ஆர்ட்டிமிஸியா - Page 3
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 4572
அதற்குப் பிறகு அவள் ஏமாற்றமடைந்த நிலையிலும், விரக்தியடைந்த தன்மையிலும் இருக்கிறாள். டாஸியைப் பார்க்காமல் இருந்து விடுவோமா என்று நினைக்கிறாள். ஆனால், அவனின் ஓவியத் திறமை அவளைக் காந்தமென இழுக்கிறது. தன்னையும் மீறி அந்த அழகு தேவதை அவனால் ஈர்க்கப்படுகிறது. மீண்டும் அவனைத் தேடி அவள் செல்கிறாள். அவன் என்ன செய்தாலும், இப்போது அவள் தடுப்பதில்லை. இன்னும் கூறுவதாக இருந்தால்- ஆர்ட்டிமிஸியாவே தன் விருப்பப்படி தன் உடலை அவனுக்குத் தருகிறாள். அவன் ஓவியத்தையும் அவளுக்கு கற்றுத் தருகிறான். அதே நேரத்தில்- உடலுறவு கொண்டு அவளுக்கு சந்தோஷத்தையும் தருகிறான். இந்த உறவு தொடர்ந்து நடக்கிறது- ஆர்டிமிஸியாவின் முழுமையான ஒப்புதலுடன்.
இந்த விஷயம் எப்படியோ ஆர்ட்டிமிஸியாவின் தந்தை Orazioவிற்குத் தெரிய வருகிறது. அவரால் அதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. ஓவியம் கற்றுத் தருகிறேன் என்ற போர்வையில் ஒரு காம வெறியன் தன் மகளின் கற்பைப் பறிப்பதா என்று பதைபதைக்கும் அவர் டாஸி மீது வழக்கு தொடுக்கிறார்.
நீதி மன்றத்திற்கு டாஸி வரவழைக்கப்படுகிறான். ஆர்ட்டிமிஸியாவும்தான். 'டாஸி உன்னைக் கற்பழித்தானா?' என்று நீதிமன்றத்தில் அவளிடம் கேட்கப்படுகிறது. அதற்கு அவள் 'அவர் என்னை கற்பழிக்கவில்லை. நான் அவரைக் காதலிக்கிறேன். அவரும் என்னைக் காதலிக்கிறார். எனக்கு அவர் சுகம் தந்தார்' என்கிறாள்- வெகுளியாக. 'இவன் எத்தனைப் பெண்களுடன் இதுவரை படுத்திருக்கிறான் என்று உனக்கு தெரியுமா? இவன் ஒரு காமப் பிசாசு. தன் சொந்த தங்கையைக் கூட இவன் விட்டு வைக்கவில்லை' என்று கூறுகிறார் அங்கு வாதாடுபவர். வழக்கு தினமும் நடக்கிறது. 'நான் இப்போதும் ஒரு கன்னிப் பெண்தான்' என்கிறாள் ஆர்ட்டிமிஸியா. அதைத் தொடர்ந்து இரண்டு கன்யாஸ்திரீகள் அவளைப் பரிசோதிக்கின்றனர். முடிவில் 'இவள் கன்னிப் பெண் அல்ல. உடல் ரீதியாக உறவு கொள்ளப்பட்டிருக்கிறாள்' என்று அவர்கள் கூறுகிறார்கள். இறுதியில் 'நான் இவளுடன் பல தடவைகள் உடலுறவு கொண்டிருக்கிறேன்' என்று டாஸியே ஒத்துக் கொள்கிறான். ஒரு அப்பாவிப் பெண்ணை பலவந்தப்படுத்தி கற்பழித்ததற்காக, அவனுக்கு நீதிமன்றம் இரண்டு வருட கடுங்காவல் தண்டனை விதிக்கிறது.
அத்துடன் படம் முடிவடைகிறது. இப்போது டைட்டில் மூலம் அதற்குப் பிந்தைய விஷயங்கள் கூறப்படுகின்றன. ஆர்ட்டிமிஸியா அதற்குப் பிறகு தன் வாழ்நாளில் டாஸியைச் சந்திக்கவேயில்லை. அவள் தூரத்திலிருக்கும் ஒரு மனிதரைத் திருமணம் செய்து கொள்கிறாள். அவளுக்கு இரண்டு மகள்கள் பிறக்கிறார்கள். தான் டாஸியிடம் கற்ற திறமைகளை பயன்படுத்தி அபாரமான ஓவியங்கள் வரைந்து அவள் புகழ் பெறுகிறாள். அவள் வரைந்த ஓவியங்கள் உலகமெங்கும் கண்காட்சிகளில் வைக்கப்படுகின்றன. பெரிய விலைக்கு வாங்கப்படுகின்றன. இத்தாலியின் ஃப்ளாரென்ஸ் நகரத்தில் உள்ள Arts Academyயில் சேர்ந்த முதல் பெண் ஓவியரே ஆர்ட்டிமிஸியாதான். தன்னைப் போலவே தன் மகள்களையும் ஓவியர்களாக அவள் உருவாக்குகிறாள். இத்தாலியின் ஓவிய வரலாற்றில் Artemisia என்ற பெயர் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படுகிறது.
வரலாற்றில் நடைபெற்ற சம்பவங்களை மாற்றி, கற்பனை கலந்து படத்தை எடுத்திருந்தாலும், பாத்திரமாகவே வாழ்ந்த Valentina Cervi, இயக்குநர் Agnes Merlet, Orazioவாக நடித்த Michel Sarrault, டாஸியாக நடித்த Miki Manojlovic ஆகியோரை நாம் கட்டாயம் பாராட்ட வேண்டும்.
படத்தில் நான் பார்த்த ஒவ்வொரு காட்சியும், கதாபாத்திரமும் என் மனதில் இப்போதும் பசுமையாக நிற்பதிலிருந்தே 'Artemisia'வின் சிறப்பை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.