தடம் பதித்து விடை பெற்ற ‘ஃபிலிம் நியூஸ்’ ஆனந்தன் - Page 2
- Details
- Category: பொது
- Published Date
- Written by சுரா
- Hits: 4663
‘ஃபிலிம் நியூஸ்’ ஆனந்தனின் கலையுலகப் பயணத்தில் குறிப்பிடத்தக்க பல விஷயங்கள் இருக்கின்றன. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 150 வது படமான ‘சவாலே சமாளி’ திரைக்கு வந்தபோது, அவர் நடித்த படங்களின் புகைப்படங்ளை வைத்து ஒரு மிகச் சிறந்த மலரைப் பெறுப்பேற்று வெளிக் கொணர்ந்திருப்பார் ஆனந்தன். உண்மையிலேயே அது ஒரு தகவல் பெட்டகம்தான். அதற்காக நான் ஆனந்தனை நேரில் பல முறை பாராட்டியிருக்கிறேன். அந்த மலரின் ஒரு பிரதி கூட அதைக் கொண்டு வந்த அவரிடம் பின்னர் இல்லை என்பது வேறு விஷயம். நடிகை கே.ஆர். விஜயாவின் 100 வது படமான ‘நத்தையில் முத்து’ வந்தபோது, அவருக்கு புகைப்படங்கள் அடங்கிய ஒரு அருமையான மலரைக் கொண்டு வந்தவர் ஆனந்தன். சிவகுமாரின் 100 வது படமான ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ வந்த சமயத்தில், அவருக்கும் ஒரு மிகச் சிறந்த மலரை ‘ஃபிலிம் நியூஸ்’ ஆனந்தன் கொண்டு வந்திருந்தார். அதேபோல கமல்ஹாசனின் 100 வது படமான ‘ராஜ பார்வை’ வந்தபோதும் கமலுக்காக ஒரு நிகரற்ற மலரை கொண்டு வந்து சிறப்பு செய்திருக்கிறார் ஆனந்தன். நடிகர் திலகம் சிவாஜி, ‘செவாலியே’ விருது பெற்ற போது ஆனந்தன் ஒரு அருமையான மலரைப் பெறுப்பேற்று கொண்டு வந்தார்.
நாளிதழ்களிலும், வார – மாத இதழ்களிலும் ஒவ்வொரு வருடமும் முடியும் வேளையில், ‘இந்த வருட படவுலக கண்ணோட்டம்’ என்று ஒரு பகுதி வருமே! அந்தப் பகுதி ‘ஃபிலிம் நியூஸ்’ ஆனந்தனின் சுயநலமற்ற சேவை எண்ணத்தின் விளைவால் வருவது. ஒவ்வொரு வருடமும் தமிழில் எவ்வளவு திரைப் படங்கள் திரைக்கு வருகின்றன, அவற்றில் நேரடி படங்கள் எத்தனை, மொழி மாற்ற படங்கள் எத்தனை, எந்தெந்த நடிகர் – நடிகைகள் எத்தனைப் படங்களில் நடித்திருக்கிறார்கள், ஒவ்வொரு தொழில் நுட்பக் கலைஞர்களும் பணியாற்றிய படங்கள் எத்தனை, வெள்ளி விழா ஓடிய படங்கள் எவ்வளவு, 100 நாட்கள் ஓடிய படங்கள் எத்தனை, 50 நாட்கள் ஓடிய படங்கள் எவ்வளவு, மூன்று காட்சிகள் ஓடிய படங்கள் எவ்வளவு, பகல் காட்சி மட்டும் ஓடிய படங்கள் எவ்வளவு, எத்தெந்த இசையமைப்பாளர் எத்தனைப் படங்களில் பணியாற்றியிருக்கிறார்கள், அதிகமான பாடல்களை எழுதிய பாடலாசிரியர் யார், புதுமுகங்களாக எவ்வளவு பேர் படவுலகில் அறிமுகமாகியிருக்கிறார்கள், தணிக்கைச் சான்றிதழ் பெற்று இன்னும் திரைக்கு வராமல் எத்தனைப் படங்கள் இருக்கின்றன என்பது போன்ற அரிய தகவல்களை ஒவ்வொரு வருடமும் முறைப்படி சிரமப்பட்டு சேகரித்து, அவற்றை தட்டச்சு செய்து, எல்லா பத்திரிகைகளுக்கும் கிடைக்கும்படி செய்வது அவர்தான். இந்த நினைத்துப் பார்க்க முடியாத ஒப்பற்ற செயலை தன் வாழ்நாள் முழுக்க ‘ஃபிலிம் நியூஸ்’ ஆனந்தன் செய்திருக்கிறார் என்றால், அது எவ்வளவு பெரிய விஷயம்! அவரின் இந்த மகத்தான செயலை நான் எத்தனையோ தடவைகள் அவரை நேரில் பார்க்கும்போது மனம் திறந்து பாராட்டியிருக்கிறேன். ‘உங்களின் இந்த தன்னலமற்ற செயலைப் பார்த்து நான் உண்மையிலேயே ஆச்சரியப்படுகிறேன். அதற்காக உங்களை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்’ என்று கூறும்போது, அவர் கள்ளங்கபடமற்ற தன் சிரிப்பை வெளிப்படுத்துவார். அவ்வளவுதான்.
