பேர்ட் கேஜ் இன்
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 4608
என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)
பேர்ட் கேஜ் இன் – Bird Cage Inn
(கொரிய மொழி திரைப்படம்)
1998ஆம் ஆண்டில் திரைக்கு வந்த படம். உலக புகழ் பெற்ற தென் கொரிய திரைப்பட இயக்குநர் கிம் கி-டுக் (Kim Ki-duk) இயக்கிய படம். 1999ஆம் ஆண்டில் நடைபெற்ற பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்டு, அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றது.
படத்தின் கதையையும் கிம் கி -டுக்கே எழுதினார். 100 நிமிடங்கள் ஓடக் கூடிய படமிது. கிம் கி-டுக் இயக்கத்தில் வெளியான மூன்றாவது படம் 'Bird cage Inn'.
ஒரு இளம் விலைமாதுவை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமிது.
ஜின்-ஆ (Jin-a) இருபத்து இரண்டு வயது கொண்ட ஒரு அழகான இளம் பெண். பார்ப்போரைக் கவரக் கூடிய பேரழகு படைத்தவள் அவள். கண்கள், கன்னம், உதடுகள், நடை- ஒவ்வொன்றிலும் அழகு ஆட்சி செய்து கொண்டிருந்தது. அவளை ஒரு முறை பார்த்தாலே, தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்று தோன்றும்.
ஆனால், தன் அழகைப் பற்றி ஜின்-ஆ சிறிது கூட கர்வப்பட்டுக் கொள்வதே இல்லை. வாழ்க்கையை அதன் போக்கில் போக விட்டு, வாழ்ந்து கொண்டிருப்பவள் அவள். அவளுக்கென்று கொள்கை, கோட்பாடு எதுவுமில்லை. இப்படித்தான் வாழ வேண்டும் என்ற திட்டமோ, இலக்கணமோ அவளிடம் இல்லவே இல்லை. எப்படியோ படைக்கப்பட்டு உலகத்திற்குள் வந்து விட்டோம், உயிருடன் இருக்கக் கூடிய நாட்களில் நன்கு சாப்பிட்டு, பிறரை சந்தோஷப்படுத்தி தானும் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும் பிரச்னைகள் இல்லாமல், இன்பமாக வாழ வேண்டும் என்று நினைப்பவள் அவள்.
அவள் புதிதாக அந்த ஊருக்கு வருகிறாள். சந்தர்ப்ப சூழ்நிலையால் வாழ்க்கையை நடத்துவதற்கு விலை மாதுவாக மாறியவள் அவள். அவளுக்கென்று உலகத்தில் யாருமில்லை. விலை மாதுவாக ஆகியதற்காக அவள் கவலைப்படவும் இல்லை. மற்றவர்கள் வேலை செய்து பிழைப்பதைப் போல, தான் தன்னுடைய உடலை விற்று பிழைப்பு நடத்துகிறோம் என்று சர்வ சாதாரணமாக எடுத்துக் கொண்டு அவள் வாழ்கிறாள்.
அந்த புதிய ஊரில் 'Bird Cage Inn' என்றொரு சிறிய இல்லம். கடலோரத்தில் அது இருக்கிறது. அங்குதான் அவள் தங்கி, விலை மாதுவாக தொழில் நடத்த வேண்டும். அவள் வரும்போதே, எதிரில் ஒரு பெண் வருகிறாள். அவளுக்கு முன்பு, அந்த இல்லத்தில் இதுவரை இருந்த விலை மாது அவள். அவளைக் கடந்துதான் அவள் வருகிறாள். அதாவது- பழைய அந்த இளம் பெண் அங்கிருந்து கிளம்ப, புதிய இளம் பெண்ணான ஜின்-ஆ அந்த இல்லத்திற்குள் நுழைகிறாள்.
சொல்லப் போனால்- அது ஒரு வீடுதான். அந்த வீட்டில் நான்கு அறைகள் இருக்கின்றன. ஒரு பக்கம் இரண்டு அறைகள். அவற்றைப் பார்த்துக் கொண்டு வேறு இரண்டு அறைகள். அந்த 'விபச்சார விடுதி'யை ஒரு கணவனும், மனைவியும் சேர்ந்து நடத்துகிறார்கள். நடுத்தர வயதைத் தாண்டிய அந்த தம்பதிகளுக்கு ஒரு மகள், ஒரு மகன்.
நான்கு அறைகளில் ஒரு அறையை புதிதாக வந்திருக்கும் ஜின்- ஆவிற்கு ஒதுக்குகிறார்கள். அந்த அறைக்குள்தான் அவள் 'தொழில்' நடத்த வேண்டும். அதற்கு நேர் எதிரில் இருக்கும் அறையில் அந்த கணவனும், மனைவியும். அவர்களும் ஏழைகள்தாம். மிகவும் சிரமத்துடன் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருப்பவர்கள்தாம். ஜின்-ஆ அந்த வீட்டிலேயே... அவர்களுடன் சேர்ந்து உட்கார்ந்து, அங்கு சமைக்கப்படும் உணவைச் சாப்பிட்டுக் கொள்ள வேண்டும். வாடிக்கையாளர்களிடம் ஜின்-ஆ பெறும் பணத்தில், அந்த குடும்பம் ஒரு பகுதி பணத்தை எடுத்துக் கொள்ளும். அந்த பணத்தைக் கொண்டுதான் அந்த குடும்பமே வாழ்ந்து கொண்டிருக்கிறது.
ஜின்-ஆ இரவு வேளைகளில் தன்னை உடல் இன்பத்திற்காக தேடி வரும் ஆணுடன் படுத்துக் கிடப்பாள். பகல் வேளையில் அமைதியாக உட்கார்ந்து ஓவியம் வரைவாள். மிகவும் அருமையாக ஓவியம் வரையக் கூடிய அபார திறமை அவளுக்கு இருந்தது. சில நேரங்களில் கடற்கரையில் அமர்ந்து, கால்களில் நீர் படும் அளவிற்கு கடலையே வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டு அமர்ந்திருப்பாள். ஓவியம் வரைவதிலும், இயற்கையின் அழகை ரசிப்பதிலும், பிடித்த உணவைச் சாப்பிடுவதிலும், கடலின் ஆரவாரத்தில் தன்னை இழப்பதிலும் அவள் தன்னுடைய அனைத்து கவலைகளையும், பிரச்னைகளையும் மறந்து வாழ்க்கையின் நாட்களை நகர்த்திக் கொண்டிருந்தாள்.