கேக்ஸிலி: மவுண்டன் பேட்ரோல் - Page 2
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 3849
தாங்கள் பிடித்த அந்த மனிதர்களுடன் 'பேட்ரோல் குழு' பயணிக்கிறது. போகும் வழியில் 'மான்கள் பாதுகாப்புக் குழு' வேட்டைக் குழுவினருடன் சர்வ சாதாரணமாக பேசிக் கொண்டு வருகிறார்கள். அந்த மனிதர்கள் தங்களின் துயரம் நிறைந்த குடும்பங்களைப் பற்றியும், வறுமையில் வாழும் மனைவி, பிள்ளைகளைப் பற்றியும் சிறிதும் மறைக்காமல் கூறுகிறார்கள். பத்திரிகையாளர் காவும் அவர்களுடன் உரையாடுகிறான். அவர்களுடன் உரையாடியதன் மூலம், அவர்களுடைய சிரமங்கள் நிறைந்த வாழ்க்கையைப் பற்றி அவனால் தெரிந்து கொள்ள முடிகிறது.
அந்த பயணம் நீண்டு கொண்டே போகிறது. ஒரு இடத்தில் வாகனம் நிற்கிறது. தங்களுடன் கொண்டு வந்திருந்த உணவுப் பொருட்கள் தீரும் நிலைக்கு வந்து விட்டன. இன்னும் கொஞ்சம்தான் இருக்கிறது. அதை வைத்து தாங்களும், பிடிபட்ட அந்த மனிதர்களும் சாப்பிடுவது என்பது கஷ்டமான விஷயம் என்பதை உணர்கிறார் ரிட்டாய். தவிர, வாகனத்தின் எரிபொருளும் குறைவாகவே இருக்கிறது. அதை வைத்து, கண்டபடி அந்த குழுவின் தலைவனைத் தேடுவது என்பதும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாகவே ரிட்டாய்க்குப் பட்டது. அதன் விளைவாக தாங்கள் பிடித்த அந்த வேட்டைக் குழுவினரை அந்த பாலைவனப் பகுதியிலேயே விட்டு விட்டுச் செல்வது என்ற முடிவை ரிட்டாய் எடுக்கிறார். 'நாங்கள் எங்களின் குடும்பங்களை விட்டு விட்டு எவ்வளவோ தூரத்தில் இருக்கிறோம். இந்த பாலைவனப் பகுதியில் எங்களை தனியே விட்டு விட்டுப் போனால், நாங்கள் என்ன செய்வது? தவிர, எனக்கு வயதாகி விட்டது. நீண்ட தூரம் நடந்து செல்வது என்பது என்னால் கற்பனை பண்ணிக் கூட பார்க்க முடியாத விஷயம். கொஞ்சம் கருணை காட்டுங்கள்' என்கிறார் அந்த வேட்டைக் குழுவில் இருக்கும் வயதான பெரியவர். அதற்கு ரிட்டாய் 'நாங்கள் ஒன்றுமே பண்ணுவதற்கில்லை, எதுவும் செய்யவும் முடியாது. எரிபொருள் கொஞ்சம்தான் இருக்கிறது. உணவுப் பொருளும் சிறிதளவுதான் இருக்கிறது. உங்களையும் வைத்துக் கொண்டு, எங்களால் சமாளிக்க முடியாது. அதனால் நாங்கள் கிளம்புகிறோம். உங்களின் வாழ்க்கையை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்' என்கிறார்.
போவதற்கு முன்பு, தன்னுடன் வந்தவர்களில் வேட்டைக் குழுவினரின் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்து காயம் பட்டவர்களையும், உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களையும் தங்களுடன் வந்த இன்னொரு காரில் லியூ டாங்க் (Liu Dong) என்ற தன்னுடைய மனிதனுடன் அனுப்பி வைக்கிறார் ரிட்டாய். மருத்துவமனைக்குக் கொண்டு சென்று, அவர்களுக்கு தேவைப்படும் சிகிச்சையைச் செய்வதற்கான ஏற்பாடுகளைப் பண்ணும்படி கூறுகிறார். லியூ டாங்கிடம் அதற்கு தேவையான பணத்தைத் தருகிறார். 'பணம் போதாது, இன்னும் வேண்டும்' என்று அவன் கூற, மேலும் பண நோட்டுகளைத் தருகிறார் ரிட்டாய். அவன் அப்போதும் 'போதாது' என்கிறான். காரில் இருக்கும் மான்களின் தோல்களில் சிலவற்றை விற்று, பணம் பெற்று அதை சிகிச்சைக்கு பயன்படுத்திக் கொள்ளும்படி கூறுகிறார் ரிட்டாய். அந்த காட்சிகளை கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கிறான் பத்திரிகையிலிருந்து வந்த கா. 'மான்களின் தோல்களை விற்பனை செய்வது என்பது சட்ட விரோத செயலாயிற்றே! அதை நீங்களே செய்யலாமா?' என்கிறான் கா. அதற்கு ரிட்டாய் 'வேறு வழியில்லை. நாங்கள் செய்யும் இந்தச் செயலுக்கு அரசாங்கத்தின் உதவி எதுவும் எங்களுக்கு கிடையாது. நாங்கள் ஏதோ ஒரு நல்ல நோக்கத்தில் இந்தச் செயலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம். எங்களிடம் போதிய அளவிற்கு துப்பாக்கிகள் கூட இல்லை. பணப் பற்றாக்குறை உண்டாகும் நேரங்களில், பொதுவாக நாங்கள் மான்களின் தோல்களை விற்பனை செய்வோம். தவறுதான். ஆனால், நாங்கள் என்ன செய்ய முடியும்?' என்கிறார்.
எஞ்சிய இரண்டு வாகனங்களும் பயணத்தைத் தொடர்கின்றன. அவற்றில் ஒன்று பழுதாகி, நின்று விடுகிறது. மருத்துவமனைக்குச் சென்றிருக்கும் கார் திரும்பி வரும்வரை, அதில் பயணித்தவர்களை அங்கேயே இருக்கும்படி அவர் கூறுகிறார்.
மோசமான சீதோஷ்ண நிலை காரணமாக, அவர்கள் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்புவது என்ற முடிவிற்கு வருகிறார்கள். மருத்துவமனைக்குச் சென்ற லியூ டாங்க், ரிட்டாயுடன் இணைவதற்காக தான் மட்டும் காரில் பயணிக்கிறான். சூழ்நிலை மிகவும் மோசமாகவும், ஆபத்து நிறைந்ததாகவும் இருக்கிறது. அந்த கார் ஒரு இடத்தில், புதை மணலில் சிக்கிக் கொள்ள, அவன் உயிருடன் மணலுக்குள் போய் விடுகிறான். மணல் கொஞ்சம் கொஞ்சமாக அவனை உள்ளே இழுக்க, அவன் காணாமலே போகிறான். மணலுக்குள் அவனுடைய முழு உடலும், இறுதியில் தலையும் இழுத்துச் செல்லப்படும் காட்சி மிகவும் அருமையாக எடுக்கப்பட்டிருக்கிறது.
ரிட்டாயும், காவும் இறுதியாக ஒரு இடத்தில் வேட்டைக் குழுவின் தலைவனையும், துப்பாக்கிகள் ஏந்திய அவனுடைய சில ஆட்களையும் சந்திக்கிறார்கள். அவர்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருக்கிறார்கள். இந்தப் பக்கம் இருப்பவர்களோ ரிட்டாய், கா... இருவர் மட்டுமே. இருவரின் கைகளிலும் ஆயுதங்கள் எதுவுமில்லை. அந்த தலைவனும், ஆட்களும், இருவரையும் நெருங்கி விடுகிறார்கள். ரிட்டாய் அவர்களால் கொடூரமாக கொல்லப்படுகிறார். அந்த 'மான்களைப் பாதுகாக்கும் குழு' வைச் சேர்ந்த மனிதனாக இல்லாமலிருந்ததால், காவைப் போகச் சொல்லி விட்டு விடுகிறார்கள். அவன் தளர்ந்த நிலையில் நடந்து செல்கிறான். ரிட்டாயின் இறந்த உடல், அவருடைய கிராமத்தில் புதைக்கப்படுவதற்காக எடுத்துச் செல்லப்படுகிறது. மான்களின் பாதுகாவலரான ரிட்டாய், மான்களை வேட்டையாடும் குழுவினரால், மானைப் போலவே இரக்கமே இல்லாமல் சுட்டுக் கொல்லப் படுகிறார்.
அத்துடன் படம் முடிவடைகிறது. இறுதியில் எழுத்துக்கள் ஓடுகின்றன. அவற்றின் மூலம் நாம் தெரிந்து கொள்ளும் தகவல்கள் இவை....
நகரத்திற்குச் சென்ற பத்திரிகையாளர் கா தான் கேக்ஸிலியில் பார்த்த சம்பவங்களை ஒன்று கூட விடாமல் பத்திரிகையில் எழுதுகிறான். அந்த கட்டுரை சீனாவையே உலுக்கி விடுகிறது. எல்லோரும் அதைப் பற்றி பேசுகிறார்கள். அரசாங்க அதிகாரிகள் மான்களின் தோல்களை விற்றதற்காக 'பாதுகாப்பு குழு' வைச் சேர்ந்த நான்கு பேரை கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள். அதற்கு மக்கள் மத்தியில் பலமான எதிர்ப்பு! 'அவர்களை எப்படி கைது செய்யலாம்?' என்று மக்கள் கேட்கின்றனர். அதன் விளைவாக அவர்கள் விடுதலை செய்யப்படுகிறார்கள். அதே நேரத்தில் அந்த பாதுகாப்புக் குழுவும் கலைக்கப்படவில்லை.
ஒரு வருடத்திற்குப் பிறகு, சீன அரசாங்கம் கேக்ஸிலியை 'தேசிய இயற்கை பாதுகாப்பு பகுதியாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து அரசாங்கமே அந்த பகுதியையும், மான்களையும் பாதுகாப்பதற்கு ஒரு குழுவை உண்டாக்கியது. 'இந்தப் படம் திரைக்கு வந்த நேரத்தில், மான்களின் எண்ணிக்கை 30,000 என்ற அளவில் அதிகரித்திருந்தது' என்ற செய்தியை எழுத்து வடிவத்தில் இறுதியாக கூறுகிறது படம்.
2006 ஆம் ஆண்டில் நடைபெற்ற 'ஹாங்காங் திரைப்பட விழாவில்' Best Asian Film ஆக இப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டது. 2004 இல் நடைபெற்ற 'டோக்யோ சர்வதேச திரைப்பட விழா' வில் சிறந்த நடுவர்கள் விருதை இப்படம் பெற்றது. பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் 2005 ஆம் ஆண்டில் 'Don Quixote Award' ஐ இப்படம் பெற்றது. இது தவிர, இன்னும் பல விருதுகளையும்.....