
நலம் தரும் நல்லெண்ணெய் - சுரா(Sura)
(ஆயுள் காக்கும் ஆயில் புல்லிங்...)
அடுத்து, ‘ஆயில் புல்லிங்’கின் பலனை பகிர்ந்துகொள்ள வந்தார் சைதாப்பேட்டையைச் சேர்ந்த மரகதம். 50 வயது பெண்மணி. அவரின் அனுபவம்:
“நான் உயர்நிலைப் பள்ளியொன்றில் ஆசிரியையாக பணியாற்றுகிறேன். மூன்று மாதங்களுக்கு முன்புவரை ஆரோக்கியமாக இருந்த எனக்கு திடீரென மிகவும் சோர்வு தோன்ற ஆரம்பித்தது.
தினமும் பள்ளியில் கடுமையான வேலை பளுவாலும், வயது காரணமாகவும், என்னுடைய சதைப்பிடிப்பான உடலமைப்பின் காரணமாகவும் இந்தச் சோர்வு தோன்றியிருக்கலாம் என ஆரம்பத்தில் நினைத்திருந்தேன்.
ஆனால், நாட்கள் செல்லச் செல்ல சோர்வு அதிகமானதோடு முகத்தில் ஒரு வாட்டம் தோன்ற ஆரம்பித்தது. என்னைப் பார்க்கும் அனைவரும்,
‘ஏன் இவ்வளவு சோர்வாக இருக்கிறீர்கள்? முகம் ஏன் இப்படி வாட்டமாக இருக்கிறது?’ என்று கேட்க ஆரம்பித்தனர்.
அதனால், அந்தக் களைப்பு இல்லாமல் இருக்கவேண்டும் என்பதற்காக அவ்வப்போது ஏதாவது ஒரு ஜூஸை பருக ஆரம்பித்தேன். ஆனால், ஆசிரியர் பணி காரணமாக என்னால் ஜூஸையும் நேரத்துக்குப் பருக முடிவதில்லை.
நான் படும் கஷ்டத்தைப் பார்த்தவுடன் உடன் பணியாற்றும் ஆசிரியை அம்சவள்ளி,‘நல்லெண்ணெய்யில் தினமும் காலையில் வாய் கொப்பளியுங்கள், உங்களுக்கு களைப்பு என்பதே இல்லாமல் போய்விடும்’என்றார்.
நானும் அவர் கூறியபடியே நல்லெண்ணெய்யை வாயில் ஊற்றி, கொப்பளித்தேன். சில நாட்களிலேயே ‘ஆயில் புல்லிங்’கின் மகிமை தெரிந்தது. என்னிடம் பல விரும்பத்தக்க மாற்றங்களும் உடலில் உற்சாகமும் தோன்ற ஆரம்பித்தன.
அடிக்கடி சோர்ந்து, கன்னத்தில் கை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்த நான், சுறுசுறுப்புடன் இயங்க ஆரம்பித்தேன். மாணவ -மாணவிகளுக்கு பாடம் கற்றுத்தருவது, தேர்வுத் தாள்களைத் திருத்துவது என்று பள்ளியிலும், பூச்செடிகளுக்கு நீர் ஊற்றுவது, காய்கறிச் செடிகளை கவனிப்பது என்று வீட்டிலும் என்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள முடிந்தது.
என்னுடைய ஐம்பது வயதிலும் எல்லா வேலைகளிலும் நான் முன்பைவிட சுறுசுறுப்புடன் செயல்படுவதைப் பார்த்த அனைவரும், ‘இவருக்கு இப்படி ஒரு சுறுசுறுப்பு எங்கிருந்து வந்தது?’ என்று தங்களுக்குள் ரகசியம் பேசிக்கொள்வது எனக்குத் தெரிந்தது.
‘எல்லாம், ‘ஆயில் புல்லிங்’செய்த வேலைதான்; என்னுடைய இந்த மாற்றத்துக்குக் காரணம் நல்லெண்ணெய்தான்’என்று அவர்களிடம் நான் கூறத்தான் போகிறேன். அதன்பிறகு என்ன நடக்கும்? அவர்களும் ‘ஆயில் புல்லிங்’செய்து பயன்பெறுவார்கள். அப்புறம், எல்லாப் பெண்களும் சோர்வுக்கு பை... பை... சுறுசுறுப்புக்கு ஹாய்! ஹாய்! சொல்லி, துடிப்பான பெண்களாக செயல்படுவார்கள்.”
எப்போதோ நடக்கப்போகிற ஒரு விஷயத்தை இப்போதே அவரால் உறுதியான குரலில் கூறமுடிகிறது என்றால்..? நல்லெண்ணெய் மீதும் ‘ஆயில் புல்லிங்’மீதும் மரகதத்துக்கு இருக்கும் மதிப்பு என்னை வியக்க வைத்தது.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook