இடா - Page 3
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 4679
இருவரும் மீண்டும் காரில் பயணத்தைத் தொடர்கிறார்கள். காரில் வரும்போது என்னதான் பேசிக் கொண்டு வந்தாலும், அவர்களுக்கிடையே ஒரு ஆழமான அமைதி நிலவுகிறது. மீண்டும் இருவரும் பிரிகிறார்கள். தங்களுடைய அன்றாடச் செயல்களை இருவரும் தொடர வேண்டுமே! வான்டா தன்னுடைய வீட்டிற்கு வந்து தன் வழக்கமான செயல்களைத் தொடர்கிறாள். சிகரெட் புகைக்கிறாள்... மது அருந்துகிறாள்.... ஆணுடன் உடலுறவு கொள்கிறாள்....
தான் புறப்பட்டு வந்த... தான் இளம் வயதிலிருந்து வளர்ந்த கான்வென்டிற்கு மீண்டும் வருகிறாள் இடா. தன் அத்தை வான்டாவைப் பார்த்தது, அவளுடைய நடவடிக்கைகள், அவள் தன்னிடம் கூறிய வார்த்தைகள், வாழ்க்கை வாழ்வதற்கே என்ற கொள்கையுடன் வாழும் அந்த பெண்ணின் தனித்துவ குணம், தாங்கள் இருவரும் தன்னுடைய கிராமத்திற்குச் சென்று, தன் பெற்றோரின் மரணம் பற்றிய உண்மையான தகவல்களைத் தெரிந்து கொண்டது, இசைக் கலைஞனான லிஸ்ஸைப் பார்த்தது... ஒவ்வொன்றையும் கான்வென்டில் இருக்கும்போது மனதில் அசை போட்டுப் பார்க்கிறாள் இடா. அந்த விஷயங்கள் ஒரு மாறுபட்ட அனுபவங்களாக அவளுக்குத் தோன்றுகின்றன. கான்வென்டின் சுவருக்கு அப்பால் இருக்கும் எதைப் பற்றியும் தெரிந்து கொள்ளாமல் இதுவரை இருந்த இடாவிற்கு, தான் பார்த்தது, கேட்டது ஒவ்வொன்றும் புதுமையாக தோன்றுகின்றன. தன்னுடைய கான்வென்ட் வாழ்க்கை சந்தோஷமற்ற ஒன்று என்ற எண்ணம் அப்போது அவளுக்கு உண்டாகிறது.
இதற்கிடையில் மதுவின் போதையில் ஆழ்ந்து கிடந்த வான்டா, ஏதோ ஒரு விபரீத உணர்ச்சியால் உந்தப்பட்டு தன் வீட்டு ஜன்னலின் வழியாக கீழே குதித்து, இறந்து விடுகிறாள்.
கன்யாஸ்திரீயாக மாறுவதற்கான உறுதிமொழியை எடுத்துக் கொள்வதற்காக கான்வென்டில் படித்த இளம் பெண்கள் வரிசையில் நின்றிருக்கிறார்கள். அந்த வரிசையில் இடாவும் நின்றிருக்கிறாள். ஒவ்வொருவராக முன்னோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிறிது நேரத்தில் இடா உறுதி மொழி எடுக்க வேண்டும். அப்போது மனதில் என்ன நினைத்தாளோ, உறுதி மொழி எடுக்காமல் அங்கிருந்து வெளியேறுகிறாள் இடா.
வான்டாவின் இறுதி சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறாள் இடா. அவளுடைய மனம் முழுக்க வான்டா ஆக்கிரமித்திருக்கிறாள். அவள் சிகரெட் புகைப்பது, மது அருந்துவது, செக்ஸ் பற்றி முழுமையான ஈடுபாட்டுடன் உரையாடுவது... இப்படி ஒவ்வொன்றையும் தன் மனதில் நினைத்துப் பார்க்கிறாள் இடா. வந்திருந்த இடத்தில் அவள் இசைக் கலைஞன் Lisஐப் பார்க்கிறாள்.
வான்டாவின் அடுக்கு மாடி வீடு. இடா தன்னை மாற்றிக் கொள்ள விரும்புகிறாள். வான்டாவின் இரவு நேர உடையை எடுத்து அணிகிறாள். தான் அணிந்திருந்த கன்யாஸ்திரீகளுக்கான ஆடைகளைக் கழற்றி, தொங்க விடுகிறாள். தன் அத்தை வான்டா செய்ததைப் போல சிகரெட் புகைக்க முயற்சிக்கிறாள்... மது அருந்துகிறாள். தொடர்ந்து லிஸ்ஸைப் பார்க்க கிளம்புகிறாள். அவன் இசை நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருக்கிறான். எப்படி நடனம் ஆட வேண்டும் என்று அவளுக்கு அவன் கற்றுத் தருகிறான்.
அந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு, அறைக்குள் இளைஞன் Lisஇன் அணைப்பில் சிக்குண்டு, படுக்கையில் படுத்திருக்கிறாள் இடா. இருவரும் ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு படுத்திருக்கிறார்கள். இதற்கு முன்பு இப்படிப்பட்ட ஒரு அனுபவமே இடாவிற்கு வாழ்க்கையில் கிடைத்ததில்லை. 'இப்படியெல்லாம் வாழ்க்கையில் இருக்கிறதா?' என்று ஆச்சரியத்துடன் நினைக்கிறாள் இடா. அனைத்தும் முடிகிறது... 'வேறு நகரங்களுக்கு இசை நிகழ்ச்சி நடத்த எங்கள் குழு செல்கிறது. நீயும் எங்களுடன் வருகிறாயா?' என்று கேட்கும் Lis 'நாம் இருவரும் திருமணம் செய்து கொள்வோம். இன்பமாக வாழுவோம். பிள்ளைகளைப் பெற்றெடுப்போம்... வாழ்க்கையைத் தொடர்வோம்' என்கிறான்.
அப்போது இடா 'அதற்குப் பிறகு?' என்று கேட்க, 'அதற்குப் பிறகு என்ன? ஒன்றுமே இல்லை... கடைசி வரை வாழ்க்கையை நகர்த்த வேண்டியதுதான்' என்கிறான் லிஸ்.
பொழுது புலரும் வேளை. லிஸ் கண்களை மூடி ஆழமான தூக்கத்தில் இருக்கிறான். அவன் கூறிய ஒவ்வொன்றையும் தன் மனதில் மீண்டும் நினைத்துப் பார்க்கிறாள் இடா. 'பிறகு ஒன்றுமே இல்லை... கடைசி வரை வாழ்க்கையை நகர்த்த வேண்டியதுதான்' என்று அவன் கூறிய வார்த்தைகள் அவளைச் சிந்திக்க வைக்கின்றன. 'அதற்குப் பிறகு எதுவுமே இல்லை என்றால், பிறகு என்ன திருமண வாழ்க்கை?' என்று அவள் நினைக்கிறாள். 'திருமணம் செய்வது... பிள்ளைகள் பெறுவது... இதுதான் வாழ்க்கையின் நோக்கமா? அதற்குப் பிறகு ஒன்றும் இல்லையா? பிறகு எதற்கு அந்த வாழ்க்கை? என்று அவளுடைய மனம் சிந்திக்கிறது.
படுக்கையை விட்டு எழுகிறாள். ஒரு நிமிடம் யோசிக்கிறாள். தான் அணிந்திருந்த கவுனைக் கழற்றி விட்டு, கொக்கியில் மாட்டியிருந்த கன்யாஸ்திரீகளுக்கான ஆடையை எடுத்து அணிகிறாள். இது எதுவுமே தெரியாமல், உறக்கத்தில் இருக்கிறான் லிஸ்.
புலர் காலைப் பொழுது. அமைதியான சாலை. கன்யாஸ்திரீக்கான ஆடைகளுடன் தான் வளர்ந்த கான்வென்ட்டை நோக்கி நடந்து போய்க் கொண்டிருக்கிறாள் இடா.
அத்துடன் படம் முடிவடைகிறது.
இடாவாக நடித்த Agata Trzebuchowska, வான்டாவாக நடித்த Agata Kulesza -இருவரும் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருந்தார்கள் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?
இறுதி காட்சியில் எதிர்பார்த்திராத ஒரு திருப்பத்தைத் தந்த இயக்குநர் பாவெல் பாவ்லிகோவ்ஸ்கியைப் பாராட்டி கை குலுக்குகிறேன்.