
1974 ஆம் ஆண்டில் லுவோவும், மாவும் கிராமத்திலிருந்து நகரத்திற்குத் திரும்புகிறார்கள். நாளடைவில் Shanghai நகரத்திலிருக்கும் ஒரு `டென்டல், கல்லூரியில் லுவோவிற்குப் பேராசிரியர் வேலை கிடைக்கிறது. மா ஃப்ரான்ஸூக்குச் செல்கிறான். அங்கு ஒரு புகழ் பெற்ற வயலின் கலைஞனாக அவன் ஆகிறான்.
1990 ஆம் ஆண்டில் நாளிதழில் ஒரு செய்தி. தாங்கள் மூன்று வருடங்கள் இருந்த அந்த அழகிய கிராமத்தைப் பற்றிய ஒரு செய்தியை மா வாசிக்கிறான். அங்கு புதிதாக கட்டப்பட்ட அணைக்கட்டிலிருந்து நீர் பெருக்கெடுத்து கிராமத்திற்கு மிகப் பெரிய சேதத்தை உண்டாக்கப் போகிறது என்பதே அந்தச் செய்தி. உடனடியாக மா அந்த கிராமத்திற்குக் கிளம்புகிறான். அந்த புதுமைப் பெண்ணை இப்போதாவது காண முடியுமா என்ற எதிர்பார்ப்புடன்தான். ஆனால், அங்கு அவள் இல்லை.
மா ஏமாற்றத்துடன் திரும்புகிறான். அந்த கிராமத்தையும், கிராமத்து மக்களையும், இப்போது மிகவும் வயதாகிப் போய் காணப்படும் கிராமத்தின் தலைவரையும், வீடியோவாக படம் பிடித்து தன்னுடன் அவன் எடுத்துக் கொண்டு வருகிறான்.
அவன் தன் பழைய நண்பனான லுவோவை Shanghai நகரத்தில் சந்திக்கிறான். Shenzhen, Hong Kong ஆகிய இடங்களில் தான் ஏற்கெனவே கிராமத்திலிருந்து இலட்சியத்துடன் வெளியேறிய இளம் பெண்ணை வலை வீசி தேடியதாகவும், இறுதி வரை அவளைத் தன்னால் கண்டு பிடிக்க முடியவே இல்லை என்றும் கவலை நிறைந்த குரலில் கூறுகிறான் லுவோ.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, மிகப் பெரிய சேதங்களுக்கு ஆளான நகரங்களைப் பற்றியும், கிராமங்களைப் பற்றியும் உள்ள செய்தி எல்லா இடங்களிலும் பரவுகிறது. எங்கு பார்த்தாலும் அதுவே பரபரப்பான செய்தியாக ஆகிறது. அத்துடன் சில வருடங்களுக்கு முன்பு எங்கோ இருக்கும் கிராமத்தில் இரு இளைஞர்களும், ஒரு இளம் பெண்ணும், ஆடி, பாடி, புத்தகம் வாசித்து, சந்தோஷத்தில் திளைத்திருந்த அந்த இனிய நாட்களும்... அந்த நீரோட்டத்திற்குள், அவர்களின் அந்த மறக்க முடியாத நாட்களும், நினைவுகளும் கூட மூழ்கிப் போய் விட்டன. அத்துடன் படம் முடிவடைகிறது.
லுவோவாகவும், மாவாகவும் நடித்திருக்கும் நடிகர்கள் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள் என்றாலும் நம் மனங்களில் அழியாமல் நிரந்தரச் சின்னமாக வாழ்ந்து கொண்டிருப்பவர் அந்த இளம் பெண்ணாக நடித்த Zhou Xunதான். என்ன அழகு! என்ன இளமை! என்ன துள்ளல்!
2003 ஆம் ஆண்டில் இந்தப் படம் 'சிறந்த வெளிநாட்டுப் படம்' என்ற பிரிவில் ஆஸ்கார் விருதுக்காக சிபாரிசு செய்யப்பட்டது.
'Balzac and the Little Chinese Seamstress' படம் பார்த்து முடித்து சில வருடங்கள் ஆன பிறகும், அந்த அழகான கிராமத்தையும், படத்தின் பிரதான கதாபாத்திரங்களான இளைஞர்களையும், இளம் பெண்ணையும், அவர்கள் புதினங்களை வாசித்து மகிழ்ந்த இயற்கை அழகு ஆட்சி செய்யும் மலையின் உச்சியையும் நம்மால் என்றென்றைக்கும் மறக்கவே முடியாது.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook