கே.பாலசந்தர் என் ஜூனியர் - ஜெயகாந்தன் - Page 3
- Details
- Category: பொது
- Published Date
- Written by சுரா
- Hits: 5245
வருடங்கள் கடந்தோடிக் கொண்டிருந்தன.
ஜெயகாந்தனின் உடல் நலம் பலமாக பாதிக்கப்பட்டது. பல நாட்கள் மருத்துவமனையில் இருந்து, திரும்பி வந்தார். அதற்குப் பிறகு நண்பர் இளையபாரதி 'இயல் இசை நாடக மன்றம்' சார்பில் வாணி மஹாலில் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். அந்த விழாவின் சிறப்பு அழைப்பாளரே ஜெயகாந்தன்தான். அவர் பேசுவதைக் கேட்பதற்காக பலரும் வந்திருந்தனர். உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்ததால், அமர்ந்து கொண்டே ஜெயகாந்தன் பேசலாம் என்றார்கள். ஐந்து நிமிடம்தான் பேசியிருப்பார். அதற்கு மேல் பேச்சு வரவில்லை. அவரே முடித்துக் கொண்டார். 'இப்படி உட்கார்ந்து பேசி எனக்கு பழக்கமில்லை. நின்று பேசித்தான் பழக்கம். அதனால், இத்துடன் என் பேச்சை முடித்துக் கொள்கிறேன்' என்று கூறி விட்டார் ஜெயகாந்தன். அத்துடன் கூட்டமும் முடிந்து விட்டது. ஒரு மணி நேரம் கூட எந்தவித தடங்கலும் இல்லாமல், ஆற்றொழுக்கு போல தமிழ் மழை பொழியும் ஜெயகாந்தனைப் பல கூட்டங்களிலும் பார்த்த எனக்கு இப்போதைய ஜெயகாந்தனைப் பார்த்தபோது, கண்களில் நீர் நிறைந்து விட்டது.
'நக்கீரன்' கோபால் அண்ணன், ஜெயகாந்தன் 75 வயதை அடைந்ததையொட்டி ஒரு விழாவை உட்லேண்ட்ஸ் ஹோட்டலில் நடத்தினார். அப்போது ஒரு மலர் வெளியிடப்பட, அதில் நான் ஜெயகாந்தனைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். என் மனதில் நான் ஜெயகாந்தன் மீது வைத்திருந்த அன்பு, ஈடுபாடு அத்தனையையும் அந்தக் கட்டுரையில் வெளிப்படுத்தினேன்.
அது நடந்து சில மாதங்களுக்குப் பிறகு எழுத்தாளர் ஜெகாதா, என் ஆருயிர் நண்பர் மா.முருகன் இருவரும் ஜெயகாந்தனின் இல்லத்திற்குச் சென்றனர். அவர்களுடன் நானும் சென்றேன். அவர்களுக்கு அவரை மிகவும் நன்றாகவே தெரியும். அவருக்கும். எனக்கு மட்டும்தான் ஜெயகாந்தன் நேரடியாக பழக்கமில்லை. நண்பர்கள் இருவரும் என்னை ஜெயகாந்தனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்கள். 'நீங்கள் மொழி பெயர்த்த பல படைப்புகளை நான் படித்திருக்கிறேன்' என்றார் ஜே.கே. நான் சந்தோஷ மழையில் நனைந்து மூழ்கி விட்டேன். என் எழுத்துக்களை ஜெயகாந்தன் படித்திருக்கிறாரா? இதற்கு மேல் எனக்கு வேறு என்ன பெருமை வேண்டும்?
எனக்கு எதிரில் அமர்ந்திருந்த ஜெயகாந்தனின் காலைத் தொட்டு நான் வணங்கினேன். தொடர்ந்து 'யாருக்காக அழுதான்?' காலத்திலிருந்து ஜெயகாந்தனை நேசிக்க ஆரம்பித்தது, உயர்நிலைப் பள்ளிக் கூடத்தில் படிக்கும்போது அவருடைய பேச்சைக் கேட்பதற்காக வேலியைத் தாண்டி வந்தது, சிங்கமென தலை முடியைச் சிலுப்பியவாறு அவர் கம்பீர குரலில் பேசியது, தொடர்ந்து அவருடைய பல கூட்டங்களுக்கும் பார்வையாளனாக வந்து அவரை விடாமல் பார்த்தது... ரசித்தது, இறுதியாக பார்த்த கூட்டத்தில் அவருடைய உடல் நிலையைப் பார்த்து கண்ணீர் விட்டது - இப்படி ஒவ்வொன்றையும் மிகுந்த ஈடுபாட்டுடன், என்னையே மறந்த நிலையில் நான் ஜெயகாந்தனிடம் கூறினேன். சுமார் அரை மணி நேரம் நான் பேசியிருப்பேன். சொல்லப் போனால் - நான் மட்டுமே பேசினேன். நண்பர்கள் இருவரும் அமைதியாக இருந்தார்கள். ஜெயகாந்தன் நான் பேசுவதை மலர்ந்த முகத்துடனும், புன்னகைக்கும் உதட்டுடனும் ரசித்து கேட்டுக் கொண்டிருந்தார். நான் பேசுவது அவருக்கு மிகவும் பிடித்திருந்தது என்பதை அவரின் முக வெளிப்பாட்டிலிருந்தே நான் தெரிந்து கொண்டேன். மாடியிலிருந்த அறையில் காமராஜருடன் மெத்தையில் தான் சாய்ந்து அமர்ந்திருந்த கருப்பு - வெள்ளை புகைப் படத்தை எடுத்து ஜெயகாந்தன் என்னிடம் காட்டினார். 'காமராஜருக்கு அருகில் இப்படி 'ஹாய்' ஆக உங்களால் மட்டுமே உட்கார முடியும்' என்றேன் நான் ஜெயகாந்தனிடம்- புன்னகைத்துக் கொண்டே. அதற்கு பதிலாக ஜெயகாந்தனும் என்னைப் புன்னகையுடன் பார்த்தார்.
அதற்குப் பிறகு ஜெயகாந்தனை நான் பார்க்கவில்லை. இடையில் சில வாய்ப்புகள் வந்தும், நான் பயன்படுத்திக் கொள்ளவில்லை. உடல் நலமற்ற நிலையில், அவருக்கு தொந்தரவாக இருக்க வேண்டாம் என்று நினைத்தது கூட காரணமாக இருக்கலாம்.
ஜெயகாந்தன் மரணத்தைத் தழுவி விட்டார். இந்த பூமியிலிருந்து விடை பெற்றுக் கொண்டார். எனினும், தன்னுடைய சாகா வரம் பெற்ற உயர்ந்த படைப்புகளின் மூலம் அவர் காலத்தைத் தாண்டி வாழ்ந்து கொண்டே இருப்பார். இந்த பிறவியில் அவர் சாதிக்க வேண்டியவை அனைத்தையும் என்றோ சாதித்து முடித்து விட்டார். இலக்கியத்தின் மீதும் எழுத்துக்களின் மீதும் ஆர்வமும், ஈடுபாடும், வெறியும் உள்ள ஒவ்வொருவரின் உள்ளத்திலும் ஜெயகாந்தனின் குரல் எப்போதும் இடை விடாமல் ஒலித்துக் கொண்டே இருக்கும்.