உன்னதமான உறவுகள் - Page 4
- Details
- Category: பொது
- Published Date
- Written by chitralekha
- Hits: 10892
குடும்பம் ஒரு கோயில். உறவுகள் அங்கே வீற்றிருக்கும் தெய்வங்கள். தெய்வங்களை நிந்திக்கிறோமா? அது போல உறவுகளை தெய்வீக உணர்வுகளாக மதித்தால் பிரிவுகள் நேரிடாது. ஒற்றுமை ஒங்கும். வேற்றுமை வேரறுத்துப் போகும். ஒட்டிப்பிறந்த சகோதர உறவுகள் திடீரென வெட்டிக்கொண்டு பிரிந்து விட நேரிடாது. சிறு வயதில் ஓரே தட்டில் சாப்பிட்டு, எச்சில் என்று எட்டிப் போகாமல், விளையாட்டாய் தட்டிப் பறித்து சாப்பிட்டு மகிழ்வோமே மிட்டாய்களை! அந்த மிட்டாய் போன்ற இனிமையை இழக்கத்துணியும் உணர்வுகளை, ஏன் நாம் வளர்ந்த பிறகு, வளர்த்துக் கொள்கிறோம்? இளம் பிராயத்தில் தங்கையை அல்லது தம்பிளை யாராவது திட்டினாலோ அடித்து விட்டாலோ அண்ணனுக்கு எப்படிக் கோபம் பொத்துக் கொண்டு வருகிறது? அடித்த நபரை அடித்து மொத்துவது எதனால்? உடன் பிறப்பு மீதுள்ள பாசத்தால். ஆனால் அதே உடன் பிறப்புகள், வளர்ந்து பெரியவர்களான பிறகு? தாங்களே தன் உடன் பிறப்பை திட்டுவதும், அடிப்பதுமாக உருமாறுவதும், உள்ளம் மாறுவதும் நிகழ்கிறது. ஏன் இந்த மாற்றம்? இதை எப்படி சரி பண்ணுவது? புதிதாய் பிறந்த குழந்தையைப் பார்ப்பது போல் தினமும் தன் உடன் பிறப்புகளை, மற்ற உறவுகளைப் பார்க்கப் பழகிவிட்டால், உணரப்பழகிவிட்டால் அந்த சிறுவயது பாசம் மாறாமல் இருக்கும். வேஷம் இல்லாத நேசம், துவேஷம் இல்லாத பாசத்தை வளர்க்கும்.
அம்மா - மகன் உறவுக்குள் மருமகள் எனும் புதிய உறவு ஒரு பூ மலர்வது போல மென்மையாக இருக்க வேண்டுமே தவிர தீப்போறி பறப்பது போல வன்மையாக இருக்கக்கூடாது.
ஒரு குழந்தையை வளர்ப்பது என்பது லேஸான விஷயம் அல்ல. அது ஒரு தவம். ஒரு யாகம். ஒரு வேள்வி. அப்படிப்பட்ட ஒரு தாய்மையையும், தாங்கி வளர்த்த தகப்பனையும் மகனிடமிருந்து பிரிப்பது பாவச் செயல் அல்லவா? அந்த பாவச் செயலின் பிரதிபலிப்பு நாளை அந்த மருமகளுக்கும் ஏற்படும் அல்லவா?
அவளுடைய மகனுக்கு வாய்க்கும் மனைவி அவளைப் போலவே பிரிவை உண்டாக்கும் மனோபாவம் உள்ளவளாக இருந்தால்? சுவரில் அடித்த பந்தின் நிலைமைதான். அந்த சூழ்நிலையில், தான் செய்த தீங்குகளை உணர்ந்து வருத்தப்பட்டு என்ன பயன்? பல வருடங்கள் தாய், மகனை பிரித்தாகி விட்டது. உருண்டோடிய அந்த வருடங்கள் மீண்டும் திரும்பக் கிடைக்குமா? நாம் மனம் திருந்துவோம் என்று ஒரு போதும் காலம் காத்திருக்காது. நம் உயிர் பறிக்கும் காலனும் காத்திருக்கமாட்டான். எனவே குடும்பம் எனும் மரத்தின் ஆணி வேராகத் திகழும் அன்பு எனும் பசுமையான இலைகளைக் கிள்ளி எறியக் கூடாது. பூஞ்சோலையாக மாற்ற மனம் இல்லாவிட்டாலும் அன்பு எனும் தண்ணீர் இல்லாத பாலைவனமாக மாற்றாமலாவது நடந்து கொள்ளலாமே?.
'என் மருமகளை நான் பெற்ற மகள் போல பார்த்துக் கோள்கிறேன்.'
'நான் என் மாமியாரை என்னைப் பெற்ற தாய் போல பார்த்துக் கொள்கிறேன்.'
சில மருமகள்களும், சில மாமியார்களும் கூறும் வசனம் இது. எந்த ஒரு மருமகளும் மாமியாரை தன் அம்மாவைப் போல நேசிக்கவும் மாட்டாள். பார்த்துக் கொள்ளவும் மாட்டாள். அது போல எந்த ஒரு மாமியாரும், மருமகள் மீது தன் மகள் போல பாசம் செலுத்தவும் மாட்டாள். கவனித்துக் கொள்ளவும் மாட்டாள். இதை ஒரு குற்றமாகவோ, குறையாகவோ நான் குறிப்பிடவில்லை. இயல்பு! மனித இயல்பு. நம் அம்மாவைத்தான் அம்மாவாக நினைப்போம். சும்மா எல்லாரையும் நம்மைப் பெற்ற அம்மாவாக நினைத்து, அதைப்போன்ற அன்பை செலுத்த முடியாது. இயல்பான ஒரு உணர்வை மாற்றி ஏற்றுக் கெள்வது மிகக் கடினம். யாரோ லட்சத்தில் ஒருவர்... கோடியில் ஒருவர் வேண்டுமானால் விதிவிலக்காக, மருமகளை தன் மகள்போல பாவித்து, பாசம் செலுத்தலாம், அது போல மருமகளும். இது ஆபூர்வமானது.
'மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம்' இந்த பழமொழி, நம் முன்னோர்களின் பழக்க வழக்கங்களில் இருந்து வந்த மொழி! தன் மகளுக்கு உடல் நலக்குறைவு என்றால் துடித்துப் போய் அவள் அருகிலேயே இருந்து கவனித்துத் கொள்ளும் மாமியார், தன் மருமகள் ஏதாவது நோய்வாய்ப்பட்டால், "இதென்ன சாதாரண @ஜுரம்தான், ரெண்டு மாத்திரை போடு, சரியாகிவிடும்" என்பாள்.
சமையலறை 'ட்யூட்டி' தடைபட்டுப் போகும் எரிச்சலில் வெளிவரும் வார்த்தைகள் இவை. சில நேரங்களில் சில மாமியார்கள்!.... மகளுக்கு ஒன்று என்றால் 'ஐய்யோ.. என் மகள் புகுந்த வீட்ல மாடா உழைச்சு ஒடா தேய்ஞ்சு போறாளே' என்று அங்கலாய்ப்பார்கள். ஆனால் மருமகள் கர்ப்பமாகி இருக்கும் நேரத்தில் 'ரொம்ப கஷ்டமா இருக்கு' என்று கூறினால் 'மசக்கைன்னா இப்பிடித்தான் இருக்கும்'. "நானெல்லாம் இதைவிட எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா? இதெல்லாம் ரொம்ப சாதாரணம், போ... போய் வேலையைப் பாரு"@என்று கூறுவார். 'என் மருமகளை கண்ணுக்குள்ள வச்சு காப்பாத்தறேனாக்கும்' என்று வசனம் பேசும் மாமியார், மருமகளை சிறிது நேரம் கண் அசந்து தூங்கக் கூட விட மாட்டார் என்பது யாருக்குத் தெரியும்?
மாமியார் தன் மருமகளை மகளாக நினைக்க வேண்டாம். மனுஷியாக நினைத்தாலே போதும். அதுபோல மருமகள் தன் மாமியாரை அம்மா போல நினைக்க வேண்டாம். குடும்பத்தலைவி என்று மதித்தால் போதும். இதற்கு அப்பாற்பட்டு எத்தனையோ குடும்ப நேயங்கள் இருக்கின்றன. ஒருவர் மனதை ஒருவர் காயப்படுத்தாமலிருக்க இந்தக் குடும்ப நேயங்களைப் பின் பற்றினாலே போதும். கருத்து வேறுபாடுகளும் ஏற்படாது. மன வேறுபாடுகளும் ஏற்படாது. உறவுகளுக்குள் பிரிவினை ஏற்படாது.
உறவினர்களுக்குள் பிரிவு ஏற்பட்டிருந்தாலும் அவரவர் வீட்டில் திருமணம், புதுமனை புகுவிழா, வளைகாப்பு, குழந்தைகளின் பிறப்பு, பிறந்தநாள் போன்ற சுப வைபவங்களில் அவர்களின் பிரிவிற்கு காரணமான குற்றங்களை மறந்து, மன்னித்து அழைப்பதன் மூலம் அந்த பிரிவு, மீண்டும் உறவுப் பூக்களாக மலரும். இது உறவினர்களுக்குள் அவ்வப்போது நிகழும் தற்காலப் பிரிவுகள், சந்திப்புகள்! அவற்றைத் தொடரும் குடும்ப ஒற்றுமை!