Read Free Online Tamil Novels,Stories,Cinema,Crime,Health and Recipes

Switch to desktop Register Login

லேடி பேர்ட்

லேடி பேர்ட் (Lady Bird)

(2017-ஹாலிவுட் திரைப்படம்)

சுரா

2017ஆம் ஆண்டில் திரைக்கு வந்த ஹாலிவுட் திரைப்படம். அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்திலிருக்கும் சேக்ரமென்டோ என்ற ஊரில் உயர்நிலைப் பள்ளியில் மாணவியாக இருக்கும் ஒரு இளம் பெண் நியூயார்க்கிற்குச் சென்று மேற்கல்வி கற்க விரும்புகிறாள். அவளுடைய அந்த ஆசை நிறைவேறுகிறதா என்பதை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

      இப்படத்தின் கதாநாயகியாக நடித்திருப்பவர் சயார்ஸ் ரோனன். அவரின் அன்பு தாயாக நடித்திருப்பவர் லாரி மெட்கால்ஃப். இந்த இருவரின் மிகச் சிறந்த நடிப்பைக் கொண்ட படமிது. படத்தின் இயக்குநர் க்ரேட்டா ஜெர்விக்.

      இந்தப் படம் டெல்லூரைட் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றது. ஆஸ்கார் போட்டியில் ஐந்து பிரிவுகளில் விருது பெறுவதற்காக இப்படம் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. சிறந்த திரைப்படத்திற்கான  ‘கோல்டன் க்ளோப் விருது’ இந்தப் படத்திற்கு கிடைத்திருக்கிறது. சிறந்த நடிகைக்கான ‘கோல்டன் க்ளோப்’ விருதை இப்படத்திற்காக சயார்ஸ் ரோனன் பெற்றிருக்கிறார். இவை தவிர, கதாநாயகியின் தாயாக நடித்த லாரி மெட்கால்ஃப் சிறந்த துணை நடிகை விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டார். சிறந்த திரைக்கதைக்காவும் இப்படம் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது ‘பிரிட்டிஷ் அகாடெமி திரைப்பட விருது’க்காக மூன்று பிரிவுகளில் ‘லேடி பேர்ட்’ திரைப்படம் சிபாரிசு செய்யப்பட்டிருக்கிறது.

      இந்த பரிந்துரைகளிலிருந்தே இப்படத்தின் சிறப்பை நீங்கள் புரிந்து கொள்ளலாம். இந்த அளவிற்கு விருதுகளைப் பெற தகுதி படைத்திருக்கும் ‘லேடி பேர்ட்’ படத்தின் கதை என்னவாக இருக்கும் என்பதை நீங்கள் தெரிந்து கொள்வதில் ஆர்வமாக இருக்கிறீர்களா? உங்களுக்காக இதோ.....

      ‘லேடி பேர்ட்’ என்று அழைக்கப்படும் மாணவியின் பெயர் கிறிஸ்டின். பெற்றோர்கள் அவளுக்கு வைத்த பெயர் அதுதான். ஆனால், தனக்குத் தானே அவள் சூட்டிக் கொண்ட பெயர் ‘லேடி பேர்ட்’. அப்படி தன்னை அழைத்துக் கொள்வதில்தான் அவளுக்கு விருப்பம். உண்மையிலேயே அவள் வானத்தில் சுதந்திரமாக சிறகடித்துப் பறக்க ஆசைப்படும் பெண் பறவைதான். அவளுடைய தாய் மரியானுக்கு தன் மகள் மீது அளவற்ற பாசம். அதே நேரத்தில் மகளிடம் அந்த தாய் கண்டிப்புடனும் நடந்து கொள்வாள். எனினும், தன் செல்ல மகளுக்கு அளவற்ற சுதந்திரத்தை அந்த தாய் தந்திருந்தாள்.

 

      சேக்ரமென்டோவில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளிக்கூடத்தில் லேடி பேர்ட் படிக்கிறாள். பள்ளிக் கூடத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் டேன்னி என்ற இளைஞனை அவள் சந்திக்கிறாள். இருவரும் ஒருவரோடொருவர் அறிமுகமாகிக் கொள்கின்றனர். நாளடைவில் அது காதலாக மாறுகிறது. பகல், இரவு பாராமல் இருவரும் தங்களை மறந்து சுற்றி திரிகின்றனர். காதல் பறவைகளாக பாடுகிறார்கள்..... ஆடுகிறார்கள்..... வானத்திலிருக்கும் நட்சத்திரங்களைப் பார்த்தவாறு இரவு வேளையில் புல் தரையில் ஒருவரையொருவர் அணைத்தவாறு படுத்துக் கிடக்கிறார்கள்.

      ‘நன்றி தெரிவிக்கும் நாள்’ எல்லா இடங்களிலும் கொண்டாடப்படுகிறது. அந்த நாளன்று  டேன்னியின் பாட்டியின் அருமையான வீட்டிற்கு டேன்னியுடன் செல்கிறாள் லேடி பேர்ட்.

      இது நடந்த சில நாட்களில் ஒரு மாலை நேர விருந்தில் லேடி பேர்ட் கலந்து கொள்கிறாள். அப்போது ஒரு அறையைத் திறக்க, சிறிதும் எதிர் பாராத வகையில் அறைக்குள்..... டேன்னி ஒரு இளைஞனுக்கு முத்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறான்.

