'மிஸ். என்'னின் கதை
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 5560
'மிஸ். என்'னின் கதை
(ரஷ்ய கதை)
ஆன்டன் செக்காவ்
தமிழில் : சுரா
ஒ
நல்ல கால நிலையாக இருந்தது. ஆனால், நாங்கள் திரும்பி வந்தபோது வானத்தில் இடிச் சத்தங்கள் கேட்டன. கறுத்து இருண்டு போய் காணப்பட்ட ஒரு மேகம் கோபத்துடன் எங்களை நோக்கி வேகமாக வந்தது. மேகம் எங்களை நெருங்கி...நெருங்கி வந்தது. நாங்கள் மேகத்தை நோக்கி...
அந்த மேகத்தின் பின்புலத்தில் எங்களுடைய வீடும் அங்குள்ள தேவாலயமும் வெண்மை நிறத்தில் தெளிவாக தெரிந்தன. உயரமான பாப்லார் மரங்களிலும் வெள்ளியைப் போன்ற பிரகாசம்... காற்றில் பெய்ய தயாராக இருக்கும் மழை மற்றும் வெட்டி போடப்பட்ட புதிய வைக்கோலின் வாசனை... என் நண்பர் முன்பு எந்தச் சமயத்திலும் பார்த்திராத அளவிற்கு உற்சாகம் நிறைந்தவராக இருந்தார். அவர் உரத்த குரலில் சிரித்து எல்லா வகையான முட்டாள்தனங்களையும் வெளிப்படுத்தி பேசிக் கொண்டிருந்தார். 'கலை வேலைப்பாடுகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த கோபுரங்களையும், பாசி படர்ந்த சுவர்களையும், ஏராளமான வவ்வால்களையும் கொண்டிருந்த ஒரு மத்திய கால கோட்டையைப் பார்த்து, மழையிலிருந்து தப்பிக்க இடம் தேடினோம். இறுதியில் பலமான ஒரு இடி, மின்னலில் உயிரை இழந்து ... நினைப்பதற்கு மிகவும் சுவாரசியமாக இருக்கிறது!' - அவர் கூறினார்.
வயல்களுக்கு மேலே முதல் ஆக்கிரமிப்பை வெளிப்படுத்துவதைப் போல பலமாக ஒரு காற்று வீசியது. வெட்டவெளியெங்கும் தூசி நிறைந்தது. ப்யோதர் ஸெர்ஜியேவிச் உரத்த குரலில் சிரித்தவாறு குதிரையின் வேகத்தை அதிகரித்தார்.
'அழகு'! அவர் உரத்த குரலில் சத்தம் போட்டு கூறினார்: 'அருமை!' ஒரு நிமிடத்திற்குள் நான் ஒட்டு மொத்தமாக நனைந்து குளித்து விடுவேன் என்பதையும், ஒரே இடி மின்னலில் எரிந்து அடங்கிப் போய் விடுவேன் என்பதையும் எண்ணி உற்சாகமடைந்து அவருடைய சந்தோஷம் படர்ந்து பிடித்துக் கொண்டதைப் போல நானும் சிரித்தேன்.
சீறிப் பாய்ந்து சென்ற விதமும், அந்த சூறாவளி காற்றும் சேர, மேலும் கீழும் மூச்சு விட்டபோது, ஒரு பறவை என்ற தோணல் கம்பீரமான ஒரு ஆவேசத்தை உண்டாக்கியது. நாங்கள் வாசலை அடைந்தபோது, காற்று குறைந்து விட்டிருந்தது. மேற்கூரைகளிலும் புற்களின் நுனிப் பகுதிகளிலும் பெரிய நீர் துளிகள் சொட்டிக் கொண்டிருந்தன. குதிரை லாயத்திற்கு அருகில் ஒரு ஆள் கூட இல்லை.
ப்யோதர் ஸெர்ஜியேவிச் குதிரைகளை அவிழ்த்து லாயத்தில் கட்டினார். அவரை எதிர்பார்த்து வாசலில் நின்றிருந்தபோது, என் கண்கள் சாய்வாக பெய்து கொண்டிருந்த மழையின் மீது இருந்தன. வெறுப்பை உண்டாக்கும் வைக்கோலின் வாசனை வெளியே இருப்பதை விட அங்கு அதிகமாக இருந்தது. மழையும் மேகமும் சேர்ந்து முழுமையான இருளைப் பரவச் செய்திருந்தன.
'அது பயங்கரமாக இருந்தது. எதையாவது அழித்திருக்கும்!' - வானத்தை இரண்டாக பிளந்த பெரிய ஒரு இடிச் சத்தத்திற்குப் பின்னால் என்னை நோக்கி நடந்தவாறு அவர் கூறினார்.
அந்த சீறிப் பாய்ச்சல் அளித்த பெருமூச்சுடன் எனக்கு நெருக்கமாக வாசலுக்கு அருகில் நின்றவாறு அவர் என்னை கூர்ந்து பார்த்தார் - வழிபடுவதைப் போல.
'நடாலியா வ்ளாடிமிரோவ்னா...' - அவர் கூறினார்: உன்னையே பார்த்தவாறு அருகில் இப்படி நிற்கக் கூடிய சந்தர்ப்பத்திற்குப் பதிலாக எதை வேண்டுமானாலும் நான் தருவேன். இன்று நீ பேரழகியாக இருக்கிறாய்!'
அவருடைய கண்களில் ஆனந்தமும் வேண்டுகோளும் இருந்தன. முகம் வெளிறிப் போய் காணப்பட்டது. அந்த மீசையிலும் தாடி உரோமங்களிலும் ஒட்டிக் கொண்டிருந்த நீர்த் துளிகள் கூட என்னை அன்புடன் பார்ப்பதைப் போல தோன்றியது.
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' - அவர் கூறினார்: 'எனக்கு உன் மீது எந்த அளவிற்கு விருப்பம் இருக்கிறது என்று தெரியுமா? உன்னைப் பார்க்க முடிவதில் எந்த அளவிற்கு சந்தோஷம் இருக்கிறது என்று தெரியுமா? என்னைத் திருமணம் செய்து கொள்ள உன்னால் முடியாது என்று எனக்கு தெரியும். எனக்கு எதுவுமே வேண்டாம். நான் எதையும் விருப்பப்படவுமில்லை. நான் உன்னைக் காதலிக்கிறேன் என்பதை நீ அறிந்து கொண்டால் மட்டும் போதும். எதுவுமே கூற வேண்டாம். பதில் கூற வேண்டாம். பார்த்ததாக காட்டிக் கொள்ளவே வேண்டாம். நான் உன்னைக் காதலிக்கிறேன் என்பதைத் தெரிந்து கொள்., உன்னைப் பார்த்துக் கொண்டு நின்றிருப்பதற்கு அனுமதி தா.'
அவருடைய அளவற்ற சந்தோஷத்தை என்னால் நன்கு புரிந்து கொள்ள முடிந்தது. பிரகாசமாகக் காணப்பட்ட அந்த முகத்தையே நான் கூர்ந்து பார்த்தேன். மழையின் சத்தத்துடன் சேர்ந்து ஒலித்த அந்த குரலைக் கேட்பதற்காக நான் காதுகளைத் தீட்டி வைத்திருந்தேன். அசையக் கூட முடியாத அளவிற்கு சிலையைப் போல ஆகி விட்டேன் நான்.
அவருடைய பிரகாசிக்கும் கண்களையே பார்த்துக் கொண்டே இருப்பதற்கும், அந்த குரலை எப்போதும் கேட்டுக் கொண்டே இருப்பதற்கும் நான் ஆசைப்பட்டேன்.
'நீ பேரமைதியுடன் இருப்பவளாயிற்றே! நல்லது... இந்த பேரமைதியை மீற வேண்டாம்.!'
எனக்கு மிகுந்த மகிழ்ச்சி உண்டானது. முழுமையான சந்தோஷத்துடன் சிரித்தவாறு பெரிதாக பெய்து கொண்டிருந்த மழையில் நான் வீட்டிற்குள் ஓடி நுழைந்தேன். சிரித்தவாறு அவரும் சேறு நிறைந்த குழிகளைத் தாவிக் கடந்து என்னுடன் சேர்ந்து ஓடி வந்தார்.
குழந்தைகளைப் போல சத்தம் போட்டவாறு, முழுமையாக நனைந்து, மேலும் கீழும் மூச்சு விட்டு, படிகளில் ஓசை உண்டாக்கி நாங்கள் ஓய்வு அறைக்குள் வேகமாக நுழைந்தோம். என்னிடம் வழக்கத்தில் இல்லாத உரத்த சிரிப்பையும் உற்சாகத்தையும் கண்டு, ஆச்சரியத்துடன் பார்த்து அப்பாவும் சகோதரனும் சிரிக்க ஆரம்பித்தார்கள்.
மழை மேகங்கள் மறைந்தன... இடிச் சத்தங்கள் கேட்காமல் ஆயின... ப்யோதர் ஸெர்ஜியேவிச்சின் தாடி உரோமங்களில் நீர்த் துளிகள் ஒளிர்ந்து கொண்டேயிருந்தன. இரவு உணவு வரை அவர் பாட்டு பாடிக் கொண்டும், சீட்டியடித்துக் கொண்டும், நாயைக் குளிப்பாட்டிக் கொண்டும் இருந்தார். நாய்க்குப் பின்னால் அறைகளைக் கடந்த அலட்சியமான ஓட்டத்திற்கு மத்தியில் அவர் குளிர் காய்வதற்கான நெருப்புடன் வந்த வேலைக்காரனைத் தட்டி வீழ்த்தினார். இரவு உணவின்போது அவர் நன்றாக உணவு சாப்பிட்டார். நிறுத்தாமல் பேசினார். 'குளிர் காலத்தில் பச்சை வெள்ளரியைச் சாப்பிட்டால் மூச்சுக்கு வசந்தத்தின் வாசனை இருக்கும்' என்றும் கூறினார்.