யாத்ர
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 6381
என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)
யாத்ர
(மலையாள திரைப்படம்)
பாலு மகேந்திரா இயக்கிய படம். படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவரும் அவர்தான். 1985ஆம் ஆண்டில் இப்படம் திரைக்கு வந்து மக்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று வெற்றிப் படமாக அமைந்தது.
இதே படம் முதலில் தெலுங்கில்தான் உருவாக்கப்பட்டது. ‘நிரீக்ஷனா’ என்ற பெயரில் தெலுங்கில் தயாரிக்கப்பட்ட அப்படத்தையும் பாலுமகேந்திராதான் இயக்கினார். தெலுங்கு படம் 1982இல் திரைக்கு வந்தது. தெலுங்கில் பானுசந்தரும், அர்ச்சனாவும் இணைந்து நடித்தார்கள்.
மலையாள ‘யாத்ர’ திரைப்படத்தில் மம்மூட்டி கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக ஷோபனா நடித்தார்.
ஒரு சிறைக் கைதியை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட கதை இது.
படத்தின் பிரதான கதாபாத்திரமான உண்ணிகிருஷ்ணன் ஒரு சிறைக் கைதி. அவன் சிறையிலிருந்து விடுதலையாகி வெளியே வருகிறான்.
படத்தின் ஆரம்பக் காட்சியில் மலைப் பகுதிக்கு சுற்றுலாப் பயணம் வந்த ஒரு பள்ளியைச் சேர்ந்த சிறுவர்களும், சிறுமிகளும் பள்ளிக் கூடத்திற்குச் சொந்தமான பேருந்தில் மலையிலிருந்து கீழே இறங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
பேருந்து மலைப் பகுதியில் வளைந்து வளைந்து கீழே வந்து கொண்டிருக்கிறது. சாலையின் திருப்பம் ஒன்றில், முகத்தில் உரோமங்கள் அடர்ந்திருக்க, ஒரு மனிதன் நின்று கொண்டிருக்கிறான். அவன்தான் உண்ணிகிருஷ்ணன். சிறையிலிருந்து அப்போதுதான் அவன் விடுதலையாகி வந்திருக்கிறான்.
சிறுவர்களும் சிறுமிகளும் உற்சாகத்துடன் பாட்டு பாடிக் கொண்டே வருகிறார்கள். உண்ணி கிருஷ்ணன் பேருந்தைப் பார்த்து கையை நீட்டுகிறான். பேருந்து நிற்கிறது. ‘கீழே… அடிவாரத்திற்குச் செல்ல வேண்டும். அங்கு என்னை இறக்கி விட முடியுமா?’ என்று கேட்கிறான். இரவு நேரத்தில் காட்டுப் பகுதியில் தனியாக நின்று கொண்டிருக்கும் அவன் மீது இரக்கப்பட்டு, பேருந்தில் அவனை ஏற்றிக் கொள்கிறார்கள்.
பேருந்து புறப்படுகிறது. பேருந்தே அமைதியில் மூழ்கியிருக்கிறது. வாய் திறந்து எதுவுமே பேசாமல், ஒரு இருக்கையில் மவுனமாக கண்களை மூடிக் கொண்டு உட்கார்ந்திருக்கிறான் உண்ணி கிருஷ்ணன். அவனையே பேருந்தில் இருப்பவர்கள் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.
பின்னர் அவனைப் பற்றி அவர்கள் கேட்க, அவன் தன்னுடைய கதையைக் கூறுகிறான்.
அவன் ஒரு அனாதை. சொந்தம் என்று கூறிக் கொள்வதற்கு உலகத்தில் யாரும் இல்லாதவன். அவன் ஒரு காட்டு இலாகா அதிகாரியாக இருந்தவன். அந்த பதவியில் இருக்கும்போது அந்தப் பகுதியில் வாழும் துளசி என்ற இளம் பெண் அவனுக்கு அறிமுகமாகிறாள். படிப்படியாக அந்த பழக்கம் காதலில் போய் முடிகிறது. துளசியின் பேரழகால் ஈர்க்கப்பட்டு அவளையே எப்போதும் கனவு கண்டு கொண்டிருக்கிறான் உண்ணி கிருஷ்ணன். துளசியும் தன் மனதில் உண்ணி கிருஷ்ணனுக்கு இடத்தைத் தந்து, தன்னுடைய சொர்க்கமே அவன்தான் என்ற நினைப்புடன் இருக்கிறாள். ஒருவரை விட்டு ஒருவர் பிரிய முடியாது என்கிற அளவிற்கு அவர்களுக்கிடையே இருந்த காதல் பலம் கொண்டதாக ஆகிறது.
அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள தீர்மானிக்கிறார்கள். தான் திருமணம் செய்து கொள்ளப் போகும் விஷயத்தை தன்னுடைய நெருங்கிய நண்பனிடம் கூறுவதற்காக உண்ணி கிருஷ்ணன் அங்கிருந்து கிளம்புகிறான். திரும்பி வரும்போது, சந்தேகப்படும் குற்றவாளி என தவறாக நினைத்து அவனை காவல் துறையினர் கைது செய்கிறார்கள். அவர்கள் தேடிக் கொண்டிருக்கும் குற்றவாளிக்கும் உண்ணி கிருஷ்ணனுக்கும் இடையே சில ஒற்றுமைகள் இருக்கின்றன. அவ்வளவுதான். தனக்கும் அந்த குற்றங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று எவ்வளவோ கூறிப் பார்க்கிறான் உண்ணி கிருஷ்ணன். ஆனால், அவர்கள் அதை சிறிதும் காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை.
எந்தவொரு தவறும் செய்யாத நேர்மையான அந்த காட்டு இலாகா அதிகாரியை, குற்றவாளி என தீர்மானித்து சிறையில் அடைக்கின்றனர். சிறையில் அங்கிருக்கும் அதிகாரிகள் செய்யும் தொந்தரவுகளுக்கு அளவே இல்லை. கைதிகளை மிருகத்தைவிட கேவலமாக நடத்துகின்றனர். தங்களின் அறைக்குள் மிடுக்காக அமர்ந்து கொண்டு மது அருந்தும் அவர்கள், உண்ணி கிருஷ்ணனை சிறுநீரைப் பருகும்படி கூறுகின்றனர்.
எல்லாம் தன்னுடைய தலைவிதி என்று நினைத்துக் கொண்டு, மவுனமாக சிறை அறைக்குள் ஒரு மூலையில் வெள்ளை அரைக்கால் சட்டை, அரைக் கை சிறைச் சட்டை ஆகியவற்றுடன் சோகத்துடன் அமர்ந்திருக்கும் உண்ணி கிருஷ்ணன் எவ்வளவு நாட்களுக்குத்தான் பொறுமையாக இருக்க முடியும்? ஒரு அளவுக்கு மேல் அவனால் பொறுமையாக இருக்க முடியவில்லை என்பதே உண்மை.
சிறை அதிகாரிகளின் கொடுமைகள் ஒரு எல்லையைத் தாண்டிச் செல்ல, அதற்கு மேல் அதைத் தாங்கிக் கொள்ளும் மன சக்தி இல்லாத உண்ணி கிருஷ்ணன் சிறிதும் எதிர்பாராமல் ஒரு போலீஸ்காரரை அடித்து கொன்று விடுகிறான். அதன் விளைவாக அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது.
எவ்வளவோ கனவுகளுடன் வாழ்ந்து கொண்டிருந்த தன் வாழ்க்கை இப்படியெல்லாம் ஆகும், இந்த மாதிரி எல்லாம் நடக்கக் கூடாத சம்பவங்கள் நடக்கும் என்றெல்லாம் அவன் தன் மனதில் சிறிது கூட நினைத்திருக்கவில்லை. ஒளிமயமான எதிர்காலம் தன்னை நோக்கி காத்திருக்கிறது என்று சந்தோஷத்துடன் எதிர்பார்த்திருந்த தன் வாழ்க்கை இந்த அளவிற்கு இருள் நிறைந்ததாக ஆகும் என்று கனவில் கூட உண்ணி கிருஷ்ணன் கருதியதில்லை.
ம்… இப்போது அவற்றையெல்லாம் நினைத்து என்ன பிரயோஜனம் என்று தன் மனதை வெறுமையாக ஆக்கிக் கொண்டு, ஒவ்வொரு நாளையும் அவன் மவுனமாக நகர்த்திக் கொண்டிருந்தான்.