      டேன்னி ஒரு ஓரினச் சேர்க்கை ஆர்வலன் என்பதைப் புரிந்து கொண்ட லேடி பேர்ட் அவனிடமிருந்து விலகுகிறாள்.

      ஒருநாள்  லேடி பேர்ட் கைல் என்ற இளைஞனைச் சந்திக்கிறாள். அழகான தோற்றத்தைக் கொண்ட அவன் மீது அவளுக்கு ஒரு ஈர்ப்பு உண்டாகிறது. அவனுக்கும்தான்...... தான் இதுவரை எந்த பெண்ணிடமும் தன்னை இழந்ததில்லை என்கிறான் கைல். அதை நம்பிய லேடி பேர்ட், தன்னை அவனிடம் முழுமையாக ஒப்படைக்கிறாள். எல்லாம் முடிந்த பிறகு, அவளுக்கு முன்பு ஆறு இளம் பெண்களுடன்  தான் உடலுறவு கொண்டிருப்பதாக கூறுகிறான் அவன். அவ்வளவுதான்.... ஆடிப் போகிறாள் லேடி பேர்ட். பிறகு என்ன நடக்கும்? அவனுடன் கொண்ட காதலும் முறிந்து போகிறது.

      வாழ்வில் கசப்பான அனுபவங்களைச் சந்தித்த லேடி பேர்ட் சந்தோஷத்தில் குதிக்கும் அளவிற்கு ஒரு தகவல் அவளைத் தேடி வருகிறது. நியூயார்க்கிற்கு மேற்படிப்பு படிப்பதற்கான அழைப்பு அவளுக்கு வருகிறது. சேக்ரமென்டோவில் தன் வாழ்க்கை முடிந்து விடக் கூடாது..... நியூயார்க் போன்ற ஒரு பெரிய நகரத்தில் தான் சிறகடித்துப் பறக்க வேண்டும் என்று கனவு கண்ட பெண்ணாயிற்றே அவள்! அவளுடைய பெற்றோர் அவளுக்கு பிரியா விடை தந்து  அனுப்புகின்றனர். அவளைப் பிரிய முடியாமல், கண்ணீர் விடுகிறாள் அவளுடைய  அன்பு அன்னை.

      இப்போது நியூயார்க்கில் இருக்கிறாள் லேடி பேர்ட், அங்கு அவளைச் சந்திக்கும் ஒரு இளைஞன் அவளின் பெயரைக் கேட்க, ‘என் பெயர் கிறிஸ்டின்’ என்கிறாள் லேடி பேர்ட். இனி அவள் அந்த பெயருடன்தான் உலாவப் போகிறாள்.

      அவளுடைய தந்தையிடமிருந்து அவளுக்கு கடிதம் வருகிறது. அதன் மூலம் தன்னுடைய தாய் தன் மீது வைத்திருந்த ஈடற்ற அன்பை அவள் புரிந்து கொள்கிறாள்.

      ஒரு ஞாயிற்றுக் கிழமையன்று தேவாலய வளாகத்திற்குள் நுழைந்த ‘லேடி பேர்ட்’ அலைபேசியின் மூலம் தன் பெற்றோருக்கு குரல் அஞ்சல் அனுப்புகிறாள்.... ‘என் அன்புள்ள அம்மாவிற்கும், அப்பாவிற்கும்..... இது...... கிறிஸ்டின். உங்களின் அன்பு மகள்..... நீங்கள் வைத்த பெயர் இதுதானே?, என்று. அத்துடன் படம் முடிவடைகிறது.

      எந்தவித கவலையுமில்லாமல், எப்போதும் சிரித்த முகத்துடன் துள்ளித் திரியும் இளமை கொப்பளிக்கும் ‘லேடி பேர்ட்’ கதாபாத்திரத்தில், அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் சயார்ஸ் ரோனன். உண்மையிலேயே அவர் பறந்து திரியும் பட்டாம்பூச்சிதான்! லேடி பேர்டின் அன்னை கதாபாத்திரத்திற்குப் பொருத்தமான தேர்வு - லாரி மெட்கால்ஃப்.

      ஆரம்பத்திலிருந்து இறுதி வரை ‘லேடி பேர்ட்’ படத்தில் இளமை தாண்டவமாடுகிறது. உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவியை மைய கதாபாத்திரமாக கொண்ட கதை என்பதால் எப்படிப்பட்ட காட்சிகள் இருந்தால், இளம் நெஞ்சங்களுக்குப் பிடிக்குமோ, அதை மனதில் வைத்து அப்படிப்பட்ட காட்சிகளைப் படம் முழுக்க வைத்திருக்கும் இயக்குநர் க்ரேட்டா ஜெர்விக்கை நாம் நிச்சயம் பாராட்ட வேண்டும்.

      சூழலுக்கேற்ற விளக்கமைப்புடன் ஒளிப்பதிவு செய்திருக்கும் ஸாம் லெவி, கவித்துவ உணர்வுடன் பின்னணி இசையமைத்திருக்கும் ஜான் ப்ரையன் - இருவரும் படத்திற்குப் பெருமை சேர்த்திருக்கிறார்கள்.

      படம் பார்த்து முடிந்த பிறகும், ‘லேடி பேர்ட்’ என்ற கிறிஸ்டின் நம் உள்ளங்களில் வாழ்வாள்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Top Desktop version