மறையும் சூரியனும் மாறும் உலகமும் - Page 3
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7052
“அப்பா, என்னைப் பற்றி கொஞ்சம்கூட கவலைப்படாதீங்க. நான் சந்தோஷமாக இருப்பேன். எனக்கு இந்த சந்தர்ப்பத்தைத் தாருங்கள். எல்லா அழிவுகளிலிருந்தும் விடுபடச் செய்து, எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்.''
மகனுடைய இந்த வார்த்தைகளைக் கேட்டு கிழவனின் கண்கள் மின்னின. ஆனால், மண்வெட்டியை கூர்மைப்படுத்தும் பளபளப்பான ஒரு வெள்ளைக் கல்லின் மீது திடீரென்று தூசி படிந்ததைப் போல கிழவன் கண்களின் வெளிச்சத்தை ஏதோ ஒரு மெல்லிய திரை முழுமையாக மறைத்துவிட்டிருந்தது. வார்த்தைகள், கொல்லனின் கற்பனையில் உண்டான கைப்பிடிகளைப் போன்றவை. மெல்லிய எதிர்ப்பால் அவை முறிந்து போகின்றன வாழ்க்கையின் முரட்டுத்தனமான சதைகளைச் சுற்றி குவிந்திருக்கும் அடர்த்தியான கொழுப்புகளே அவை.
“நீ என்ன செய்கிறாய் என்று உனக்குத் தெரியுமா, மகனே?''
“ம்...''
“வீட்டை விட்டுச் சென்ற பிறகு, நிலைமை என்ன ஆகும் என்று தெரியுமா?''
“தெரியும் அப்பா.''
“அழுக்கிலும், எலிப் புழுக்கைகளிலும் கிடந்து, பரிதாபங்களில் வாழ்ந்து, மரத்திலோ குழியிலோ இரவு நேரத்தில் உறங்கி, கனவுகளைப் பங்கு போட முடியாமல், பார்ப்பதற்கோ கூறுவதற்கோ யாருமில்லாமல் மழையும் வெயிலும் குளிரும் ஏற்று, ஊரும் பேரும் இல்லாத ஊர் சுற்றியாய்... என்ன உண்டாகப் போகிறது என்று தெரியுமா? உன்னுடைய எதிர்பார்ப்புகள் அகாலத்தில் பழைய வீட்டைப்போல தரையில் இடிந்து கீழே விழும். உன்னுடைய கனவுகள் சாம்பலாகிவிடும். நல்ல விஷயங்களைப் பார்க்க முடியாமல் ஒரு சிறிய எதிர்பார்ப்புகளும் இல்லாமல் எதற்காக வாழ வேண்டும்?'' தொடர்ந்து தனக்குத்தானே கூறிக்கொண்டார். "காலத்தின் அர்த்தமற்ற விஷயங்களும் முதுமையின் வேதனைகளும் உனக்குத் தெரியுமா? என் தங்க மகனே? கனவோ எதிர்பார்ப்போ நம்பிக்கையோ இல்லாமல் எப்படி உன்னால் வாழ முடிகிறது? கொடுமையான ஏமாற்றங்களை நீ அறிந்திருக்கிறாயா மகனே?'
“எனக்குத் தெரியும் அப்பா. புறப்படுவதற்கு தேவையான விஷயங்கள் அவ்வளவும் எனக்குத் தெரியும். மீதி விஷயங்களை பயணத்தின்போது நான் தெரிந்து கொள்வேன். திரும்பி வருவதற்கு தேவையானவற்றையும்...''
“எங்கே திரும்பி வருவது?'' கிழவன் அவனைப் பார்த்தான். தொடர்ந்து சொன்னான்: “துன்பங்கள் நோக்கி யாரும் திரும்பி வருவது இல்லை. நீ போ... உனக்குத் தெரியாத ஏதோ சில விஷயங்கள் உன்னை வேறு இடங்களுக்கு இழுத்துக்கொண்டு செல்லலாம். நீ என்ற ஒரேயொரு துயரம் எஞ்சி இருப்பது வரை... அழிவுகளில் இருந்து அழிவுகளுக்குக் கொண்டு செல்லலாம். அழக்கூட முடியாமல் நீ இடிந்து போவாய், மகனே. ஆனால் மழைப் பறவைகளிடமிருந்து நீ கற்றுக்கொள்ள வேண்டும். இனிமேல் சிறிதும் உழக்கூடாது என்ற கொடுங்காற்றைப் பற்றி உள்ள அதன் முன்னறிவிப்பைத் கேட்க வேண்டும். தூரத்தில் பசுமையோ அமைதியோ இல்லாத பாலைவனப் பகுதிகளுக்கு சூறாவளிக் காற்று உன்னை இழுத்துக்கொண்டு சென்றால், என்ன செய்வாய்? அதற்குப் பிறகு என்ன நடக்கும். மகனே?''
அவன் தளர்ந்து போனான். இரண்டு மாதங்களுக்குமேல் ஆகிவிட்டன. அவர்கள் இதைப் பற்றியெல்லாம் விவாதம் செய்து கொண்டிருந்தனர். நீர் வரும் வாய்க்கால்களைத் தேடிச் செல்லும் மிருகங்களைப்போல, ஒரே இடங்களின் வழியாக பயணித்து பாறை மண்ணின் ஆழங்களிலிருந்து அவர்கள் நீரை மொண்டார்கள். ரத்தத்தையும் நீரையும் முழுமையாக எடுத்துவிட்டு வாழ்க்கையை ஒரு எலும்புக்கூடாக மாற்றினார்கள். ஆனால், இப்போது அவர்கள் தாழ்வாரத்தில் குளிர் தேடி மணல் வெளி வழியாக பைத்தியம் பிடித்ததைப்போல வேகமாகப் பாய்ந்து கொண்டிருக்கிறார்கள். வெறும் எண்ணங்கள்... வெறும் வார்த்தைகள்... இல்லாவிட்டால் என்ன வார்த்தைகள்? பாழ்மண்ணில் ஒரு பாழ்செடியை வளர்க்க முயற்சிப்பதைப்போல...
“போ... என் மகனே, உனக்கு என்னுடைய ஆசீர்வாதம் இருக்கும். உனக்குத் தருவதற்கு எவுமில்லை. நான் கூறியது என்ன என்பதை நினைத்துப் பார்க்கும்போது, நீ திரும்பி வரலாம். இந்த மண் உனக்கு சொந்தமானதாகவே இருக்கும். நான் உயிருடன் இருந்தால், ஒரு வீடு உனக்காகக் காத்திருக்கும்.''
“சரி அப்பா.''
“நீ வெளி உலகத்திற்குச் செல்கிறாய். பாதுகாப்புக்காக உனக்கு ஏதாவது தேவைப்படும். போவதற்கு முன்னால், நீ சிரம்பயைப் பார்க்க வேண்டும். நான் அதற்கான பணத்தைத் தந்துவிடுகிறேன் என்று அவரிடம் கூறு. பயணம் நல்லதாக இருக்கட்டும், மகனே.''
“சரி அப்பா.''
நோமோ புன்னகைத்தான். தன் தந்தையின்மீது அப்போது அவனுக்கு அளவற்ற அன்பு உண்டானது. ஆனால், அங்கு இருந்த, அவனுடைய பழைய காலம் மணக்கக்கூடிய பாழ்பொருட்கள் அவனிடம் வெறுப்பை உண்டாக்கியது. அவன் சிரம்பயின் வீட்டுக் குச் செல்வான். ஆனால், வீட்டின் அமைதியற்ற தன்மைகளில் இருந்து தூரத்தை அடையும்போது, அவன் அந்த தாயத்தை எரித்து விடுவான். அவன் தன்னுடைய சொந்தக் கால்களிலும் திறமையிலும் பலமாக நிற்பான். பலம் நம்முடையது; பிறகு கடவுளுடையது. ஆனால், நமக்கு இப்போது உலகம் கடவுள் இல்லாததாகவும் வெளிச்சம் இல்லாததாகவும் இருக்கிறது. வெளிச்சத்திற்காக தட்டுத் தடுமாறி உழலும்போது நாம் விரும்பக்கூடிய மயக்க மருந்துகளே அவை. நமக்கு இப்போது அவை தேவையில்லை. வெளிச்சத்திற்காக ஒரு நெருப்புக் குச்சியை எடுக்க வேண்டும். நோமோ சிரித்துவிட்டான்.
ஆனாலும் விரைவிலேயே மென்மையான இதயம் கொண்டவனாக ஆகிவிட்டான். ஞானிகளுக்கு மட்டுமே தெரியக்கூடிய சில விஷயங்களில் அவனுடைய மனம் இடற ஆரம்பித்தது. தன் தந்தையுடன் உள்ள அவனுடைய மனத் தொடர்புகள் அனைத்தும் அறுந்தன. இனி இயற்கையுடன் உள்ள உறவு மட்டுமே. அவன் சுதந்திரமானவனாக ஆகிவிட்டான். அவர்களுடைய உரையாடலுக்கு சற்று முன்பு, அவனுடைய தந்தை பார்த்த விமானத்தைப் பற்றி அவன் நினைத்துப் பார்த்தான். வானத்திற்கு எல்லைகளும் உறவுகளும் இல்லை. அடர்ந்த இருட்டின் எல்லையற்ற தன்மையில் முடிவே இல்லாத சலனத்திற்கான சட்டமே உள்ளது. அவன் நட்சத்திரங்களுடன் சேர்ந்து அசைய விரும்பினான். தேவையான இடங்களிலெல்லாம் எல்லையற்ற வெளிச்சத்தை அளிக்கும், தன்னைத் தானே பற்றி எரியும் சூரியனாக அவன் இருந்தான். அதுதான் அவனுடைய தர்மமாக இருந்தது. பூமியிலிருந்து தங்களை இல்லாமல் செய்யும் சூழ்நிலைகளை உண்டாக்கக்கூடிய ஆழமான விஷயங்களைத் தெரிந்து கொள்வதில் அவனுடைய முன்னோர் களும் தந்தையும் தோல்வியடைந்து விட்டார்கள். இந்த சிந்தனைகள் அவனை ஒரு பாடலின் வரிகளில் கொண்டு போய் சேர்த்தது. "என்ன அதிசயம் இந்த உலகம்' -ஸ்வச்சமோவின் குரலுடன் மிகவும் நெருக்கமாக நின்று அவன் அந்தச் சாயலில் பாட முயற்சித்தான். சந்தோஷமான வேளைகளில் அவன் பாடல்களுக்கு மாறுவான்.
விடை பெற்றுச் செல்லும் தன் மகனை, கிழவன் பார்த்துக் கொண்டு நிற்கவில்லை. அவன் கண்ணுக்குத் தெரியாத எதிர்காலத்தின் இருண்ட கணங்களில் மனதைச் செலுத்த முயற்சித்துக் கொண்டிருந்தான். எவ்வளவோ விஷயங்கள் நடக்கலாம். ஆனால் குடும்பத்திற்கு- குறிப்பாக பிடிவாதக்காரனான இளைய மகன் நோமோவிற்கு வேதனை தரக்கூடிய எதுவும் நடந்துவிடக் கூடாது. நாளை பொழுது மலர்வதற்கு முன்னால் சிரம்பயைப்போய் பார்க்கவேண்டும் என்று அவன் நினைத்தான். தன் மகனின் எதிர்காலத்திற்காக பூஜை செய்ய வேண்டும் என்று அவன் சிரம்பயிடம் கேட்டுக் கொள்ள வேண்டும். பரிகாரம் கேட்கும் முன்னோர்கள் இருந்தால், அவர்களுக்காகவும் அவன் அதைச் செய்வான்.
சூரியன் கீழே போய்க் கொண்டிருப்பதை அவன் பார்த்தான். அதற்குப் பிறகும், அவன் மண்வெட்டியை உயர்த்தி கிளறிக் கொண்டிருந்தான்.
ரத்தச் சிவப்புடன் சூரியன் மெதுவாக இறங்கிச் சென்றது. பகல் வெளிச்சத்தின் கடுமை குறைந்து விட்டிருந்தது. வெகு சீக்கிரமே, மண்வெளியில் ஒரு குளிர்ந்த காற்று வீசியடிக்கும். மேகமற்ற வானம் காட்டு மண்ணில் வெள்ளை எறும்புகளைப் போன்ற இடைவிடாத மழைத் துளிகளைக் கீழே உதிர்த்துக் கொண்டிருக்கும்.