உயிரின் வழி - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7158
"பிறகு... எதிர்ப்பு... வேற பல விஷயங்களையும் நான் எதிர்த்திருக்கேன்...” நான் என்னைக்கும் அதை மறைச்சு வச்சது இல்ல. உங்க குடும்ப நிலத்தை பாகம் பிரிக்கிறப்போ, இந்தப் பாறை நிலத்தை உங்க பங்கா நீங்க வாங்கக் கூடாதுன்னு நான் சொன்னேன். ஒரு முருங்கையை நடுறதுக்கான மண்ணுகூட இங்கே இல்லியே! ஆனா, நான் சொன்ன கருத்தை நீங்க ஒரு பொருட்டாகவே நினைக்கல. "நான் இந்த பாகத்தை எடுத்துக்கலைன்னா பிறகு வேற யார் இதை எடுப்பாங்க? யாராவதொருத்தர் இதை எடுத்துத் தானே ஆகணும்?”னு என்னைப் பார்த்து நீங்க சொன்னீங்க. பிறகு... இங்கே வீடு கட்டுறப்பவும் நான் எதிர்த்தேன். "வேண்டாம்... நமக்கு இந்த இடத்தில் வீடு வேண்டாம். இந்த பாறைமேல... இங்கே மண் இல்ல... இங்கே தண்ணி இல்ல'ன்னு” எவ்வளவோ சொன்னேன். அப்ப நீங்க சொன்னீங்க- இந்தப் பாறை மேல உங்களுக்கு ஒரு மானசீக உறவு இருக்குன்னு. அப்படின்னா சரின்னு நானும் பேசாம இருந்துட்டேன். நான் சொன்னது உண்மையா இல்லியா?''
நான் அவள் சொன்னவை எல்லாவற்றையும் கேட்டவாறு எதுவும் பேசாமல் படுத்திருந்தேன்.
அப்போது மனûவி மீண்டும் சொன்னாள்:
"என்னால உங்க மனசுல இருக்குற கவலையைப் புரிஞ்சிக்க முடியாம இல்ல. ஆனா, நாம என்ன செய்ய முடியும்? மரம் ஏதோ விழுந்திருச்சுன்னு மனசை சமாதானப்படுத்திக்க வேண்டியதுதான்....''
நான் எதுவும் பேசாமல் படுத்திருந்ததைப் பார்த்துவிட்டு மனைவி தனக்குத்தானே கூறிக்கொள்வதைப் போல் சொன்னாள்:
"நம்ம பிள்ளைங்க நம்மளை விட்டுப் போகலியா? அதைவிட ஒரு மரம் போனது பெருசா என்ன?''
அதைக் கேட்டதும் நான் அதிர்ந்து போனேன்.
பாதிக்கப்பட்ட அந்தக் கையை திடீரென்று பிடித்தவாறு நான் சொன்னேன்:
"அப்படியெல்லாம் பேசாதே...''
அவளும் என் கையைப் பிடித்து அழுத்தினாள்.
என் மனைவி அழுவதைப்போல் எனக்குத் தோன்றியது. அழும் சத்தம் எதுவும் காதில் விழவில்லை. இருட்டில் மனைவியின் முகமும் தெரியவில்லை. இருந்தாலும் எனக்கு அப்படி தோன்றியது.
இரண்டு பேரும் அதற்குப் பிறகு எதுவும் பேசாமல் படுத்திருந்தோம்.
காலையில் சூரியன் உதித்தபோது, நான் முருங்கைக்குக் கீழே இருந்தேன். முறிந்த இடத்தில் வழிந்த நீர் ரத்தத்தைப்போல கட்டியாக திரண்டு காட்சியளித்தது. முற்றத்தில் இருந்தவாறு மரத்தின் கிளைகளையோ தலைப் பகுதியையோ தெளிவாக என்னால் பார்க்க முடியவில்லை. அவையெல்லாம் கான்கிரீட் மேற்கூரையின்மீது இருக்கின்றன என்று நான்தான் ஏற்கெனவே சொன்னேனே! மேற்கூரை மட்டும் தாங்காமல் இருந்திருந்தால் மரம் முழுமையாக சாய்ந்து தரையில் விழுந்திருக்கும். இப்போதோ அது மரணத்தை எதிர்பார்த்து படுக்கையில் சாய்ந்து படுத்திருக்கும் தளர்ந்து போன, காயம்பட்ட உடம்பைக் கொண்டிருக்கும் ஒரு வழிப்போக்கனின் நிலையில் இருந்தது.
நான் வீட்டின் முன்னால் கேட் வரை போய் பார்த்தேன். பக்கவாட்டிலும் பின்பக்கத்திலும்கூட போய் பார்த்தேன். ஆனால், எந்த இடத்தில் நின்றாலும் மேற்கூரையில் கிடக்கும் கிளைகளின் முழுமையான ஒரு வடிவம் எனக்குக் கிடைக்கவேயில்லை.
அன்று பெரும்பாலும் நான் இருந்தது வராந்தாவிலும் முற்றத்திலும்தான். பல மாதங்களாக என்னை பாடாய்படுத்திக் கொண்டிருந்த வலது கை வலியைப் பற்றிக்கூட நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. மதிய நேரம் வந்ததும் "சாப்பிடலியா?'' என்று மனைவி கேட்டபோதுதான் நேரத்தைப் பற்றிய நினைவே எனக்கு வந்தது. அப்போது மற்றொரு விஷயத்தையும் நான் நினைத்துப் பார்த்தேன். சாதாரணமாக வெயில் வந்து விட்டாலே பறவைகளின் சத்தம் அந்த இடமெங்கும் கேட்டுக் கொண்டிருக்கும். சிலர் எந்தச் சத்தமும் உண்டாக்காமல் மரத்தின் இலைகள்மீது நாட்டியம் ஆடிக் கொண்டிருப்பார்கள். சிலர் உரத்த குரலில் விதவிதமான சத்தங்களை உண்டாக்கிக் கொண்டிருப்பார்கள். வேறு சிலர் வானத்தைப் பார்த்து உரத்த குரலில் பாடுவார்கள். ஓலேஞ்சாலி, புல்புல், வண்ணாத்திப் பறவை- எப்போதாவது வரக்கூடிய மஞ்சள் கிளிகள். பிறகு... பல நிறங்களில், இரத்தினக் கற்களைக் கொண்டு உருவாக்கியதைப் போல இருக்கும் தேன் கிளிகள், ஊசி மூக்கைக் கொண்டிருக்கும் பறவைகள், அயோராக்கள்- மரத்தின் நிழலில் எப்போதும் ஓசை எழுப்பியவாறு கொத்திப் பொறுக்கி நடந்து கொண்டிருக்கும் கிளிகள்- யாரையுமே காணோம். வெளிச்ச அலைகளினூடே நடனமாடியவாறு போய்க் கொண்டிருக்கும் வண்ணத்துப் பூச்சிகளையும் ஓசையெழுப்பியவாறு பறந்து கொண்டிருக்கும் கருநீல வண்டுகளையும் தேனீக்களையும் காணவில்லை. தலைபோன முருங்கை மரத்தின் முன்னால் நான் மட்டும்...
மனைவி சொன்னாள்:
"இது காய்ஞ்சு போறதுக்கு முன்னாடி ரெண்டு மூணு கம்புகளை வெட்டியெடுத்து...''
மனைவி சொல்லி முடிப்பதற்கு முன்பே நான் சொன்னேன்:
"வேண்டாம்.''
மனைவி ஆச்சரியம் மேலோங்கக் கேட்டாள்:
"ஏன்?''
நான் இப்படியும் அப்படியுமாக தலையை ஆட்டினேன்... "வேண்டாம்.... வேண்டாம்...''
பிறகு மனைவி எதுவும் கேட்கவில்லை.
அதற்குப் பிறகு தொடர்ந்து காற்றின் நாட்கள்தான். காற்றோடு சேர்ந்து கடுமையான வெப்பமும் இருந்தது. மேற்கூரையிலிருந்து பழுத்த மஞ்சள் நிறத்தில் இருந்த முருங்கை இலைகள் முற்றத்தில் விழுந்த வண்ணம் இருந்தன. எத்தனை முறை பெருக்கினாலும் முற்றத்தில் முருங்கை இலைகள் விழுந்து கொண்டேதான் இருந்தன.
கடைசியில்-இலைகள் விழுவது முழுமையாக நின்றது.
நான் பெரும்பாலும் என்னுடைய அறையிலேயேதான் இருப்பேன். வலது கையிலிருந்த வலி எதிர்பாராத வகையில் அதிகமாக இருந்ததுதான் காரணம். கையைத் தூக்குவதற்கே மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது. அதனால் சட்டையை மாட்டிக்கொண்டு வெளியே செல்ல முடியவில்லை. அறைக்குள் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட கைதியைப்போல நேரத்தைச் செலவிட்டுக் கொண்டிருக்கும் பொழுதுகூட மனம் முழுக்க மரமும் கிளிகளும்தான் நிறைந்திருந்தன. ஒருசிறு குழந்தையைப்போல நீண்ட தூரத்திலிருந்து ஒரு முருங்கைக் கம்பை இங்கு கொண்டு வந்தது, மனைவியின் எதிர்ப்பை சட்டையே செய்யாமல் வீட்டிற்கு மிகவும் அருகிலேயே அதை நட்டது, மிகவும் வேகமாக அது ஒரு பெரிய மரமாக வளர்ந்தது, அதில் காய்களைப் பறித்து பைக்குள் வைத்து நான் பக்கத்திலும் தூரத்திலுமிருக்கும் தெரிந்தவர்களுக்கும் நண்பர்களுக்கும் மகிழ்ச்சியுடன் அவற்றைக் கொண்டு போய்க் கொடுத்தது, மரத்தின் உச்சியில் வந்து உட்கார்ந்து எனக்காக எப்போதும் பாடிக் கொண்டிருக்கும் கிளிகளுடன் நெருக்கமான ஒரு நட்பு உண்டானது- எல்லாம் என் மனதில் பசுமையாக இருந்தன.
"ஏன் இப்படி ஒவ்வொண்ணையும் நினைச்சிக்கிட்டு இருக்கீங்க?'' என்று மனைவி பல முறை என்னைப் பார்த்துக் கேட்டுவிட்டாள். ஆனால், தெளிவாக ஒரு பதிலும் கூறாமல் நான் வெறுமனே முணுமுணுக்க மட்டுமே செய்தேன். ஏதாவது நான் சொன்னால், "ஒரு குழந்தை போறதைவிட இது என்ன பெருசா?'' என்று எங்கே அவள் கேட்டுவிடப் போகிறாளோ என்ற பயம் எனக்குள் இருந்ததே காரணம்.