ஆர்ட்டிமிஸியா - Page 2
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 4572
படம் வரைய வேண்டுமென்றால், நான்கு சுவர்களுக்குள் இருந்து கொண்டுதான் படத்தை வரைய வேண்டும் என்று நினைக்காத ஆர்ட்டிமிஸியா, படம் வரைய பயன்படுத்தும் கருவிகளுடன் திறந்த இடங்களுக்குச் செல்கிறாள். அவளுக்கு ஒரு மீனவ இளைஞனைத் தெரியும். அவனுக்கு அவள் மீது ஒரு ஈர்ப்பு. ஓவியம் வரைவதற்காக அவனிடம் நிர்வாணமாக 'போஸ்' தர முடியுமா என்று அவள் கேட்கிறாள். ஆரம்பத்தில் அவன் தயங்குகிறான். பின்னர் அவனுக்கு அவள் ஆசையுடன் ஒரு முத்தம் தருகிறாள். 17 வயது பெண் மனம் குளிரக் கூடிய ஒரு 'இச்' தருகிறாள் என்னும்போது, யாருக்குத்தான் உற்சாகம் உண்டாகாது? அந்த மீனவ இளைஞன் செடிகளுக்கும், பாறைகளுக்கும் மத்தியில் படுத்துக் கொண்டும், சாய்ந்து கொண்டும், உட்கார்ந்து கொண்டும் இருக்கிறான்- உடலில் ஆடை எதுவும் இல்லாமல். அவனின் பல 'போஸ்'களையும் அவள் ஓவியங்களாக தீட்டுகிறாள்.
ஒருநாள் அவள் கடற்கரை பகுதியில் நடந்து போய்க் கொண்டிருக்கிறாள். புதர்களுக்கு மத்தியில், மணல் மீது ஒரு பெண்ணைப் படுக்க வைத்து, ஒரு மனிதன் ஆசையுடன் உடலுறவு கொள்கிறான். சற்று தூரத்தில் மறைந்து கொண்டு, அந்தக் காட்சியை வேட்கையுடன் பார்க்கிறாள் ஆர்ட்டிமிஸியா. அந்தப் பெண் மல்லார்ந்து படுத்திருந்த காட்சி அவளுடைய மனதில் ஆழமாக பதிந்து விடுகிறது. சிறிது நேரத்தில் அந்த ஆணும், அந்த பெண்ணும் அங்கிருந்து கிளம்பிச் சென்று விடுகிறார்கள். அந்த இடத்திற்குச் சென்ற ஆர்ட்டிமிஸியா, அந்த பெண் படுத்திருந்ததைப் போலவே தானும் படுத்து கால்களை இப்படியும் அப்படியுமாக அசைக்கிறாள், மேல் நோக்கி தூக்குகிறாள். பின்னர் தான் பார்த்த அந்த காட்சியை அவள் ஓவியமாக வரைகிறாள்.
அவளுடைய அந்த ஓவியங்களைப் பார்க்கும் அவளுடைய தந்தையும், பிறரும் அவளின் வேறுபட்ட ரசனையைப் பார்த்து வியக்கின்றனர். ஆணின் உடலுறுப்புக்களை ஓவியமாக தீட்டியிருக்கிறாள் என்றால், அவளுக்கு மாடலாக நின்ற ஆண் யார் என்று அவர்கள் கேள்விக்குறியுடன் அவளைப் பார்க்கின்றனர்.
தன்னை எல்லோரும் ஆச்சரியப்படக் கூடிய பொருளாகவும், கேலிச் சித்திரமாகவும் பார்க்கிறார்கள் என்பதை ஆர்ட்டிமிஸியாவும் உணர்ந்தே இருக்கிறாள். ஓவியங்களை வரைந்தால் மட்டும் போதாது, அதற்குரிய அங்கீகாரத்தையும் தான் பெற வேண்டும் என்று நினைக்கும் அவள் 'Academy of Arts' என்ற அமைப்பைத் தேடிச் செல்கிறாள். அந்த அமைப்பில் பிரபல ஓவியர்கள் எல்லோரும் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். தானும் அங்கு உறுப்பினராக இருக்க வேண்டும் என்று அவள் ஆசைப்படுகிறாள். ஆனால், பெண்ணை அங்கு உறுப்பினராக சேர்ப்பதற்கு அவர்கள் தயாராக இல்லை. 'நீ வரைந்த ஓவியங்கள் ஏதேனும் இருக்கின்றனவா?' என்று அங்கு முக்கிய பொறுப்பில் இருந்தவர் கேட்க, தான் கையோடு கொண்டு வந்திருந்த தன்னுடைய நிர்வாண ஓவியங்களை அவள் காட்டுகிறாள். அதைப் பார்த்து அங்குள்ளவர்கள் அதிர்ச்சியடைந்து விடுகின்றனர். ஒரு இளம்பெண் ஆண்களை நிர்வாணமாக வரைகிறாளா என்று கேவலமாக பார்க்கின்றனர். அப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர்கள் அவளை உறுப்பினராக எப்படி சேர்த்துக் கொள்வார்கள்? தோல்வியடைந்து அங்கிருந்து திரும்புகிறாள் ஆர்ட்டிமிஸியா.
திறந்த வெளிகளில் படங்களை வரையும் பிரபல ஓவியரான Agostino Tassiஐ அவள் பார்க்கிறாள். அவனுடைய தனித்துவ குணத்தையும், அபாரமான ஓவியத் திறமையையும் பார்க்கும் அவள், அவன் மீது ஈர்க்கப்படுகிறாள். அவனிடமிருந்து பல விஷயங்களையும் அவள் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறாள். தான் வரைந்த ஓவியங்களை அவள் அவனிடம் காட்டுகிறாள். அவன் அவற்றைப் பார்த்தவுடன், கிழித்தெறிந்து விடுகிறான். 'இது என்ன ஓவியமா?' என்கிறான். தனக்கு ஓவியக் கலை பற்றிய பாடங்களைக் கற்றுத் தர முடியுமா என்று அவள் கேட்கிறாள். ஒரு பெண்ணுக்கு ஓவியத்தைப் பற்றி கற்றுத் தருவதற்கு தான் தயாராக இல்லை என்று தீர்க்கமான குரலில் கூறுகிறான் அவன். அதைக் கேட்டு மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளாகிறாள் ஆர்ட்டிமிஸியா.
அவளின் தந்தையின் ஓவியக் கூடத்தில் இருந்து படங்களை வரைபவன்தான் Tassi. மிகப் பெரிய திறமைசாலியான அவன் மீது ஆர்ட்மிஸியாவின் தந்தைக்கே உயர்ந்த மதிப்பு இருக்கிறது. பகல் முழுக்க ஓவியங்களை வரைந்து கலையில் முழுமையாக கரைந்து கிடப்பது, இரவு வந்து விட்டால் மாடல்களாக இருக்கும் பெண்களுடன் படுத்துக் கிடப்பது, உடலுறவு கொள்வது- இதுதான் டாஸியின் அன்றாட வேலை. ஆர்ட்டிமிஸியாவின் தந்தைக்கு இந்த விஷயங்கள் நன்கு தெரியும். அதனால், இரவில் அவன் எப்படி வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும் என்று அவர் அங்கு வரவே மாட்டார்.
தன் மகளுக்கு எதையும் கற்றுத் தர முடியாது என்று டாஸி கூறிய விஷயம் அவளுடைய தந்தைக்குத் தெரிய வருகிறது. அவரே டாஸியிடம் நேரடியாக பேசுகிறார். மிகுந்த வற்புறுத்தலுக்குப் பிறகு, அவன் அவளுக்கு கற்றுத் தருவதற்கு ஒத்துக் கொள்கிறான். இந்த விஷயம் தெரிந்ததும் மிகவும் மகிழ்ச்சி அடைகிறாள் ஆர்ட்டிமிஸியா.
மறுநாளே அவள் டாஸியைத் தேடிச் செல்கிறாள். டாஸி அவளையே வைத்த கண் எடுக்காது பார்க்கிறான். 'நீங்கள் எனக்கு நிர்வாணமாக 'போஸ்' தர முடியுமா?' என்று எந்தவித தயக்கமும் இல்லாமல் கேட்கிறாள் ஆர்ட்டிமிஸியா. ஆரம்பத்தில் தயங்கும் அவன், பின்னர் அதற்குச் சம்மதிக்கிறான். பிறகென்ன? அவன் நிர்வாண கோலத்தில், படுத்துக் கொண்டும், சாய்ந்து கொண்டும் இருக்க, அவள் அவனை ஓவியமாக வரைகிறாள். ஒரு சட்டத்தை கையில் பிடித்துக் கொண்டு, கண்களுக்கு முன்னால் இல்லாத மலைகளையும், வானத்தையும், மேகங்களையும், பறவைகளையும், மலர்களையும், நிலவையும், நட்சத்திரங்களையும் எப்படி மனதில் கற்பனை பண்ணி ஓவியமாக வரைவது என்பதை அவளுக்கு அவன் சொல்லித் தருகிறான். அவனுடைய வியக்கத்தக்க கற்பனை வளத்தையும், ஓவியம் வரையும் ஆற்றலையும் பார்த்து அவனை மரியாதையுடன் அண்ணாந்து பார்க்கிறாள் ஆர்ட்டிமிஸியா.
அவர்கள் தினமும் பார்க்கிறார்கள். பேசுகிறார்கள். ஓவியம் பற்றி அவன் கற்றுத் தருகிறான். அவள் கற்றுக் கொள்கிறாள். பெரும்பாலும் அவர்கள் இருவர் மட்டுமே தனியே இருக்கிறார்கள். ஒரு நாள் உணர்ச்சி வசப்பட்ட நிலையில், ஆர்ட்டிமிஸியாவுடன் உடல் ரீதியாக உறவு கொள்ள முயற்சிக்கிறான் டாஸி. அவ்வளவுதான்- அதிர்ச்சியடைந்த அவள் அவனை அடித்து விடுகிறாள். அவன் நிலை குலைந்து போகிறான்.