பப்பு குருடனான கதை
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 5273
பப்பு குருடனான கதை
எம். முகுந்தன்
தமிழில்: சுரா
சிலர் பிறக்கும்போதே குருடர்களாக ஆவார்கள். சிலர் கண்ணில் வசூரி வந்து குருடர்களாக ஆகிறார்கள். சிலர் திமிர் பிடித்து குருடர்களாக ஆகிறார்கள்.
பப்புவிற்கு திமிர் பிடிக்கவில்லை. கண்ணில் வசூரி வரவில்லை. பிறந்த போது கண்ணுக்கு பார்க்கும் சக்தி இருந்தது.
எனினும், பப்பு குருடனாக ஆகி விட்டான்.
பப்புவின் கதை ஆரம்பிப்பது அவனுக்கு பதினெட்டு வயது நடக்கும்போது. பப்புவின் கதை சோகக் கதை. பதினெட்டு வயது வரை பப்பு வாழவில்லை. அவன் கர்ப்பப் பையிலிருந்து வெளியே வந்ததே பதினெட்டு வயதில்தான் என்று கூறலாம். சிறு வயதில் அவன் சொன்னதைக் கேட்கக் கூடிய ஒரு நல்ல பையனாக இருந்தான். அவன் ஒழுங்காக பள்ளிக் கூடத்திற்குச் சென்றான். அது மட்டுமல்ல - படித்து வகுப்புகள் ஒவ்வொன்றையும் தாவிக் கடந்தான்.
'நல்ல ஒரு பையன்!'
ஊரில் உள்ளவர்கள் எப்போதும் அப்படித்தான் கூறிக் கொண்டிருந்தார்கள்.
'அந்த கல்யாணி புண்ணியம் செய்தவள். அவளுக்கு இப்படியொரு மகன் கிடைத்தானே!'
அப்படி நிலைமை போய்க் கொண்டிருக்க, அவனுக்கு பதினெட்டு வயது ஆனது. அப்போதும் அவன் அப்பாவியாகத்தான் இருந்தான். நல்லவனாக இருந்தான்.
'அப்போதும் அவன் குருடனாக இருக்கவில்லை.'
அவன் சூரியனைப் பார்த்திருந்தான். இரவில் நட்சத்திரங்களையும் நிலவையும் பார்த்திருந்தான். பறவைகள் பறப்பதையும் பார்த்திருந்தான். மரங்களைப் பார்த்திருந்தான். சூரிய அஸ்தமனத்தைப் பார்த்திருந்தான். புலர் காலைப் பொழுதைப் பார்த்திருந்தான். எல்லாவற்றையும் பார்த்திருந்தான். குருடனாக இருக்கவில்லை.
பப்புவின் வீட்டிற்கு முன்னால்தான் ராமுண்ணி நாயர் வசிக்கிறார். ராமுண்ணி நாயருக்கு ஒரு மகள் இருக்கிறாள். மகளுக்கு பதினாறு வயது. பதினாறு வயது கொண்ட பெண் பேரழகு படைத்தவளாக இருந்தாள். பேரழகியின் பெயர் வல்சலா.
ஒரு நாள் வாழை மரத்திற்குக் கீழே அமர்ந்து பதினாறு வயதுக்காரி வாந்தி எடுப்பதை அவளுடைய தாய் பார்த்தாள்.
'என்ன வல்சலா, மகளே.... உனக்கு சுகமில்லையா?'
அவளுடைய அன்னை அவளின் முதுகைத் தடவிக் கொடுத்தாள். அவள் சொன்னாள்:
'தலை சுத்துதும்மா...'
வல்சலாவின் தாய் அவளைத் தாங்கிப் பிடித்து, அறைக்குள் கொண்டு போய் படுக்க வைத்தாள். மறுநாளும் அவள் வாந்தி எடுத்தாள். அதற்கு மறுநாளும்....
'யாரு மூதேவி? யார்னு சொல்லு. அதுதான் உனக்கு நல்லது.'
வல்சலா செயலற்ற நிலையில் தன் தாயின் முகத்தையே பார்த்தாள்.
'மற்றவர்களின் முகத்தில் கரி தேய்க்கலாம் என்று நினைச்சால், உன்னை நான் உயிரோட விட மாட்டேன். உன்னை நான் கொன்னுடுவேன்.'
ராமுண்ணி நாயர் கர்ஜித்தார்.
ராமுண்ணி நாயரின் கர்ஜனை சத்தத்தைக் கேட்டு வல்சலா பதைபதைத்துப் போனாள்.
ராமுண்ணி நாயரின் கர்ஜனையைக் கேட்டு மகள் பதைபதைத்தாள்.
'நீ சொல்ல மாட்டியா? நீ சொல்ல மாட்டியா?'
அன்னையின் கை வல்சலாவின் முதுகில் விழுந்தது.
வல்சலா அவளுடைய கட்டிலுக்குச் சென்று கவிழ்ந்து படுத்து உரத்த குரலில் அழுதாள். அவள் பள்ளிக் கூடத்திற்குச் செல்லவில்லை. குளிக்கவில்லை. உணவு சாப்பிடவில்லை.
வல்சலா பள்ளிக் கூடத்திற்குச் செல்லவில்லை.
வல்சலா குளிக்கவில்லை.
வல்சலா உணவு சாப்பிடவில்லை.
'என் தங்க மகள் அல்லவா? அம்மாக்கிட்ட சொல்லு.... யாரு?' தாய் அவளுடைய முதுகிலும் தலையிலும் தடவினாள்.
