந்த குழிக்குள் விழுந்தவுடன், பாச்சனும் அங்கு ஓடி வந்தான். நனைந்து போய், பதைபதைப்பு குடிகொள்ள, தோல் பையைக் கையில் பிடித்துக்கொண்டு நின்று கொண்டிருந்த டாக்டரையே அவன் உற்றுப் பார்த்தான். முன் பணமாக இருபது ரூபாயை வாங்கிக்கொண்டு அவன் தன்னுடைய வீட்டுக்குச் சென்று அம்மிணி படுத்து இறந்த கட்டிலையே பார்த்தவாறு நின்றான். ஒரு நீண்ட பெருமூச்சு விட்டவாறு அவன் வெளியே வந்தான். தெற்குப் பக்கம் இருந்த குதிரைத் தொழுவத்திற்குள் நுழைந்தான். அவன்
குதிரையின் முதுகைத் தட்டிவிட்டு, அதன் முகத்தை வருடியவாறு மெதுவான குரலில் அழைத்தான்.
"குட்டா, மகனே!''
குதிரை தலையை ஆட்டி அவன் அழைப்பதைக் கேட்டது. அவன் குதிரையை அவிழ்த்துக் கொண்டு வந்து வண்டியில் பூட்டினான். சாலையிலிருந்த டாக்டரின் பரபரப்பு கலந்த குரல் கேட்டது.
"சீக்கிரம்... சீக்கிரம்...''
பாச்சன் அதைக் கேட்டது மாதிரியே காட்டிக் கொள்ளவில்லை. அவன் ஒரு பீடியைப் பற்ற வைத்தான். அருகிலிருந்த பலா மரத்தில் சாய்ந்து நின்றுகொண்டு, அவன் பீடியை இழுத்தான்.
"என்ன இவ்வளவு தாமதம்?''
"ம்...?'' பாச்சன் முனகியவாறு கேட்டான். அவன் டாக்டரை ஓரக் கண்ணால் பார்த்தான். அந்த கண்ணோரத்தில் தீப்பொறி பறந்து கொண்டிருந்தது.
"பணம் குறைவுன்னு நினைச்சு தயங்குறியா? அஞ்சு ரூபா அதிகமா தர்றேன். சீக்கிரமா வண்டியை எடுத்துட்டு வா...''
"ம்...'' பாச்சன் பற்களைக் கடித்தான். அவன் குதிரையைப் பிடித்துக்கொண்டு சாலைக்கு வந்தான்.
டாக்டர் ஐந்து ரூபாய் நோட்டு ஒன்றை அவனிடம் நீட்டினார். அவன் அதையும் வாங்கி தன்னுடைய இடுப்பில் சொருகிக் கொண்டான்.
டாக்டர் தோல் பையைக் கையில் எடுத்துக் கொண்டு வண்டிக்குள் ஏறி உட்கார்ந்தார். பாச்சன் வண்டியின் முன் பக்கம் இருந்த பெட்டிமீது போய் உட்கார்ந்தான்.
"சீக்கிரம்... சீக்கிரமா போகணும்.'' டாக்டர் வண்டியில் உட்கார்ந்து கொண்டு முன்னால் பார்த்துச் சொன்னார்.
பாச்சன் ஓரக் கண்ணால் டாக்டரைப் பார்த்தான். அப்போதும் அந்த ஓரக் கண்களில் தீப்பொறி பறந்து கொண்டுதானிருந்தது. அவன் கடிவாளத்தைக் கையிலெடுத்தான். குதிரை மெதுவாக நடக்க ஆரம்பித்தது.
"பறக்கட்டும்... குதிரை வேகமா பறக்கட்டும்...'' டாக்டர் முன்னால் பார்த்து படபடத்தார்.
"அப்படி என்ன அவசரம் அய்யா? யாராவது சாகுற நிலைமையில் இருக்காங்களா என்ன?''
"என் மனைவியோட நிலைமை ரொம்பவும் ஆபத்தா இருக்கு.''
"அய்யா, உங்க மனைவியா?'' பாச்சன் தன்னுடைய உதட்டில் தோன்றிய சிரிப்பை அடக்கிக் கொண்டான்.
"ரெண்டு முறை ரத்த வாந்தி எடுத்தாச்சு. எனக்கு அந்த விஷயம் தெரிஞ்சு ஒரு மணி நேரமாச்சு. அதற்குப் பிறகும் ரத்த வாந்தி எடுத்திருப்பா!''
"அப்படின்னா நிலைமை ரொம்பவும் மோசமாயிருக்குமே அய்யா?'' அதற்குப் பிறகும் தோன்றிய சிரிப்பை அடக்கியவாறு அவன் கேட்டான்:
"நீங்கதான் அம்மாவுக்கு மருத்துவம் பார்க்குறீங்களா அய்யா?''
"பிறகு யாரு?'' டாக்டருக்கு கோபம் வந்தது. முன் பக்கமாகப் பார்த்துக் கொண்டு அவர் கேட்டார்:
"நான் ஒரு டாக்டர்ன்ற விஷயம் உனக்குத் தெரியாதா?''
"தெரியுமே! அதனாலதான் கேட்டேன். நீங்க மருத்துவம் பார்த்தா அம்மா அதுக்கு பணம் தருவாங்களா!''
"திமிர்த்தனமா பேசாதடா!''
"அய்யா, நீங்க பணம் தந்துதானே படிச்சிருக்கீங்க? நிலைமை அப்படி இருக்குறப்போ சும்மா மருத்துவம் பார்க்க முடியுமா?''
"அந்த விஷயத்தை நான் பார்த்துக்குவேன். நீ குதிரையை வேகமா ஓட்ட வழி பார்த்தா போதும்.''