Category: சினிமா Published Date Written by சுரா Hits: 3843
என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)
ப்ரமரம்
(மலையாள திரைப்படம்)
நான் பிரமிப்புடன் பார்த்து வியந்த மலையாளப் படம் இது. மோகன்லால் கதாநாயகனாக நடித்த இப்படம் 2009ஆம் ஆண்டில் திரைக்கு வந்தது. தன்னுடைய அபாரமான திறமையால் திரைப்பட ரசிகர்கள் அனைவரையும் ஆச்சரியத்துடன் அண்ணாந்து பார்க்க வைத்துக் கொண்டிருக்கும் ப்ளெஸ்ஸி கதை எழுதி, இயக்கியிருக்கும் இப்படம் பத்திரிகைகளாலும், மக்களாலும் ‘ஓஹோ’ என்று தலையில் வைத்து கொண்டாடப்பட்டது. நடிப்பின் உச்ச நிலையை வெளிப்படுத்தி, படம் முழுக்க ஆட்சி செய்திருந்தார் மோகன்லால்.
உண்ணி பங்குச் சந்தையில் புரோக்கராக பணியாற்றும் ஒரு இளைஞன். கோவையில் அவன் தன் மனைவி லதாவுடனும், மகள் லட்சுமியுடனும் அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறான். தெளிந்த நீரோடையைப் போல அந்த வாழ்க்கை போய்க் கொண்டிருக்க, அதற்குள் நுழைகிறான் எங்கிருந்தோ வந்த ஜோஸ் என்பவன். அழுக்கு படிந்த ஆடைகளுடனும், ஒரு தோள் பையுடனும் வந்து சேரும் அவன் எப்போதும் மதுவின் போதையிலேயே மிதந்து கொண்டிருக்கிறான்.
அழையா விருந்தாளியாக… உரிமையுடன் வீட்டிற்குள் நுழையும் அவன் உண்ணியுடன், பள்ளிக் கூடத்தில் இளம் வயதில் சேர்ந்து படித்ததாக கூறுகிறான். பெரிய அளவில் ஞாபக சக்தி இல்லாத உண்ணி அந்த மனிதன் கூறியதை கேட்டுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. அங்கு வந்தவன், தொடர்ந்து பல நாட்கள் அந்த வீட்டிலேயே தங்க ஆரம்பிக்கிறான். எந்தவித சலனமும் இல்லாமல் இருந்த அந்த வீட்டில் அமைதி என்ற ஒன்றே இல்லாமற் போகிறது. ஜோஸின் விரும்பத்தகாத நடவடிக்கைகளும், அலட்சியமான போக்கும், மிருகத்தனமான செயல்களும், போதையில் பண்ணும் ஆர்ப்பாட்டங்களும், அடாவடித்தனங்களும் அந்த குடும்பத்தின் இயல்புத் தன்மையையே தரைமட்டமாக்கி விடுகின்றன. அவனை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினாலும், அவன் வீட்டை விட்டு வெளியேறுவதாக இல்லை. மடியில் கட்டிக் கொண்ட பிள்ளைப் பூச்சியாக ஜோஸ் ஆகிறான்.
இதற்கிடையில் தன்னுடன் பள்ளிக் கூடத்தில் சேர்ந்து படித்த டாக்டர் அலெக்ஸ் வர்கீஸை உண்ணி தொடர்பு கொள்ளும்போதுதான், வந்திருக்கும் மனிதன் யார் என்பதே தெரிய வருகிறது. ஜோஸ் என்ற பெயரில் தங்களுடன் எந்தவொரு மாணவனும் படிக்கவில்லை என்பதையும், வந்திருக்கும் மனிதனின் பெயர் சிவன்குட்டி என்பதையும் உண்ணி தெரிந்து கொள்கிறான். என்றாவதோர் நாள் சிவன்குட்டி தங்களுடைய வாழ்க்கைப் பாதைகளில் வந்து விடுவானோ என்று அவர்கள் இருவரும் பயந்து போய் இருந்தார்கள் என்பதே உண்மை. அவன்தான் இப்போது வந்திருக்கிறான்.
யார் அந்த சிவன்குட்டி? அவர்கள் பள்ளிக் கூடத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில், உடன் படித்த ஒரு சிறுமியைக் கெடுத்து கொலை செய்துவிட்டு, அந்த கொலைப் பழியை சிவன்குட்டியின் மீது சுமத்தி, தப்பித்துக் கொண்டவர்கள்தான் உண்ணியும், டாக்டர் அலெக்ஸ் வர்கீஸூம். அதனால் சிவன்குட்டியின் அருமையான குடும்ப வாழ்க்கை எப்படி சின்னாபின்னமானது! நல்ல கணவன் என்று நினைத்த தன் கணவன், இளம் வயதில் ஒரு மாணவியின் மரணத்திற்குக் காரணமானவன் என்பது தெரிந்ததும், அவனுடைய மனைவி எடுத்த முடிவு? அதனால் அடுத்தடுத்து உண்டான நினைத்துப் பார்க்க முடியாத அதிர்ச்சி தரும் திருப்பங்கள்…!
தன்னுடைய சந்தோஷமான குடும்பமே அழிந்து போவதற்கு காரண கர்த்தாக்களான அந்த இரண்டு பேரையும் சிவன்குட்டி விட்டு வைப்பானா? அவர்களைப் பழிக்குப் பழி வாங்கத்தானே அவன் வந்திருக்கிறான்! வெறி பிடித்த மிருகத்தின் நிலையில் இருக்கும் சிவன்குட்டியிடமிருந்து அவர்களால் தப்ப முடிந்ததா? அடுத்து என்ன நடந்தது?
இதுதான் ‘ப்ரமரம்’ படத்தின் கதை. ஜோஸாகவும், சிவன்குட்டியாகவும் மோகன்லால் வாழ்ந்திருக்கிறார் என்று கூறுவதே பொருத்தமானது. ஒரு விஷயத்தை மட்டும் என்னால் சத்தியம் பண்ணி கூற முடியும். இந்தப் படத்தில் மோகன்லால் நடித்ததைப் போல, இந்தியாவின் எந்த மொழியிலும், எந்த நடிகரும் நடிக்க முடியாது. மோகன்லாலுக்கு நிகர் மோகன்லால்தான்! என்ன அருமையான நடிப்பு! குடும்பத்தை இழந்து, கையற்ற நிலையில் இருக்கும் ஒரு மனிதனை இதற்கு மேல் யாராலும் உயிர்ப்புடன் சித்தரிக்க முடியாது. படத்தின் பிற்பகுதியில் செங்குத்தான மலைச் சரிவின் ஒற்றையடிப் பாதையில் அனாயாசமாக ஜீப்பை ஓட்டிக் கொண்டு ஒரு விளிம்பில் கொண்டு போய் நிறுத்திவிட்டு வெறித்தனமாக ஒரு சிரிப்பு சிரிப்பாரே! ஆத்திரத்துடன் அடிவயிற்றுக்குள்ளிருந்து உரத்த குரலில் கத்துவாரே! அடடா… என்ன நடிப்பு!
உண்ணியாக சுரேஷ் மேனன்…
அவரின் மனைவி லதாவாக லட்சுமி கோபால்சாமி…
மகள் லட்சுமியாக – குழந்தை நட்சத்திரம் நிவேதிதா (என்ன அருமையான நடிப்புத் திறமை!)…
டாக்டர் அலெக்ஸ் வர்கீஸாக முரளி கோபி…
தன்னுடைய மிகச் சிறந்த நடிப்புத் திறமைக்காக ஏசியாநெட் விருது, வனிதா விருது, கைரளி டி.வி. விருது, துபாய் ஆன்வல் மலையாளம் மூவி விருது, ஃபிலிம்பேர் நடுவர் சிறப்பு விருது ஆகிய விருதுகளை மோகன்லால் பெற்றார்.
பல அமைப்புகள் சிறந்த படமாக ‘ப்ரமரம்’ படத்தைத் தேர்ந்தெடுத்தன.
சிறந்த இயக்குநராக ப்ளெஸ்ஸியும், சிறந்த ஒளிப்பதிவாளராக அஜயன் வின்சென்ட்டும், சிறந்த குழந்தை நட்சத்திரமாக பேபி நிவேதிதாவும், சிறந்த இசையமைப்பாளராக மோகன் சித்தாராவும் பல அமைப்புகளிடமிருந்து விருதுகளைப் பெற்றார்கள்.
‘ப்ரமரம்’ படத்தின் ஒவ்வொரு காட்சியும், மோகன்லாலின் ஒவ்வொரு அசைவும் என் மனதில் பசுமையாக தங்கியிருக்கின்றன என்பதிலிருந்தே, அந்தப் படத்தின் சிறப்பையும், உயர்வையும் நாம் புரிந்து கொள்ளலாம்.