Lekha Books

A+ A A-

இம்மானுவல்

Immanuel

என்னை கவர்ந்த திரைப்படங்கள்சுரா (Sura)

இம்மானுவல் - Immanuel

(மலையாள திரைப்படம்)

2013ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வந்த படம். மம்மூட்டி கதாநாயகனாக நடித்த இப்படத்தை இயக்கியவர் -  தொடர்ந்து வெற்றிப் படங்களை இயக்கிக் கொண்டிருக்கும் திறமைசாலியான லால் ஜோஸ். மம்மூட்டியுடன் முற்றிலும் மாறுபட்ட பாத்திரத்தில் நடித்திருப்பவர் ஃபகத் ஃபாஸில். யாரும் இதுவரை தொட்டிராத ஒரு மிகச் சிறந்த கதைக் கருவை எடுத்து, அருமையான திரைக்கதை அமைத்து, ஒரு தரமான படத்தைத் தந்திருக்கும் லால் ஜோஸை முழு மனதுடன் நாம் பாராட்ட வேண்டும்.

மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்த ‘இம்மானுவல்’ எல்லா தரப்பு மக்களுக்கும் பிடிக்கும். காரணம்- இது ஒரு பொழுது போக்கு படமல்ல. நம் வாழ்க்கையில் நாம் அன்றாடம் சந்தித்துக் கொண்டிருக்கும் சம்பவங்களையும், மனிதர்களையும், உயரங்களையும், வீழ்ச்சிகளையும், ஏமாற்றங்களையும், சந்தோஷங்களையும் இதில் உயிர்ப்புடன் பார்க்கிறோம். அதுதான் இந்தப் படத்தின் வெற்றிக்கான காரணம்.

அந்த அளவிற்கு பேசப்படும் ‘இம்மானுவல்’ படத்தின் கதைதான் என்ன?

இதோ:

இம்மானுவல் ஒரு நடுத்தர குடும்பத்தின் தலைவன். கடவுள் பக்தி நிறைந்தவன். நல்லவன். நல்ல விஷயங்களை மட்டுமே நினைப்பவன். அவனுடைய மனைவி ஆன்னி. அவளும் இறை பக்தி கொண்டவளே. கணவனுக்கேற்ற அருமையான மனைவி. அந்த தம்பதிகளுக்கு ஒரே ஒரு மகன். நல்ல அறிவாளி பையன். துடிப்பு நிறைந்தவன். மூவரும் கடவுளை தொழுது விட்டுத்தான் ஒரு நாளை ஆரம்பிப்பார்கள், இறைவனை வழிப்பட்டு விட்டுத்தான் ஒரு நாளை முடித்து, தூங்குவார்கள்.

இம்மானுவல் ஒரு பதிப்பகத்தில் பணியாற்றுகிறான். அந்த பதிப்பகம் நஷ்டத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது. மூன்று மாதங்களாக இம்மானுவல் சம்பளமே வாங்கவில்லை. பதிப்பகத்தின் உரிமையாளர்  ‘சம்பளத்தை இப்போது தருகிறேன்... அப்போது தருகிறேன்...’ என்று இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு ஏகப்பட்ட பிரச்னைகள்... கடன் தொல்லைகள். தினமும் கடன்காரர்களுக்கு பதில் கூறுவதே அவருடைய வேலையாக இருக்கிறது. சம்பளம் கிடைக்காமல், பலவித பிரச்னைகளுக்கும், சிரமங்களுக்கும் மத்தியில் தன் குடும்பத்தை நடத்திக் கொண்டிருக்கிறான் இம்மானுவல்.

திடீரென்று இம்மானுவலே எதிர்பார்த்திராத ஒரு சூழ்நிலையில், பதிப்பகத்தின் உரிமையாளர் ஊரை விட்டு தப்பித்து ஓடி விடுகிறார். அவருக்கு கடன் கொடுத்தவர்கள் அவருடைய இடத்தையும், பொருட்களையும் ஆக்கிரமித்துக் கொள்கிறார்கள். தனக்கு மூன்று மாத சம்பளம் கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த இம்மானுவலுக்கு பலத்த அடி!. என்ன செய்வது என்று அவன் தவித்துக் கொண்டிருக்கிறான். அப்போது ஒரு ஆள் ஒரு கடிதத்துடன் வருகிறார். பதிப்பகத்தின் உரிமையாளர் 10,000 ரூபாய்களை ஒரு கவருக்குள் போட்டு, ஒரு கடிதத்தையும் அத்துடன் எழுதி கொடுத்தனுப்பியிருக்கிறார். ‘நான் தர வேண்டிய 30,000 ரூபாயைத் தர முடியவில்லை. இவ்வளவுதான் முடிந்தது. நீ நல்லவன். உன்னை கடவுள் கை விட மாட்டார். இத்துடன் என் நண்பர் ஒருவரின் அலைபேசி எண்ணை எழுதியிருக்கிறேன். அவரைத் தொடர்பு கொள். உன் வேலை விஷயமாக அவர் ஏதாவது செய்வார்’ என்று அவர் அதில் எழுதியிருக்கிறார்.

ஒரு வகையில் ஏமாற்றம்... அதே நேரத்தில், சிறிய மகிழ்ச்சி...

அந்த அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டால், ராஜசேகரன் என்பவர் லைனில் வருகிறார். அவருடைய ஆலோசனைப்படி, இம்மானுவல் ஒரு இன்சூரன்ஸ் நிறுவனத்திற்குச் செல்கிறான். அங்கு அவன் போய் பார்த்தால், 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் வரிசையாக அமர்ந்திருக்கிறார்கள். வேலைக்கு தேவைப்படுபவர்களும் அந்த வயதில் உள்ளவர்களே. தங்களின் தந்தையின் வயதில் இருக்கும் இம்மானுவல் வேலை தேடி வந்திருப்பதைப் பார்த்து அவர்கள் கிண்டல் செய்கிறார்கள்.

ஆனால், நேர்முகத் தேர்வின்போது இம்மானுவல் கூறிய ஒரு புத்திசாலித்தனமான பதிலால், அவனுக்கு அந்த நிறுவனத்தில் வேலை கிடைக்கிறது.

மிகவும் சிரமமான வேலை. கடுமையாக உழைக்க வேண்டும். எனினும், அந்த நாற்காலியில் போய் அமர்கிறான் இம்மானுவல். தொலைபேசியில் தினமும் ஏராளமான ஆட்களைத் தொடர்பு கொண்டு, இன்சூரன்ஸ் வாடிக்கையாளர்களாக அவர்களைச் சேர்க்க வேண்டும். சவால் நிறைந்த அந்த வேலையை வேறு வழியில்லாமல் செய்கிறான் இம்மானுவல்.

அவனுக்கும் அங்கு நிர்வாகியாக பணி புரியும் ஜீவன்ராஜுக்கும் ஆரம்பத்திலிருந்தே பிரச்னை. ஒவ்வொரு முறையும் அந்த நிர்வாகி, இம்மானுவலிடம் மிகவும் கறாராக நடந்து கொள்கிறான். தன் அறைக்கு அழைத்து, எட்ட முடியாத ஒரு தொகையைக் கூறி அந்த தொகையை அடையக் கூடிய வகையில் வாடிக்கையாளர்களைச் சேர்க்க வேண்டும் என்று நிபந்தனை விதிப்பான். எனினும், சிறிதும் சோர்வடையாமல் இம்மானுவல் அதையும் ஏற்றுக் கொள்ளத்தான் செய்கிறான்.

வாடிக்கையாளர்களைச் சேர்ப்பதற்காக அவன் தன்னுடைய மோட்டார் சைக்கிளில் அலையும் அலைச்சல் இருக்கிறதே! அவன் செல்லும் இடங்களில் அவனுக்கு கிடைக்கும் அவமானங்கள், ஏமாற்றங்கள்... வேறு ஆளாக இருந்தால், அந்த வேலையை விட்டே ஓடி விடுவார்கள். ஆனால், இம்மானுவல் ஓடவில்லை. எங்கு ஓடி, என்ன செய்வான்?

தன் மனைவியையும், மகனையும் எந்தவித கவலையும் இல்லாமல் சந்தோஷமாக வாழ வைக்க வேண்டும் என்பதற்காக அவன் படாத பாடு படுகிறான்.

‘வாடிக்கையாளர்களின் நலனே முக்கியம்’ என்று வசனம் பேசும் அந்த நிறுவனத்தின் மேனேஜர், அதை சிறிது கூட தன் வாழ்க்கையில் பின்பற்றாமல் இருப்பதை இம்மானுவல் பார்க்கிறான். லாபம் என்ற ஒன்று மட்டுமே அந்த நிறுவனத்தின் நோக்கமாக இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் - அந்த நிறுவனம் வாடிக்கையாளர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. பலவித பித்தலாட்டங்களும், ஊழல்களும், ஏமாற்று வேலைகளும் அங்கு நடக்கின்றன.

தங்களின் எதிர்கால வாழ்க்கையே அந்த இன்சூரன்ஸ் நிறுவனத்தை நம்பித்தான் இருக்கிறது என்று அங்கு வாடிக்கையாளர்களாகச் சேர்ந்தவர்கள் நினைத்துக் கொண்டிருக்க, அவர்களை மிகவும் சர்வ சாதாரணமாக ஏமாற்றிக் கொண்டிருக்கிறது அந்நிறுவனம். இந்த உண்மை தெரியாமல், ஏதோ நம்பிக்கையுடன் அவர்கள் தினமும் செருப்பு தேய, அந்நிறுவனத்தை நோக்கி நடந்து கொண்டிருக்கிறார்கள்.

இன்சூரன்ஸ் பணத்திற்காக தள்ளாத வயதில் அலைந்து கொண்டிருக்கும் ஒரு வயதான கிழவி மருத்துவச் செலவிற்கான பணத்திற்காக அலைந்து கொண்டிருக்கும் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒரு பெண்... இவர்களின் சிரமங்களை அந்நிறுவனம் சிறிது கூட கண்டு கொள்ளவேயில்லை.

ஆனால், எல்லாவற்றையும் இம்மானுவல் பார்க்கிறான். அவனுக்கே எவ்வளவோ பிரச்னைகள்! அதற்கு மத்தியில் இம்மானுவல், அங்கு நடையாய் நடந்து கொண்டிருப்பவர்களையும் கவனிக்கிறான். மற்றவர்களைப் போல வெறும் பார்வையாளனாக இருக்க அவன் விரும்பவில்லை. அவர்களுடைய பிரச்னைகள் தீர்க்கப்பட வேண்டும் என்று அவன் நினைக்கிறான். அதைத் தொடர்ந்து அவனே களத்தில் இறங்குகிறான். கில்லாடித் தனங்களை அந்த நிறுவனத்தின் மேனேஜர் மட்டும்தான் செய்ய முடியுமா? அந்த ஆளே அசந்து போகிற அளவிற்கு ஒரு மிகப் பெரிய காரியத்தில் இறங்குகிறான் இம்மானுவல்.

 

+Novels

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

தந்தை விழுந்தபோது...

March 8, 2012,

மகாலட்சுமி

March 22, 2013,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel