சாமந்திப் பூக்கள் - Page 2
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6354
நினைத்துப் பார்த்தபோது, அது ஒரு ஏமாற்றும் செயல் என்று மனதில் தோன்றியது. அவள் எந்த அளவிற்கு காதலிக்கிறாள் என்ற விஷயம் அவனுக்கு தெரியும். அவனைப் பார்க்கும்போது, அவன் ஏதாவது கூறும்போது அவளுடைய கண்களில் பொன் கதிர்கள் மலரும். அவள் தனக்குச் சொந்தமானவை அனைத்தையும் அவனுக்குப் பரிசாகத் தருவதற்குத் தயாராக இருந்தாள். ஒரு மாதத்திற்குள் அவன் திரும்பி வருவான் என்று அவள் நம்புவாள். எதிர்பார்ப்புகளுடன், கனவுகளுடன் முப்பது இரவுகளை அவள் தள்ளி நீக்கிக் கொண்டிருப்பாள். ஒரு நல்ல நாளன்று அவனுடைய மணப் பெண்ணாக ஆவோம் என்று அவள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாள்...
இவையெல்லாம் அவளுக்குத் தெரிந்தால்... ஆனால், அவளுக்குத் தெரியாது. தெரிந்து கொண்டால், இன்றைய திட்டங்களெல்லாம் தகர்ந்து விடும். அவளுக்கு தெரியக் கூடாது... பிரபஞ்சத்தின் கருத்த பக்கங்களைப் பற்றி அவள் சிந்தித்ததில்லை.
வேதனைப்படுத்தும் இதயத்துடன் அவள் கொஞ்ச நாட்கள் காத்திருப்பாள். அதற்குப் பிறகு மறந்து விடுவாள். அவள் வேறொரு இளைஞனின் மனைவியாக ஆவாள். இல்லாவிட்டால்... இன்னொரு சாத்தியமும் இருக்கிறது. இந்த அறை காலி செய்யப்பட்டவுடன், ஏதாவதொரு இளைஞன் இங்கு தங்குவதற்கு வரலாம். அவன் அவளைக் காதலியாக ஆக்கிக் கொள்வானோ? இதயத்திற்குள் சற்று எட்டிப் பார்த்துக் கொண்டு கூறுவதாக இருந்தால், அந்த விஷயத்தை சேகரன் விரும்பவில்லை. அவளுடைய தந்தை சீக்கிரமாகவே அவளை யாருக்காவது திருமணம் செய்து கொடுக்கட்டும். மனைவியாகவும், குடும்பத் தலைவியாகவும் ஆகி விட்டால், அவளுக்கும் சேகரனை மறப்பதென்பது சிரமமான விஷயமாக இருக்காது.
பத்மினியைப் பற்றி அவன் நினைத்துப் பார்த்தான். அவள் தன்னுடைய மனைவியாக ஆகப் போகிறாள். அவளுடைய வீட்டை ஒரு சந்தர்ப்பத்தில் அவன் பார்த்திருக்கிறான். பத்மினியின் தந்தை ஒரு பெரிய பணக்காரர். இளம் நீல வர்ணம் பூசப்பட்ட ஒரு பெரிய ஸ்டூடியோபேக்கர் கார் இருந்தது.
பத்மினியை அவன் பார்த்திருக்கிறான் என்று கூறலாம். மிகவும் அருகிலிருந்து பார்த்ததில்லை. காரில் செல்லும்போதும், ஒரு சந்தர்ப்பத்தில் திரை அரங்கில் வைத்தும் பார்த்திருக்கிறான். அவள் பெண்களுக்கான கல்லூரியில் படித்தாள். அதுவும் நல்ல விஷயம்தான். இரு பாலரும் படிக்கக் கூடிய கல்லூரிகளில் படித்த இளம் பெண்களாக இருந்தால், ஏதாவது காதல் வலைகளில் மாட்டியிருப்பதற்கு வழி இருக்கிறது...
பத்மினியின் உருவத்தை அவன் கற்பனை பண்ணிப் பார்க்க முயற்சித்தான். மூன்று வருடங்களுக்கு முன்பு அவளைப் பார்த்தான். நல்ல வெள்ளை நிறத்தில் இருப்பாள். பால்ஸன் பட்டரின் நிறம். தடித்து சதைப் பிடிப்புடன் இருக்கக் கூடிய சரீரம். அவனை விட பருமனாக இருப்பாள். ஆனால், நல்ல உயரம் இருந்ததால், பருமனாக இருந்தது குறைபாடாக தெரியவில்லை. நினைத்துப் பார்த்தபோது, அவளுக்கு ஏதோ திரைப்பட நடிகையின் சாயல் இருப்பது போல இல்லையா? யாருடையது? சுவரிலிருந்த காலண்டரில் சதைப் பிடிப்பான முக்கிய பாகங்களை வெளிக்காட்டிக் கொண்டு ஒய்யாரமாக நின்று கொண்டிருந்த ரஹானாவின் படத்தை அவன் பார்த்தான். ரஹானா அல்ல. ஓ... இப்போது ஞாபகத்தில் வருகிறது. கடந்த மாதத்தில் 'ஏக்- தோ- தீ'னில் பார்த்த மீனாவின் சாயல்... முதலிரவிலேயே அதை அவளிடம் கூற வேண்டும். அழகைப் பற்றி வேறொரு ஆள் புகழ்ந்து கூறுவது பெண்களுக்குப் பிடிக்கும்.
அவள் இந்த திருமணத்திற்கு எப்படி ஒத்துக் கொண்டாள்? அவள் முன்பே அவனைப் பார்த்திருக்கலாம். எங்கு பார்த்திருப்பாள்? என்னவோ? ஒரு வேளை... இந்தத் திருமணமாகாத இளம் பெண்களுக்கு ஞானப் பார்வை கூட இருக்கும். தந்தையின் கடிதத்திலிருந்து தெளிவாக தெரிவது- கோபி மேனனின் விருப்பப்படிதான் இது தீர்மானிக்கப்பட்டிருக்கிறது என்ற விஷயம். கோபி மேனனும் தந்தையும் இளம் வயதில் ஒன்றாகச் சேர்ந்து படித்திருக்கிறார்கள். எப்படி பார்த்தாலும் அது நல்லதாகி விட்டது. அவர்கள் திருமண ஆலோசனையுடன் இங்கு வந்திருக்கிறார்கள். அதில்தான் டீஸன்ஸியே இருக்கிறது... அவளுடைய அழகையும் பணத்தையும் பார்த்து ஆசைப்பட்டு ஒரு கடுமையான போராட்டம் நடத்தி திருமணம் செய்தால், குடும்ப வாழ்க்கை தோல்வியில்தான் போய் முடியும் என்பது சேகரனுக்குத் தெரியும். அப்படிப்பட்ட திருமணங்கள்தான் 'ஹென்பெக்ட்' கணவர்களை உருவாக்குகின்றன. அப்போது அவன் சற்று தமாஷாக சிந்தித்துப் பார்த்தான். அழகு கொண்ட ஒரு மனைவிக்குக் கீழே 'ஹென்பெக்ட்' ஆக வாழ்வதிலும் ஒரு சுவாரசியம் இருக்கத்தான் செய்கிறது.
...ஷ்யாமா வருவாளா? அவளுடைய வீட்டில் இன்னும் விளக்கு அணைக்கவில்லை.
ஷ்யாமாவும் பத்மினியும்... அவன் சற்று ஒப்பிட்டுப் பார்க்க முயன்றான். ஷ்யாமா கூச்ச சுபாவம் கொண்ட ஒரு சிறிய பெண். ஒரு விளையாட்டு பொம்மையைப் போலத்தான் அவள் அவனுக்கு தோன்றுகிறாள். ஒரு கொன்றை மலரின் அழகு அவளுக்கு இருந்தது. தொட்டால் வாடி விடுவாளோ என்று தோன்றும். அவளுக்கு பதினைந்தோ பதினாறோ வயது இருக்கும். மார்பில் தாமரை மொட்டுகள் பெரிதாகவில்லை. அவனுடைய இறுக்கமான கைகளின் வளையத்திற்குள் ஒரு நிமிடம் அவள் நின்றிருக்கிறாள்... இறுக சற்று கட்டிப் பிடித்தால், எங்கே அவள் நொறுங்கி கீழே விழுந்து விடுவாளோ என்று தோன்றியது.
எனினும், அவளை அந்த மாதிரி பார்த்துக் கொண்டு நின்றிருப்பதில் ஒரு ஆனந்தம் இருக்கத்தான் செய்தது.
பத்மினியின் அழகு, கவர்ச்சி நிறைந்தது. சதைப்பிடிப்பான சரீரத்துடன் அரசியவாறு, திறந்து வைத்திருக்கும் காரில் மாலை நேரங்களில் பயணிக்கும்போது, நண்பர்கள் யாராவது பார்க்க வேண்டும்... பொறாமை வெளிப்படும் எத்தனையெத்தனை கண்கள் அவனை வட்டம் போட்டுக் கொண்டிருக்கும் என்பது தெரியவில்லை...
இன்னும் நான்கு நாட்கள் கடந்தால் போதும்... வெறும் நான்கு நாட்கள்...
பெரிய கொண்டாட்டம் எதுவும் தேவையில்லை என்று மனதில் நினைத்திருக்கிறான். கோவிலில் வைத்துத்தான் திருமணம். அவன் தன் நண்பர்கள் யாருக்கும் தெரியப்படுத்தவில்லையே! திருமணத்திற்குப் பிறகு எல்லோரையும் அழைத்து, பெரிய அளவில் ஒரு பார்ட்டி நடத்தி விட வேண்டியதுதான்.
அவன் சாளரத்தின் வழியாக திரும்பவும் வெளியே கண்களை ஓட்டினான். அவளுடைய வீட்டில் வெளிச்சம் இல்லை. ஷ்யாமா வர மாட்டாளோ? கிழவனின் குறட்டைச் சத்தத்தை எதிர்பார்த்துக் கொண்டு அவள் நெஞ்சு அடித்துக் கொண்டிருக்க படுத்திருப்பாள்.
கடந்த சில மாதங்களாக நடந்து கொண்டிருந்த வாழ்க்கையைப் பற்றி அவன் சிந்தித்தான். ஷ்யாமா அருகில் இருந்தது அவனுக்கு ஒரு நிம்மதியைத் தரும் விஷயமாக இருந்தது.