மித்ர் மை ஃப்ரண்ட் - Page 2
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 6335
அதற்காக அவள் பல நேரங்களில் தன் மகளைக் கண்டித்திருக்கிறாள்... கறாராக பேசியிருக்கிறாள்... அறிவுரைகள் கூறியிருக்கிறாள். ஆனால், அது எதையும் தன் காதிலேயே போட்டுக் கொள்ள மாட்டாள் திவ்யா. ‘நீங்கள் இந்தியாவின் ஒரு பழைய பழக்க வழக்கங்களைக் கொண்ட புராதனமான ஊரிலிருந்து வந்திருக்கலாம். அதற்காக நீங்கள் அப்படி இருக்கலாம். நான் அப்படி இருக்க முடியாது. கட்டுப்பெட்டித் தனமாக என்னை இருக்க வைக்க முயலாதீர்கள். நான் ஒரு சுதந்திரமான பெண். எனக்கு எது பிடிக்கிறதோ, அதைச் செய்வேன். என் காற்றைப் போன்ற குணத்திற்கு தடை போடாதீர்கள். என்னை அணை போட்டு தடுக்க முடியாது. நான் ஒரு சுதந்திரப் பிறவி’ என்கிறாள் திவ்யா துணிச்சலான குரலில் – தன் தாயிடம். தாய்க்கும் மகளுக்குமிடையே தினமும் ஒரு சொற்போர் நடந்து கொண்டே இருக்கும். தன் மகள் எங்காவது சறுக்கி விழுந்து விடக் கூடாதே என்ற பரிதவிப்பு அந்த அன்னைக்கு.
லட்சுமி தன் மகளின் ஒவ்வொரு நடவடிக்கையையும் கண்காணித்துக் கொண்டே இருக்கிறாள். பல நேரங்களில் தன் மகள் திவ்யாவைப் பற்றி தன் கணவன் ப்ரித்வியிடம் குறை கூறுவாள் லட்சுமி. ஆனால், அதை பெரிதாகவே எடுத்துக் கொள்ள மாட்டான் அவன். ‘இங்கே பார்... லட்சுமி. நீ சிதம்பரத்தில் பிறந்து வளர்ந்தவள். திவ்யா அப்படியில்லை. அவள் அமெரிக்காவில் பிறந்து, அமெரிக்காவில் வளர்ந்து கொண்டிருப்பவள். அவள் ஒன்றும் எதுவுமே தெரியாத சிறிய பெண் அல்ல. எது நல்லது, எது கெட்டது, எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என்று அமெரிக்காவில் பிறந்த ஒரு படித்த பெண்ணுக்குத் தெரியாதா? நீ தேவையில்லாமல் உன் தலையைப் புண்ணாக்கிக் கொண்டிருக்கிறாய்’ என்று அவன் லட்சுமிக்கு அறிவுரை கூறுகிறான்.
லட்சுமி, திவ்யாவை கோபத்துடன் திட்ட, அப்பா ப்ரித்வியோ மகளை தட்டிக் கொடுத்து செல்லமாக கொஞ்சுகிறான். தன் மகள் ஒரு புதுமைப் பெண் என்ற எண்ணம் அவனுக்கு.
ஒரு நாள் மாலை நேரத்தில் தன் வீட்டிற்கு வெளியே தன்னுடைய ‘பாய் ஃப்ரண்ட்’ ரோபியை திவ்யா முத்தமிட, அதை லட்சுமி பார்த்து விடுகிறாள். அவ்வளவுதான்... ஆவேசத்தின் உச்சிக்கே அவள் சென்று விடுகிறாள். பாரம்பரிய பழக்கங்களைப் பின்பற்றி வாழ்ந்த அவளால் அதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அவள் அங்கிருந்து ரோபியை விரட்டியடிக்கிறாள். அதன் மூலம் திவ்யா தன் அன்னையின் மீது மிகுந்த கோபம் கொள்கிறாள்.
அதைத் தொடர்ந்து லட்சுமி, திவ்யாவை கை நீட்டி அடித்து விடுகிறாள். அதை பொறுத்துக் கொள்ள முடியாத திவ்யா, வீட்டை விட்டு வெளியேறி, தன் தோழிகளுடன் போய் தங்கிக் கொள்கிறாள். தன் மனைவி திவ்யாவை கன்னத்தில் அடித்து விட்டாள் என்ற விஷயம் ப்ரித்விக்குப் பிடிக்கவில்லை. அதை அவள் செய்திருக்கக் கூடாது என்று நினைக்கும் அவன், லட்சுமியின் மீது கோபம் கொள்கிறான்.
நாட்கள் நகர்கின்றன. தன்னைப் பற்றி சிறிதும் நினைக்காமல், தொழிலைப் பற்றி மட்டுமே எப்போதும் நினைத்துக் கொண்டிருக்கும் கணவன்... தான் யாருடைய நலனுக்காக அறிவுரை கூறுகிறோம் என்பதே தெரியாமல் தன்னிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி விட்ட திவ்யா... இந்த இருவரால் உண்டான ஒரு கையற்ற நிலை, தனிமைச் சூழல், மன வருத்தம், விரக்தி... அவற்றைப் போக்குவதற்காக ஒரு internet chat roomஐ நாடுகிறாள் லட்சுமி. அங்கு அவளுக்கு ‘mitr’டன் தொடர்பு உண்டாகிறது. கம்ப்யூட்டரில் mitrடன் அவள் உரையாடுகிறாள். (சமஸ்கிருதத்தில் ‘mitr’ என்றால் நண்பன் என்று அர்த்தம்.)
தன்னுடைய எண்ணங்களையும், மனதில் இருக்கும் சிந்தனைகளையும் அவள் Mitrடன் மனம் திறந்து கூறுகிறாள். அதன் மூலம் அவளுக்கு ஆறுதல் கிடைக்கிறது. யாரோ ஒருவரின் தோளில் சாய்ந்த நிம்மதி கிடைக்கிறது.
லட்சுமி முழுக்க முழுக்க தன் குடும்பத்தைப் பற்றியே எப்போதும் நினைத்துக் கொண்டிருக்கிறாள் என்றும், அதில் தன்னை முழுமையாக மூழ்கடித்துக் கொண்டாள் என்றும் ‘mitr’ குறிப்பிட்டவுடன், அதைப் பற்றி சிந்திக்க ஆரம்பிக்கிறாள் லட்சுமி. அதைத் தொடர்ந்து தனக்கு எந்த மாதிரியான விஷயங்களிலெல்லாம் ஆர்வம் இருக்கிறது என்பதை ஆராய்ந்து பார்க்கிறாள். சின்னச் சின்ன மர வேலைப்பாடுகள், நடனம், சிகை அலங்காரம் போன்றவற்றில் தனக்கு இருக்கும் ஈடுபாட்டை அவள் உணர்கிறாள். பக்கத்து வீட்டில் இருக்கும் Steve (ஒரு கம்ப்யூட்டர் செக்யூரிட்டி கன்ஸல்ட்டன்ட்), அவனுடைய இளம் வயது தம்பி – இருவரும் புதிதாக அவளுக்கு நண்பர்கள் ஆகிறார்கள்.
வெறுமனே ஊமையாக வீட்டில் உட்கார்ந்து கொண்டிருந்த லட்சுமி, தன் புதிய இளம் நண்பர்களுடன் பல விஷயங்களைப் பற்றியும் பேசுகிறாள்... சிரிக்கிறாள்... அவர்களுடன் சேர்ந்து கடைகளுக்குச் செல்கிறாள். தன் மனைவியின் இப்போதைய போக்கைப் பார்த்து ஆச்சரியப்படுகிறான் ப்ரித்வி. மனதிற்குள் தன் மனைவியிடம் உண்டாகியிருக்கும் மாறுதல்களையும், வளர்ச்சியையும் பார்த்து சந்தோஷப்பட்டாலும், அவள் தன்னை விட்டு சற்று விலகி விட்டதைப் போல ப்ரித்வி உணர்கிறான்.