மறையும் சூரியனும் மாறும் உலகமும் - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7052
கிளறிக்கொண்டிருந்த மண்வெட்டியிலிருந்தும் தோண்டிப் போட்ட மண்ணிலிருந்தும் தன்னுடைய முதுமை அடைந்த கண்களை உயர்த்தி கிழவன் முஸோனி வானத்தைப் பார்த்தான். அவனுடைய வேலையையும் சிந்தனைகளையும் தொல்லைப்படுத்திக் கொண்டிருந்த அந்த வெள்ளைப் புள்ளி வானத்தின் விளிம்பின் அருகில், நீல நிற வானத்தின் ஓரத்தை அடைந்துவிட்டிருந்தது. வானத்தின் தெற்குச் சரிவின் வழியாக அது மறைந்து கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருந்த அவன் அமைதியற்ற மனதுடன் தலையை ஆட்டினான். மேற்கு திசை சூரியன் தாழ்வதற்கு தொடங்கியிருக்கிறது. சூரியன் வறுத்தெடுத்த மண், தன்மீது விழுந்த சூரியனின் கொழுந்துகளை ஏற்று, நிழல்கள் நிமிடம்தோறும் கிழக்கு நோக்கிப் படர்வதையும் மங்கலாவதையும் வளர்வதையும் அவன் பார்த்தான். தன்னையே அறியாமல் மழைக்கும் மோட்சத்திற் குமாக வேண்டிக் கொண்டு அவன் தன்னுடைய வேலைக்குத் திரும்பினான். தன்னுடைய மகன் நோமோ வருவதை அவன் பார்க்கவேயில்லை.
அருகிலிருந்த மணலில் மறைந்து நின்று கொண்டு நோமோ தன் தந்தையை வணங்கினான். கிழவன் மெதுவாக சுய உணர்வுக்கு வந்து, மண்வெட்டியைப் பிடித்து நின்று கொண்டு, நாள் முழுவதும் தன்னை அலட்டிக்கொண்டிருந்த விஷயத்தைப் பற்றி அவனிடம் கேட்டான்.
“நீ உன் மனதை மாற்றி விட்டாயா?''
“இல்லை அப்பா.''
மவுனம் நிறைந்த ஒரு நிமிடம். பிறகு... கிழவன் மண்வெட்டியிலிருந்த மண்ணை நீக்க ஆரம்பித்தான்.
“நீ இதைப் பற்றி சிந்தித்தாயா மகனே?''
“வாரக்கணக்கில்...''
“அதற்குப் பிறகும், இதுதான் வழி என்று நீ நினைக்கிறாயா?''
“வேறு எந்தவொரு வழியும் இல்லை.''
கிழவனுக்கு மீண்டும் கோபம் வந்தது. இது ஒருவேளை தன் மகனுடன் பேசிக் கொண்டிருக்கும் இறுதி நாளாக இருக்கலாம். மகன் போவதாக இருந்தால், அவன் மீது கோபப்படக் கூடாது. அது ஒரு சாபத்திற்கு நிகரான விஷயமாக இருக்கும். கடந்த காலத்தில் தானும் சாகசங்கள் புரிந்திருந்தாலும், இப்போது தந்தை என்ற நிலையில் அவன் சிந்திக்க வேண்டியதிருக்கிறது.
குடும்பத்திற்காக அவன் அடிமையைப்போல வேலை செய்தான். மண் ஏமாற்றவில்லை. வெளிஉலகத்தில் மகனின் மரணத்தையும் அழிவையும் தவிர வேறெதையும் இப்போது அவனால் பார்க்க முடியவில்லை. சிங்கங்கள் இல்லாவிட்டாலும் மாமிசத்தைச் சாப்பிடும் மிருகங்கள் வேறு இருக்கின்றன என்ற விஷயம் அவனுக்குத் தெரியும். சிங்கத்தைவிட சிவந்த நகங்களைக் கொண்ட மிருகங்கள்... அவை அனாதையான ஒரு குட்டியை வெறுமனே விடாது. வானத்தில் பார்த்த வெள்ளை நிற இயந்திரப் பறவையைப் பற்றி நினைத்துப் பார்த்தபோது, அவனுக்கு கவலை வந்து சேர்ந்தது.
“மீண்டும் சிந்தித்துப் பார்... நீ அழிந்து போவாய்... நம்மைப் பற்றி... குடும்பத்தைப் பற்றி... எல்லாவற்றையும் மீண்டும் சிந்தித்துப் பார்... சிறிதாக இருந்தாலும், நமக்கென்று ஒரு வீடு இருக்கு. ஒரு நாளாவது அதை விட்டுச் செல்வதைப் பற்றி உன்னால் சிந்தித்துப் பார்க்க முடிகிறதா?''
