
நலம் தரும் நல்லெண்ணெய் - சுரா(Sura)
(ஆயுள் காக்கும் ஆயில் புல்லிங்...)
விழுப்புரத்திலிருந்து வந்திருந்தார் நவநீதகிருஷ்ணன், வயது 40. அவர், தன்னுடைய ‘ஆயில் புல்லிங்’அனுபவத்தைக் கூறினார்:
“சிறு வயதில் இருந்தே எனக்கு தூசியால் உண்டாகும் அலர்ஜி இருந்தது. இதனால், எப்போதும் தும்மிக்கொண்டே இருப்பேன். என்னிடமிருந்த தும்மல் பழக்கத்தினால், என் அருகில் அமர்ந்து உரையாடுவதற்கு எல்லோரும் தயங்குவார்கள். நண்பர்கள்கூட என்னைவிட்டு, சற்று விலகியே இருப்பார்கள்.
வகுப்பறையில் என் அருகில் அமர்வது என்றால், மாணவர்களுக்கு மிகவும் தயக்கமாக இருக்கும். அதற்குக் காரணம், நான் அடிக்கடி தும்மிக்கொண்டு அவர்களைத் தொந்தரவு செய்வேன் என்பது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் - தும்முவதால் என் மூக்கிலிருந்து வெளியேரும் நீர் சில நேரங்களில் அவர்கள் மீது விழும். இப்படி இருக்கும்போது, யார்தான் அருகில் உட்காருவதற்குத் தயாராக இருப்பார்கள்?
இந்தத் தொடர் தும்மலை நிறுத்துவதற்காக பல மருந்துகளையும் நான் சாப்பிட்டுப் பார்த்தேன். அவற்றால் எந்தப் பயனும் உண்டாகவில்லை. பிறர் என்னை விட்டு விலகிச் செல்லும் அளவுக்கு ஒரு மோசமான நோயை என்னிடம் வைத்திருக்கிறேனே என்று நான் பல நேரங்களில் கவலைப்பட்டு, தனியாக உட்கார்ந்து அழுதிருக்கிறேன்.
என்ன செய்வதென்று தவித்துக்கொண்டு இருந்த சூழ்நிலையில், இரண்டு வருடங்களுக்கு முன்னால் வட இந்தியாவிலிருந்து வியாபார விஷயமாக என் தந்தையைப் பார்க்க ஒரு நண்பர் வந்திருந்தார்.
நான் விடாமல் தும்மிக்கொண்டு இருப்பதைப் பார்த்தார், ‘இந்த தும்மல் எவ்வளவு காலமாக உங்களுக்கு இருக்கிறது?’ என்று கேட்டார்.
‘சிறு வயதிலிருந்தே இருக்கிறது’என்றேன்.
அதற்கு அவர், ‘இது உடனடியாக இல்லாமல் போவதற்கு ஒரு மருந்து இருக்கிறது. அதுவும் உங்கள் வீட்டு சமையல் அறையிலேயே! நாம் சாதாரணமாக சமையலுக்குப் பயன்படுத்தக் கூடிய நல்லெண்ணெய்தான் அது.
தினமும் காலையில் நல்லெண்ணெய்யை வாயில் ஊற்றி கொப்பளித்தால், நாளடைவில் இந்தத் தும்மல் நின்றுவிடும்’என்றார்.
அவர் கூறியது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இருந்தாலும், தயங்காமல் ‘ஆயில் புல்லிங்’கில் இறங்கிவிட்டேன். தொடர்ந்து ஒருமாதம் வாய் கொப்பளித்தேன். கொப்பளிக்க ஆரம்பித்த சில நாட்களிலேயே தும்மல் குறையத் தொடங்கியது. நாளடைவில் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து, இப்போது சுத்தமாக இல்லாமலேயே போய்விட்டது!
எத்தனையோ வருடங்களாக என்னை அல்லல்படுத்திக்கொண்டு இருந்த தொடர் தும்மல், எங்கே போய் மறைந்தது என்று எனக்கே தெரியவில்லை. இப்போது தூசியால் உண்டாகும் அலர்ஜி, தும்மல் எதுவுமே இல்லை. தும்மலுக்கு நல்லெண்ணெய் போட்டது தடா!”
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook