காஸ்ட் அவே
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 6553
என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)
Cast Away - காஸ்ட் அவே
(ஹாலிவுட் திரைப்படம்)
2000ஆம் ஆண்டில் திரைக்கு வந்து, மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற படம். பல வெற்றிப் படங்களின் இயக்குனரான Robert Zemeckis இயக்கிய இப்படத்தின் கதாநாயகன் Tom Hanks.
படத்தின் கதாநாயகனான Tom Hanks ஐச் சுற்றியே இப்படத்தின் முழு திரைக்கதையும் அமைக்கப்பட்டிருந்தது.
ஒரே மனிதன், ஒரே இடம் என்று அமைக்கப்பட்டிருக்கும் ஒரு கதைக் கருவை வைத்துக் கொண்டு 143 நிமிடங்கள், படத்தைப் பார்ப்போரை அமர்ந்திருக்கும் இடத்தில் சிறிதும் எழாமல் அப்படியே உட்கார வைப்பது என்பது சாதாரண ஒரு விஷயமல்ல. அப்படிப்பட்ட ஒரு மகத்தான செயலைச் செய்ததற்காகவே நாம் படத்தின் இயக்குனரான Robert Zemeckisஐ எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.
படத்தின் கதை இதுதான்:
1995ஆம் ஆண்டில் Chuck Noland என்ற இளைஞன் FedEx என்ற பிரபலமான கூரியர் நிறுவனத்தில் Systems Analyst ஆக பணியாற்றுகிறான். உலகமெங்கும் விமானத்தில் பயணம் செய்து அவன் அந்நிறுவனம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளைத் தீர்த்து வைப்பான். அவன் நீண்ட காலமாக Kelly Frears என்ற இளம் பெண்ணுடன் நட்பு கொண்டிருக்கிறான். அவளுடன் அவன் டென் னெஸ்ஸீயில் உள்ள Memphis என்ற இடத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறான். அந்த இளம் ஜோடி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையை மனதில் கொண்டிருந்தாலும், Chuck இன் வேலைப் பளு அந்தக் காரியம் விரைவில் நடைபெறாமல் தள்ளிப் போட்டுக் கொண்டே வருகிறது.
இதற்கிடையில் ஒரு கிறிஸ்துமஸ் வருகிறது Chuckம் Kellyயும் தங்களுடைய உறவினர்களுடன் சந்தோஷமாக பண்டிகையைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது, தான் பணியாற்றும் நிறுவனத்திலிருந்து Chuckகிற்கு ஒரு அவசர தகவல் வருகிறது. மலேஷியாவிற்கு உடனடியாக பயணம் செய்து, அங்கிருக்கும் ஒரு முக்கிய பிரச்னையை தீர்த்து வைக்க வேண்டும் என்று அவனுக்கு கட்டளை பிறப்பிக்கப்படுகிறது.
அவன் உடனடியாக அங்கிருந்து கிளம்பிச் செல்கிறான். விமானத்தில் பயணம் செய்யும்போது, அவன் சென்ற விமானம் சூறாவளி காரணமாக விபத்துக்குள்ளாகி, பசிபிக் கடலுக்குள் விழுந்து விடுகிறது. கடலுக்குள் விழும் Chuck, விமானத்தின் நொறுங்கி விழுந்த ஒரு பகுதியைப் பிடித்துக் கொண்டு தப்பித்து விடுகிறான். ஆனால், அவனுக்கு சுய உணர்வு இல்லாமற் போகிறது. இரவு முழுக்க அந்த விமானத்தின் நொறுங்கிய பகுதியுடன் கடலில் மிதக்கும் அவன், ஒரு தீவினை அடைகிறான்.
கண் விழித்துப் பார்த்தபோது, தான் ஒரு தீவில் இருப்பதையும், அங்கு பெயருக்குக் கூட ஆட்கள் யாரும் இல்லை என்பதும் அவனுக்கு தெரிகிறது. விமானத்திலிருந்து கடல் நீருக்குள் விழுந்த பல பெட்டிகளும் கடலில் மிதந்து வந்து கரையில் ஒதுங்கிக் கிடப்பதை அவன் பார்க்கிறான். அந்த பெட்டிகளுக்கு மத்தியில் விமானத்தின் பைலட்களில் ஒருவரின் இறந்த உடலும் மிதந்து கொண்டிருக்கிறது.
அந்த இறந்த உடலை கண்ணீர் மல்க, Chuck அங்கு புதைக்கிறான். அவன் அந்த தீவில் இருந்து கொண்டு சைகை செய்கிறான்... உரத்த குரலில் கத்துகிறான்... தன்னை யாராவது பார்க்க மாட்டார்களா என்று குதிக்கிறான்... கைகளை உயர்த்தி அழைக்கிறான். ஆனால், அவனை யாரும் பார்க்கவில்லை. அவனுடைய குரலை யாரும் கேட்கவில்லை.
அவனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. பசி எடுக்கிறது. தாகம் உண்டாகிறது. விமானத்திலிருந்து கீழே விழுந்த பெட்டிகளைப் பிரிக்கிறான். அவனுக்கு தேவைப்படும் பலவும் அவற்றில் இருக்கின்றன. ஒரே ஒரு பெட்டியை மட்டும் பிரிக்காமல், அப்படியே ஒரு ஓரத்தில் வைத்து விடுகிறான். அதில் இரண்டு சிறகுகள் வரையப்பட்டிருக்கின்றன.
சாப்பிடுவதற்கு ஏதாவது செய்ய வேண்டுமே! என்ன செய்வது என்று Chuck யோசிக்கிறான். அங்கிருந்த இரண்டு கற்களை எடுத்து உரசிப் பார்க்கிறான். அப்போது அவனுடைய கையில் காயம் உண்டாகி விடுகிறது. அந்த கோபத்தில் தன்னிடமிருந்த பல பொருட்களையும் அவன் கடலுக்குள் வீசி எறிகிறான். அவன் வீசி எறிந்த பொருட்களில் ‘Wilson Sporting Goods’ என்ற நிறுவனத்தின் எறிபந்தும் (Volley Ball)ஒன்று. விமானத்திலிருந்து கீழே விழுந்த பெட்டிகளில் ஒன்றில் அந்த பந்து இருந்தது. பின்னர் என்ன நினைத்தானோ, தான் வீசி எறிந்த அந்த Volley Ballஐ மீண்டும் நீரிலிருந்து எடுத்து, தன் கையில் கசிந்து கொண்டிருந்த இரத்தத்தால், அதில் ஒரு மனித முகத்தை அவன் வரைகிறான். அந்த பந்திற்கு‘Wilson’ என்று பெயரிடும் Chuck, அதை ஒரு இடத்தில் வைத்து விட்டு, அதனுடன் பேச ஆரம்பிக்கிறான்.
பேச்சுத் துணைக்குக் கூட யாரும் இல்லாமல் தான் மட்டும் அந்த தீவில் தனியாக இருக்கும் சூழ்நிலையில், மனித முகம் வரையப்பட்டிருக்கும் அந்த Volley Ballஐ, உயிருடன் தனக்கு அருகில் அமர்ந்திருக்கும் ஒரு மனிதன் என்று மனதில் கற்பனை பண்ணிக் கொள்கிறான் Chuck. ஒரு மனிதனிடம் பேசுவதைப் போல அவன் தன் மனதிலிருக்கும் எல்லா விஷயங்களையும் பேசுகிறான். தன் மனக் குறைகளைக் கூறுகிறான்... விமான விபத்தின் காரணமாக தான் அந்த தீவில் மாட்டிக் கொண்ட அவலத்தை விவரிக்கிறான்... பசியாலும், தாகத்தாலும் தவித்துக் கொண்டிருப்பதை உருக்கத்துடன் கூறுகிறான்... எங்கோ இருக்கும் தன் உயிருக்குயிரான Kelly ஐப் பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கத்தை வெளியிடுகிறான்... தன் விதியை நினைத்து சோகத்துடன் சிரிக்கிறான்... ஆள் அரவமற்ற அந்தத் தீவிலிருந்து தப்பித்துச் செல்வதற்கு என்ன வழி என்பது புரியாமலிருக்கும் தன்னுடைய நிலையை நினைத்து அழுகிறான். எல்லாவற்றையும் ஒரு நண்பனுடன் பகிர்ந்து கொள்வதைப் போல அந்த Volley Ball இடம் கூறி, மனதிலிருந்த சுமைகளை இறக்கி வைத்து விட்ட நிம்மதியுடன் அவன் இருக்கிறான்.
கற்களை உரசச் செய்து, கற்கால மனிதர்கள் செய்ததைப் போல அவன் நெருப்பு உண்டாகச் செய்கிறான். சாப்பிடுவதற்கு எதுவுமே இல்லாத சூழ்நிலையில் நீருக்குள் இறங்கி மீன்களைப் பிடித்துக் கொண்டு வருகிறான். மீனை நெருப்பில் சுட்டு உண்ணுகிறான். அதன் மூலம் அவனுடைய பசி தீர்கிறது. தாகத்தை அடக்குவதற்குத்தான் கடல் நீர் இருக்கிறதே?
நாட்கள் கடந்தோடுகின்றன. ஆரம்பத்தில் சதைப் பிடிப்புடன், மிடுக்காக இருந்த Chuck மிகவும் மெலிந்து போய் விடுகிறான். ஆரம்பத்தில் அவன் அணிந்திருந்த ஆடைகளெல்லாம் நைந்து போக, ஒரு சிறு துணியை மட்டும் இடுப்பில் சுற்றிக் கொண்டு அவன் இருக்கிறான். தாடி முடி வளர்ந்து நீளமாக காட்சியளிக்கிறது. தலையில் முடி ஏராளமாக புதரைப் போல வளர்ந்திருக்கிறது. மொத்தத்தில் - நாகரீகம் என்ற ஒன்று தோன்றியிராத காலத்தில், ஆதி மனிதன் எப்படி இருந்தானோ, அப்படிப்பட்ட ஒரு கோலத்தில் இருக்கிறான் Chuck.