கே.பாலசந்தர் என் ஜூனியர் - ஜெயகாந்தன் - Page 2
- Details
- Category: பொது
- Published Date
- Written by சுரா
- Hits: 5245
ஜெயகாந்தனே எழுதி, இயக்கிய படம் 'உன்னைப் போல் ஒருவன்' மத்திய அரசாங்கத்தின் விருது பெற்ற படமது. தமிழ் திரையுலகிற்கு கருப்பு - வெள்ளை பட காலத்திலேயே எப்படிப்பட்ட ஒரு பெருமையை ஜெயகாந்தன் வாங்கித் தந்திருக்கிறார்!
அவர் எழுதிய 'சினிமாவுக்குப் போன சித்தாளு' யாருமே தொடுவதற்கு அஞ்சக் கூடிய கதை. எம்.ஜி.ஆரை மனதில் வைத்து அந்த நாவலை ஜெயகாந்தன் எழுதியிருந்தார். கட்டிய கணவன் அருகில் இருக்க, ஒப்பனை பூசி படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் சினிமா நடிகரை கனவு நாயகனாக நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் ரிக்ஷாக்காரனின் மனைவியை தமிழ் மக்களுக்கு முன்னால் உயிர்ப்புடன் உலாவ விட்டார் ஜெயகாந்தன்.
'சில நேரங்களில் சில மனிதர்கள்', 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்' திரைப்படங்களாக வந்தன. மாறுபட்ட முயற்சிகள் என்று அனைவரும் பாராட்டினர். நானும் அந்தப் படங்களை அப்போது பார்த்தேன். வெறும் பொழுது போக்கிற்காகவும், பணம் சம்பாதிக்கவும் படமெடுத்துக் கொண்டிருந்த சூழ்நிலையில் இப்படிப்பட்ட படங்கள் உருவாகுவதற்கு அச்சாணியாக இருந்த ஜெயகாந்தனின் எழுத்தாற்றலையும் கதாபாத்திரங்களையும் மனதிற்குள் பெருமையாக நினைத்துப் பார்த்தேன்.
அவர் எழுதிய 'கருணையினால் அல்ல' புதினம் 'கருணை உள்ளம்' என்ற பெயரில் திரைப்படமாக வந்தது. அதுவும் ஒரு நல்ல படமே.
தமிழ்மணி நடத்திய 'நயனதாரா'வில் மாத நாவலாக வந்த ஜெயகாந்தனின் 'கரு' நாவல், 'எத்தனை கோணம் எத்தனை பார்வை' என்ற பெயரில் படமாக தயாரிக்கப்பட்டது. நடிகை ஶ்ரீப்ரியா நடித்தார். ஜெயகாந்தனின் 'புது செருப்பு கடிக்கும்' அதே பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டது.
ஊருக்கு நூறு பேர், எங்கெங்கு காணினும், மூங்கில் காட்டு நிலா, பாவம் இவள் ஒரு பாப்பாத்தி, ஒரே கூரைக்குக் கீழே, மனவெளி மனிதர்கள் - ஜெயகாந்தனின் இந்த ஒவ்வொரு நாவலிலும் அவருடைய முற்போக்கு சிந்தனைகளை மிகவும் பலமாக நம்மால் உணர முடிந்தது.
நாவல்களில் மட்டுமல்ல - சிறுகதைகளைப் படைப்பதிலும் அவர் அரசராகவே இருந்தார். அதனால்தான் அந்தக் காலத்தில் அவரை 'சிறுகதை மன்னன்' என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். சிலுவை, அந்தரங்கம் புனிதமானது, சாளரம், போர்வை, நிக்கி, குரு பீடம், பிரம்மோபதேசம், அக்னி பிரவேசம், தவறுகள் குற்றங்கள் அல்ல, நான் இன்னா செய்யட்டும் சொல்லுங்கோ, இருளைத் தேடி, ஒரு பகல் நேர பாசஞ்சர் வண்டியில் என்று அவர் எழுதிய சிறுகதைகளை நான் வாசித்து எவ்வளவோ வருடங்கள் கடந்தோடி விட்டன. இப்போதும் அவை ஒவ்வொன்றும் புதிதாக படித்தவை போன்றே மனதில் தோன்றுவதற்குக் காரணம் - ஜெயகாந்தனின் அந்த அபார எழுத்தாற்றலும், அவர் படைத்த மாறுபட்ட உலகங்களும், இதற்கு முன்பு நாம் பார்த்திராத கதைக் களங்களும், இயல்பான கதாபாத்திரங்களும்தான்...
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் எப்படி என்னுடைய ஆதர்ஷ கதாநாயகனாக என் மனதிற்குள் தன்னுடைய நினைத்துப் பார்க்க முடியாத அபார திறமையால் நுழைந்தாரோ, அதே மாதிரி ஜெயகாந்தனும் எனக்குள் நுழைந்து மிடுக்காக சிம்மாசனம் போட்டு என் பள்ளிக் கூட நாட்களிலேயே உட்கார்ந்து விட்டார். இன்று வரை அவருக்குத்தான் என் மனதிற்குள் முதல் இடம். அதற்குப் பிறகுதான் மற்ற எழுத்தாளர்கள்... அதுதான் உண்மை.
நான் மதுரை ஜெயராஜ் நாடார் உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். அனேகமாக எட்டாம் வகுப்பு என்று நினைக்கிறேன். அருகில் இருந்த வெள்ளைச்சாமி நாடார் கல்லூரிக்கு ஜெயகாந்தன் வந்திருக்கிறார் என்றொரு தகவல் கிடைத்தது. அப்போது எனக்கு 13 வயது. கம்பி வேலியைத் தாண்டி, யாருக்கும் தெரியாமல் சென்று நான் அந்தக் கல்லூரிக்கு வந்திருந்த ஜெயகாந்தனைப் பார்த்தேன். ஜெயகாந்தனுக்கு அப்போது வாலிப வயது. தலைமுடியை ஸ்டைலாக சிலுப்பியவாறு மேடையில் சிங்கமென கர்ஜித்துக் கொண்டிருந்தார் ஜெயகாந்தன். தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழி வார்த்தைகளையும் அருமையான உச்சரிப்புடனும் அழுத்தத்துடனும் வெளிப்படுத்திக் கொண்டிருந்த ஜெயகாந்தன் அப்போதே என் மனதில் கூடு கட்டி வாழ ஆரம்பித்து விட்டார். 'ஒரு எழுத்தாளன் என்றால் இப்படித்தான் ஆண்மைத் தனத்துடன், கம்பீரமாக, சிங்கத்தைப் போலும் இருக்க வேண்டும்' என்று அந்த நிமிடத்திலிருந்தே நான் மனதில் தெளிவாக தீர்மானித்து விட்டேன்.
அதற்குப் பிறகு மதுரை நியூ செஞ்சுரி புத்தக நிலையத்தில் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சிக்காக வந்திருந்த ஜெயகாந்தனை நான் மிகவும் அருகிலிருந்து பார்த்தேன். என் நெருங்கிய நண்பரும், கவிஞருமான பரிணாமன் என்னை அழைத்திருந்தார். அங்கு வந்திருந்த ஒவ்வொருவரின் கேள்விக்கும் நகைச்சுவையுடனும், நேரடியாகவும், துணிச்சலுடனும் பதில்கள் கூறிய ஜெயகாந்தனை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. யாரோ ஒருவர் 'இயக்குநர் கே.பாலசந்தரைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?' என்று கேட்டதற்கு, 'இந்த கேள்வியை நீங்கள் பாலசந்தரிடம் போய் கேளுங்கள்- 'நீங்கள் ஜெயகாந்தனைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?' என்று அவரைக் கேளுங்கள். பாலசந்தர் ஈஸ் மை ஜூனியர்' என்றார் ஜெயகாந்தன்- மிடுக்கான குரலில். அதுதான் ஜெயகாந்தன்!
அது நடந்து சில மாதங்களில் நான் சென்னைக்கு வந்து விட்டேன். ஜெயகாந்தன் கலந்து கொண்டு பேசிய எவ்வளவோ கூட்டங்களுக்கு நான் சென்றிருக்கிறேன். இன்னும் சொல்லப் போனால் - ஜெயகாந்தனைப் பார்ப்பதற்காகவும், அவருடைய பேச்சைக் கேட்பதற்காகவும்தான் நான் செல்வதே, பார்வையாளர்களுக்கு மத்தியில் அமைதியாக உட்கார்ந்து அவரையே வைத்த கண் எடுக்காது நான் பார்த்துக் கொண்டிருப்பேன்.