ஹாச்சி : ஏ டாக்'ஸ் டேல் - Page 2
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 4682
அதற்குப் பிறகு ஒவ்வொரு நாளும் ஹாச்சியை தான் செல்லும்போது, புகை வண்டி நிலையத்திற்கு அவர் அழைத்துச் செல்கிறார். பார்க்கர் வில்ஸன் அங்கிருந்து புகை வண்டியில் ஏறி கிளம்பியவுடன், ஹாச்சி வீட்டிற்குத் திரும்பி வந்து விடும். பின்னர், சாயங்காலம் வந்து விட்டால், தன் எஜமானரை வரவேற்பதற்காக அது புகை வண்டி நிலையத்திலேயே காத்துக் கொண்டிருக்கும். அவர் வந்த பிறகு, இருவரும் சேர்ந்து வீட்டிற்கு வருவார்கள். இந்தச் செயல் ஒவ்வொரு நாளும் நடக்கும்.
நாட்கள் மிகவும் வேகமாக கடந்தோடுகின்றன. ஒருநாள் பார்க்கர் வில்ஸன் வேலைக்காகக் கிளம்புகிறார். அவருடன் செல்ல ஹாச்சி மறுக்கிறது. பார்க்கர் அங்கிருந்து கிளம்புகிறார். அவர் தன் கையில் ஒரு பந்தை வைத்திருக்க, அவரைப் பின் தொடர்ந்து ஓடுகிறது ஹாச்சி. அந்தச் செயலைப் பார்த்து பார்க்கர் வில்ஸன் ஆச்சரியப்படுகிறார். இறுதியில் தான் விட்டெறியும் பந்தை வேகமாக ஓடிச் சென்று எடுத்து வருவதற்கு ஹாச்சி தயாராகி விட்டதை நினைத்து, அவர் மனதிற்குள் சந்தோஷப்படுகிறார். கல்லூரிக்குச் செல்வது தாமதமாகி விடக் கூடாதே என்று நினைக்கும் அவர், தான் செல்லக் கூடிய புகை வண்டியில் ஏறுகிறார். ஆனால், அவருடைய ஹாச்சி அவரைப் பார்த்து குரைத்துக் கொண்டே இருக்கிறது. அதைப் பொருட்படுத்தாமல், அவர் புகை வண்டியில் ஏறி, தன் பயணத்தைத் தொடர்கிறார்.
கல்லூரிக்குச் சென்ற பேராசிரியர் பார்க்கர் வில்ஸன், தன் பந்தைக் கையில் வைத்துக் கொண்டே மாணவர்களுக்கு இசை வகுப்பு நடத்திக் கொண்டிருக்கிறார். ஹாச்சியுடன் காலையில் விளையாடிய அதே பந்துதான். திடீரென்று அவருக்கு மாரடைப்பு உண்டாகிறது. அடுத்த நிமிடம் அவர் மரணத்தைத் தழுவுகிறார்.
படம் பார்த்துக் கொண்டிருக்கும் நமக்கே அந்த காட்சி ஒரு மிகப் பெரிய அதிர்ச்சியைத் தரக் கூடியதாக இருக்கும்.
புகை வண்டி நிலையத்தில், மாலை வேளையில் தன் எஜமானர் பார்க்கர் வில்ஸன் திரும்பி வரும் புகை வண்டியை எதிர்பார்த்து, ஹாச்சி அமர்ந்திருக்கிறது. ஆனால், பார்க்கர் வரவேயில்லை. எப்படி வருவார்? அவர்தான் இந்த உலகத்தை விட்டே போய் விட்டாரே! நேரம் மணிக் கணக்காக கடந்தோடிக் கொண்டிருக்கிறது. மாலை இரவாகிறது. புகை வண்டி நிலையத்தில் ஆட்களின் கூட்டம் குறைகிறது. எங்கும் ஒரே அமைதி.... இரவில் விழும் கடுமையான பனியில் தன் எஜமானரை எதிர்பார்த்துக் கொண்டு. அந்த அன்பே உருவான நாய் படுத்திருக்கிறது. அதன் உடலெங்கும் பனிப் போர்வை... இப்போது பார்க்கர் வில்ஸனின் மருமகன் மைக்கேல் வருகிறான். அவன் தன் மாமாவை எதிர்பார்த்து அமர்ந்திருக்கும் ஹாச்சியைப் பார்க்கிறான். அதை வீட்டிற்கு அழைத்துக் கொண்டு செல்கிறான்.