'யாரும் இல்ல.'
அவள் தேம்பித் தேம்பி அழுவதற்கு மத்தியில் கூறினாள்.
'எனக்கு கர்ப்பம் இல்ல...'
அவள் சொன்னாள்:
'எனக்கு கர்ப்பம் இல்ல...'
வல்சலா சொன்னாள்:
'எனக்கு கர்ப்பம் இல்ல...'
ராமுண்ணி நாயரின் மகள் சொன்னாள்:
'எனக்கு கர்ப்பம் இல்ல...'
பப்புவின் பக்கத்து வீட்டுக்காரி சொன்னாள்.
ஆனால், அவள் கர்ப்பமாகத்தான் இருந்தாள். அவளுடைய அடிவயிறு வீங்கிக் கொண்டு வந்தது.
தன் தாயின் கால்களில் விழுந்து, குலுங்கிக் குலுங்கி அழுதவாறு அவள் சொன்னாள்:
'இல்லை அம்மா... எனக்கு கர்ப்பம் இல்ல... நான் யாருடனும்...'
வல்சலா குலுங்கிக் குலுங்கி அழுதாள். தந்தையும் தாயும் செயலற்று நின்றார்கள்.
தன்னை யாரும் தொடக்கூட இல்லை என்று எல்லா தெய்வங்களையும் தொட்டு வல்சலா சத்தியம் செய்தாள். தந்தையையும் தாயையும் தொட்டு சத்தியம் செய்தாள்.
'இது என்ன ஒரு அதிசயம்!'
ஊர்க்காரர்கள் கூறினார்கள்.
'கலிகாலம்! கலிகாலத்தில் இப்படி பலவும் நடக்கும்!'
ஊர்க்காரர்கள் கூறினார்கள்.
'அந்த அப்பாவிப் பொண்ணு அழுது அழுது ஒரு வழி ஆயிடுச்சு!'
ஊர்க்காரர்கள் கூறினார்கள்.
மாதம் ஆனபோது, வல்சலா பிரசவமானாள். குழந்தை ஆணாக இருந்தது. குழந்தைக்கு பப்புவின் முகச் சாயல் இருந்தது.
'மகாபாவி.... நீ என் முகத்தில் கரியைத் தேய்ச்சிட்டியே!'
பப்புவின் தாய் மார்பில் அடித்துக் கொண்டு கூப்பாடு போட்டாள்.
'மற்றவர்களின் முகத்தை நான் இனி எப்படி பார்ப்பேன்? என் கடவுளே...!'
பப்புவின் தாய் மார்பில் அடித்துக் கொண்டு கூப்பாடு போட்டாள்.
'இங்கிருந்து போ. வெளியேறி எங்கேயாவது போ. இனி நீ என் மகனே இல்ல.'
பப்புவின் தாய் மார்பில் அடித்துக் கொண்டு கூப்பாடு போட்டாள்.
பப்புவோ செயலற்று நின்றிருந்தான்.
'எனினும், பப்பு பையன் இதைச் செய்வான்னு யாரும் நினைக்கவேயில்லை.'
'ஊமைப் பூனை பானையை உடைக்கும்.'
'நான் அவளை கையால தொடல.'
பப்பு சொன்னான்.
'கையால தொட வேண்டாம். ஏன் தொடணும்?'
அதைக் கூறிய ஆள் பலமாக சிரித்தான்.
பப்புவிற்கு எதுவும் புரியவில்லை. அவன் திகைப்படைந்து நின்று விட்டான். அவன் எல்லா தெய்வங்களையும் தொட்டு சத்தியம் செய்தான்.
அவன் வல்சலாவை எதுவும் செய்யவில்லை. அவன் அவளைப் பற்றி மனதில் நினைத்துக் கூட பார்ப்பதில்லை. பிறகு... பப்பு எப்படி அவளைக் கர்ப்பமாக ஆக்கியிருக்க முடியும்?
பப்பு கூறுகிறான் -- அவன் வல்சலாவைத் தொடவே இல்லை என்று. வல்சலா கூறுகிறாள் -- அவள் அவனைத் தொடவே இல்லை என்று. ஆனால், குழந்தை வளர... வளர அதற்கு வெளிப்படையாகவே பப்புவின் முகச் சாயல் உண்டானது.
நாட்கள் கடந்து சென்றன.
பப்புவின் கல்லூரிக்கு அருகிலிருக்கும் கள்ளு இறக்கும் தொழிலாளியான கண்ணனின் மனைவி பிரசவித்தாள். குழந்தைக்கு பப்புவின் முகச் சாயல் இருந்தது.
'மீசை முளைக்கவில்லை. அதற்கு முன்பே....'
ஊர்க்காரர்கள் கூறினார்கள்.
'அடிச்சு காலை ஒடிக்கணும்.'
ஊர்க்காரர்கள் கூறினார்கள்.
பிரசவமாகி கிடந்த தன் மனைவியை கண்ணன் மிதிக்கவும், குத்தவும் செய்தான். அடியும் இடியும் வாங்கி உரத்த குரலில் அழுவதற்கு மத்தியில் கண்ணன் மனைவி முணுமுணுத்தாள்:
'அவன் என்னைத் தொடவே இல்ல...'
'போ.... இங்கேயிருந்து குழந்தையைத் தூக்கிக் கொண்டு போ.'
கண்ணன் அவளுடைய தலை முடியைப் பிடித்து, அவளைக் கட்டிலிலிருந்து கீழே இழுத்துப் போட்டான்.