Lekha Books

A+ A A-

பியாண்ட் தி நெக்ஸ்ட் மவுண்டன் - Page 2

சிறுவன் மலை, அடர்ந்த காடுகளையெல்லாம் கடந்து 'சுரசாந்த்பூர்' என்ற அந்த கிராமத்திற்கு நடந்தே வருகிறான். அங்குள்ள மாணவர்களுக்கு மத்தியில் அவனும் தரையில் அமர்கிறான். ஆசிரியர் ஆங்கில 'ஏ... பி... சி... டி...'யை கற்றுத் தருகிறார். படிப்பு தொடர்கிறது. மிகுந்த ஆர்வத்துடனும், ஈடுபாட்டுணர்வுடனும் ஆசிரியர் கற்றுத் தருவதைக் கற்கிறான் ரோச்சுங்கா. ஆசிரியர் ஒரு அட்டையைக் காட்டி அவனை வாசிக்கும்படி கூறுகிறார். அவன். God is our refuge and strength' என்று அருமையாக வாசிக்கிறான். 'உன்னுடைய ஆங்கில அறிவு மிகவும் நன்றாக இருக்கிறது. ஒருநாள் நீ ஒரு நல்ல ஆசிரியராக வருவாய். மலைவாழ் சிறுவர்களுக்கு நீ ஆங்கிலம் கற்றுத் தருவாய்' என்கிறார் ஆசிரியர். அதைக் கேட்டு சந்தோஷத்துடன் புன்னகைக்கிறான் சிறுவன் ரோச்சுங்கா.

தன் கிராமத்தில் உள்ள Hmar இன சிறுவர்களுக்கு கல்வி கற்றுத் தருகிறான் ரோச்சுங்கா. இப்போது அவன் இளைஞனாக காட்டப்படுகிறான்.

1942ஆம் ஆண்டு.

ஹிட்லர் என்ற மனிதரைப் பற்றி Hmar இன மக்கள் கேள்விப்படுகிறார்கள். அவருக்கு ஆதரவாக ஜப்பான் நாடு இருப்பதையும்.

வெளிநாட்டினர் படைக்களன்களுடன் அந்தப் பகுதியில் காலடி எடுத்து வைக்கின்றனர். உலகப் போர் நடைபெறும் காலம். அவர்களின் முகாம்கள் பல இடங்களில் அமைக்கப்படுகின்றன.

அவர்களுக்கு 'ஆங்கிலம் தெரிந்த ஒரு இளைஞன் அந்தப் பகுதியில் இருப்பது' தெரிய வருகிறது. அது யார்? நம் ரோச்சுங்காதான். தங்களுடைய தகவல்களை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு போய் சேர்ப்பதற்கு அவனை பயன்படுத்துகின்றனர். அதற்குப் பரிசாக அவனுக்குப் பணம் தரப்படுகிறது. ஆரம்பத்தில் மறுக்கும் அவன், பின்னர் அதைப் பெற்றுக் கொள்கிறான். பணத்தை வைத்து பள்ளிக் கூடம், மருத்துவமனை ஆகியவற்றைத் தொடங்க வேண்டும் என்று மனதிற்குள் ஆசைப்படுகிறான் ரோச்சுங்கா.

'சில்சார்' என்றொரு மலைப் பகுதி நகரம். அங்கு புகை வண்டி நிலையம் கூட இருக்கிறது. காந்தி, நேரு ஆகியோரின் படங்களை ஒரு மனிதன் விற்றுக் கொண்டிருக்கிறான். அவனுக்கு அருகில் ரோச்சுங்காவும் இருக்கிறான். அவனிடமிருந்து கற்று, ரோச்சுங்கா சிகரெட் விற்கிறான். காசுகளைக் கொடுத்து மக்கள் சிகரெட்டுகளை வாங்குகிறார்கள். அப்போது அங்கு வருகிறான் ரோச்சுங்காவின் தந்தை Chawnga.

'நான் ராணுவ வீரர்களுடன் இருந்தேன். பணம் சம்பாதித்தேன். நாலணா சம்பாதிப்பதைப் பற்றி நீங்கள் கூறியிருக்கிறீர்கள். இப்போது என்னிடம் 100 ரூபாய் இருக்கிறது. நான் சென்ற மாதம் 'ஷில்லாங்' நகரத்தைப் பார்த்தேன். 'இம்பால்' நகரத்திற்கு நான் பேருந்தில் பயணம் செய்தேன். பேருந்து ஓட்டுநரிடம் பணத்தைக் கொடுத்தால், சக்கரங்கள் உங்களை எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்லும், என்று சந்தோஷத்துடன் ரோச்சுங்கா கூற, 'போர் முடிவடைந்து விட்டது. நீ போய் டில்லியில் பிரதம அமைச்சரைப் பார். கடவுள் உனக்கு உதவுவார். நான் மலையில் வேண்டிக் கொள்வேன்' என்று கூறுகிறான் அவனுடைய தந்தை.

இப்போது டில்லி-

பிரதம அமைச்சரின் மாளிகை-

காவலாளியிடம் பேண்ட், கோட்டுடன் இருக்கும் ரோச்சுங்கா உள்ளே செல்வதற்கு அனுமதி கேட்கிறான். 'அனுமதிச் சீட்டு இருக்கிறதா?' என்று அவன் கேட்க, 'இல்லை' என்கிறான் ரோச்சுங்கா. அவனுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. அடுத்த நிமிடம் தான் அணிந்திருந்த ஆடைகளைக் கழற்றிப் போட்டு விட்டு, Hmar பழங்குடியினரின் ஆடைகளுடன் உள்ளே செல்கிறான் ரோச்சுங்கா.