“நான் எல்லாவற்றையும் சிந்தித்துப் பார்த்துவிட்டேன் அப்பா. இந்த ஒரு வழி மட்டுமே எனக்குத் தெரிகிறது.''
“மண்ணையும் குடும்பத்தையும் விட்டெறிந்து விட்டு போகிற ஒரே ஒரு வழி அல்ல- இப்படிப் போவது என்பது.''
“மண் தர வேண்டியவற்றையெல்லாம் தந்தாகிவிட்டது. இனி அது தருவதற்கு எதுவுமே இல்லை. குடும்பத்தை எடுத்துக் கொண்டால், பெரும்பாலும் அது தகர்ந்து போய்விட்டது.''
கிழவனுக்கு கோபம் வந்துவிட்டது. "உண்மைதான். மண் பாழாகிவிட்டது. குடும்பம் என்ற மரம் வேரற்றுப் போனதும் வெயிலில் கரிந்து போனதும் உண்மைதான். எப்போதாவது உண்டாகும் என்று நாம் நினைத்தே பார்த்திராத, முன்பு எப்போதுமே இல்லாமலிருந்த பலவும் நடந்து கொண்டிருப்பதும் உண்மைதான். ஆனால், மண்ணைப் போல நம்மை ஒன்றாகச் சேர்த்து வைக்கின்ற ஒன்று எந்தக் காலத்திலும் இருந்ததில்லை. அப்படியே இல்லையென்றாலும், தாய்ப்பாலின் மணம் மாறாத, மீசைகூட முளைக்காத நீ எங்கே போகலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாய்? உன்னைவிட இரண்டு மடங்கு வயது கொண்டவர்கள் போவதும் வருவதுமாக, மொத்தத்தில் தளர்ந்துபோய் இருக்கக்கூடிய இந்தக் கொடூரமான உலகத்தில் உனக்கு என்ன நடக்கும்? வாழ்க்கையைப் பற்றி உனக்கு என்ன தெரியும்? காட்டுத் தேனீக்கள் வழி தவறச் செய்து நாள் முழுவதும் காடெங்கும் அலைய வைத்து பாம்புகளின் கூட்டத்தில் கொண்டு போய்விட்டால், நீ என்ன செய்வாய்?” ஆனால், அவனிடம் கிழவன் இப்படிக் கூறினான்: “இங்கே பார்... நீ கேட்டது எதையாவது நான் மறுத்திருக்கிறேனா? நீ கேட்டபோது, கையில் இருப்பது எதுவாக இருந்தாலும் நான் தராமல் இருந்திருக்கிறேனா?''
“ம்... அப்பா, நீங்க எனக்கு எல்லாவற்றையும் தந்திருக்கீங்க.''
அடக்கி நிறுத்தி வைத்திருந்த கோபம் அணையை உடைத்துக் கொண்டு முகத்தில் வெளிப்பட்டாலும், அவன் வேகமாக கடிவாளம் போட்டு அதைப் பிடித்து வைத்துக் கொண்டான். "நீங்கள் எனக்கு புல்லைத் தந்தீர்கள். படிப்பின் மதிப்பைப் பற்றி எடுத்துக் கூறி, நீங்கள் என்னை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி வைத்தீர்கள். ஆனால், அவை அனைத்தும் குப்பையில் எறிந்துவிட்டு, பாழாகிவிட்ட நிலத்தைக் கிளறி வாழ்க்கையை ஓட்டும்படி நீங்கள் இப்போது என்னிடம் கூறுகிறீர்கள். அவை எல்லாவற்றையும் மறந்துவிட்டு இந்த சாணக் குவியலைச் சுற்றியிருக்கும் மரணத்திற்கு நிகரான மந்தப் போக்கில் உங்களுடன் பங்கு கொள்ளுமாறு கூறுகிறீர்கள். என் வாழ்க்கையை உருப்படியாக்க, ஆயுட்காலத்தில் ஒருமுறை மட்டுமே கிடைக்கக்கூடிய, எனக்கு என்னுடைய வாழ்க்கையைச் சீர் செய்து கொள்ளக்கூடிய ஒரேயொரு சந்தர்ப்பத்தைப் பார்த்து உங்களுக்கு என் மீது பொறாமை உண்டாகிறது. நீங்கள் உங்களுடைய மரணத்தை நினைத்து பயப்படுகிறீர்கள். எது எப்படி இருந்தாலும், அது உங்களுடைய மரணம் மட்டுமே. நான் இன்னும் சிறிது காலம் வாழ்கிறேன். எனக்கு ஒரு குடும்பம் தேவையென்றால், நான் அதை உருவாக்கிக் கொள்வேன்... நீங்கள் நினைப்பதைவிட நான் திறமைசாலியாகவும் நீங்கள் கற்பனை பண்ணியிருப்பதைவிட புத்திசாலியாகவும் இருப்பேன்.” ஆனால், அவனும் கூறியது இதைத்தான்.