கே.பாலசந்தர் என் ஜூனியர் - ஜெயகாந்தன்
- Details
- Category: பொது
- Published Date
- Written by சுரா
- Hits: 5250
மறக்க முடியுமா? - சுரா (Sura)
கே.பாலசந்தர் என் ஜூனியர் - ஜெயகாந்தன்
தமிழ் இலக்கியத்தின் தலைமகன் ஜெயகாந்தன் நம்மிடமிருந்து பிரிந்து சென்று விட்டார். நான் என்னுடைய பள்ளிப் பருவ நாட்களிலிருந்து கேட்டுக் கேட்டு, மனதிற்குள் புளகாங்கிதம் அடைந்து கொண்டிருந்த சிங்கத்தின் குரல் அடங்கி விட்டது. என்னுடைய இளம் வயதிலிருந்து வணக்கத்திற்குரிய கதாநாயகனாக நான் ஏற்றுக் கொண்டிருந்த கம்பீர உருவம் இந்த மண்ணை விட்டு இறுதி விடை பெற்றுச் செல்கிறது. எனக்குள் இலக்கிய வேட்கையை உண்டாக்கிய ஒரு மாபெரும் மனிதர் தன்னுடைய இறுதி மூச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டு, வேறொரு கண்ணுக்குத் தெரியாத உலகிற்கு நிரந்தரமாக பயணமாகி விட்டார்.
என் ஆருயிர் நண்பர் இளையபாரதிதான் ஜெயகாந்தனின் மரணச் செய்தியை எனக்கு முதலில் தெரிவித்தவர். என்னைப் போலவே ஜெயகாந்தன் என்ற அந்த இலக்கியச் சிற்பியின் மரணச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்து, கவலைக் கடலில் மூழ்கி, கண்ணீருடன் உலகமெங்கும் கோடிக் கணக்கான தமிழ் நெஞ்சங்கள் உறைந்து போய் நின்று கொண்டிருக்கும் இந்த அவல வேளையில் என் மனக் குதிரையை பின்னோக்கி பயணிக்கச் செய்கிறேன். என்னுடைய கடந்த கால வாழ்க்கையை திரும்பிப் பார்க்கிறேன். எனக்குள் இலக்கிய ரசனையை உண்டாக்கி, அதை மேம்படுத்தி முன்னோக்கி நகரச் செய்த அந்த எழுத்து வேந்தரை இரு கரம் கூப்பி வணங்கி நன்றி தெரிவித்தவாறு, கடந்து சென்ற பக்கங்களைப் புரட்டிப் பார்க்கிறேன்.
நினைக்க நினைக்க மனதில் பெருமிதமும், உற்சாகமும், கவலையும், கண்ணீரும் ஒன்றுக்குப் பின் ஒன்றாக தோன்றி மர்ம நடனம் ஆடிக் கொண்டிருக்கிறது. எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து எனக்குள் ஒரு எழுத்தாளனின் பெயர் ஆணி அடித்ததைப் போல உறுதியாக நிலைத்து நின்றது என்றால், அது ஜெயகாந்தனின் பெயர்தான். நான் அவர் மீது காந்தமென ஈர்க்கப்பட்டதற்கு அந்தப் பெயர் கூட ஒரு காரணமாக இருக்க வேண்டும். 'ஜெயகாந்தன்' என்ற பெயரை வாயால் உச்சரிக்கும்போதே இனம் புரியாத ஒரு கம்பீரம் தானாகவே வந்து சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து கொள்வதைப் போல என்னால் உணர முடிந்தது.
என்னுடைய பத்து வயதிலிருந்தே நான் ஜெயகாந்தனின் படைப்புகளைப் படிக்க ஆரம்பித்து விட்டேன். நான் முதன் முதலில் படித்த அவருடைய நாவல் 'யாருக்காக அழுதான்?' அதை படிக்க ஆரம்பித்து, ஒரு நிமிடம் கூட கீழே வைக்கவில்லை. ஆரம்பத்திலிருந்து இறுதி வரை முழுமையாக ஒன்றிப் போய் நான் நூலுடன் இரண்டற கலந்து விட்டேன் என்று கூறுவதுதான் சரியாக இருக்கும். அதன் கதாநாயகனான ஜோசப் என் மனதில் ஆழமாக நுழைந்து விட்டான். அவனுடைய சிரிப்பு, அழுகை, மவுனம் ஒவ்வொன்றிலும் நான் என்னையே இழந்தேன். 'இப்படியொரு அருமையான நாவலை ஒருவரால் எழுத முடியுமா?' என்று ஆச்சரியத்தின் விளிம்பிற்கே சென்று, ஜெயகாந்தன் என்ற அந்த படைப்பாளியை நான் வானத்திற்கு நிகராக வைத்து அண்ணாந்து பார்த்தேன். ஜோசப்பைப் போன்ற மனிதர்களைத்தான் நாம் தினமும் பல இடங்களிலும் பார்த்துக் கொண்டிருக்கிறோமே! வாழ்க்கையில் அன்றாடம் நாம் காணும் ஒரு கதாபாத்திரத்தை இந்த அளவிற்கு இரத்தமும் சதையுமாக ஒரு எழுத்தாளரால் உலாவ விட முடியுமா என்ற வியப்புடன் நான் ஜெயகாந்தனைப் பார்த்தேன். அந்த நாவலை வாசித்த கணத்திலேயே நான் ஜெயகாந்தனின் தீவிர வாசகனாகவும், பரம ரசிகனாகவும் ஆகி விட்டேன்.
அதற்குப் பிறகு அவருடைய 'வாழ்க்கை அழைக்கிறது' என்ற முதல் நாவலைப் படித்தேன். அதில் இடம் பெற்ற ஒவ்வொரு கதாபாத்திரமும் இன்றும் என் உள்ளத்தில் பசுமையாக வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அதை திரும்பத் திரும்ப பத்து தடவைகளாவது நான் படித்திருப்பேன். முதல் நாவலையே இந்த அளவிற்கு யதார்த்தமாக படைக்க முடியுமா என்று அப்போது நான் நினைத்திருக்கிறேன்.
ஜெயகாந்தனின் எழுத்தாற்றலை உலகமெங்கும் பரவச் செய்து, அவரை தலையில் வைத்து கொண்டாட வைத்த அவருடைய படைப்புகள் 'பாரிஸுக்குப் போ', 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்' என்ற இரண்டும். தீவிர இலக்கியவாதிகளாலும், விமர்சகர்களாலும், இலக்கிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பவர்களாலும் இந்த இரண்டு நாவல்களும் உயரத்தில் வைத்து இன்று வரை நினைக்கப்பட்டுக் கொண்டிருப்பதற்குக் காரணம்- ஜெயகாந்தனின் அபார எழுத்துத் திறமையும், அவர் படைத்த மாறுபட்ட கதாபாத்திரங்களும்தான்.
அவர் எழுதிய 'கை விலங்கு' என்ற புதினத்தை ஐந்து தடவைகளாவது நான் மீண்டும் மீண்டும் வாசித்திருப்பேன். அந்தக் கதையில் கள்ளு இறக்குபவராக வரும் சாமுண்டி என்ற முரட்டு மனிதன் இப்போது கூட என் உள்ளத்தில் உயிர்ப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கிறான். சிறைக் கைதியாக இருக்கும் ஒரு இளைஞனை மனிதாபிமான அடிப்படையில் சிறையில் அதிகாரியாக இருக்கும் ஒரு மனிதர் ஒரு இரவு வேளையில் தன் பொறுப்பில் வெளியே அனுப்பி வைப்பது என்பதும், வெளியே சென்ற இளைஞன் ஊரிலிருக்கும் தன் அன்னையைப் பார்த்து விட்டு, உரிய நேரத்திற்கு திரும்பி வருகிறான் என்பதும்... அதற்கு முன்பு நான் கேள்விப்பட்டிராத விஷயங்கள். ஜெயகாந்தனால் மட்டுமே இப்படிப்பட்ட வித்தியாசமான கதாபாத்திரங்களைப் படைக்க முடியும்.
அதே கதையை நடிகர் எஸ்.வி.சுப்பையா 'காவல் தெய்வம்' என்ற பெயரில் திரைப்படமாக தயாரித்தார். கே.விஜயன் இயக்கிய அந்தப் படத்தில் சிவகுமார், லட்சுமி, அசோகன், எஸ்.வி.சுப்பையா ஆகியோர் நடித்தார்கள். 'மரமேறி' சாமுண்டியாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வாழ்ந்தார். தூக்குத் தண்டனை கைதியாக நடித்து, படம் பார்ப்போர் அனைவரையும் கண்ணீர் விட்டு அழ வைத்தார். சிவாஜி கணேசனுக்காக ஜெயகாந்தன் 'இருப்பதும் போறதும் இயற்கை' என்றொரு பாடலை எழுதினார். டி.எம்.சவுந்தர்ராஜன் தன்னுடைய அபாரமான பாடும் திறனால் அதன் ஒவ்வொரு வரிக்கும் உயிரூட்டினார். மதுரையில் நான் அந்தப் படத்தை 37 வருடங்களுக்கு முன்பு பார்த்தேன். அதன் ஒவ்வொரு காட்சியும் இப்போது கூட எனக்குள் ஒன்று விடாமல் ஓடிக் கொண்டேயிருக்கிறது.