உன்னதமான உறவுகள்
- Details
- Category: பொது
- Published Date
- Written by chitralekha
- Hits: 10892
மனிதராய் பிறப்பது மிக அருமையான வரம் என்று கூறப்படுவதுண்டு. மனிதனால் மட்டுமே தன் மனதில் நினைப்பதை வாய்விட்டு சொல்ல முடியும். வாய்விட்டு சிரிக்க முடியும். ஆனாலும் சிரிப்பு என்பதையே மறந்து விட்ட மனிதர்களும் உண்டு என்பது வேறு விஷயம்.
நாம் ஒரு பெற்றோருக்கு மகனாக / மகளாக பிறக்கிறோம். உறவு என்பது நம்மைப் பெற்றவர் களிடமிருந்து ஆரம்பமாகின்றது. தாயின் கருப்பையில் உருவாகும் உறவு, பிறந்த பின் தந்தையின் தோள்களில் தொற்றிக் கொள்ளும் உறவு ஆகின்றது. அம்மாவின் அடுத்த குழந்தைப் பேற்றில் நமக்கு தம்பி அல்லது தங்கை எனும் புதிய உறவு கிடைக்கின்றது. அம்மாவுடன் பிறந்த சகோதரன் தாய்மாமன் ஆகிறான். உடன் பிறந்த சகோதரி சித்தி அல்லது பெரியம்மா ஆகின்றாள். அப்பாவுடன் பிறந்தவர்கள் சித்தப்பா, பெரியப்பா, அத்தை எனும் உறவுகளாக உதயமாகின்றனர்.
அம்மா, அப்பாவின் பெற்றோர், நமக்கு பாட்டி, தாத்தா எனும் உறவுகளாய் நம்முடன் உறவாடுகின்றனர். அவர்களின் உடன் பிறந்தோரின் குடும்ப அங்கத்தினர்கள்... என்று உறவு வட்டம் விரிந்து கொண்டுள்ளது. நமது உறவினர்களை 'இவங்க எங்க சொந்தக்காரங்க' என்று மிக்க அன்போடு நம் நண்பர்களிடம் அறிமுகப்படுத்துகிறோம். சொந்தம்! அது ஏற்படுத்தும் பந்தம் புனிதமானது. அந்த பந்தத்திற்கு பங்கம் ஏற்பட்டு விடாமல் பாதுகாத்துக் கொள்ளும் வரை உறவுகள் உன்னதமானவையாக, உள்ளத்திற்கு உவகை அளிக்கும்.
உறவினரிடையே ஏன் மன வேறுபாடுகள் ஏற்படுகின்றன? பணம், குணம், அந்தஸ்து, ஆஸ்தி, ஆணவம்,ஆளுமை, பொறாமை இவைதான் பெரும்பாலான காரணமாக இருக்கின்றன. இவற்றுள் பொறாமை எனும் பொல்லாத இயல்பால் ஒட்டி உறவாடிய உறவுகள் வெட்டி எறியப்படுகின்றன. உறவு, பிரிவு ஆகிவிடுகின்றது. பின்னர், இந்த பிரிவு தொடர்கிறது.இந்த சூழ்நிலையில் 'ஊர் இரண்டு பட்டால்கூத்தாடிக்கு கொண் டாட்டம்' என்ற கூற்றிற்கு ஏற்ப, இரண்டு குடும்பத்தினருக்கும் நடுவே உள்ள மற்ற உறவினர்கள் இந்தப்பக்கம் வந்து 'அவர்கள் உன்னைப்பற்றி இவ்விதம் சொன்னார்கள்; அவ்விதம் சொன்னார்கள்' என்றும் அந்தப் பக்கம் சென்று 'உன்னைப்பற்றி இவ்விதம் சொன்னார்கள்' என்றும் மாற்றி மாற்றி போட்டுக் கொடுப்பார்கள்.
எனவே உறவில் ஏற்பட்ட விரிசல், இடி விழுந்த சுவர் போல் மேலும் விண்டு போகும். இடிந்து போகும். மற்றவர்கள் புறம் கூறுவதைப் பற்றி பொருட்படுத்தாமல் இருந்தால் குற்றங்கள் மறக்கும். சுற்றங்கள் சூழ்ந்திருக்கும். பொறாமை உணர்வு ஏற்பட்டால் பொங்கி வரும் பாசம் மங்கி விடும். நமக்கென்று 'கடவுள் எதைக் கொடுத்திருக்கிறானோ அதுதான் நமது' என்ற நல்லெண்ணம் இருக்கும் மனதில் பொறாமை தோன்றாது.
உடன் பிறந்த அண்ணன் மீது தம்பியும் உடன் பிறந்த தங்கை மீது அக்காவும் ஒருவர் மீது ஒருவர் பொறாமைப்பட்டால் மனதிற்குள் பகை உருவாகின்றது. புகைச்சல் தோன்றுகின்றது. பகையும், புகைச்சலும் சேர்ந்து ரத்த பாசத்தை ரணப்படுத்தி விடுகின்றது. ஒரு குடும்பத்தில் இரண்டு மகள்கள் இருக்கும் பட்சத்தில் அக்காவிற்கு சுமாரான இடத்தில் மணமுடித்திருப்பார்கள். தங்கைக்கு வசதி படைத்த பணக்கார வீட்டில் மணமுடித்திருப்பார்கள். இது வேண்டுமென்றே நிகழ்வது அல்ல.
ஒரு மகளை சுமாரான இடத்திலும், இன்னொரு மகளை வசதியான இடத்திலும் கொடுக்க வேண்டும் என்று வேண்டுமென்றே பெற்றோர் நினைப்பதில்லை. திருமணம் என்பது கடவுளை நம்புபவர்களுக்கு இறைவன் திருவருளால் ஏற்பட்ட பந்தம். கடவுளை நம்பாதவர்களுக்கு விதி ஏற்படுத்திய விளைவு! சகோதரிகளுக்குள் பொறாமை ஏற்பட்டு விட்டால் உடன்பிறந்த பாசம் பறந்தோடி விடும். நேசம் உள்ளுக்குள் நெருடலாக மாறி விடும்.
பொதுவாக கல்வியில் சிறப்பான மதிப்பெண்கள் வாங்கும்
மகன் அல்லது மகளை பெற்றோர் பாராட்டிப் பேசுவது இயல்பு. இந்த இயல்பை புரிந்துக் கொள்ளாமல் அண்ணன் மீது தம்பியோ தம்பி மீது அண்ணனோ பெறாமைப்பட்டால், சிறு வயதில் தொடங்கிய காழ்ப்பு உணர்ச்சி அவர்கள் வளரும் பொழுதும் தொடரும்.
'நான் சுயமா சம்பாதிச்ச சொத்துக்கள்ல ஏதாவது ஒரு நிலம் அல்லது வீட்டை எனது, கடைக்குட்டி மகனுக்கு கூடுதலா எழுதி வைப்பேன்' என்று அப்பா எழுதி வைத்து விடுவார். மற்ற மகன்கள் பொறாமை குணம் இல்லாதவர்களாக 'நம் தம்பிக்குத்தானே' என்று நல்ல விதமாக நினைத்துக் கொண்டால் உடன்பிறந்த உறவுகளுக்குள் சண்டை வராது. சச்சரவு வராது. ஆனால் 'அவனுக்கு மட்டும் எதற்காக அதிக சொத்து' என்று பொறாமைப்படும் பட்சத்தில் உறவுகள் முறிந்து போகக் கூடிய சூழ்நிலைகள் உருவாகின்றன. இதனால் அவர்களைப் பெற்ற தாயின் பாடுதான் திண்டாட்டம். தகப்பனுக்கும், மகன்களுக்கும் நடுவில் அவள்தான் பாசத்தோடு போராடுவாள். கண்ணீரில் நீராடுவாள்.
சில குடும்பங்களில் 'ஒன் மேன் ஷேர' நடக்கும். இது அழகான குடும்பத்தை அவலமாக்கும் ஆபத்து நிறைந்தது. அதாவது, குடும்ப அங்கத்தினர்களில் ஒரு பெண்ணோ அல்லது ஆணோ... அது மகனாகவும் இருக்கலாம். மகளாகவும் இருக்கலாம். ஏன்? மருமகளாகவோ மருமகனாகவோ கூட இருக்கலாம். இவர்களில் ஒருவர் மீது மொத்தக் குடும்பமும் அன்பு, மரியாதை வைத்திருக்கும் சூழ்நிலையில் அந்த நபர் அந்த அன்பை தவறாக பிரயோகிக்கும் பொழுது 'ஒன் மேன் ஷேர' என்ற நிலைமை உருவாகிறது. சில விஷயங்களில் அந்த நபர் அல்லது அந்தப் பெண்மணி கூறும் நல்ல விஷயங்களை குடும்பத்தினர் அட்சரம் பிசகாமல் பின்பற்றுவதுண்டு. ஆகவே, 'தான் கூறும் அனைத்தையும் இவர்கள் கேட்பார்கள்' என்ற மனப்பான்மை தோன்றி விடுகிறது.
தனக்கு யார் மீது காழ்ப்பு உணர்ச்சி ஏற்பட்டாலும் மேற்கூறிய இந்த தவறான போதனை வேலையை செய்து பாதிப்பு ஏற்படுத்தி அதன் மூலம் குளிர் காய்வார். எனவே, தவறான இந்த நடவடிக்கை குடும்பத்தின் ஒற்றுமையை நாளடைவில் குறைத்து விடும்; உறவுகளை பிரித்து விடும்; தேவையின்றி பிறரது மனதை புண்படுத்துகிறோம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். குடும்பத்திற்கு பெரிய அளவில் நன்மைகள் செய்ய இயலாவிட்டாலும் இது போன்ற தீமைகள் செய்யாமல் இருப்பது மிக நல்லது.