
ஆனால் சில பிடிவாதக்கார உறவினர்கள் இருக்கிறார்களே... அவர்கள் செய்வது? உறவு நேயம் மட்டுமல்ல மனிதநேயமே அற்ற அடாத செயல். தம்பி, தன் மகளின் திருமணத்திற்கு அக்காவை அழைக்காமல் விட்டுவிடுவான். மகன், தன்னைப் பெற்ற தாயையே தன் மகளின் திருமணத்திற்கு அழைக்காமல் உதாசீனப்படுத்தும் கொடுமையும் நடக்கிறது. எல்லாவற்றையும் கடவுள் பார்த்துக் கொண்டுதான் இருப்பார். பெற்ற தாயின் கண்ணீர் மேடையில், மகளின் மணமேடை அமைக்கும் அவனை சும்மா விடுமா தெய்வம்?
முன்புதான் 'அரசு அன்று கொல்லும், தெய்வம் நின்று கொல்லும்'. ஆனால் இப்போது அவரவர் வினைப்பயனை அன்றன்றே அனுபவிக்க வேண்டும் என்று தெய்வமே துரித கால நடவடிக்கை எடுத்து விடும். பெற்ற தாயின் வயிறு எரிய அந்த அம்மா எனும் உறவை அறுத்து எறிபவனுக்கு ஆண்டவனின் தண்டனை வெகு விரைவில் ஆரம்பமாகும். மனிதர்கள், உறவுகளை மதிக்காமல் காலில் போட்டு மிதிப்பதைப் காணப் பொறுக்காமல், மன்னிக்கும் தெய்வம் கூட தற்போது உடனுக்குடன் தண்டனையை வழங்கிவிடத் தயராகிவிடுகிறது.
வருடக்கணக்காக அம்மாவுடன் பேசாத மகன், வருடக் கணக்காக உடன் பிறந்த சகோதரியுடன் பேசாத சகோதரன்! சொத்திற்காக தகப்பனுடன் பேச்சு வார்த்தையை நிறுத்திக் கொண்ட புதல்வர்கள்! இப்படி பலர் உள்ளனர்.
ஒரு விழா, ஒரு விருந்து என்றால் கூடிப்பேசும் உறவினர்கள் ஒருவரை ஒருவர் கேலி செய்து, கிண்டல் பண்ணி மகிழ்வது வழக்கம்தான். இதில் ஈகோ உள்ளவர் இந்தக் கேலிப்பேச்சை விளையாட்டாக எடுத்துக் கொள்ளாமல் கோபித்துக் கொண்டு வெளிநடப்பு செய்வதும் உண்டு. சாதாரண கேலிப்பேச்சால் உறவை அறுத்துக் கொண்டு போன அவர்களது குடும்பத்தைப் பார்த்து பின்னாளில் ஊரே கேலி பேசும் அவலம் நடக்கும்.
ஆறு அறிவு இல்லாத நாயும், பூனையும் கூட இனம் பிரித்துப் பார்க்காமல் தோழமையோடு பழகுவதைப் பற்றி படித்திருக்கிறோம், நேரில் பார்த்திருக்கிறோம். ஆனால் ஆறு அறிவு நிறைந்திருக்கும் மனிதர்கள் தன் ரத்தம், தன் உறவுகளையே ஒதுக்கி வைத்து வைராக்கியமாக பிரிந்து இருக்கும் கொடுமையை என்ன வென்பது?
பிறப்பது ஒரு முறை. பிறந்த பிறவியின் பயனைப் புரிந்து கொண்டு அன்பு, பரிவு, பரிமாற்றங்கள், பாசம், நேசம், உதவி செய்யும் மனப்பான்மை, பொறாமை இல்லாத சுத்தமான இதயம், 'இவர்கள் என் குடும்பத்தினர், என் ரத்தம், என் உறவு' என்ற அன்புமயமான உணர்வுகளில் திளைத்து வாழ்வோமேயாகில் ஆல் போல் தழைத்து வாழும் நம் குடும்பமும், உறவுகளும்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook