
அந்த திட்டம் நிறைவேற்றப்படுகிறது. அந்த சூட்கேஸிலிருந்து பல மேற்கத்திய நாவல்களின் மொழி பெயர்ப்பு நாவல்கள் அவர்களுக்குக் கிடைக்கின்றன. லுவோ அந்த தையல்கார தாத்தாவின் பேத்திக்கு ஒவ்வொரு நாளும் அந்த நூல்களை எடுத்து வாசித்துக் காட்டுகிறான். உலக புகழ் பெற்ற எழுத்தாளர்களான Stendhal, Kipling, Dostoevsky ஆகியோரின் மிகச் சிறந்த படைப்புகளையும் அவன் அவளுக்கு வாசித்துக் காட்டுகிறான். அனைத்து எழுத்தாளர்களின் படைப்புகளையும் அவள் காதால் கேட்டு இன்புற்றாலும், அவள் மனதில் இடம் பெற்றதென்னவோ Balzacகின் எழுத்துக்கள்தான். பால்ஸாக்கின் அருமையான எழுத்திலும், அவரின் மிகச் சிறந்த நடையிலும், கதாபாத்திர படைப்பிலும், கதையை எழுதிச் செல்லும் தன்மையிலும் தன்னையே பறி கொடுக்கிறாள் அந்தப் பெண். பால்ஸாக் நூலில் கதாநாயகியை வர்ணிக்கும்போது, தன்னையே அவர் வர்ணிப்பதைப் போல அவள் உணர்கிறாள். அவரின் அபார எழுத்தாற்றலை நினைத்து, மனதிற்குள் அவருக்கு தனியான இடத்தைத் தருகிறாள் அவள்.
நாட்கள் நகர்ந்து செல்கின்றன. மலையின் உச்சியில் அமர்ந்து, அந்த மூவரும் தங்களின் நாட்களை இன்பமாக கழிக்கின்றனர். எங்கோ இருக்கும் நகரத்திலிருந்து அங்கு வந்த அந்த இரு இளைஞர்களுக்கும் தென்றலாக இருக்கிறாள் அந்த பெண். வெளி உலகம் என்றாலே என்னவென்று தெரியாமலிருந்த அந்த அப்பாவி இளம் பெண், அந்த இளைஞர்கள் மூலம் எவ்வளவோ விஷயங்களைத் தெரிந்து கொள்கிறாள். பல எழுத்தாளர்களின் பெயர்களும் அவளுக்கு அத்துப்படி ஆகின்றன. உலக புகழ் பெற்ற பல இலக்கியங்களையும் அவள் தெரிந்து கொள்கிறாள். சுற்றிலும் இயற்கை பச்சைப் பசேல் என்று ஆட்சி செய்து கொண்டிருக்கும் அந்த மலைப் பகுதியில் அமர்ந்து அந்த மூவரும் கதைகள் பேசுகின்றனர்... இசை இசைக்கின்றனர்... பாடுகின்றனர்... ஆடி குதிக்கின்றனர்... கவலைகளை மறந்து சிரிக்கின்றனர்... ஒவ்வொரு நொடியையும் சந்தோஷத்தில் மூழ்கடித்துக் கொண்டாடுகின்றனர். நேரம் போவதே தெரியாமல் பேசுகின்றனர்... பேசுகின்றனர்... பேசுகின்றனர்... தான் இதுவரை பார்த்திராத குதூகல உலகத்தைப் பார்ப்பதாக உணர்கிறாள் அந்த இளம் தேவதை. அந்த இரு இளைஞர்களும்தான்.
காலப் போக்கில் அந்த பெண் லுவோவின் மீது காதல் கொள்கிறாள். இதற்கிடையில் நகரத்திலிருக்கும் லுவோவின் தந்தையின் உடல் நலம் பாதிக்கப்படுகிறது. அவரைப் பார்க்க வேண்டும் என்பதற்காக இரண்டு மாதங்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு புறப்படுகிறான் லுவோ. அவன் புறப்படுவதற்கு முன்னால், தனக்கு ஒரு பிரச்சினை இருக்கிறது என்று தயங்கிக் கொண்டே கூறுகிறாள் அந்த இளம் பெண். ஆனால், அதற்கு மேல் அது என்ன என்று கூறாமல், அதை தன் மனதிற்குள்ளேயே அவள் அடக்கி வைத்துக் கொள்கிறாள். லுவோ அங்கிருந்து கிளம்பி விடுகிறான்.
சில நாட்கள் கழித்து மாவிடம், தான் கர்ப்பமாக இருப்பதாக கூறுகிறாள் அந்த தேவதை. ஆனால், சீனாவில் இருக்கும் கறாரான சட்டத்தின்படி 25 வயதுக்கு முன்பு, அவள் திருமணம் செய்து கொள்ள முடியாது. திருமணம் நடைபெற்று விட்டது என்ற சான்றிதழ் இல்லாமல், கருத்தடை செய்து கொள்ளவும் முடியாது. அப்படி கருத்தடை செய்தால், அது சட்ட ரீதியாக குற்றச் செயல் என்று கருதப்படும்.
என்ன செய்வது என்று ஆழமாக சிந்திக்கும் மா நகரத்திற்குள் செல்கிறான். அங்கிருக்கும் ஒரு Gynecologist ஐப் பார்க்கிறான். அவர் அவனுடைய தந்தைக்கு ஏற்கெனவே நன்கு தெரிந்தவராக இருக்கிறார். அவரிடம் கிராமத்தில் இருக்கும் பெண்ணின் கர்ப்பத்தைக் கலைத்து, எப்படியும் உதவ வேண்டும் என்று மன்றாடி அவன் கேட்டுக் கொள்கிறான். கிராமத்திற்கு வந்து யாருக்கும் தெரியாமல், பெண்ணின் கர்ப்பத்தைக் கலைப்பதற்கு அந்த Gynecologist ம் ஒத்துக் கொள்கிறார்.
இரண்டு மாதங்களுக்குப் பிறகு, லுவோ நகரத்திலிருந்து திரும்பி வருகிறான். அந்த மூவரின் ஆட்டமும், பாடலும், இசையும், இலக்கியமும், அரட்டையும், சந்தோஷமும் நிறைந்த நாட்கள் தொடர்கின்றன.
ஆனால், முன்பு அப்பாவியாக, எதுவுமே தெரியாமலிருந்த, படிப்பறிவற்ற அந்த கிராமத்துப் பெண் இப்போது அந்த நகரத்திலிருந்து வந்த இரு இளைஞர்களால், எவ்வளவோ மாறியிருக்கிறாள். அவர்கள் மூலம் அவள் இதற்கு முன்பு தெரியாத பல புதிய விஷயங்களையும் தெரிந்து கொண்டிருக்கிறாள். அவர்கள் அறிமுகப்படுத்திய புதினங்களின் மூலம் அவள் எவ்வளவோ இலக்கிய கதாபாத்திரங்களுடன் பழகியிருக்கிறாள். அந்த கதாபாத்திரங்களின் சந்தோஷங்களிலும், கவலைகளிலும் அவளும் இரண்டறக் கலந்து கரைந்திருக்கிறாள். சுருக்கமாக கூறுவதாக இருந்தால்- முன்பு நாம் பார்த்த அப்பாவி கிராமத்துப் பெண் இல்லை, இப்போது நாம் பார்க்கும் அறிவாளி பெண். Balzac அவளை ஒரு சிந்திக்கக் கூடிய பெண்ணாகவும், வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயத்தையும் அலசி ஆராய்ந்து பார்க்கும் புதுமைப் பெண்ணாகவும் மாற்றி விட்டிருக்கிறார்.
ஒருநாள் திடீரென்று யாருமே எதிர்பார்த்திராத வகையில், அந்த கிராமத்துப் பெண் தான் இதுவரை ஆடி, பாடி குதூகலித்துக் கொண்டிருந்த குக்கிராமத்தை விட்டு `புதிய வாழ்க்கை'யைத் தேடி வெளியேற தீர்மானிக்கிறாள். அவளுடைய வயதான தையல்காரத் தாத்தா அவளைப் போகக் கூடாது என்று தடுக்கிறார். லுவோ கூட எவ்வளவோ கூறிப் பார்க்கிறான். ஆனால், அவள் யார் கூறுவதையும் கேட்பதாயில்லை. தான் பல விஷயங்களையும் தெரிந்து கொண்டாகி விட்டது, தான் நினைத்ததைப் போல அந்த குக்கிராமமே உலகம் அல்ல, அதற்கு வெளியே தான் செயல்படுவதற்கும், தெரிந்து கொள்வதற்கும் மிகப் பெரிய உலகம் இருக்கிறது என்று அவள் உணர்கிறாள். சின்னஞ் சிறிய கிராமத்திற்குள் முடங்கிப் போய் தான் பெற்ற அறிவு வீணாகி விடக் கூடாது என்றும், மேலும் அறிவைப் பெருக்கிக் கொள்ள வேண்டுமென்றால், புதிய அனுபவங்களைப் பெறுவதற்காக பெரிய இடங்களைத் தேடிச் சென்றால் மட்டுமே சரியாக இருக்கும் என்றும் அவள் முடிவு செய்கிறாள். அதை தொடர்ந்து, அவள் துணிச்சலான மனதுடன் விடை பெற்றுச் செல்வதை, தாங்க முடியாத வேதனையுடனும், ஏக்கத்துடனும் மலை உச்சியில் பார்த்தவாறு பரிதாபமாக நின்று கொண்டிருக்கிறார்கள் லுவோவும், மாவும். Balzac என்ற ஒரு எழுத்தாளனின் அருமையான எழுத்துக்கள் ஒரு கிராமத்துப் பெண்ணை இப்படி ஒரேயடியாக புதுமைச் சிந்தனை கொண்ட பெண்ணாக வார்த்தெடுக்கும் என்று அவர்கள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook