Lekha Books

A+ A A-

'மிஸ். என்'னின் கதை - Page 2

படுக்கையை விரித்தபோது நான் ஒரு மெழுகுவர்த்தியை எரிய வைத்து சாளரங்களை நன்கு திறந்து வைத்தேன். விவரித்துக் கூற முடியாத ஒரு உணர்வு என் மனதையும் இதயத்தையும் ஆக்கிரமித்தது. நான் சுதந்திரமானவள்... நல்ல உடல் நிலையைக் கொண்டவள்... பதவியும் பணமும் இருக்கின்றன... அன்பு செலுத்தப்படுகிறேன்... பணமும் பதவியும் இருக்கின்றன என்பதுதான் மிகவும் முக்கியமான விஷயம் - பதவியும் பணமும் - கடவுளே... எவ்வளவு உயர்ந்த விஷயமது! தோட்டத்தில் பனி விழுந்த போது, அறைக்குள் நுழைந்த குளிரில் விறைத்துப் போய் நான் ப்யோதர் ஸெர்ஜியேவிச்சுடன் இருக்கக் கூடிய உறவைப் பற்றி சிந்தித்தேன். நான் அவருடன் காதல் வயப்பட்டிருக்கிறேனா? ஏதாவதொரு தீர்மானத்தில் போய்ச் சேர முடிவதற்கு முன்பே நான் தூங்கி விட்டேன்.

காலையில் படுக்கையில் சூரிய வெளிச்சத்தின் புள்ளிக் குத்துகளையும், எலுமிச்சை இலைகளின் நிழலையும் பார்த்தபோது, முந்தைய நாளின் அழகான சாயங்கால வேளை என்னுடைய நினைவுகளில் தோன்றியது. வாழ்க்கை எனக்கு மிகவும் செழிப்பு நிறைந்ததாகவும், வேறுபாடுகள் நிறைந்ததாகவும், மந்திரத் தன்மை கொண்டதாகவும் தோன்றியது. ஒரு பாட்டை முணுமுணுத்தவாறு வேகமாக ஆடையை அணிந்து நான் தோட்டத்திற்கு ஓடினேன்.

அதற்குப் பிறகு என்ன நடந்தது? அதற்குப் பிறகு எதுவும் நடக்கவில்லை. குளிர் காலத்தில் நாங்கள் நகரத்திலிருந்த போது, ப்யோதர் ஸெர்ஜியேவிச் சில வேளைகளில் எங்களைப் பார்ப்பதற்காக வந்தார். கிராமத்திலுள்ள  நண்பர்கள் கிராமத்தில் மட்டுமே.... விடுமுறை காலத்திற்கு மட்டும் ஏற்றவர்கள்.... நகரத்தில்... அதுவும் - குளிர்காலத்தில் அவர்களுடைய ஈர்ப்பில் பாதி இல்லாமற் போய் விடும். நகரத்தில் அவர்களுக்கு தேநீர் தரும்போது, நீங்கள் அவர்களின் ஆடையைப் பார்ப்பீர்கள். அவை வாடகைக்கு எடுக்கப்பட்டவை என்று தோன்றும். சர்க்கரை கரைவதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொள்வதாக தோன்றும். நகரத்தில் வைத்தும் ப்யோதர் ஸெர்ஜியேவிச் காதலைப் பற்றி பேசினார். ஆனால், அது சிறிதும் பழையதைப் போல இல்லை. இங்கு எங்களுக்கிடையே உள்ள வேறுபாடு அதிக தெளிவுடன் வெளிப்பட்டது. எனக்கு பணமும் பதவியும் இருக்கின்றன. அவர் வறுமையின் பிடியில் சிக்கியிருப்பவர். நாகரீக மனிதர் கூட இல்லை. ஒரு ஏழையின் மகன். விசாரிக்கும் நீதிபதியின் பொறுப்பு உண்டு - அது மட்டும்தான். நாங்கள் இருவரும் - நான் இளமையும் அழகும் உள்ளவள்... அவர்... கடவுளுக்கு மட்டுமே தெரியும்.... காரணம். - இந்தச்  சுவர் மிகவும் உயரமானதாகவும் உறுதியானதாகவும் இருப்பதாக நம்பினார். வீட்டிற்கு வரும்போதெல்லாம் அவர் செயற்கையான புன்னகையுடன் சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருப்பவர்களை விமர்சித்தார். அதே நேரத்தில் வீட்டில் யாராவது இருந்தால், மிகவும் அமைதியாக இருப்பார். எங்காவது ஒரு விரிசலை உண்டாக்காத அளவிற்கு சுவர்கள் இல்லை. ஆனால், எனக்குத் தெரிந்த வரையில், நவீன காதலர்கள் வெட்கப்படக் கூடியவர்களாகவும், உயிர்ப்பு அற்றவர்களாகவும், சோம்பேறிகளாகவும், நம்பிக்கையற்றவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதுதான் பிரச்சினையே. வாழ்க்கையில் தாங்கள் தோல்வியடைந்தவர்கள் என்றும், காதல் தங்களை ஏமாற்றி விட்டது என்றும் நம்பி, எளிதில் தோல்வியை ஒப்புக் கொண்டு கீழ்ப்படிந்து விடுவார்கள். எதிர்த்து நிற்பதற்குப் பதிலாக வாழ்க்கையின் அலட்சியத்தைக் குறை கூறி காலத்தைக் கழிப்பார்கள். விமர்சனம் வெறும் குறை கூறலாக தரம் தாழ்ந்து போய் விட்டதைக் கூட மறந்து விடுவார்கள்.

எனக்கு தாராளமாக அன்பு கிடைத்தது. தோளோடு தோள் உரசி, சந்தோஷம் எப்போதும் என்னுடன் இருந்தது. எந்தவொரு குறைகளும் இல்லாமல் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தேன். என்னையே நான் புரிந்து கொள்வதற்குக் கூட முயற்சிக்காமல், வாழ்க்கையிலிருந்து எதை எதிர்பார்க்கிறேன்... எது காத்திருக்கிறது என்பதைக் கூட தெரிந்து கொள்ளாமல் வாழ்க்கை கடந்து போய்க் கொண்டிருந்தது. காலமும்... மற்ற எல்லோரையும் போலத்தான் என் விஷயத்திலும் நடந்தன. என் மீது அன்பு வைத்திருந்தவர்கள்... பிரகாசம் நிறைந்த நாட்கள்... உற்சாகம் நிறைந்த இரவுகள்.... பாடல்களில் வானம்பாடி... புதிய வைக்கோலின் வாசனை...... விரும்பிய ஒவ்வொன்றும் நினைவுகளில் சந்தோஷத்தைப் பகிர்ந்தளித்தன..... ஒரு அடையாளம் கூட எஞ்சியிருக்காமல் எங்கோ போய் மறைந்து விட்டன..... மூடுபனியைப் போல..... அவை அனைத்தும் எங்கே?

என் தந்தை மரணமடைந்து விட்டார். எனக்கு வயதாகி விட்டது. ஒரு காலத்தில் நான் விரும்பியவை அனைத்தும் .... காதுகளில் இனிமையாக பதிந்து எதிர்பார்ப்புகளை அளித்தவை - ஓசை உண்டாக்கி பெய்து கொண்டிருந்த மழை.... இடி முழக்கங்கள்.... இனிய கனவுகள்.... காதல் உரையாடல்கள் .... அனைத்தும் நினைவாக மட்டும் .... முன்னால் ஒரு ஆள் கூட இல்லாத வெற்றுப்பாதை.... இறுதியில் பயத்தை உண்டாக்கும் இருட்டும்.....

மணியடித்தது ப்யோதர் ஸெர்ஜியேவிச்சாகத்தான் இருக்க வேண்டும். குளிர் கால மரங்களைப் பார்த்தவாறு, கோடை காலத்தில் அவை தளிர் இட்டதை நினைத்தவாறு நான் முணுமுணுப்பேன்! 'என் அன்பிற்குரியவரே!' வாழ்க்கையின் வசந்த காலத்தைப் பங்கு போட்டவர்களைப் பார்த்து கவலைப்படும்போதும் நான் அதையேதான் கூறுவேன்.

என் தந்தையின் பரிந்துரையைத் தொடர்ந்து ப்யோதர் ஸெர்ஜியேவிச் நகரத்திற்கு இடம் மாறுதல் கிடைத்து வந்து சேர்ந்தார். அவருக்குச் சற்று வயது தெரியும்.... முகத்தில் சுருக்கங்கள் உண்டு.... என்னைப் பிடிக்கும் என்று கூறுவதை அவர் நிறுத்தி விட்டிருந்தார். 'சரசர' என்ற பேச்சுமில்லை... பணியின் மீது விருப்பமில்லை. எதன் மீதோ கோபம்... எதன் மீதோ நிராசை... வாழ்க்கையில் எதிர்பார்ப்புகள் எதுவுமில்லை..... மனமில்லா மனதுடன் வாழ்க்கை.... குளிர் காயும் அடுப்பினருகில் நெருப்பையே வெறித்துப் பார்த்தவாறு மிகவும் அமைதியாக அவர் அமர்ந்திருந்தார். என்ன கூறுவது என்று தெரியாமல் நான் கேட்டேன்:

'என்ன?'

'ஒண்ணுமில்ல....'

இருவரும் மீண்டும் பேரமைதிக்குள் மூழ்கி விட்டோம். குளிர் காயும் அடுப்பிலிருந்து வந்த சிவந்த வெளிச்சம், கவலை பரவியிருந்த அந்த முகத்தில் ஓடி விளையாடியது.

நான் கடந்த காலத்தை நினைத்துப் பார்த்தேன். என் தோள்கள் அசைந்தன... தலையைக் குனிந்தவாறு நான் குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தேன். என் மீதும் இந்த மனிதரின் மீதும் எனக்கு அளவற்ற இரக்கம் உண்டானது. கடந்து போய் விட்ட அந்த காதல்... வாழ்க்கை எங்களுக்கு மறுத்த அந்த காதல்.... அதற்காக நான் நிறைய ஏங்கினேன். என் பணமும் பதவியும் என் மனதின் எந்த இடத்திலும் இல்லை.

உரத்த குரலில் தேம்பியவாறு, தலையை இறுக பிடித்துக் கொண்டு நான் முணு முணுத்தேன்! 'என் கடவுளே..... என் கடவுளே... வாழ்க்கை வீணாகி விட்டது.... வீணாகி விட்டது.....' அவர் எதுவுமே கூறாமல் அதே இடத்தில் அமர்ந்திருந்தார். 'அழாதே' என்று அவர் எனக்கு ஆறுதல் கூறவில்லை. நான் அழ வேண்டியதில்லை என்பதையும், அதற்கான நேரம் வந்து விட்டது என்பதையும் அவர் புரிந்து கொண்டார். என்னைப் பார்த்து அவர் பரிதாபப்படுகிறார் என்பதை அந்த கண்களின் பார்வை கூறியது. எனக்கு அவரின் மீதும் பரிதாப உணர்ச்சி இருந்தது. எனக்கொரு வாழ்க்கையைத் தருவதற்கு.... தனக்குத் தானே ஒரு வாழ்க்கையை உருவாக்கிக் கொள்வதற்கு முடியாத அந்த தைரியமற்ற மனிதரின் மீது எனக்கு கடுமையான வெறுப்பு தோன்றியது.

கோட் அணிவதற்கு அவர் வேண்டுமென்றே ஒரு அதிக நேரத்தை எடுத்துக் கொள்கிறார் என்று கூடத்தில் அவரைப் பயணம் அனுப்பும் வேளையில் எனக்கு தோன்றியது. எதுவும் கூறாமல் அவர் என் கையில் இரண்டு தடவைகள் முத்தமிட்டார். கண்ணீரின் கோடுகள் விழுந்திருந்த என் முகத்தையே நீண்ட நேரம் பார்த்துக் கொண்டு நின்றிருந்தார். ஒரு வேளை அன்றைய இடி முழக்கத்தையும், காற்றையும், சரிந்து பெய்த மழையையும், நாங்கள் நன்றாகச் சேர்ந்து சிரித்து சந்தோஷமாக இருந்ததையும், என் அப்போதைய முகத்தையும் நினைத்துப் பார்த்திருக்கலாம். அவர் என்னவோ கூற நினைத்தார். கூற ஆசைப்படுவதைப் போல.... ஆனால், எதுவும் கூறவில்லை. தலையை ஆட்ட மட்டும் செய்தார். தொடர்ந்து கைகளை இறுக பிடித்து குலுக்கினார்.

அவரை அனுப்பி விட்டு நான் மீண்டும் குளிர் காயவும் அடுப்பிற்கு அருகில் அமர்ந்தேன். அணைந்து கொண்டிருந்த தீக்கனல்களில் சாம்பலின் மெல்லிய அடையாளம்... வெளியே பனி எப்போதுமிருப்பதை விட அதிகமாக இருந்தது... அடுப்பில் மோதி காற்று ஒரு சோக ஓசையை உண்டாக்கியது.

நான் தூங்கி விட்டேன் என்று கருதி பணிப்பெண் என்னைத் தொட்டு, அழைத்தாள்...

Page Divider

 

+Novels

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

மகாலட்சுமி

March 22, 2013,

தந்தை விழுந்தபோது...

March 8, 2012,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

ரகசியம்

ரகசியம்

January 17, 2013

அம்மா

அம்மா

May 24, 2012

கடிதம்

கடிதம்

September 24, 2012

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel