இடா - Page 2
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 4679
ஜெர்மனி, போலேண்டைப் பிடித்தது வான்டாவிற்குச் சிறிதும் பிடிக்கவில்லை. அதை அவள் எதிர்க்கிறாள். ஆனால், அவள் எதிர்த்து, என்ன மாறுதல் உண்டாகி விடப் போகிறது? அதனால் விரக்தி உணர்வுடனும், சலிப்புடனும் தன்னுடைய வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறாள் வான்டா. பல இடங்களுக்கும் இடாவை, வான்டா அழைத்துச் செல்கிறாள். 'உலகத்தில் இருக்கக் கூடிய எதையும் தவறானவை என்றோ, பாவச் செயல்கள் என்றோ நினைக்கக் கூடாது. உனக்குக் கூட நான் ஒரு அறிவுரை கூற விரும்புகிறேன். கன்யாஸ்திரீயாக உறுதிமொழி எடுத்துக் கொள்வதற்கு முன்பு, பலராலும் மோசமானவை, தப்பானவை, செய்யக் கூடாத பாவ காரியங்கள் என்று நினைக்கக் கூடிய விஷயங்களை நீயும் தெரிந்து கொள். எதையுமே தெரிந்து கொள்ளாமல் இருப்பது என்பது நல்ல விஷயமா என்ன? நான் எப்படி இவற்றையெல்லாம் கற்று, நிறைய அனுபவங்களுடன் இருக்கிறேனோ, அத்தகைய அனுபவத்தை நீயும் பெற வேண்டும்' என்கிறாள் இடாவிடம் வான்டா. ஆனால், இடா அதை வெறுமனே காதில் மட்டும் வாங்கிக் கொள்கிறாள். அவ்வளவுதான்.
வான்டா, இடாவிற்கு லிஸ் (Lis) என்ற இளைஞனை ஒரு ரெஸ்ட்டாரெண்டில் அறிமுகப்படுத்தி வைக்கிறாள். அழகான தோற்றத்தைக் கொண்ட அவன் ஒரு இசைக் கலைஞன். பாடகன். சேக்ஸஃபோன் என்ற இசைக் கருவியை இசைப்பவன். அவனுடைய இசை நிகழ்ச்சிக்கு வான்டா, இடாவை அழைத்துச் செல்கிறாள். அவனுடன் நெருங்கிப் பழகும்படி இடாவிடம் கூறுகிறாள் வான்டா. ஆனால், அதை இடா ஏற்றுக் கொள்ளாமல் வெறுமனே நின்று கொண்டிருக்கிறாள்.
'இரண்டாவது உலக போரின்போது கொல்லப்பட்ட என் பெற்றோரின் உடல்கள் இப்போது எங்கு இருக்கின்றன?' என்று இடா கேட்பதைத் தொடர்ந்து, காரில் அவளை ஒரு கிராமத்திற்கு வான்டா அழைத்துச் செல்கிறாள். நகரத்திற்கு வெளியே மிகவும் அமைதியாக இருக்கிறது அந்த ஊர். அங்குதான் இடாவின் வீடு இருக்கிறது. இடாவின் தாயும் தந்தையும் உயிருடன் இருந்தபோது, அந்த வீட்டில்தான் இருந்தார்கள். இடா பிறந்தது கூட அந்த வீட்டில்தான். அதை இப்போது ஃபெலிக்ஸ் ஸ்கிபா (Feliks Skiba) என்ற மனிதனின் குடும்பம் ஆக்கிரமித்து, வாழ்ந்து கொண்டிருக்கிறது. இரண்டாவது உலகப் போரின்போது இடாவின் பெற்றோரை, ஃபெலிக்ஸ் குடும்பத்தினரிடம் ஒப்படைத்து விட்டு, அங்கிருந்து வான்டா கிளம்பிச் சென்று விடுகிறாள். ஜெர்மனிய அதிகாரிகளின் கண்களில் பட்டு விடாதபடி, யூதர்களான அந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்களை மிகவும் பத்திரமாக, மறைத்து வைத்திருக்கிறான் ஃபெலிக்ஸ். அவர்களுக்கு என்ன நடந்தது என்பதைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள விரும்பினால், எதையும் மறைக்காமல் தான் கூறுவதற்கு தயாராக இருப்பதாகவும், அதைக் கேட்ட பிறகு தன்னுடைய குடும்பத்தை இப்போது இருக்கும் வீட்டை விட்டு விரட்டியடித்து விடக் கூடாது என்றும் கேட்டுக் கொள்கிறான். அதற்கு வான்டாவும், இடாவும் ஒத்துக் கொள்கிறார்கள்.
யூதர்களாக இருக்கும் அந்த குடும்பத்தை ஒவ்வொரு நாளும் ஜெர்மனியர்களின் கண்களில் படாமல், பத்திரமாக பாதுகாப்பது சாதாரண விஷயமல்ல என்பதை உணரும் ஃபெலிக்ஸ், இடாவின் தந்தையையும், தாயையும் ஒரு அடர்ந்த காட்டுக்குள் அழைத்துக் கொண்டு சென்று, தானே கொன்றதாக கூறுகிறான். அந்தச் சமயத்தில் இடா மிகவும் சிறிய பெண்ணாக இருந்ததாலும், அவளை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற முடியும் என்பதாலும், அவளை ஒரு கான்வென்ட்டில் கொண்டு போய் சேர்த்து விட்டதாகவும் அவன் கூறுகிறான். அதே நேரத்தில் அவர்களுடன் இருந்த வான்டாவின் சிறிய வயது மகன் கருப்பு நிறத்தில் இருந்ததாலும், அவனை என்ன செய்வது என்று தெரியாமல் தவித்ததாகவும், இறுதியில் இடாவின் பெற்றோருடன் சேர்த்து, அவனையும் கொன்று விட்டதாக கூறுகிறான் ஃபெலிக்ஸ். யூதர்களுக்கு அடைக்கலம் கொடுப்பது தெரிந்து விட்டால், ஜெர்மனிய அதிகாரிகள் தன்னுடைய குடும்பத்தை நிச்சயம் ஒரு வழி பண்ணி விடுவார்கள் என்று மனதில் அச்சத்திற்கு ஆளாகும் ஃபெலிக்ஸ், தன்னுடைய குடும்பத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்கு இதைத் தவிர வேறு முடிவு எடுக்க முடியவில்லை என்பது ஒரு உண்மையாக இருந்தாலும், இடாவின் குடும்பத்திற்குச் சொந்தமான அந்த வீட்டை தனக்குச் சொந்தமானதாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்று அவன் ஆசைப்படுவதும் கூட ஒரு காரணம்தான். அதனால்தான், இப்போது கூட இடாவிடமும் வான்டாவிடமும் அந்த வீட்டை விட்டு தன்னை வெளியேற்றக் கூடாது என்ற நிபந்தனையை அவன் வைக்கிறான்.
ஏதோ ஜெர்மனியர்கள்தான் அவர்களை யூதர்கள் என்பதற்காக கொன்றிருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்த இடாவிற்கும், வான்டாவிற்கும் ஃபெலிக்ஸ் கூறிய தகவல்கள் அதிர்ச்சி அளிக்கக் கூடியனவாக இருக்கின்றன. எனினும், அவனை அவர்கள் ஒன்றும் செய்யவில்லை. அப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் அவன் வேறு என்னதான் செய்ய முடியும் என்று அவர்களும் நினைப்பதே காரணம்.
இடாவின் பெற்றோரைப் புதைத்த இடத்திற்கு அந்த இரு பெண்களையும் ஃபெலிக்ஸ் அழைத்துச் செல்கிறான். ஒரு காட்டுப் பகுதியில் அந்த புதைக்கப்பட்ட இடம் இருக்கிறது. தான் புதைத்த இடத்தை ஃபெலிக்ஸ் தோண்டுகிறான். மண்ணின் ஆழத்தில் எலும்புத் துண்டுகள் கிடக்கின்றன. அவற்றை இடாவும், வான்டாவும் எடுத்து, Lublin (லப்லின்) என்ற இடத்தில் இருக்கும் யூதர்களின் இடுகாட்டிற்குக் கொண்டு சென்று புதைக்கிறார்கள். தன்னுடைய தாய், தந்தையின் எலும்புகளை தன் கையால் மண்ணுக்குள் புதைத்த திருப்தி இடாவிற்கு.