பத்திரிகையாளர்களுக்காக திரைப்படங்கள் திரையிடப்பட்டு காட்டப்படும்போது, அந்தப் படத்தின் மக்கள் தொடர்பாளர் அவரை அழைத்திருக்கிறாரோ இல்லையோ, சிறிய படமோ பெரிய நட்சத்திரங்கள் நடிக்கும் படமோ எதைப் பற்றியும் கவலைப் படாமல் திரையரங்கிற்கு வந்து விடுவார் ஆனந்தன். தான் அச்சிட்டு வைத்திருக்கும் ஒரு படிவத்தில் அந்த திரையிடப்பட இருக்கும் படத்தைப் பற்றிய அனைத்துத் தகவல்களையும் அவரே கேட்டு நிரப்பிக் கொள்வார். இப்படியொரு அர்ப்பணிப்பு! நான் மக்கள் தொடர்பாளராக பணியாற்றிய பல படங்கள் சம்பந்தப்பட்ட தகவல்களை அவரே நேரில் வந்து என்னிடம் வாங்கிச் சென்றிருக்கிறார். பல தடவைகள் நான் நேரில் அவருடைய வீட்டிற்குச் சென்று தகவல்களைத் தந்திருக்கிறேன். சில படங்களைப் பற்றிய தகவல்களை அவர் பல முறை கேட்டும், பல வேலைகளின் காரணமாக நான் அவருக்கு அனுப்பி வைப்பதாகவோ, நேரில் கொண்டு வந்து தருவதாகவோ கூறி, அவற்றைச் செயல் வடிவில் காட்டாமல் கூட இருந்திருக்கிறேன். எனினும், நேரில் பார்க்கும்போது ‘சார்... அந்தப் படத்தைப் பற்றிய தகவல் வேணும்’ என்பார். ‘நானே கொண்டு வந்து தருகிறேன், சார்’ என்பேன் அப்போது. அப்படி சில படங்களைப் பற்றிய தகவல்களை இன்று வரை அவரிடம் கொடுக்காமலே கூட இருந்திருக்கிறேன். அதற்காக இப்போது வருத்தம் கூட படுகிறேன். ‘ஃபிலிம் நியூஸ்’ ஆனந்தனின் சுயநலமற்ற அர்ப்பணிப்பிற்கு முன்னால் நான் இப்படி நடந்து கொண்டிருக்கக் கூடாதுதான்.
அதே நேரத்தில் சில தயாரிப்பாளர்களை நானே அவரை நேரில் போய் பார்க்கும்படி அனுப்பியும் வைத்திருக்கிறேன். அவர்கள் தாங்கள் தயாரித்த படங்களைப் பற்றிய தகவல்களை அவருடைய வீட்டிற்கே சென்று கூறிய தருணங்களில், அதற்காக அவர் மிகவும் சந்தோஷமும் பட்டிருக்கிறார். ஒரு இளைஞர் உதவி ஒளிப்பதிவாளராக சேர வேண்டும் என்ற ஆவலுடன் வெளியூரிலிருந்து வந்து அவரைப் பார்க்க, அவர் அந்த இளைஞரிடம் ‘சுரா என்று ஒருவர் இருக்கிறார். அவரைப் போய் பாருங்கள். கட்டாயம் எங்காவது சேர்த்து விடுவார்’ என்று கூறி, என்னிடம் அனுப்பி வைக்க, நான் அந்த இளைஞரை ஒளிப்பதிவாளர் பி. கண்ணனிடம் சேர்த்து விட்டேன் என்பது உண்மையிலேயே நடைபெற்ற ஒரு சம்பவம்.
தன் வாழ்நாளில் ‘ஃபிலிம் நியூஸ்’ ஆனந்தன் செய்த மிகவும் உயர்ந்த ஒரு செயல் – இதுவரை வெளிவந்த தமிழ் திரைப்படங்களை அவை திரைக்கு வந்த வருடங்களுடன் ஒரு பெரிய நூலாக பதிப்பித்தது. படவுலகைச் சேர்ந்த ஒவ்வொருவரின் கையிலும் கட்டாயம் இருக்க வேண்டிய அரிய பொக்கிஷமது.
கடந்த 60 வருடங்களுக்கும் மேலாக அவர் சிரமப்பட்டு சேர்த்து வைத்திருந்த புகைப்படங்களையும், திரைப் படங்கள் சம்பந்தப்பட்ட தகவல்களையும், சுவரொட்டிகளையும், பாட்டு புத்தகங்களையும், விளம்பரங்களையும் ஒரு பெரிய தொகை தந்து, சில வருடங்களுக்கு முன்பு ஜெயலலிதா தலைமையில் இருந்த தமிழக அரசு வாங்கியது. அதை திரைப்பட நகரத்தில் பாதுகாத்து வைத்து, ஒரு கண்காட்சி சாலை அமைக்கப் போவதாக திட்டம் வகுத்தது. ஆனால், உண்மையில் நடந்தது என்ன? அவை முறைப்படி பாதுகாத்து வைக்கப்படாமல், சீரழிந்து சின்னா பின்னமாகி, காணாமலே போய் விட்டன. அதை பல முறை நேரில் பார்க்கும்போது மிகவும் கவலையுடன் என்னிடம் கூறியிருக்கிறார் ஆனந்தன்.