கலைஞரின் கதையை இயக்கிய கம்யூனிஸ்ட்!
- Details
- Category: பொது
- Published Date
- Written by சுரா
- Hits: 4187
அழியாத கோலங்கள் - சுரா (Sura)
கலைஞரின் கதையை இயக்கிய கம்யூனிஸ்ட்!
எனக்கு அருகில் புன்னகை மலர அமர்ந்திருப்பவர் இளவேனில். எழுத்தாளர், கவிஞர், ஓவியர், பத்திரிகையாளர், இலக்கிய மற்றும் அரசியல் விமர்சகர், இடதுசாரி சிந்தனையாளர், திரைப்பட இயக்குநர். . . இப்படி பல அவதாரங்களைக் கொண்டவர் இளவேனில்.
எனக்கு இளவேனில் அறிமுகமானது 1979 ஆம் ஆண்டில். அப்போது நான் 'சாவி' வார இதழின் உதவி ஆசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்தேன். சென்னை மண்ணில் கால் வைத்த புதிது. ப்ராட்வேயிலிருந்த 'ஜனசக்தி' அலுவலகத்திற்கு ஒருநாள் நான் சென்றிருந்தேன். அந்த அலுவலகத்திலிருந்து 'தாமரை' என்ற இலக்கிய மாத இதழ் வந்து கொண்டிருந்தது. இப்போதும் அது வருகிறது. அந்தச் சமயத்தில் அதன் ஆசிரியராக 'மீசை' சோமு என்பவர் இருந்தார். அவர் கடந்த வருடம் மரணத்தைத் தழுவி விட்டார். அவரை பார்ப்பதற்காகத்தான் நான் 'ஜன சக்தி'அலுவலகத்திற்கு சென்றிருந்தேன். நான் சென்றிருந்த வேளையில் சோமுவைப் பார்ப்பதற்காக இளவேனிலும் அங்கு வந்திருந்தார். அவர்கள் இருவரும் தோழர்கள். . . நெருங்கிய நண்பர்கள். சோமு இளவேனிலை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். 'தாமரை'இதழின் அட்டை வடிவமைப்பை அப்போது இளவேனில்தான் செய்து கொண்டிருந்தார். உள்ளே தேவைப்படும் படங்களையும் அவரே வரைந்து கொண்டிருந்தார். கம்யூனிச கொள்கைகளைப் பின்பற்றக் கூடியவராகவும், இடதுசாரி சிந்தனை கொண்டவராகவும் இருந்ததால், ஆரம்பத்திலேயே அவர் எனக்கு மிகவும் நெருக்கமானவராக ஆகி விட்டார். 'தாமரை'யின் ஒவ்வொரு மாத இதழிலும் நான் மொழி பெயர்த்த கதைகள் பிரசுரமாகும். அதற்கு இளவேனில் படங்கள் வரைவார். இப்படியே தொடர்ந்து நான்கு வருடங்கள் என் கதைகள் 'தாமரை'யில் வந்து கொண்டிருந்தன. எல்லா கதைகளுக்கும் இளவேனில்தான் படம்.
அதே கால கட்டத்தில் இப்போது திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளராகவும், நடிகராகவும் இருக்கும் அழகன் தமிழ்மணி தி. நகரில் 'நயனதாரா' என்ற பெயரில் ஒரு மாத நாவலை நடத்திக் கொண்டிருந்தார். இது நடந்தது 1980 ஆம் வருடத்தில். அப்போது நான் 'சாவி'யிலிருந்து விலகி, 'பிலிமாலயா' மாத இதழின் இணையாசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்தேன். 'நயனதாரா' மாத இதழின் அட்டை வடிவமைப்பாளர் இளவேனில். உள்ளே இருக்கும் நாவலைத் தவிர, மீதி பக்கங்களில் எழுதுபவன் நான். 'பிலிமாலயா'அலுவலகம் ப்ராட்வேக்கு அடுத்த தெருவிலேயே இருந்ததால், நானும், இளவேனிலும் அடிக்கடி அங்கு சந்திப்போம். இல்லாவிட்டால், 'நயனதாரா' அலுவலகத்திலோ அல்லது தி. நகர் 'இந்தியன் காஃபி ஹவு' ஸிலோ எங்களின் சந்திப்பு நடக்கும். எப்போது சந்தித்தாலும், நேரம் போவதே தெரியாமல் மணிக் கணக்கில் பேசிக் கொண்டிருப்போம். இலக்கியம், அரசியல், திரையுலகம், பத்திரிகைத் துறை என்று எல்லாவற்றைப் பற்றியும் நாங்கள் உரையாடுவோம். எங்கள் இருவருக்குமே பொதுவாக நல்ல நகைச்சுவை உணர்வு உண்டு. அதனால், சிரித்த முகத்துடன், ஜாலியாகவே நாங்கள் பேசிக் கொண்டிருப்போம்.