உள்ளே-

கோட்டில் ரோஜா மலர் அணிந்த கோலத்துடன் அமர்ந்திருக்கிறார் பிரதம அமைச்சர் ஐவஹர்லால் நேரு. 'நான் பல்கலைக் கழகத்தில் சேர்வதற்கு அரசாங்க உதவிக்காக மனு செய்தேன். எனக்கு அதற்கான தகுதியில்லை என்று பதில் வந்திருக்கிறது. Hmar இனம், மக்கள் தொகை கணக்கெடுப்பிலேயே இல்லையாம்' என்கிறான் ரோச்சுங்கா. Hmar இனம் இனி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்றும், ரோச்சுங்காவிற்கு அரசாங்கத்தின் பண உதவி உடனடியாக கிடைக்க ஆவன செய்வதாகவும் கூறுகிறார் நேரு.

அவ்வளவுதான்-

வெளியே வரும் ரோச்சுங்கா துள்ளிக் குதித்து மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்குவதைப் பார்க்க வேண்டுமே!

மலைவாழ் மக்கள் அமர்ந்திருக்கும் கூட்டத்தில், ரோச்சுங்கா ஒரு அழகான இளம் பெண்ணைப் பார்க்கிறான். அவள் பெயர் Mawii. அவளும் வைத்த கண் எடுக்காது, ரோச்சுங்காவைப் பார்க்கிறாள்.

அலகாபாத் பல்கலைக் கழகம்-

அங்கு கற்றுக் கொண்டிருக்கும் ரோச்சுங்கா ஷில்லாங் செயின்ட். மேரீஸ் கல்லூரியில் படிக்கும் Mawiiக்கு ஆங்கிலத்தில் கடிதம் எழுதுகிறான். 'முன்பு நாங்கள் எதிரிகளின் தலைகளை வெட்டினோம். இப்போது பகைவர்களுக்காக பிரார்த்திக்கிறோம். முன்பு பலவீனர்களாக இருந்தோம். இப்போது பலசாலிகளாக இருக்கிறோம். முன்பு தற்கொலைகள் எங்களுக்கிடையே அதிகமாக இருக்கும். இப்போது அது மிகவும் அரிதாகி விட்டது. மாற்றங்கள் வெள்ளைக்காரர்களாலோ அடக்கு முறைகளாலோ, சாட்டைகளாலோ, துப்பாக்கிகளாலோ வரவில்லை. ஒரே ஒரு புத்தகத்திலிருந்துதான் வந்தது...' என்று அவன் அதில் எழுதுகிறான். அதற்கு அவள் பதில் எழுதுகிறாள். அவன் அதை ஆர்வத்துடன் படிக்கிறான்.

பல்கலைக் கழகத்தில் கருத்தரங்கம் நடைபெறுகிறது. தன்னுடைய மணிப்பூர் மலைப் பகுதியைப் பற்றியும், Hmar பழங்குடியினரைப் பற்றியும் நெஞ்சுருக பேசுகிறான் ரோச்சுங்கா.

அவனுக்கு ஸ்காட்லேண்டில் போய் படிப்பதற்கு கல்வி உதவித் தொகை கிடைக்கும் தகவல் வருகிறது.

இப்போது ஸ்காட்லேண்ட்-

ஹீப்ரு, க்ரேக்க மொழிகளை இரவு, பகல் பாராமல் கற்கிறான் ரோச்சுங்கா. 'முழு உலகத்துடன் ஒப்பிடும்போது, நாம் எவ்வளவு சிறியவர்களாக இருக்கிறோம்!' என்று தன் காதலி Mawiiக்கு அவன் கடிதம் எழுதுகிறான்.

அமெரிக்காவின் சிக்காகோ நகரம்-

டாக்டர் Bob Pierce அவனுடைய படிப்புச் செலவை ஏற்றுக் கொள்கிறார். அவன் ரெஸ்ட்டாரெண்டில் சமையல் செய்து கொண்டும். தட்டுகளைக் கழுவிக் கொண்டும் படிப்பைத் தொடர்கிறான். இரவில் நீண்ட நேரம் அமர்ந்து படிக்கிறான், எழுதுகிறான், மொழி பெயர்க்கிறான். தன் பேராசிரியரிடம் அவன் 'எங்கள் இன மக்களுக்கு பேச்சு மொழி மட்டுமே இருக்கிறது. எழுத்து மொழி இல்லை. நான் பைபிளை Hmar மொழியில் மொழி பெயர்த்துக் கொண்டிருக்கிறேன். இது மட்டுமே எங்கள் மக்களை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும்' என்கிறான் ரோச்சுங்கா. மூன்று வருடங்களாக அவன் செய்த மொழி பெயர்ப்பு முடிவுக்கு வருகிறது. அவன் மொழி பெயர்த்த பைபிள் அவனுக்கு முன்னால் மேஜையில் இருக்கிறது.

தன்னுடைய மொழி பெயர்ப்பை லண்டனிலிருக்கும் 'British and Foreign Bible Society' என்ற அமைப்பிற்கு கப்பல் மூலம் அனுப்புகிறான் சந்தோஷத்துடன் ரோச்சுங்கா.

 

+Novels

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

தந்தை விழுந்தபோது...

March 8, 2012,

மகாலட்சுமி

March 22, 2013,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel