பப்பு குருடனான கதை - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 5272
'நான் சொல்றதை கேளுங்க. அவன் இங்கே வரல. என் அம்மா மேல சத்தியம்... பகவதி மேல சத்தியம்...!'
அவள் கண்ணனின் கால்களில் விழுந்து அழுதாள்.
கல்யாணியம்மாவும் அழுதாள். அறையைப் பூட்டிவிட்டு, அதற்குள் படுத்து அவள் எப்போதும் அழுது கொண்டேயிருந்தாள்.
'அவள் பாவி!'
ஊர்க்காரர்கள் கூறினார்கள்.
'இப்படியொரு பையன் அவளுடைய வயிற்றில் பிறந்திருக்கிறானே!'
ஊர்க்காரர்கள் கூறினார்கள்.
நாட்கள் கடந்து சென்றன. வல்சலாவின் குழந்தை கவிழ்ந்து விழவும் தரையில் தவழவும் படித்தது. கள்ளு இறக்கும் தொழிலாளியான கண்ணனின் மகனும் வளர்ந்து கொண்டிருந்தான்.
கல்யாணியம்மாவின் கவலை குறைந்து கொண்டிருந்தது. அப்போதுதான் காட்டுத் தீயை போல செய்தி பரவியது. சப் கலெக்டர் சந்திரமேனவனின் மனைவி பிரசவமானாள். குழந்தைக்கு பப்புவின் முகச் சாயல் இருந்தது.
'உனக்கு கூறுவதற்கு எதுவுமில்லையா?'
சந்திரமேனவன் தன் மனைவியிடம் கேட்டான். அவன் புகைத்துப் போட்ட சிகரெட் துண்டுகள் சாம்பல் தட்டு நிறைந்து மேஜையின் மீதும் தரையிலும் கிடந்தன.
'இல்லை.'
அம்மிணி சொன்னாள்.
'உனக்கு அவனைத் தெரியாதா?'
'இல்ல...'
'அவன் உன்னைத் தொடலையா?'
'இல்ல...'
அவன் புன்னகைத்தான். ஒன்றிற்குப் பின்னால் இன்னொன்று என்று சிகரெட்டுகளைப் பற்ற வைத்தவாறு அவன் தன்னுடைய நாற்காலியில் அமர்ந்திருந்தான்.
அம்மிணி பிரசவமாகி இரண்டு வாரங்கள் கடந்த பிறகு, தையல்காரன் நாணுவின் மனைவி ஜானு பிரசவமானாள். ஜானுவின் குழந்தைக்கும் பப்புவின் முகச் சாயல் இருந்தது.
'இது என்ன ஒரு கதை!'
ஊர்க்காரர்கள் வானத்தைப் பார்த்தார்கள்.
'அவனை இப்படி கயிறை அவிழ்த்து விட்டால், அவன் இந்த ஊரையே ஒரு வழி பண்ணிடுவான்!'
ஊர்க்காரர்கள் கோபப்பட்டார்கள்.
'அவனை ஏன் குற்றம் சுமத்துறீங்க? அவனுக்குப் பின்னால் போற பெண்களைத்தான் சொல்லணும்.'
ஊர்க்காரர்கள் பப்புவை நியாயப்படுத்த முயற்சித்தார்கள்.
ராமுண்ணி நாயரின் மனைவிக்கு கர்ப்பம்.
ராமுண்ணி நாயரின் மனைவி... வல்சலாவின் தாய்....
ராமுண்ணி நாயரின் மனைவி பப்புவின் பக்கத்து வீட்டில் வசிக்கிறாள்.
ராமுண்ணி நாயரின் மனைவி பிரசவமாவதைப் பார்ப்பதற்கு ஆட்களுக்கு மிகுந்த ஆர்வம் உண்டானது. அவர்கள் ஒருவருக்கொருவர் கேட்டுக் கொண்டார்கள்:
'அவளுக்கு இது எத்தனையாவது மாதம்?'
'அஞ்சு...'
'அஞ்சுதான் ஆகுதா?'
சிலர் ராமுண்ணி நாயரின் மனைவி பிரசவமாவதைப் பார்ப்பதற்கு அவசரப்பட்டார்கள்.
இதற்கிடையில் கல்லூரியில் ஆங்கில பேராசிரியராக பணியாற்றும் ஜனார்த்தனின் மகள் ப்ரேமா பிரசவமானாள். அவள் திருமணமாகாதவள். வழக்கம்போல குழந்தைக்கு பப்புவின் முகச் சாயல்....
ராமுண்ணி நாயரின் மனைவிக்கு ஆறு மாதம் ஆனது.
ஏழு ஆனது.
எட்டு ஆனது.
ஒன்பது ஆனது.
ஒன்பதரை ஆனது.
ராமுண்ணி நாயரின் மனைவிக்கு பிரசவ வேதனை ஆரம்பமாகி விட்டது என்று கேள்விப்பட்ட ஊர்க்காரர்கள் ராமுண்ணி நாயரின் வீட்டிற்கு வந்தார்கள். சிலர் திண்ணையில் ஏறி உட்கார்ந்தார்கள். சிலர் வெளியே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தார்கள்.
ராமுண்ணி நாயரின் மனைவி பிரசவமானாள். வல்சலாவின் தாய் பிரசவமானாள். பப்புவின் பக்கத்து வீட்டிலிருக்கும் ராமுண்ணி நாயரின் மனைவி பிரசவமானாள்.
குழந்தைக்கு பப்புவின் முகச் சாயல் இருந்தது.
பப்புவை நடுத்தெருவில் தரையில் வீழ்த்தி, ஊர்க்காரர்கள் அடித்து, உதைத்தார்கள்.
கல்யாணியம்மாவிடம் அவர்கள் கூறினார்கள்:
'மகனைப் பிடித்து கட்டிப் போடுவதுதான் நல்லது. இல்லாவிட்டால் பப்பு என்ற ஒரு மகன் உங்களுக்கு இருக்க மாட்டான். சொல்றதைச் சொல்லிட்டோம்.'
'அவன் என் மகன் இல்ல.'
பப்புவின் தாய் சொன்னாள்.
'அவனை என்ன வேணும்னாலும் செய்யுங்க. கொல்லுங்க...'
கணவனை இழந்து விட்ட பப்புவின் தாய்க்கு கர்ப்பம் உண்டாகி, அவள் பிரசவமும் ஆனாள். குழந்தைக்கு பப்புவின் முகச் சாயல் இருந்தது.
உலகம் அதிர்ச்சியடைந்து நின்று விட்டது. ஊர்க்காரர்கள் வெறி பிடித்தவர்களைப் போல ஆனார்கள். பெண்கள் பப்புவிற்கு பயந்து வெளியே வராமல் இருந்தார்கள்.
'இதற்கு பின்னால் ஏதோ ரகசியம் இருக்கு.'
ஊர்க்காரர்கள் கூறினார்கள்.
அவர்களால் அதைக் கண்டு பிடிக்க முடியவில்லை.
அவர்கள் ஆற்றைக் கடந்து, மலைகளை ஏறி கடந்து, கேளு நாயரைப் போய் பார்த்தார்கள். கேளு நாயர் வந்து, வாயில் இருந்த வெற்றிலை எச்சிலைத் துப்பி விட்டு, தன்னுடைய பருமனான கையை பப்புவின் தோளில் வைத்தார்.
'மகனே, நீ இதுவரை ஒரு பெண்ணுடனும் சேர்ந்து படுத்தது இல்லையா?'
'இல்ல...'
'உண்மையாகவா?'
'உண்மையா...'
பப்பு தேம்பித் தேம்பி அழுதான்.
'அழ வேண்டாம்... அழ வேண்டாம்.'
கேளு நாயரின் குரல் கனிவு நிறைந்ததாக இருந்தது. கேளு நாயர் பப்புவின் வீட்டிற்கு வெளியே வந்தபோது, ஊர்க்காரர்கள் கேட்டார்கள்:
'என்ன கேளு நாயர், ரகசியம் என்னன்னு தெரிஞ்சிருச்சா?'
'ம்...'
கேளு நாயர் முனகினார்.
'அவன் பெண்களைப் பார்த்தால், பெண்களுக்கு கர்ப்பம் உண்டாகும்' - கேளு நாயர் கூறினார்: 'பாவம்... குழந்தை.' கேளு நாயர் சென்று விட்ட மறுநாள் பப்பு, தன் கண்களைக் குத்தி குருடாக்கிக் கொண்டான்.