அர்த்
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 8990
என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)
Arth-அர்த்
(இந்தி திரைப்படம்)
1982ஆம் ஆண்டில் திரைக்கு வந்து, மாறுபட்ட திரைப்படங்களை ரசிப்பவர்களின் பாராட்டைப் பெரிய அளவில் பெற்ற படம். படத்தின் இயக்குநர் மகேஷ் பட். அவர் இயக்கும் படம் என்றாலே, மாறுபட்ட கதைக் கரு இருக்கும், புதுமையான கோணத்தில் கதை கூறப்பட்டிருக்கும் என்று பொதுவாக கூறுவார்கள். அது உண்மைதான் என்பதற்கு `அர்த்’ படமும் எடுத்துக்காட்டாக நிற்கிறது.
மகேஷ் பட்டிற்கும், முன்பு பிரபல இந்தி நடிகையாக இருந்த பர்வீன் பாபிக்குமிடையே ஒரு வகையான உறவு இருந்தது. அது இந்தி படவுலகைச் சேர்ந்த எல்லோருக்கும் தெரியும். அந்த உறவை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டதே `அர்த்’ என்று அந்தக் காலகட்டத்தில் விமர்சகர்கள் குறிப்பிடுவார்கள்.
இரண்டு பெண்களையும் ஒரு ஆணையும் சுற்றி பின்னப்பட்ட கதையே `அர்த்’.
பூஜா ஒரு அனாதைப் பெண். அவளுக்கென்று உலகத்தில் யாருமில்லை. தனக்கு சொந்தத்தில் ஒரு வீடு வேண்டும் என்பது அவளுடைய மிகப் பெரிய ஆசை. தன் கணவன் இந்தருடன் வாடகைக்கு வசித்துக் கொண்டிருந்த வீட்டை விட்டு வெளியேறக் கூடிய சூழ்நிலை உண்டானபோது, அவள் அதிர்ச்சியடைந்து போகிறாள். அப்போது அவளே ஆச்சரியப்படும் அளவிற்கு, அவளிடம் ஒரு வீட்டின் சாவியைக் கொண்டு வந்து தருகிறான் இந்தர். ஆரம்பத்தில் சந்தோஷத்தின் உச்சத்திற்குச் செல்லும் பூஜா, இந்தரைப் பற்றிய சில தகவல்களைக் கேள்விப்பட நேர்ந்தபோது, மிகுந்த குழப்பத்திற்கு ஆளாகிறாள். அவள் கேள்விப்பட்ட விஷயம் இதுதான்- இந்தருக்கும் கவிதா என்ற திரையுலகத்தைச் சேர்ந்த பெண்ணுக்குமிடையே நெருக்கமான உறவு இருக்கிறது. அவளுடன் சேர்ந்து சம்பாதித்த பணத்தைக் கொண்டுதான் அவன் அந்த புதிய வீட்டை வாங்கியிருக்கிறான்.
பூஜாவின் வீட்டின் வேலைக்காரியை முன்பு அவளுடைய கணவன் ஏமாற்றிவிட்டு போனபோது, வேலைக்காரிக்கு அறிவுரை கூறியவள் பூஜா. கவிதாவிற்காக பூஜாவை விட்டு இந்தர் பிரிந்து செல்லும் சூழ்நிலை வந்தபோது, அந்த வீட்டை விட்டே வெளியேறி விட வேண்டும் என்ற தீர்மானத்திற்கு வருகிறாள் அவள். தான் திருமணம் செய்து கொண்ட சமயத்தில், தான் வைத்திருந்த 2000 ரூபாய்தான் அவளிடமிருக்கும் ஒரே சொத்து. அதை வைத்துக் கொண்டு பெண்களுக்கான விடுதியில் போய் அவள் தங்குகிறாள்.
ஒரு தனி பெண்ணாக நின்று போராடிக் கொண்டிருக்கும் அவளுக்கு உதவியாக இருக்கிறான் ராஜ். அவளுக்கு ஒரு வேலை கிடைப்பதற்கும், அதன் மூலம் சிரமங்களைக் குறைப்பதற்கும் அவன் அவளுக்கு பக்கபலமாக இருக்கிறான். தன் சொந்தக் காலில் தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் அளவிற்கு தன்னம்பிக்கை கொண்ட பெண்ணாக காலப் போக்கில் ஆகிறாள் பூஜா. நாட்கள் செல்லச் செல்ல பூஜாவும் ராஜும் மிகவும் நெருங்கிய நண்பர்களாக ஆகிறார்கள்.
இதற்கிடையில் விவாகரத்து தாள்களில் கையெழுத்துப் போடும்படி அவளை இந்தர் கேட்கிறான்.
ராஜ் தன் மனதிற்குள் பூஜாவைக் காதலிக்கிறான். அதை ஒரு நாள் வெளிப்படையாக அவளிடம் கூறவும் செய்கிறான். ஆனால், பூஜா அந்தக் காதலை மறுத்து விடுகிறாள். தான் ஒரு வெறுமையான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பதாகவும், அவனுக்குத் தருவதற்கு தன்னிடம் எதுவுமே இல்லை என்றும் அவள் கூறுகிறாள்.
