பணத்தை விட மதிப்புள்ளவன் மனிதன் - Page 3
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6987
"அய்யா, உங்களை மாதிரிதான் இந்தக் குதிரையும். சாகுற நிலைமையில ஆள் இருக்காங்கன்னு சொன்னாகூட இது ஓடாது!”
"உன் கையில சாட்டை இல்லியா?''
"நான் தீவனம் போட்டு வளர்க்குற குதிரை இது. இதை என்னால் அடிக்க முடியாது அய்யா!''
"அப்படின்னா இப்படியே மெதுவா போய்க் கொண்டிருந்தா எப்படி?''
"இப்படிப் போனா, எப்போ போய்ச் சேர முடியுமோ, அப்போ போய்ச் சேருவோம்.''
டாக்டருக்கு அதைக் கேட்டு கோபம் வந்தது. அவர் கத்தினார்.
"டேய், என் மனைவி ஆபத்தான நிலைமையில படுத்திருக்கா. நீ வண்டியை வேகமாக ஓட்டுறியா? இல்லியா?''
"பேசாம உட்காருங்க, அய்யா. என் பொண்டாட்டிக்கும் இதே மாதிரி ஆபத்து உண்டாச்சு. அப்போ ஒரு டாக்டர் வந்து பார்த்துட்டு சொன்னாரு- அவர் பணம் தந்து படிச்சதா. என் பொண்டாட்டி இறந்துட்டா. நான் இப்பவும் வண்டி ஓட்டிக்கிட்டு இருக்கேன்.''
தலையில் அடி விழுந்ததைப் போல டாக்டர் சிலையென உட்கார்ந்திருந்தார். அந்த இரவில் ஒரு மனிதன் சாலையின் மத்தியில் நின்று கொண்டு தன்னுடைய காரை நிறுத்தியதையும், தான் அந்த மண்ணால் ஆன வீட்டுக்குச் சென்று செயலற்ற நிலையில் படுத்திருந்த நோயாளியைப் பார்த்ததையும் அவர் அப்போது மனதில் நினைத்துப் பார்த்தார். அன்று தேம்பித் தேம்பி அழுது கொண்டு காப்பாற்றும்படி கெஞ்சிய அந்தக் கணவன்தான் இப்போது கடிவாளத்தையும் சாட்டையையும் கையில் பிடித்துக்கொண்டு தனக்கு முன்னால் உட்கார்ந்திருக்கிறான் என்பதை அவர் தெரிந்து கொண்டார். அவன் அவரை பழிக்குப் பழி வாங்குகிறானா என்ன? அப்படியென்றால்... அப்படியென்றால்...
ஒவ்வொரு நிமிடமும் ஒரு பிரச்சினையாக நகர்ந்து கொண்டிருந்தது. அவருடைய மனைவியின் வாழ்வு, மரணம் சம்பந்தப்பட்ட விஷயம் இது. அவர் கலக்கத்துடன் சொன்னார்.
"வண்டியை வேகமா ஓட்டினா, உனக்கு நான் பத்து ரூபா அதிகமா தர்றேன்.'' அவர் தன் பர்ஸைத் திறந்து நோட்டை எடுத்தார்.
பாச்சன் அந்த ரூபாய் நோட்டையும் வாங்கி இடுப்பில் சொருகிக் கொண்டான். அவன் கடிவாளத்தைச் சிலுப்பினான். குதிரை இரண்டு மூன்று முறை குதித்தது. வண்டி எங்கே கீழே விழுந்து விடுமோ என்பது மாதிரி இருந்தது. பாச்சன் சொன்னான்:
"சொன்னபடி கேட்காத குதிரை இது.''
"என்னைக் காப்பாத்து.'' டாக்டர் ஒரு தவறு செய்த மனிதனைப் போல கெஞ்சினார். அவருடைய கண்கள் நீரால் நிறைந்தது. தடுமாறிய குரலில் அவர் சொன்னார்:
"அவ செத்துப் போயிட்டா என் வாழ்க்கையே அவ்வளவுதான். நாலு பிள்ளைகளோட தாய் அவள். அவள் இறந்துட்டா...'' அதற்கு மேல் அவரிடமிருந்து வார்த்தைகள் வரவில்லை. உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் ஒரு மனிதனைப்போல அவர் தவியாய்த் தவித்தார்.
பாச்சன் சிறிது நேரம் தலை குனிந்தவாறு உட்கார்ந்திருந்தான். அவன் டாக்டருக்குத் தெரியாமல் தன் கண்களில் வழிந்த நீரைத் துடைத்துவிட்டு, தலையை உயர்த்தினான். அடுத்த நிமிடம் கடிவாளத்தை இழுத்துப் பிடித்தான். சாட்டையை வீசினான். குதிரை ஓட ஆரம்பித்தது.
மிகப் பெரிய, மரங்களடர்ந்த அந்த மலையின் மீது குதிரை வேகமாக ஓடியது. அந்த பெரிய வீட்டுக்கு முன்னால் அது திடீரென்று நின்றது. டாக்டர் தோல் பையை எடுத்துக்கொண்டு வண்டியிலிருந்து குதித்து இறங்கினார். அவர் வீட்டுக்குள் வேகமாக ஓடினார்.
பாச்சன் வண்டியை விட்டு இறங்கினான். குதிரையின் முதுகை அவன் தட்டிக் கொடுத்தான். அதன் முகத்தைக் கையால் தடவினான்.
"குட்டா, மகனே!''
குதிரை மேல் மூச்சு கீழ் மூச்சு விட்டவாறு தலையை ஆட்டியது. பாச்சன் ஒரு பீடியைப் பற்ற வைத்தான். அவன் அந்தப் பெரிய வீட்டின் விசாலமான வராந்தாவில் போய் உட்கார்ந்தான்.
உள்ளே சத்தமும் பேச்சும் கட்டளைகளும் கேட்டன. சிறிது நேரத்தில் படு அமைதி நிலவியது. ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்த ஒரு வேலைக்காரனிடம் பாச்சன் கேட்டான்:
"எப்படி இருக்காங்க?''
"ஊசி போட்டிருக்கு. இப்போ பரவாயில்லைன்னு அய்யா சொன்னாரு.''
உள்ளே டாக்டரின் உரத்த குரல் கேட்டது.
"இந்த அறையில யாரும் இருக்க வேண்டாம். தூங்கட்டும்.''
பாச்சன் இடுப்பில் சொருகியிருந்த ரூபாய் நோட்டுகளை எடுத்தான். அவன் அவற்றை விரித்து, எண்ணினான். அவற்றை வராந்தாவில் வைத்தான். முற்றத்திலிருந்து ஒரு சிறிய கல்லை எடுத்து அந்த ரூபாய் நோட்டுகளுக்கு மேலே வைத்தான். அடுத்த நிமிடம் அவன் ஓடிச் சென்று வேகமாக வண்டியில் ஏறினான். கடிவாளத்தைக் கையில் எடுத்தான். சாட்டையை வீசினான்.
குதிரை தான் வந்த வழியில் திரும்பவும் ஓட ஆரம்பித்தது. டாக்டர் வராந்தாவிற்கு வந்தார். அவர் கேட்டார்:
"அந்த வண்டிக்காரன் போயிட்டானா?''
"அந்த ரூபாய் நோட்டுகளை அங்கேயே வச்சிட்டு அந்த ஆளு வண்டியில ஏறி போயிட்டான்.'' வேலைக்காரன் சொன்னான்.
ரூபாய் நோட்டுகளைக் கையில் எடுத்துக்கொண்டு டாக்டர் வண்டிக்குப் பின்னால் ஓடினார்.
"நில்லு... நில்லு... இந்த பணத்தை எடுத்துட்டுப் போ...''
பாச்சன் திரும்பிப் பார்த்தான். அவன் உரத்த குரலில் சொன்னான்:
"பணத்தைவிட மதிப்புள்ளவன் மனிதன்.'' மலைச் சரிவில் விரிந்து கிடந்த வயலிலிருந்து மரங்களை வருடிக்கொண்டு வந்த காற்றில் அந்த வார்த்தைகள் பரவி எதிரொலித்தன.