மறுநாள் காலையில் ஹாச்சி திரும்பவும் புகை வண்டி நிலையத்திற்கு வருகிறது. பகல் முழுவதும் அங்கேயே இருக்கிறது. இரவிலும் கூட அங்கிருந்து அது நகர்வதாக இல்லை. நாட்கள் நகர்கின்றன. Cate தாங்கள் குடியிருந்த வீட்டை விற்கிறாள். ஹாச்சியை தன் மகள் Andy யின் வீட்டிற்கு அனுப்புகிறாள். அந்த வீட்டில் Andy, அவளுடைய கணவன் மைக்கேல், அவர்களுடைய ஆண் குழந்தை ரோணி ஆகியோர் இருக்கிறார்கள். அந்த வீட்டிற்குச் சென்ற நாய் ஹாச்சி, அன்கிருந்து தப்பித்து, தான் இருந்த பழைய வீட்டிற்குச் செல்லும் வழியைக் கண்டு பிடித்து அங்கு வருகிறது. பின்னர், அங்கிருந்து புகை வண்டி நிலையத்திற்குச் செல்கிறது. அங்கு தான் எப்போதும் அமர்ந்திருக்கக் கூடிய இடத்தில் அமர்ந்து கொண்டிருக்கிறது. அங்கிருக்கும் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யும் ஒரு மனிதர் அந்த நாய்க்கு சாப்பிடுவதற்கு உணவு தருகிறார். தினமும் பார்க்கர் வில்ஸனுடன் அது வருவதையும், மாலையில் அவரை எதிர்பார்த்துக் கொண்டு காத்திருப்பதையும், அவருடன் சேர்ந்து சந்தோஷமாக வீட்டிற்கு திரும்பிச் சென்றதையும் தினமும் பார்த்த மனிதராயிற்றே அவர்! பேராசிரியர் பார்க்கர் வில்ஸன் இறந்த விஷயம் அந்த மனிதருக்குத் தெரியும். உண்மை தெரியாமல், தன் எஜமானரை எதிர்பார்த்துக் கொண்டு புகை வண்டி நிலையத்தில் வழி மேல் விழி வைத்து காத்துக் கிடக்கும் ஹாச்சியைப் பார்த்து அவருக்கு கண்ணீர் வருகிறது. நமக்கும்தான்..
Andy புகை வண்டி நிலையத்திற்கு வருகிறாள். தன் தந்தையை எதிர்பார்த்துக் கொண்டு, கடுங்குளிரில் அமர்ந்து கொண்டிருக்கும் நாய் ஹாச்சியை தன் வீட்டிற்கு அழைத்துக் கொண்டு செல்கிறாள். ஆனால், மறுநாள் காலையில் அது புகை வண்டி நிலையத்திற்கு கிளம்புகிறது. அதை அவள் தடுக்கவில்லை. தன் விருப்பப்படி அது செல்லட்டும் என்று அதை சுதந்திரமாக அவள் போக விடுகிறாள்.
அடுத்த பத்து வருடங்கள், ஹாச்சி தினமும் புகை வண்டி நிலையத்திற்கு வந்து, தன் எஜமானர் பார்க்கர் வில்ஸனுக்காக காத்திருக்கிறது. மரணமடைந்த தன் எஜமானரின் கதை தெரியாமல், குளிரிலும், மழையிலும் புகை வண்டி நிலையத்தில் காத்துக் கிடக்கும் அந்த நாயின் கதை பத்திரிகையில் பிரசுரமாகிறது. பார்க்கரின் மனைவி கேட், தன் கணவரின் கல்லறையைப் பார்ப்பதற்காக திரும்பி வருகிறாள். அங்கு தன் கணவருடன் பணியாற்றிய ஜப்பானிய பேராசிரியர் கென்னைப் பார்க்கிறாள். தன் கணவர் இறந்து பத்து வருடங்கள் ஆகி விட்டன என்பதை தன்னால் நம்பவே முடியவில்லை என்கிறாள் அவள். புகை வண்டி நிலையத்திற்கு அவள் வருகிறாள். அங்கு தன் கணவரை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் ஹாச்சியைப் பார்த்து அவள் அதிர்ச்சியடைகிறாள்.
கவலையுடன் இருக்கும் கேட், ஹாச்சியுடன் அடுத்த புகை வண்டிக்காக காத்திருக்கிறாள். வீட்டிற்கு வரும் கேட், இப்போது பத்து வயது சிறுவனாக இருக்கும் தன் பேரன் ரோணியிடம், ஹாச்சியின் கதையைக் கூறுகிறாள்.