ஆனால், ராஜோ அவளுக்கு அறிவுரை கூறுகிறான். கடந்த கால சம்பவங்களை நினைத்துக் கொண்டு வெறுமனே வாழ்க்கையை அர்த்தமில்லாமல் ஓட்டிக் கொண்டிருப்பதில் அர்த்தமே இல்லையென்றும், தனக்கென்று ஒரு புதிய வாழ்க்கையைத் தேடிக் கொள்வதுதான் அவள் செய்யக் கூடிய புத்திசாலித்தனமான காரியமாக இருக்கும் என்றும் அவன் கூறுகிறான். தான் அதைப் பற்றி சிந்தித்துப் பார்ப்பதாக கூறுகிறாள் பூஜா.
பூஜாவின் வேலைக்காரியின் ஒரே இலட்சியம்- தன்னுடைய மகளுக்கு நல்ல முறையில் கல்வியைத் தர வேண்டும் என்பதுதான். கல்வி கற்பதற்கான நுழைவுக் கட்டணத்திற்குத் தேவைப்படும் 1000 ரூபாயை அவள் மிகவும் சிரமப்பட்டு சம்பாதித்து வைத்திருக்கிறாள். ஆனால், அந்தப் பணத்தை அவளுடைய குடிகாரக் கணவன் எடுத்துக் கொண்டு போய் விடுகிறான். அது தெரிந்ததும், பயங்கரமான கோபத்திற்கு ஆளாகிறாள் அந்தப் பெண். அவனைத் தேடி வெளியே செல்கிறாள்.
அவள் போனபோது, கையிலிருந்த பணம் முழுவதையும் செலவழித்து விட்டு, அவளுடைய பொறுப்பற்ற கணவன் தன்னுடைய காதலியின் மீது சாய்ந்து கொண்டு படுத்திருக்கிறான். அவளால் அந்த காட்சியைப் பார்க்க முடியவில்லை. தாங்க முடியாத வெறிக்கு ஆளாகும் அந்த ஏழைப் பெண் அவனைக் கொலை செய்துவிட்டு, காவல் நிலையத்திற்குச் சென்று தான் செய்து முடித்த குற்றத்தை ஒத்துக் கொள்கிறாள். தான் சிறைக்குள் சென்ற பிறகு, தன்னுடைய ஒரே மகளின் கதி என்ன ஆகும் என்பதுதான் அந்த அபலைப் பெண்ணின் ஒரே கவலையாக இருக்கிறது. அவள் பூஜாவைப் பார்க்க, அவளுடைய செல்ல மகளைப் பற்றிய கவலையே சிறிது கூட அவளுக்குத் தேவையில்லை யென்றும், அந்தச் சிறுமியை தான் கவனமாக பார்த்துக் கொள்வதாகவும் வாக்குறுதி அளிக்கிறாள் பூஜா. அந்த மன நிம்மதியுடன் சிறைக்குள் செல்கிறாள் அந்தப் பெண்.
இதற்கிடையில் கவிதாவைச் சந்தித்த பூஜா, இனிமேல் இந்தர் தனக்கு தேவையே இல்லை என்று உறுதியான குரலில் கூறுகிறாள். அவன் மீது தனக்கு சிறிது கூட அக்கறையே இல்லையென்றும், அவனை என்றோ தான் விட்டெறிந்து விட்டதாகவும் கூறுகிறாள். அதே நேரத்தில் - கவிதாவும் ஆழமாக மனதிற்குள் சிந்திக்கிறாள். பூஜாவின் திருமண வாழ்க்கைக்குள் நுழைந்தது தான் செய்த மிகப் பெரிய தவறு என்பதை அவள் உணர்கிறாள். அவளும் தன்னைப் போன்ற ஒரு பெண்தானே என்று அவளின் மனம் நினைக்கிறது.
இன்னும் சொல்லப் போனால்- தாங்கிக் கொள்ள முடியாத ஒரு குற்ற உணர்விற்கு அவள் ஆளாகிறாள். தேவையில்லாமல் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் குழப்பங்களையும், பிரச்னைகளையும் உண்டாக்கி விட்டோமே என்று அவள் நினைக்கிறாள். கட்டிய மனைவியை விட்டெறிந்து விட்டு, மிகப் பெரிய மோகங்களுடன் ஒரு நாயைப் போல தன்னைச் சுற்றிக் கொண்டிருக்கும் இந்தரை உதறி எறிந்து விட அவள் தீர்மானிக்கிறாள். முடிவு செய்து விட்டது மட்டுமல்ல, உடனடியாக அதை அவள் செயல் வடிவில் செய்தும் காட்டுகிறாள்.
கவிதா தன்னை விட்டெறிந்ததும், இந்தர் மீண்டும் பூஜாவைத் தேடி வருகிறான். பூஜாவுடன் தனக்கு முன்பு இருந்த உறவை, திரும்பவும் தொடர அவன் நினைக்கிறான். நேரத்திற்கேற்றபடி பச்சோந்தியாக தன்னை மாற்றிக் கொண்டு பிழைப்பு நடத்தும் அந்த சந்தர்ப்பவாதியை தன் அருகில் நெருங்கக் கூட அனுமதிக்கவில்லை பூஜா. `உன் மூச்சுக் காற்றே என்மீது படக் கூடாது. இங்கிருந்து ஓடி விடு’ என்று அவனை அவள் விரட்டியடிக்கிறாள்.