கலைஞரின் கதையை இயக்கிய கம்யூனிஸ்ட்! - Page 2
- Details
- Category: பொது
- Published Date
- Written by சுரா
- Hits: 4188
12 படங்களோடு நிறுத்திக் கொள்வோம் என்று மனதிற்குள் தீர்மானித்திருந்த நான் இதுவரை 200 திரைப் படங்களுக்கும், 60 தொலைக்காட்சி தொடர்களுக்கும் பி. ஆர். ஓ. வாக பணியாற்றி விட்டேன். இப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. நினைக்கும்போது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.
இதற்கிடையில் இளவேனில் 'மலையூர் மம்பட்டியான்' படத்திற்கு டிசைனராக பணியாற்றினார். வேறு சில படங்களுக்கும். . . சில படங்களில் பாடல்கள் எழுதினார். எங்களுடைய சந்திப்பு வழக்கம்போல தொடர்ந்து கொண்டிருந்தது.
சில திரைப் படங்களை இளவேனில் இயக்குவதாக இருந்தது. அந்த எல்லா படங்களுக்கும் நான்தான் பி. ஆர். ஓ. பாடல்கள் கூட ஒலிப்பதிவு செய்யப்பட்டன. எனினும், சில காரணங்களால் அப்படங்கள் அதற்கு மேல் வளரவில்லை.
சில வருடங்களுக்கு முன்பு, கலைஞர் அணிந்துரை எழுத, இளவேனிலின் 'ஆத்மா என்றொரு தெருப்பாடகன்' என்ற நூலின் வெளியீட்டு விழா அறிவாலயத்தில் நடைபெற்றது. கலைஞர் நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். கீழே வைக்க முடியாமல், ஒரே இரவில் அதை படித்து முடித்ததாக கூறினார். அதை கேட்கும்போது இளவேனிலின் நண்பன் என்ற முறையில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
நான் அந்நூலை வாசித்தேன். அடடா. . . என்ன அருமையான நூல்!உணவு, உறக்கம் எல்லாவற்றையும் மறந்து நான் அந்த புத்தகத்திலேயே மூழ்கி விட்டேன். அதில் இரண்டற நான் கலந்து விட்டேன். அதற்கு முன்பு நான் அவ்வாறு வாசித்த நூல் மாக்ஸிம் கார்க்கியின் 'தாய்' மட்டுமே.
தொடர்ந்து இளவேனில் 'நந்தன்'பத்திரிகையின் பொறுப்பாசிரியராக பணியாற்றினார். அதில் என்னுடைய மொழி பெயர்ப்பு கதைகளும், நான் எழுதிய திரையுலகம் பற்றிய கட்டுரைகளும் தொடர்ந்து வெளிவந்தன.
'முரசொலி'யில் தொடர்ந்து அரசியல் கட்டுரைகள் எழுதினார் இளவேனில். 'புயலுக்கு இசை வழங்கும் பேரியக்கம்' என்ற பெயரில், இளவேனில் எழுதிய அரசியல் கட்டுரைகளின் தொகுப்பு நூல் வெளியிடப்பட்டது. அதற்கு அணிந்துரை எழுதியவர் கலைஞர்.
இப்போது இளவேனிலின் நீண்ட கால கனவு நனவாகிறது. அவர் திரைப்பட இயக்குநராக வடிவமெடுக்கிறார். கலைஞர் ' சாரப்பள்ளம் சாமுண்டி'என்ற பெயரில் எழுதிய வரலாற்று பின்னணி கதை 'உளியின் ஓசை' என்ற பெயரில் திரைப்பட வடிவம் பெறுகிறது. ஆறுமுகநேரி முருகேசன் தயாரித்த அப்படத்திற்கு உரையாடல் எழுதியவர் கலைஞர். இசை:இளையராஜா. ஒளிப்பதிவு:
கண்ணன். கேரளம், ஜெய்ப்பூரில் கூட படமாக்கப்பட்டது. அப்படத்திற்கு நான் மக்கள் தொடர்பாளராக பணியாற்றினேன். 'படத்தை இயக்க வேண்டும் என்ற உங்களின் ஆசை எத்தனை வருடங்கள் கழித்து நிறைவேறுகிறது என்று பார்த்தீர்களா?'என்று நான் இளவேனிலைப் பார்த்து கேட்டேன். அப்போது என்னையே புன்னகையுடன் பார்த்தார் இளவேனில். அந்த புன்னகைக்குப் பின்னால் மறைந்திருந்த கடுமையான விடா முயற்சியை அவரும் உணர்ந்திருந்தார். நானும் உணர்ந்தேன்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு, இளவேனில் 'காருவகி' என்ற வரலாற்று நாவலை எழுதி வெளியிட்டார். மிகவும் அருமையான நூல். அரசன் அசோகனை புத்த மதத்தின்மீது ஈடுபாடு கொள்ள வைத்தவள் காருவகி என்ற தமிழ் பெண் என்பதுதான் அந்தக் கதையின் கருவே. நூலை கையில் எடுத்தால், கீழே வைக்கவே தோன்றாது. அப்படியொரு காந்த சக்தி இளவேனிலின் எழுத்துக்கு இருக்கிறது.
சமீபத்தில் இளவேனிலின் கட்டுரைகளின் தொகுப்பான 'வாளோடும் தேன் சிந்தும் மலர்களோடும் புரட்சியும் எதிர்ப் புரட்சியும்' என்ற நூல் வெளியிடப்பட்டது. மிகச் சிறந்த, அனைவரையும் சிந்திக்க வைக்கும் அரசியல் கட்டுரைகள். நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நல்ல கண்ணு, ஜி. ராமகிருஷ்ணன், நீதியரசர் சந்துரு, தொல். திருமாவளவன் ஆகிய எல்லோருமே இளவேனிலின் எழுத்தாற்றலை மனம் திறந்து உயரத்தில் வைத்து பாராட்டினர்.
சமீபத்தில் நானும், இளவேனிலும் சந்தித்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம். எப்போதும் சந்திக்கக் கூடிய அதே தி. நகர் 'இந்தியன் காஃபி ஹவு'ஸில்தான். விரைவில் படமொன்றை இயக்க திட்டமிட்டிருப்பதாக கூறினார். கதையைக் கூறினார். எனக்கு பிடித்திருந்தது. நிச்சயம் நன்றாக வரும்' என்றேன் நான்.
இளவேனிலும், நானும் 1979இல் முதல் தடவையாக சந்தித்தோம். 35 வருடங்கள் கடந்தோடி விட்டன. அந்த ஆழமான நட்பு இப்போதும் பசுமையாக தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதை நினைக்கும்போது உண்மையிலேயே பெருமையாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறது.