கேக்ஸிலி: மவுண்டன் பேட்ரோல்
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 3849
என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)
கேக்ஸிலி: மவுண்டன் பேட்ரோல் - Kekexili: Mountain Patrol
(சீன திரைப்படம்)
2004ஆம் ஆண்டில் திரைக்கு வந்த சீன திரைப்படம். 90 நிமிடங்கள் ஓடக் கூடிய இந்தப் படத்தை எழுதி, இயக்கியவர் லூ சுவான் (Lu Chuan).
திபெத் பகுதியில் இருக்கும் கேக்ஸிலி என்ற வறண்டு கிடக்கும் பாலைவனப் பகுதியில் இப்படத்தின் முழுப் படப்பிடிப்பும் நடைபெற்றிருக்கிறது. அங்கு மேய்ந்து கொண்டிருக்கும் ஒரு வகை மான் இனத்தின் தோலுக்கும், மாமிசத்திற்கும் ஆசைப்பட்டு அவற்றைச் சட்டத்திற்கு விரோதமாக வேட்டையாடும் ஒரு கும்பலையும், அவர்களைக் கையும் களவுமாக பிடிப்பதற்காக முயற்சிக்கும் ரிட்டாய் (Ritai) என்ற மனிதரையும், அவரின் ஆட்களையும் சுற்றி பின்னப்பட்டதே இப்படத்தின் கதை.
படத்தைப் பார்க்கும்போது ஒரு மேற்கத்திய படத்தைப் பார்க்கக் கூடிய ஆர்வமும், விறுவிறுப்பும் படம் பார்ப்போரின் மனதில் உண்டாகும். தாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலப் பகுதியையும், அங்கு உயிர் வாழ்வதற்காக மேய்ந்து கொண்டிருக்கும் மான் இனத்தையும் காப்பாற்றுவதற்காக ஒரு குழுவினர் தங்களின் உயிரைப் பணயம் வைத்து எப்படியெல்லாம் போராடுகின்றனர் என்பதைப் பார்க்கும்போது, நம்மையும் மீறி அவர்களின் மீது நமக்கு மரியாதையும், மதிப்பும் உண்டாகும்.
1990 களில் திபெத்தின் அந்த பகுதியைப் பாதுகாத்துக் கொண்டிருந்த ஒரு சேவை மனப்பான்மை கொண்ட குழுவினரின் செயல்களால் ஈர்க்கப்பட்டு, அந்த பாதிப்பில் உருவாக்கப்பட்ட திரைப்படமே இது.
படத்தின் ஆரம்பக் காட்சியில் பரந்து கிடக்கும் வறண்டு போன நிலப் பகுதியில் கூட்டமாக மான்கள் துள்ளித் திரிந்து, மேய்ந்து கொண்டிருக்கின்றன. அவற்றின் மாமிசத்திற்காகவும், தோலுக்காகவும் ஆசைப்பட்டு வேட்டையாடும் ஒரு கும்பல் சில மான்களைச் சிறிது கூட ஈவு, இரக்கமே இல்லாமல் கொல்கிறது. இரத்தம் சொட்ட, மான்கள் பாலைவனப் பகுதியில் இறந்து கிடக்கின்றன. அதைத் தடுக்க வந்த ஒரு மனிதரையும் அவர்கள் கொன்று விடுகின்றனர்.
அந்தப் பகுதியில் நடைபெறும் இத்தகைய செயல்களைப் பற்றி புலனாய்வு செய்து எழுதுவதற்காக, ஒரு பத்திரிகை தன்னுடைய செய்தியாளரை பீஜிங்கிலிருந்து (Beijing) அனுப்பி வைக்கிறது. செய்தியாளராக வரும் இளைஞன் கேக்ஸிலி கிராமத்திலிருக்கும் ரிட்டாய் (Ritai) என்ற மனிதரைச் சந்திக்கிறான். மான்களின் இனத்தைக் காப்பற்றுவதற்காக போராடும் குழுவின் தலைவராக இருப்பவர் அவர்தான். நடுத்தர வயது கொண்ட அந்த மனிதர் அதிகம் பேசாத குணத்தைக் கொண்டவர். மிகவும் குறைவாகவே பேசுகிறார். ஆனால், எல்லா விஷயங்களையும் கூர்ந்து கவனிக்கிறார். தான் பார்க்கும் எந்த மனிதரையும் உன்னிப்பாக அலசிப் பார்க்கிறார். இறந்து போன தன் குழுவைச் சேர்ந்த மனிதரைப் புதைக்கும் இடத்தில்தான் அந்தச் சந்திப்பு நடைபெறுகிறது. அந்த கிராமத்தில் உள்ள மனிதர்கள் அப்படியொன்றும் வசதியான வாழ்க்கையை வாழவில்லை. வறுமைக்கு மத்தியில்தான் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர், அரசாங்கத்திடமிருந்து அவர்களுக்கு எந்தவித உதவியும் இல்லை. போதுமான அளவிற்கு அவர்களுக்கு ஆள் பலம் கூட இல்லை. இன்னும் சொல்லப் போனால் -- தேவைப்படும் அளவிற்கு அவர்களிடம் எதிரிகளைச் சுட்டுக் கொல்வதற்கு துப்பாக்கிகளோ, வாகனங்களோ கூட இல்லை.
எனினும், இருக்கும் ஆட்களை வைத்துக் கொண்டு, தங்களிடம் இருக்கும் ஒன்றிரண்டு வாகனங்களை பயன்படுத்திக் கொண்டு, கைவசம் இருக்கும் குறைந்த அளவு துப்பாக்கிகளை வைத்துக் கொண்டு அவர்கள் மான்களைக் கொல்ல முயற்சிக்கும் மனிதர்களை வேட்டையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
கடல் மட்டத்திற்கு மேலே நான்கு மைல்கள் உயரத்தில் மலைப் பகுதியில் இருக்கும் அந்த பாலைவனப் பகுதியில் செடி, கொடி, மரங்களையே தேட வேண்டியதிருக்கும். இங்குமங்குமாக கொஞ்சம் காணப்படும். அவற்றைத்தான் அந்த மான்கள் மேய்கின்றன. சூரியன் சிறிது கூட இரக்கமே இல்லாமல் சுட்டெரித்துக் கொண்டிருக்கும். வேறு எந்த உயிரினத்தையும் அங்கு பார்க்க முடியாது. தூசி படிந்த காற்றுதான் சுற்றிலும்....
ஒரு காலத்தில் பல்லாயிரக் கணக்கில் இருந்த அந்த மான் இனத்தின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது. தோலுக்கு ஆசைப்பட்டு அதை இரக்கமே இல்லாமல் கொன்றால், குறையத்தானே செய்யும்?
பத்திரிகையிலிருந்து வந்த இளைஞனான கா யூ, (Ga Yu) தான் வந்திருக்கும் நோக்கத்தை ரிட்டாயிடம் கூறுகிறான். நல்ல நோக்கத்துடன்தான் வந்திருக்கிறான் என்பதைப் புரிந்து கொண்டதும், அவனை தங்களுடன் அழைத்துச் செல்வதற்கு ஒத்துக் கொள்கிறார் ரிட்டாய்.
'மான்களைப் பாதுகாக்கும் குழு' ஒரு வாகனத்தில் துப்பாக்கி ஏந்திய ஆட்களுடன் தன் பயணத்தை ஆரம்பிக்கிறது. அவர்களுடன் பத்திரிகையாளர் காவும் ஏறிக் கொள்கிறான். வளைந்து வளைந்து செல்லும் மலைப் பாதைகளிலும், மேடுகளிலும், பள்ளங்களிலும் ஆடி அசைந்தவாறு பயணிக்கிறது வாகனம். தூரத்தில் மான்கள் மேய்ந்து கொண்டிருக்கின்றன. அவற்றை ஆர்வத்துடன் பார்க்கிறான் கா.
தங்களுடன் உணவு, நீர் அனைத்தையும் அவர்கள் போகும்போதே தங்களின் வாகனத்தில் எடுத்துச் செல்கின்றனர். நீர் தேவைப்படும்போது, எடுத்து பருகுகின்றனர். பசிக்கும்போது உணவை எடுத்து சாப்பிடுகின்றனர். அந்த நிலப் பகுதியையும், ஆட்கள் யாரும் இல்லாமல் பரந்து கிடக்கும் வறண்ட பாலைவனத்தின் தனிமைச் சூழலையும் பார்த்து ஆச்சரியப்படுகிறான் பத்திரிகையாளர் கா. பரபரப்பான நகர வாழ்க்கையில் வாழ்ந்த அவனுக்கு அந்த இடமே புதிய ஒரு அனுபவமாக இருக்கிறது. தன்னுடன் சேர்ந்து பயணிக்கும் அந்த மனிதர்களை அவன் பார்க்கிறான். படிப்பறிவற்ற அந்த கிராமத்து மனிதர்களின் கள்ளங் கபடமற்ற தன்மையையும், முரட்டுத் தனத்தையும், எதுவும் பேசாமல் தங்களின் தலைவரான ரிட்டாயின் கட்டளைகளின்படி நடக்கக் கூடிய பணிவான குணத்தையும் பார்த்து அவனுக்குள் வியப்புத்தான் உண்டாகிறது.
வழியில் ஆங்காங்கே மான்களின் எலும்புக் கூடுகள் கிடக்கின்றன. நூற்றுக் கணக்கில் புழுதியில் கிடக்கும் அவற்றைப் பார்க்கும்போது நம் மனதிலும் கவலையும், கலக்கமும் உண்டாகின்றன. 'எந்தவித கவலையுமில்லாமல் துள்ளித் திரிந்து கொண்டிருந்த மான்களை இப்படியா இரக்கமே இல்லாமல் கொன்று போட்டிருப்பார்கள்!' என்று நம் மனங்களுக்குள்ளேயே நாம் கேள்வி எழுப்பிக் கொள்வோம்.
அந்த மான்களைக் கொன்றது யாராக இருக்கும்? வேகமாகிறது 'பாயும் படை'. எல்லா பக்கங்களிலும் வலை வீசி தேடுகிறார்கள் ரிட்டாயும், அவருடைய ஆட்களும். என்ன நடக்கிறது என்பதை கூர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறான் கா. ஒரு இடத்தில் மான்களை வேட்டையாடிய அந்த மனிதர்களைப் பிடித்து விடுகிறார்கள். அவர்களிடம் விசாரிக்கிறார்கள், அந்த குழுவினரின் தலைவன் அவர்களுடன் இல்லை. அவன் எங்கு இருக்கிறான் என்பதை வன்முறையை பயன்படுத்தி விசாரிக்கிறார் ரிட்டாய். அதற்கு அவர்கள் சரியான பதிலைக் கூறவில்லை... அல்லது பதில் கூற விரும்பவில்லை. அந்த மனிதர்கள் வெறும் கருவிகள் அவர்களை ஏவுவது வேறொரு மனிதன். அவனைப் பிடித்தாக வேண்டும். அதற்கு வழி?