அந்தச் சமயத்தில் இளவேனிலின் கவிதைத் தொகுப்பு ஒன்று வெளியிடப்பட்டது. ஜெயகாந்தன் அதை வெளியிட்டார். அந்த நிகழ்ச்சிக்கு நானும் சென்றிருந்தேன். இளவேனிலை மனம் திறந்து பாராட்டினார் ஜே. கே.
இதற்கிடையில் ஒருநாள் என்னைப் பார்த்த இளவேனிலும், திரைப்பட விநியோகத் துறையில் இருந்த மீனாட்சி சுந்தரம் என்ற நண்பரும் என்னை படவுலகில் மக்கள் தொடர்பாளராக ஆகும்படி கூறினார்கள். அதற்கு நான் மறுத்தேன். 'எனக்கு திரையுலகிற்குள் நுழைய வேண்டும் என்ற ஆசை சிறிதும் கிடையாது. நான் பத்திரிகைத் துறையில் சாதனைகள் படைக்க நினைக்கிறேன். மிகச் சிறந்த வேற்று மொழி இலக்கியங்களை தமிழில் மொழி பெயர்த்து கொண்டு வர விரும்புகிறேன். சினிமாவை கனவு கண்டு கொண்டிருப்பவர்கள் நிறைய பேர் இங்கு இருப்பார்கள். அவர்களுக்கு ஏதாவது செய்யுங்கள். என்னை விட்டு விடுங்கள்' என்றேன் நான். ஆனால், இளவேனிலும், மீனாட்சி சுந்தரம் என்ற அந்த நண்பரும் என்னை விட்டால்தானே!வலுக்கட்டாயமாக என்னைக் கொண்டு போய் 'வடலூரான் கம்பைன்ஸ்' என்ற பட நிறுவனத்தின் உரிமையாளரான வடலூர் சிதம்பரத்திற்கு முன்னால் நிறுத்தினார்கள். இது நடந்தது 1981ஆம் ஆன்டில். அப்போது அந்நிறுவனம் விஜயகாந்த் கதாநாயகனாக நடிக்க, எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் 'சட்டம் ஒரு இருட்டறை' என்ற படத்தை தயாரித்திருந்தது. அந்தப் படத்திற்கு மக்கள் தொடர்பாளராக பணியாற்றியவர் சித்ரா லட்சுமணன். படம் 100 நாட்கள் ஓடி சாதனை புரிந்திருந்தது. அதன் வெற்றி விழாவிற்கு என்னை பி. ஆர். ஓ. வாக பணியாற்றும்படி சொன்னார் தயாரிப்பாளர் சிதம்பரம். எந்த அனுபவமும் இல்லாத நான் பணியாற்றினேன். அந்த விழா பற்றிய செய்திகள் எல்லா முன்னணி நாளிதழ்களிலும் அடுத்த நாளே வந்தன. 'ஓ. . . இதுதான் மக்கள் தொடர்பாளரின் வேலையா?நம்மால் இதை வெற்றிகரமாகச் செய்ய முடிகிறதே! சரி. . . செய்வோம். ஒரு டஜன்-அதாவது 12படங்கள் செய்வோம். ஒரு அனுபவத்திற்காக. அதற்குப் பிறகு நாமே நிறுத்திக் கொள்வோம்' என்று நான் மனதில் தீர்மானித்துக் கொண்டேன். வடலூரான் கம்பைன்ஸ் தயாரிப்பில், விஜயகாந்த் கதாநாயகனாக நடித்த 'சாதிக்கொரு நீதி' என்ற படம்தான் நான் மக்கள் தொடர்பாளராக பணியாற்றிய முதல் படம். அதில்'பொதுஜனத் தொடர்பாளர்: சுரா' என்று டைட்டில் கார்டு வந்தபோது, அருகில் அமர்ந்திருந்த இளவேனில் என்னைப் பார்த்து புன்னகைத்தார். பதிலுக்கு நானும் புன்னகைத்தேன்.