உன்னதமான உறவுகள் - Page 3
- Details
- Category: பொது
- Published Date
- Written by chitralekha
- Hits: 10892
ஆனால் தன் அம்மா, அப்பா, உடன்பிறப்புகள் அனைவரையும் வருந்தி, வருந்தி அழைப்பாள். கணவன் மூலமாக அவர்களுக்கு உதவியும் செய்வாள். 'தன்னைப் பெற்றவர்கள் போலத்தானே தன் கணவனின் பெற்றோரும் அவனது உடன் பிறப்புகளும்' என்று நியாயமாக நினைக்க மாட்டாள். இதுபோல் கணவன் மட்டும் வேண்டும், அவனது பெற்றோர் வேண்டியதில்லை என்று வேற்றுமை பாராட்டும் எண்ணம் கொண்ட பெண்கள் எத்தனையோ பேர் உள்ளனர்.
அவனது அம்மா-அப்பா இல்லாமல் இவளுக்கு அந்தக் கணவன் எப்படி கிடைப்பான்? கருவாக்கிய தாயையும், உருவாக்கிய தகப்பனையும் மறந்து விட்டு தன்னையும் தன் குழந்தைகளையும் மட்டுமே அவன் நேசிக்க வேண்டும் என்று அவனுக்கு பாசவலை விரிப்பாள். அந்தப் பாசத்திற்குள் புதைந்திருக்கும் பசப்பல்கள்... பாவம் அவளது கணவனுக்கு புரியாது. மனைவி விரித்த மாயவலைக்குள் சிக்குண்ட கணவனுக்கு வேறு உலகமே தெரியாது. தெரிந்து கொள்ள இயலாத அளவுக்கு அவளது தீய நடவடிக்கைகள் தெளிவாக இருக்கும். அவனது பெற்றோர், 'தங்களின் மகன் சந்தோஷாமாக குடும்பம் நடத்துகிறான், அது போதும்' என்ற பெருந்தன்மையான எண்ணத்தில் இருந்து விடுவார்கள். தியாகத்தீயில் அவர்கள் எரிய, துரோகத்தீயை தூர இருந்தே மறைமுகமாக மூட்டிவிடுவாள் இவள்.
இது ஏதும் அறியாத அப்பாவி கணவனோ அப்பழுக்கில்லாத அருமை கணவனாக அவளுக்கு அன்பை அள்ளித் தெளிப்பான். தப்பித்தவறி கணவனின் உறவினர்கள் இவர்களது வீட்டிற்கு வந்து விட்டால் வேண்டா வெறுப்பாக, கடனே என்று எதையோ சமைத்துப் போடுவாள் அந்த மனைவி, ஆனால் அவளது அம்மா வீட்டு உறவினர் வந்தால்? ஆகா...! மாயாபஜாரில் வருவது போல விருந்து அமர்க்களப்படும். ஏன் இந்த பாரபட்சம்? இது தவறு. அநியாயமான செயல்.
கணவனின் அந்நியோன்யத்தை இது போன்ற அநியாயமான செயல்களுக்கு பயன்படுத்துவது அசிங்கம் இல்லையா? மாயாபஜாரில் வருவது போல் விருந்து போடாவிட்டாலும் மனசார, 'வாங்க' என்று வரவேற்று அன்பாக நாலு வார்த்தை கூடவா பேச முடியாது?
ஆவதும் பெண்ணாலே; அழிவதும் பெண்ணாலே என்று ஏன் கூறினார்கள்? நன்மைகள் ஆவதும் பெண்ணாலே, தீமைகள் அழிவதும் பெண்ணாலே என்ற அர்த்தத்தில் கூறினார்கள். ஆனால் மேற்கூறிய பெண்களைப் போன்றவர்களைப் பார்த்துதான் 'அழிவதும் பெண்ணாலே' என்று கூறி இருப்பார்களோ என்று தோன்றுகிறது. குத்து விளக்காய் இருக்க வேண்டிய பெண்கள், கணவனின் குடும்பத்தினரின் மனதைக் குத்தும் விதமாக வாழக்கூடாது. அன்பை செலுத்தினால் நமக்கும் அந்த அன்பு கிடைக்கும். வம்பு செய்தால் நமக்கும் அந்த வம்புதான் வளரும். விதைப்பதுதான் விளையும்.
சில குடும்பங்களில் உயிருக்குயிராக நேசித்துப் பழகிய உடன் பிறப்புகள், திருமணமான பின்னர், உடன் பிறந்தோருடன் பேசுவதைக்கூட வெகுவாகக் குறைத்துக் கொள்வதை பார்த்திருக்கிறேன், கேள்விப் பட்டிருக்கிறேன். ஏன்? எது தடுக்கிறது?
மஞ்சத்திற்கு மனைவி வந்ததும் நெஞ்சத்தில் தாங்கிய உடன் பிறப்புகளுடன் பேசுவதும், பழகுவதும் குறைய வேண்டுமா? அறவே நின்று போக வேண்டுமா? அவனுக்கு மனைவி வந்தபின் உடன் பிறந்த அண்ணணே அந்நியமாகிப் போவது ஏன்? அல்லது மனைவி என்ன வானத்தில் இருந்து வந்து குதித்தாளா? உலக அழகி ஐஸ்வர்யாராயே ஆனாலும் குடும்ப நேயங்கள், மனித நேயங்கள் மாயமாக மறைந்து போவது ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்று.
மனதில் மனித நேயங்களை மலர வைத்துக்கொண்டால் மலர்ந்து மணம் வீசும் உறவுகள் உலர்ந்து போகாது.
உறவுகளை நம் உயிர் உள்ள வரை உயிர்ப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும். தப்பித்தவறி தகுந்த காரணத்தோடு பிரிவுகள் நேரிட்டாலும் அதை நீடிக்க விடாமல் மனம் விட்டுப் பேசலாம். தயங்காமல் மன்னிப்பு கேட்கலாம். மறப்பதற்கு முயற்சி செய்யலாம். மறந்து விடலாம். ஒரு தாய் வயிற்றில் பிறந்த ரத்தங்களை தம் உயிர் உள்ளவரை சுத்தமான, பரிசுத்தமான பாசத்தால் பாதுகாத்துக் கொள்ளலாம்.
'இனி நான் அவனோட மூஞ்சியில முழிக்கமாட்டேன். அவன் கூட மனுஷன் பேசுவானா?' 'தலைக்கு தண்ணி தெளிச்சுட்டேன்', 'தலை முழுகிட்டேன்'. 'அவன் என்னோட வீட்டில காலடி வச்சா அவனோட காலை வெட்டிடுவேன்'. 'நான் செத்தா கூட அவன் என்னோட சாவுக்கு வரக்கூடாது'.
எத்தனை எத்தனை அவச்சொற்கள்? ரத்த சம்பந்தம் உள்ளவர்களே கூட 'உனக்கும் எனக்கும் இனி எந்த சம்பந்தம் இல்லை' என்று அறம் விழுந்தாற் போல அவலமான பேச்சுக்களை அள்ளி வீசுவார்கள். மனங்களை கிள்ளி எறிவார்கள். குடும்ப நேயத்தை வேரோடு பிடுங்கி எறிவார்கள். இதெல்லாம் ஏன் நடக்கிறது? புரிந்து கொள்ளாமைதான் முதன்மையான காரணம். குடும்பத்தினர் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும். கணவன் - மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும். உடன் பிறப்புகள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும். மதினி, நாத்தனார், மாமியார், கொழுந்தன், மச்சினன் போன்ற அனைத்து உறவுகளும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும்.
பொறாமை என்னும் தீயகுணத்தை அறவே நீக்கிக் கொள்ள வேண்டும். நம் குடும்பத்தைச் சேர்ந்தவரே என்றாலும் நம் உறவுகளுக்குள் பிரிவும், மனஸ்தாபமும் ஏற்படுவது போல தவறாக பேச முன் வரும் பொழுது அதை செவி மடுத்துக் கேட்டுக் கொள்ளாமல் இருந்து விட வேண்டும். அல்லது தீவிரமாக யோசித்துப் பார்க்க வேண்டும். கோள் மூட்டுவது கூடாது. தேள் கொட்டுவது போல சம்பந்தப்பட்ட உறவினரிடம் போய் வார்த்தைகளைக் கொட்டக் கூடாது. நம் வாயிலிருந்து பேசிய சுடு சொற்களை மறுபடியும் திரும்ப வாங்கிக் கொள்ளும் வாய்ப்பே இல்லை. எனவே பேசுவதற்கு முன் நன்றாக சிந்தித்துப் பேச வேண்டும். அதனால்தான் வள்ளுவர், 'நா காக்க' என்றும் 'தீயினால்சுட்ட வடு ஆறும்.நாவினால் சுட்ட வடுஆறாது' என்றும் கூறியுள்ளார்.
கடுஞ்சொற்களை மனம் போனபடி கொட்டியபின், பிரிவை நினைத்து வருந்துவதில் என்ன பயன்? இதயத்தில் இருக்கும் அன்பை வாய்வழியாக வெளியேற்ற வேண்டும். அன்பை வெளிப்படுத்துவதில் என்ன EGO? 'இந்த உலகத்து அன்பை எல்லாம் அவள் மீது / அவன் மீது நான் வச்சிருக்கேன்' என்று உள்ளத்துக்குள் ஒளித்துக் கொண்டு உதடுகளில் எந்த வார்த்தையும் வெளிவரவில்லை எனில் அந்த மகத்தான அன்பை எவ்விதம் அறிந்து கொள்ள முடியும்? புரிந்து கொள்ள முடியும்? பகிர்ந்து கொள்ள முடியும்? அன்பே சிவம். அன்பே தெய்வம். அன்பே அனைத்தும் என்பது ஆன்றோர் வாக்கு. எனவே நம் உள்ளத்தை அன்பு மயமாக்கி, ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, விட்டுக் கொடுத்து வாழ வேண்டும்.