ஸ்ட்ரே டாக்ஸ் - Page 2
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 6191
ராத்திரி ஆயிடுச்சுன்னா, சிறைக்குள்ளே வந்து அம்மாகூட சேர்ந்து படுத்துக்குறோம். சில நேரங்கள்ல சிறைக்குள்ளே கூட எங்களை விட மாட்டேங்குறாங்க. சட்டப்படி அப்படி பிள்ளைகளை உள்ளே விடக் கூடாதாம். எனினும், சிறையில இருக்குற ஒரு அதிகாரி எங்கள் மீது இரக்கப்பட்டு சிறைக்குள்ளே விட அனுமதிப்பாரு. சாப்பிடுவதற்கு உணவு இல்லாமல், இரவு நேரத்துல படுக்குறதுக்கு இடமில்லாமல் நானும் அண்ணனும் தவிச்சுக்கிட்டு இருக்கோம். எங்களோட பரிதாப நிலையைப் பார்த்து அம்மா கண்ணீர் விடுறாங்க. உண்மையை உணர்ந்து அம்மாவை நீங்க மன்னிச்சிட்டதாகச் சொன்னால், அம்மாவை வெளியே விட்டுடுவாங்க. கட்டாயம் நீங்க அம்மாவை மன்னிக்கணும்னு உன் அப்பாவை சந்திக்கிறப்போ நீ சொல்லணும். நான் சொன்னதை அப்படியே சொல்லுவியா? எங்கே...? ஒரு தடவை சொல்லிக் காட்டு... ‘என்கிறாள் அந்த தாய் தன் அன்பு மகளிடம். அந்தச் சிறுமி தன் தாய் கூறியதை அப்படியே கூறுகிறாள். தன் மகள் கூறுவதையே கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறாள் அந்த ஏழை தாய். இப்படியே இரவு கழிகிறது.
பொழுது புலர்கிறது. சிறுவனும், சிறுமியும் சிறையை விட்டு வெளியே வருகிறார்கள். சிறுமியின் கையில் நாய் இருக்கிறது. தங்களின் தந்தை அடைக்கப்பட்டிருக்கும் சிறைக்கு வருகிறார்கள். அங்கு அவர்கள் வருவதற்கு முன்பே, நிறைய பேர் வரிசையில் நின்று கொண்டிருக்கிறார்கள். சிறுமியின் முறை வருவதற்கு முன்பே, பார்வையாளர்களுக்கான நேரம் முடிவடைந்து விடுகிறது. ‘இன்றைக்கு பார்க்க முடியாது. இன்னொரு நாள்தான் பார்க்க முடியும்’ என்று கூறி விடுகிறார்கள். தங்களின் தந்தையைப் பார்த்து, அன்னை கூறிய அத்தனை விஷயங்களையும் கூறிவிட வேண்டும் என்று ஆவலுடன் இருந்த சிறுமி ஏமாற்றமடைகிறாள். அவளுடன் அவளுடைய அண்ணனும் அங்கிருந்து கவலையுடன் இருவரும் நடந்து செல்கிறார்கள்.
இரவு நேரம். மீண்டும் அன்னையுடன் அவளுடைய பிள்ளைகள். சிறையின் அறையில்தான்... தங்களின் தந்தையைப் பார்க்க முடியாமல் போய்விட்டது என்பதையும், மறுநாள் வருமாறு கூறி விட்டார்கள் என்பதையும் சிறுமி கூறுகிறாள். மறுநாள் ‘அப்பாவைப் பார்க்கும்போது நான் சொன்னபடி கொஞ்சமும் மாற்றாமல் சொல்லணும்’ என்கிறாள் அன்னை. அதற்கு படுத்துக் கொண்டே ‘சரி’என்று தலையை ஆட்டுகிறாள் அந்த சிறுமி.
மறுநாள் பகல். அண்ணனும், தங்கையும் கையில் கோணியை வைத்துக் கொண்டு ஏராளமான குப்பைகள் கொட்டப்பட்டிருக்கும் இடத்தில் பேப்பர்களையும், தேவைப்படும் பொருட்களையும், பழைய சாமான்களையும் பொறுக்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் போலவே இன்னும் ஏராளமான சிறுவர்களும், சிறுமிகளும் குப்பை பொறுக்கும் வேலையில் ஈடுபட்டிருக்கிறார்கள். எல்லோருமே அனாதைகள்தான். பரட்டைத் தலைகளுடனும், அழுக்கடைந்து போன ஆடைகளுடனும், ஒட்டிய வயிறுகளுடனும் குப்பை மேடுகளில் அலைந்து திரிந்து கொண்டிருக்கும் அந்தச் சிறுவர்களையும், சிறுமிகளையும் பார்க்கும்போது போரின் கொடுமைகளும், அதன் காரணமாக கள்ளங்கபடமற்ற அந்த பிஞ்சு உள்ளங்கள் ஆதரவற்ற அனாதைகளாக வீதிகளில் வீசி எறியப்பட்ட அவல நிலையும், அவர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் சிரமங்களும் நம் மனதை ஆக்கிரமித்து, நம் கண்களில் கண்ணீர் வரச் செய்யும்.
தாங்கள் குப்பைகளில் இருந்து பொறுக்கிய பழைய பொருட்களைக் கொண்டு போய், பழைய சாமான்கள் வாங்கப்படும் ஒரு கடையில் அந்தச் சிறுவனும், சிறுவனும் விற்கிறார்கள். அங்கு காசு கொடுக்கப்பட, அதைக் கொண்டு ரொட்டியும், பன்னும் வாங்கி அவர்கள் இருவரும் சாப்பிடுகிறார்கள்.
இரவு நேரம். சிறுவன் முன்னால் நடக்க, சிறுமி நாயைத் தூக்கி வைத்துக் கொண்டு தன் அண்ணனைப் பின்பற்றி வருகிறாள். இருவரும் தங்களின் அன்னை இருக்கும் சிறைக்கு முன்னால் வந்து நிற்கிறார்கள். வெளியே இருக்கும் இரும்பு தாழ்ப்பாளைத் தட்ட, காவலாளி ஒருவர் வந்து நிற்கிறான். ‘என்ன விஷயம்?’ என்கிறான். ‘எங்களின் அம்மா உள்ளே இருக்குறாங்க. நாங்க உள்ளே போகணும்’என்கிறார்கள் அந்த சிறுவனும், சிறுமியும். அவன் அதற்கு மறுக்கிறான். ‘உள்ளே இருக்கும் அதிகாரியிடம் போய் சொல்லுங்கள். அவர் எங்களை அனுமதிப்பார்’ என்கிறான் சிறுவன். அடுத்த நிமிடம் அதிகாரி வெளியே வருகிறார். அவர் சிறுவனிடமும் சிறுமியிடமும் ‘கவர்னர் யாரையும் உள்ளே விடக் கூடாது என்று கூறிவிட்டார். அதனால் உங்களை உள்ளே விட முடியாது. வேறு எங்காவது போய் தங்கிக் கொள்ளுங்கள். இனிமேல் இந்தப் பக்கம் எப்போதும் வர வேண்டாம்’ என்று கூறுகிறார்.
என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப் போய் நிற்கும் அந்த அன்பு அண்ணனும், தங்கையும் அங்கிருந்து நகர்கிறார்கள்.
நகரத்தின் ஒதுக்குப்புறம். வானத்தில் நிலவு காய்ந்து கொண்டிருக்கிறது. அந்த இருட்டு வேளையில்... நிலவு வெளிச்சத்தில்... தந்தையும் தாயும் உயிருடன் இருந்தும், வீடற்ற, ஆதரவற்ற அனாதைகளாக இருக்கும் அந்த அன்புச் சகோதரனும் சகோதரியும் இரவை எங்கே கழிப்பது என்ற கவலையுடன் இருக்கிறார்கள். அப்போது தூரத்தில் ஏதோ வெளிச்சம் தெரிகிறது. அந்த இடத்தை நோக்கி அவர்கள் நடக்கிறார்கள்.
சிறிய சிறிய பெட்டிகள் அங்கு வரிசையாக வைக்கப்பட்டிருக்கின்றன. அங்கிருந்த ஒரு பெட்டிக்குள் இரவு முழுக்க உட்கார்ந்து கொள்ளலாம் என்று சிறுவன் முயற்சிக்கிறான். ஆனால், அவனுக்கு முன்பே அதற்குள் வேறொரு சிறுவன் உட்கார்ந்திருக்கிறான். அப்போதுதான் தெரிகிறது இரவில் தங்குவதற்கு இடம் இல்லாத பலரும் அங்கு காசு கொடுத்து தங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மையே. அங்கு அந்த வர்த்தகத்தைச் செய்து கொண்டிருப்பவன் ஒரு சிறுவன். அவனிடம், தானும் தன் தங்கையும் அந்த இரவில் அங்கு தங்க அனுமதிக்க வேண்டும் என்கிறான் சிறுவன். அதற்கு அந்த பொறுப்பாளரான சிறுவன் ‘நீ வேண்டுமானால் தங்கலாம். உன் தங்கை பெண். ஆதலால், அவளை இங்க அனுமதிக்க முடியாது’ என்கிறான் பிடிவாதமாக. ‘என்னை விட்டுவிட்டு என் தங்கை எங்கு போவாள்?’ என்று சிறுவன்’பரிதாபமாக கேட்க, பரிதாபமாக கேட்க, அங்கிருக்கும் பொறுப்பாளரான சிறுவன் சரி... இன்றைக்கு மட்டும் உன் தங்கையுடன் தங்கிக் கொள். நாளைக்கு வருவதாக இருந்தால், உன் தங்கையை அனுமதிக்க முடியாது’ என்கிறான். அன்றைய இரவை அங்கேயே அந்த அண்ணனும் அவனின் செல்ல தங்கையும் செலவழிக்கின்றனர்.
பொழுது விடிகிறது. இரவில் அந்த இடத்தில் தங்கிய ஒவ்வொருவரும் சிறுவனிடம் காசைக் கொடுத்து விட்டு, கிளம்புகிறார்கள். நம் சிறுவனும் காசைத் தந்துவிட்டு, தன் தங்கையுடன் அங்கிருந்து புறப்படுகிறான்.