
சிறைத் தண்டனை கிடைத்த ஆரம்ப நாட்களில், அவன் தன் காதலி துளசிக்கு ஒரு கடிதம் எழுதினான். அதில் அவன் தன்னை அவள் முற்றிலுமாக மறந்துவிட வேண்டுமென்றும், தனக்கேற்ற நல்ல ஒரு இளைஞனைப் பார்த்து அவள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் எழுதினான்.
வருடங்கள் கடந்தோடின. பல வருடங்களுக்குப் பிறகு, அவனை விடுதலை செய்ய சிறை நிர்வாகம் தீர்மானித்தது. தன் வாழ்க்கையே அவ்வளவுதான் என்று நினைத்திருந்த அவன் மனதில் இப்போது துளசியின் அழகு முகம் தோன்றியது.
‘துளசிக்கு திருமணமாகி இருக்குமா? நாம்தான் அவளை நல்ல ஒரு இளைஞனாகப் பார்த்து திருமணம் செய்து கொள்ளும்படி கடிதத்தின் மூலம் தெரியப்படுத்தி விட்டோமே! அதன்படி அவள் திருமணம் செய்து கொண்டிருப்பாளா?’ என்று அவன் மனம் பல கோணங்களிலும் சிந்திக்கிறது.
விடுதலையாவதற்கு முன்பு அவன் அவளுக்கு ஒரு கடிதம் எழுதுகிறான். ‘நான் விடுதலையாகி வெளியே வரப் போகிறேன். உனக்கு திருமணமாகி விட்டதா இல்லையா என்று எனக்கு தெரியாது. திருமணமாகாமல் இருந்தால், நான் எப்போதும் சந்திக்கும் மலை பகுதியில் இருக்கும் கோவிலுக்கு அருகில் விளக்கேற்றி வை. அதன் மூலம் உனக்கு திருமணமாகி விட்டதா இல்லையா என்பதை நான் தெரிந்து கொள்கிறேன்’ என்று அவன் அதில் எழுதியிருக்கிறான்.
உண்ணி கிருஷ்ணன் விடுதலை செய்யப்படுகிறான்.
அதைத் தொடர்ந்துதான் இந்த பேருந்து பயணம்.
தன் வாழ்க்கைக் கதையை கூறி முடிக்கிறான் உண்ணி கிருஷ்ணன்.
பேருந்து மலைப் பாதையில் வளைந்து வளைந்து கீழே இறங்கிக் கொண்டிருக்கிறது.
உண்ணி கிருஷ்ணன் இறங்க வேண்டிய இடம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. பேருந்தில் அமர்ந்திருந்த சிறுவர்களும், சிறுமிகளும், ஆசிரியர்களும், மற்றவர்களும் உண்ணி கிருஷ்ணனுக்கு வாழ்க்கையில் ஏமாற்றம் கிடைக்கக் கூடாது என்று கடவுளைத் தொழுகிறார்கள்.
தன்னுடைய இடம் வந்ததும் உண்ணி கிருஷ்ணன் இறங்குகிறான். முன்னால் இருக்கும் மலை கோவிலைப் பார்க்கிறான். அவன் மட்டுமல்ல – பேருந்தில் அமர்ந்திருந்த எல்லோரும்.
மலைக் கோவிலில் ஆயிரக்கணக்கான அகல் விளக்குகள் ஏற்றப்பட்டிருக்கின்றன. கோவிலே விளக்கொளியில் ஜெகஜோதியாக பிரகாசித்துக் கொண்டிருக்கிறது.
இரு பக்கங்களிலும் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டிருக்க, நடுவில் இருக்கும் பாதையில் உண்ணி கிருஷ்ணன் நடக்க, அகல் விளக்குகளுக்கு மத்தியில் அழகு தேவதையென தூரத்தில் நின்றிருக்கிறாள் துளசி – தன் காதலனை வரவேற்பதற்காக.
அந்த கண் கொள்ளாக் காட்சியைப் பார்த்து, மெய் சிலித்துப் போய் தங்கள் கைகளைத் தட்டுகின்றனர் மாணவர்கள், மாணவிகள், ஆசிரியர்கள் எல்லோரும்.
அவர்களின் சந்தோஷப் பாடல் மீண்டும் தொடர்கிறது. அந்த இரவு நேரத்தின் அமைதியைக் கிழித்துக் கொண்டு அந்த பாடல் வரிகள் மேலும் சந்தோஷத்துடன் ஒலிக்க, அந்த பள்ளிப் பேருந்து மலைப் பகுதியில் உற்சாகத்துடன் கீழ் நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது.
இப்போது நம் செவிகளில் விழுவது – மாணவர், மாணவிகளின் பாடல் வரிகள்…
கண்களில் தெரிவது – மலைக்கோவிலும், அங்கு ஏற்றப்பட்டிருக்கும் ஆயிரம் அகல் விளக்குகளும், அதற்கு மத்தியில் கை கோர்த்து நின்றிருக்கும் உண்ணி கிருஷ்ணனும், துளசியும்…
கவித்துவ உணர்வுடன் பாலுமகேந்திரா இயக்கியிருந்த இந்தப் படத்தை எத்தனை வருடங்கள் ஆனாலும், மறக்க முடியாது.
பாலுமகேந்திரா இயக்கிய படங்களிலேயே மிகச் சிறந்த படம் இது என்பதே உண்மை.
உண்ணி கிருஷ்ணனாக- மம்மூட்டி.
துளசியாக –ஷோபனா.
இருவரும் பாத்திரங்களாகவே வாழ்ந்திருந்தார்கள்.
இந்தப் படத்தின் மிகப் பெரிய ப்ளஸ் பாய்ண்ட் – ‘இசைஞானி’ இளையராஜா.
பாடல்களிலும், பின்னணி இசையிலும் அபாரமான முத்திரையைப் பதித்திருந்தார் இளையராஜா.
பாலுமகேந்திரா – இளையராஜா ‘காம்பினேஷன்’ மீண்டும் ஒரு காதல் காவியத்திற்கு உயிர் கொடுத்திருந்தது.
ஜான் பால் எழுதிய கதைக்கு, பாலுமகேந்திரா திரைக்கதை எழுதியிருந்தார்.
1985ஆம் ஆண்டு கேரள அரசாங்கத்தின் சிறந்த நடிகருக்கான ஸ்பெஷல் நடுவர் விருது மம்மூட்டிக்கு இப்படத்திற்காக அளிக்கப்பட்டது. அந்த வருடத்திற்கான ஃபிலிம்ஃபேர் விருதையும் மம்மூட்டி பெற்றார்.
படத்தைப் பார்த்து 28 வருடங்கள் ஆகி விட்டன. இப்போதும் இளையராஜாவின் இசையில், பேருந்தில் பயணம் செய்யும் சிறுவர்களும் சிறுமிகளும் பாடும் ‘தன்னானம் தன்னானம்’ என்ற பாடல் என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
பாலு மகேந்திராவின் ஒளிப்பதிவு மற்றும் இயக்கம், இளையராஜாவின் இசை, மம்மூட்டி – ஷோபனா இருவரின் பண்பட்ட நடிப்பு – எல்லாம் சேர்ந்து ‘யாத்ர’வை ஒரு கவித்துவ உணர்வு நிறைந்த காவியமாகவே ஆக்கி விட்டன.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook