பணத்தை விட மதிப்புள்ளவன் மனிதன்
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6987
டாக்டர் பதைபதைத்துப் போனார். பலவிதப்பட்ட நோய்களையும், எத்தனையோ வகையான மரணங்களையும் பார்த்துப் பழகிப் போன அந்த மனிதர், தன்னுடைய மனைவி இரத்த வாந்தி எடுத்தாள் என்ற செய்தியைக் கேள்விப்பட்டதும் ஒரு மாதிரி ஆகிவிட்டார். தோல் பையைக் கையில் எடுத்துக்கொண்டு அவர் காரில் ஏறினார்.
நோயாளிகள் பரிதாபமாக அவரைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தார்கள். சிலருக்கு ஊசி போட வேண்டும். சிலருக்கு மருந்து எழுதித் தரப்பட வேண்டும். சிலருக்கு நோய்களைப் பற்றி டாக்டர் கூற வேண்டும்.
எல்லாரையும் நிராகரித்து விட்டு, யாருடைய உடல் நலத்தையும் உயிரையும் பற்றி சிறிதும் கவலைப்படாமல் அவர் தோல் பையை எடுத்துக்கொண்டு காரில் ஏறிவிட்டார்.
யாரும் எதுவும் பேசவில்லை. என்ன பேசுவது? தங்களின் உடல் நலத்திற்கும் உயிருக்கும் மதிப்பு இருக்கிறது என்று அவர்கள் நினைத்திருக்கலாம். ஆனால், டாக்டர் தன்னுடைய மனைவியின் உடல் நலத்திற்கும் உயிருக்கும் அதிக மதிப்பைத் தரும்போது, அவர்களால் என்ன செய்ய முடியும்? என்ன கூற முடியும்?
அது ஒரு சிறிய நகரம். ஏராளமான நோயாளிகள் வரக்கூடிய சிறிய மருத்துவமனை அது. அந்தச் சிறிய நகரத்தில் சொந்தமாக கார் வைத்திருக்கும் வேலை பார்க்கும் ஒரே மனிதர் அந்த டாக்டர்தான். அந்த ஊரைச் சேர்ந்த ஒரு புதிய பணக்காரர் ஒரு பழைய காரை வாங்கினார். அது எப்போதாவதுதான் ஓடும். டாக்டரின் புதிய கார் அந்த ஊருக்கு புதுமையான ஒரு விஷயமாக இருந்தது.
அவருடைய வீடு ஐந்து மைல் தூரத்தில் இருந்தது. ஒரு மலையின் உச்சியில் விரிந்து படர்ந்த மரங்கள் அடர்ந்த ஒரு நிலத்தின் நடுவில், நவநாகரீக முறையில் கட்டப்பட்டிருந்த வீடு அது. நோயாளியான அவருடைய மனைவியின் உடல் நலத்தை மனதில் வைத்துக்கொண்டு அவர் அப்படிப்பட்ட ஒரு இடத்தில் வீட்டைக் கட்டினார். சொந்தத்தில் காரும் டிரைவரும் இருந்ததால், வீட்டுக்கும் மருத்துவமனைக்குமிடையில் இருந்த தூரத்தைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
ஒரு வாரமாக தொடர்ந்து பெய்து கொண்டிருந்த மழை அன்று நின்றுவிட்டிருந்தாலும், காற்று பலமாக அடித்துக்கொண்டு தானிருந்தது. காலையில் டாக்டர் வீட்டிலிருந்து மருத்துவமனைக்குச் சென்றபோது, சாலையின் இடது பக்கமிருந்த வயல் நிறைந்து, சாலையில் நீர் ஓடிக் கொண்டிருந்தது.
பதிவாளர் அலுவலகத்தையும், பள்ளிக்கூடத்தையும், காவல் நிலையத்தையும் கடந்து டாக்டரின் கார் படுவேகமாகப் போய்க் கொண்டிருந்தது. குண்டிலும் குழியிலும் விழுந்தும் எழுந்தும் சாய்ந்தும் சரிந்தும் போய்க் கொண்டிருந்த கார் இரண்டு முறைகள் விபத்துகளைச் சந்திக்க நேர்ந்தாலும், ஓட்டுநரின் திறமையால் ஒன்றும் நேராமல் தப்பித்துவிட்டது.
"வேகமா போ!'' மனதிற்குள் பரபரப்புடன் இருந்த டாக்டர் கட்டளையிட்டார்.
கார் முன்பு இருந்ததைவிட வேகமாக ஓடியது.
"அய்யோ!'' ஒரு உரத்த குரல்.
கார் சாலையோரத்திலிருந்த குழிக்குள் இறங்கியது. ஒரு மணி நேரத்திற்கு முன்னால் உண்டான குழி அது. வயலில் நிறைந்த நீர் சாலையின் எதிர்பக்கத்தை நோக்கி ஓடிக் கொண்டிருந்தது. சாலையில் பிளவு ஏற்பட்டு குழி விழுந்திருந்தது. ஓட்டுநருக்கு அது தெரியவில்லை. அப்படி நடக்கும் என்றும் அவன் எதிர்பார்க்கவில்லை.
டாக்டருக்கு காயமெதுவும் உண்டாகவில்லை. காருக்குள் நீர் வந்ததால் ஆடைகளும் தோல் பையும் நனைந்துவிட்டன. ஓட்டுநருக்கு இரண்டு மூன்று இடங்களில் காயங்கள் ஏற்பட்டன. அவன் வேகமாக கீழே இறங்கினான். டாக்டரைப் பிடித்து வெளியில் வரச் செய்தான். நான்கு திசைகளிலிருந்தும் ஆட்கள் வந்து கூடினார்கள்.
கார் சிதைந்து, சாய்த்தவாறு அந்த நீர் நிறைந்த குழிக்குள் கிடந்தது. மனதில் கலக்கத்துடனும், நனைந்த ஆடைகளுடனும் டாக்டர் சாலையில் நின்றிருந்தார். அவர் அங்கு கூடியிருந்த ஆட்களிடம் கேட்டார்:
"இங்கே யார்கிட்டயாவது கார் இருக்கா? ஒரு கார் கிடைக்குமா? என்னை வீட்டுல கொண்டு போய்விட்டால், எவ்வளவு பணம் வேணும்னாலும் தர்றேன்.''
அங்கு யாரிடமும் கார் இல்லை என்ற விஷயம் அவருக்கு நன்றாகத் தெரியும். ஆனால், அந்த இக்கட்டான சூழ்நிலையில் அப்படி கேட்பதைத் தவிர, அவர் வேறு என்ன செய்ய முடியும்?
யாரும் அதற்கு பதில் சொல்லவில்லை. டாக்டர் தான் கேட்ட கேள்வியையே மீண்டும் கேட்டார்:
"எங்கேயிருந்தாவது ஒரு கார் கொண்டு வர முடியுமா?''
அருகில் நின்றிருந்த ஒருவன் சொன்னான்:
"இங்கே ஒரே ஒரு கார்தான் இருக்கு. அது இந்த தண்ணிக்குள்ளே விழுந்து கிடக்குது.''
"நான் இப்போ என் வீட்டுக்குப் போகணுமே!''
"ஒரு குதிரை வண்டி போதுமா?'' இன்னொரு ஆள் கேட்டான்.
"போதும்... போதும்... எங்கேயிருக்கு? சீக்கிரமா கொண்டு வா. என்ன வேணும்னாலும் தர்றேன்.'' டாக்டர் ஆர்வத்துடன் சொன்னார்.
சிறிது தூரத்தில் சாலையோரத்தில் டாக்டரையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த பாச்சன் அலட்சியமாகக் கேட்டான்:
"என்ன தருவீங்க?''
"என்ன வேணும்னாலும் தர்றேன். வண்டியைக் கொண்டு வா.''
"அப்படிச் சொன்னால் போதாது. என்ன தருவீங்கன்னு சொல்லணும். பணம் செலவழிச்சுத்தான் வண்டியையும் குதிரையையும் வாங்கியிருக்கேன்.''
"என்ன தரணும்னு சொல்லு.''
"எவ்வளவு தூரம் இருக்கும்?''
"இங்கேயிருந்து குத்து மதிப்பா நாலு மைல் இருக்கும்.''
"இருபது ரூபா தாங்க.''
"தர்றேன். வண்டியைக் கொண்டு வா. முன்கூட்டியே பணம் வேணுமா?''
"ஆமா...''
டாக்டர் தன் பர்ஸைத் திறந்து பணத்தை எடுத்து பாச்சனிடம் நீட்டினார். பாச்சன் பணத்தை வாங்கி இடுப்பில் செருகிக் கொண்டு நடந்து கொண்டே சொன்னான்:
"இதோ வண்டியைக் கொண்டு வர்றேன்.''
சாலைக்கு அருகிலிருந்த ஒரு சிறிய வீட்டுக்குள் அவன் நுழைந்தான். இரண்டு சிறிய அறைகளையும், சமையலறையையும் மட்டும் கொண்டிருந்த மண்ணால் ஆன ஒரு சிறிய வீடு அது. அவனும்
அவனுடைய மனைவியும் வசிப்பதற்காக அந்த வீடு உண்டாக்கப்பட்டிருந்தது. ஆனால், இப்போது அவன் மட்டுமே அங்கு இருக்கிறான். அவனுடைய மனைவி பிரசவ சமயத்தில் இறந்துவிட்டாள்.
இருபது மைல்களைத் தாண்டி இருக்கும் பெரிய நகரத்தில் குதிரை வண்டிக்காரனாக இருந்தான் பாச்சன். அங்கு பலரும் சொந்தத்தில் கார் வாங்கவும், வாடகைக் கார்கள் எளிதாகக் கிடைக்கக் கூடிய சூழ்நிலையும் உண்டானவுடன், பாச்சனின் குதிரை வண்டியைத் தேடுவதற்கு ஆட்கள் இல்லாமற் போனார்கள். அதனால், அவன் குதிரை வண்டியை எடுத்துக்கொண்டு தன் சொந்த ஊருக்கு வந்து விட்டான்.
அம்மிணியைத் திருமணம் செய்து, அவர்கள் அந்த வீட்டில் வசித்தார்கள். அது ஒரு காதல் திருமணமாக இல்லையென்றாலும், திருமணத்திற்குப் பிறகு அவர்களின் இதயங்கள் ஒன்றோடொன்று விரும்பிச் சேர்ந்தன. அம்மிணி பாச்சனின் உயிராக ஆனாள்.