Category: சினிமா Published Date Written by சுரா Hits: 4303
என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)
தி கலர் ஆஃப் பேரடைஸ்
(ஈரானிய திரைப்படம்)
மாறுபட்ட திரைப்படங்களை இயக்கி, உலகமெங்கும் இருக்கும் திரைப்பட ரசிகர்களிடம் தனக்கென்று ஒரு மிகச் சிறந்த பெயரைச் சம்பாதித்து வைத்திருக்கும் புகழ் பெற்ற ஈரான் நாட்டு திரைப்பட இயக்குநர் Majid Majidi. அவர் இயக்கிய படங்களைப் பார்ப்பதற்கென்றே, நல்ல ரசனை கொண்ட கூட்டம் இருக்கிறது. அவர் இயக்கிய ஒரு அருமையான படமிது.
முஹம்மது என்ற கண் பார்வையற்ற சிறுவனை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம். முஹம்மது டெஹ்ரானில் உள்ள ஒரு சிறப்புப் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறான். கோடை விடுமுறையில் அவன் பள்ளியிலிருந்து வீட்டிற்கு அனுப்பப்படுகிறான். குருடனாக அவன் பிறந்து விட்டதால், அவனை ஒரு சுமையாக நினைக்கும் அவனுடைய தந்தை ஹாஷெம், அவனை மிகவும் தாமதமாகவே அழைத்துச் செல்வதற்காக வருகிறான். தலைமை ஆசிரியரிடம், முஹம்மதுவை பள்ளிக் கூடத்திலேயே வைத்துக் கொள்ள முடியுமா என்று அவன் கேட்கிறான். தலைமை ஆசிரியர் அதற்கு மறுத்து விட, வேறு வழியில்லாமல் அவன் தன் மகனை கிராமத்திற்கு அழைத்துச் செல்கிறான்.
முஹம்மதுவின் தந்தை, தன் மனைவியை இழந்து விட்டான். அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணை அவன் திருமணம் செய்ய திட்டமிட்டிருக்கிறான். பரிசுப் பொருட்களை அவன் கொண்டு போய் கொடுக்க, திருமணத்திற்கு அந்த இளம் பெண்ணின் பெற்றோர் சம்மதித்து விடுகிறார்கள்.
தனக்கு ஒரு கண் பார்வையற்ற மகன் இருக்கிறான் என்ற உண்மையை அவர்களிடமிருந்து அவன் மறைக்க முயற்சிக்கிறான். எங்கே அந்த பெண்ணின் பெற்றோர் கெட்ட சகுனமாக நினைத்து விடுவார்களோ என்று அவன் நினைக்கிறான்.
இதற்கிடையில் முஹம்மது தன் சகோதரிகளுடன் கிராமத்தைச் சுற்றியிருக்கும் மலைப் பகுதிகளில் நடந்து திரிகிறான். மிருகங்களின் சத்தங்களைக் கேட்டு, அதே மாதிரி அவன் ஓசை உண்டாக்கி காட்டுகிறான். இயற்கையுடன் அவன் ஒன்றிப் போகிறான். அதன் தாளத்தையும், மொழியையும் அவன் புரிந்து கொள்கிறான். அங்கிருக்கும் பள்ளிக் கூடத்திற்கு தன் சகோதரிகளுடன் செல்லும் முஹம்மது, தன்னுடைய பாடப் புத்தகத்திலிருந்து Braille முறையில் பாடங்களை வாசித்துக் காட்டுகிறான். அதைப் பார்த்து அங்கிருக்கும் ஆசிரியரும், மாணவர்களும் ஆச்சரியப் படுகிறார்கள்.
தன் திருமணம் நின்று போய் விடக் கூடாது என்று நினைக்கும் முஹம்மதுவின் தந்தை, அவனை வேறொரு ஊரிலிருக்கும் ஒரு கண் பார்வையற்ற மர வேலை செய்யும் மனிதனிடம் கொண்டு போய் வேலைக்கு சேர்க்கிறான். கடவுளுக்கு தன் மீது சிறிது கூட அன்பு என்பதே இல்லை என்றும், அதனால்தான் தன்னை அவர் கண் பார்வையற்றவனாக படைத்து விட்டார் என்றும் முஹம்மது கூறுகிறான். கடவுளைப் பெரிதாக நினைத்துக் கொண்டிருந்த அந்த பார்வையற்ற கார்ப்பென்டர், சிறுவன் முஹம்மது கூறிய வார்த்தைகளை நினைத்துப் பார்க்கிறான். தன்னையும் கடவுள் குருடனாக படைத்து விட்டாரே என்று அவன் கவலையுடன் நினைக்கிறான்.
தன் பேரன் முஹம்மதுவை வேறோரு ஊரில் வேலைக்குக் கொண்டு போய் தன் மகன் சேர்த்து விட்டானே என்பது தெரிந்ததும் முஹம்மதுவின் பாட்டி, உடல் நலம் இல்லாமல் ஆகிறாள். அவள் வீட்டை விட்டு கிளம்ப முயற்சிக்கிறாள். ஆனால், ஹாஷெம் அவளை தடுத்து நிறுத்துகிறான். தான் சிறுவனாக இருந்த போது தன் தந்தையை இழந்ததையும், தன் மனைவியை கடவுள் எடுத்துக் கொண்டதையும், தனக்கு ஒரு கண் பார்வையற்ற மகனை கடவுள் கொடுத்ததையும் கூறி, தன் அன்னையிடம் தனக்கு அவள் செய்த உதவி என்ன என்று கேட்கிறான். அதைக் கேட்டு வழியிலேயே அந்த கிழவி மயக்கமடைய, அவளை வீட்டிற்கு தூக்கிக் கொண்டு வருகிறான் ஹாஷெம். ஆனால், கிழவி இறந்து விடுகிறாள். அதை கெட்ட சகுனமாக நினைக்கும் புது மணப் பெண்ணின் பெற்றொர் திருமணத்தை நிறுத்தி விடுகிறார்கள்.
அதைப் பார்த்து அதிர்ந்து போன முஹம்மதுவின் தந்தை, தன் மகனை திரும்பவும் அழைத்து வர தீர்மானிக்கிறான். தன்னுடைய மோசமான நிலைமையையும், தன்னை விதி பந்தாடுவதையும் போகும் போதே மனதில் நினைத்துக் கொண்டே போகிறான் ஹாஷெம். முஹம்மதுவை அழைத்துக் கொண்டு அவன் காட்டின் வழியாக திரும்பி வருகிறான். வரும்போது, ஒரு பழைய, மோசமான நிலையில் இருக்கும் மரத்தாலான பாலத்தை அவர்கள் கடக்கிறார்கள். அப்போது சிறிதும் எதிர்பாராமல் பாலம் உடைந்து, முஹம்மது கீழே ஓடிக் கொண்டிருக்கும் ஆற்றில் விழுந்து விடுகிறான். பாய்ந்தோடும் நீர், சிறுவனை இழுத்துக் கொண்டு செல்கிறது. நீரில் செல்லும் தன் மகனை அதிர்ச்சியுடன் அந்தத் தந்தை பார்த்துக் கொண்டு நின்றாலும், வாழ்க்கை முழுவதும் இருந்து வந்த சுமை தன்னை விட்டு நீங்கி விட்டதாகவும் அப்போது உணர்கிறான். ஆனால், அடுத்த நிமிடமே தன் மனதை மாற்றிக் கொண்டு, நீருக்குள் குதிக்கிறான். அவனையும் ஆர்ப்பரித்துச் செல்லும் நீர் இழுத்துச் செல்கிறது. மகன் நீரால் முன்னால் இழுத்துச் செல்லப்பட, பின்னால் தந்தை இழுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருக்கிறான்.
அடுத்து என்ன நடக்கிறது?
இதுதான் ‘The Colour of Paradise’ படத்தின் கதை.
கதையின் முடிவை இங்கேயே எழுதி விடலாம். இந்த அருமையான படத்தை கட்டாயம் ஒரு முறை பார்த்து விடுங்களேன்... அதற்காகவே முடிவை எழுதாமல் விடுகிறேன்.
இப்படிப்பட்ட ஒரு படத்தை இயக்கியதற்காக Majid Majidi க்கு எதை வேண்டுமானாலும் பரிசாக தரலாம்.
இதை பார்க்கும்போது, நம் தமிழ்ப் பட உலகம் எவ்வளவு தூரம் கீழே நின்று கொண்டிருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
இப்படம் 1999 ஆம் ஆண்டில் திரைக்கு வந்தது.
படம் முடிந்த பிறகும், சிறுவனும், அந்த கிராமமும், மலைகளும், பல வண்ண மலர்களும், மரங்களும் மனதில் நிலை பெற்று நிற்கும் அற்புதத்தை என்னவென்று கூறுவது?