பார்
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 8822
இரண்டு நண்பர்கள்- தாமோதரனும் ஜோஸும்- பாரில் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தார்கள். ஜோஸ் சொன்னான்: “டேய், என்னை நடுங்க வைக்கிற கெட்ட கனவு மரணம் கிடையாது. செத்துப் போயிட் டேன்னு நினைச்சு என்னை உயிரோட சவப்பெட்டிக் குள்ள வச்சு மூடுறதுதான். சவக்குழிக்குள்ள என்னை மண் போட்டு மூடினதுக்கப்புறம், இனி எந்தக் காலத்திலயும் திறக்க முடியாத பெட்டிக்குள்ள படுத்தபடி நான் கண்ணைத் திறந்து பக்குறேன் பாரு... இதுதாண்டா நான் வாழ்க்கையிலேயே பயப்படற விஷயம்...”
தாமோதரன் சொன்னான்: “டேய், நீ சொன்னது ஒருவிதத்துல வினோதமான ஒரு விஷயம்தான். என்னை பயமுறுத்திக்கிட்டு இருக்குற விஷயமும் கிட்டத்தட்ட இதே மாதிரிதான். அதாவது நான் செத்துப் போயிட்டேன்னு என்னை சிதையில வச்சு நெருப்பை மூட்டி எரிக்கிறாங்க. நான் கண்களைத் திறந்து பாக்குறேன். ஆனா, என்னால அசைய முடியல. வாயைத் திறந்து கத்தக்கூட முடியல... கத்துறதுக்கு சக்தி இருந்தால்தானே?”
“தாமோதரா...” ஒரு மாமிசத் துண்டை வாயில் வைத்தவாறு ஜோஸ் சொன்னான்: “இது உண்மையிலேயே கேட்க பயங்கரமாகத்தான் இருக்கு. சொல்லப்போனால், நாம ரெண்டு பேருடைய பயமும் ஒரே மாதிரிதான் இருக்கு...”
தாமோதரன் தூரத்தில் எங்கோ பார்த்தவாறு சொன்னான்: “டேய், உண்மையிலேயே பார்க்கப்போனா தேவையில்லாம நாம மரணத்தைப் பற்றி பயந்துக்கிட்டு இருக்கோம்னு நினைக்கிறேன்.”
ஜோஸ் கேட்டான்: “நாம ஏன்டா மரணத்தைப் பார்த்து இப்படி பயப்படணும்? சின்னப் பிள்ளைங்களைப் பாரு- அவங்களுக்கு மரண பயம் இல்லவே இல்ல...”
“நீ சொல்றது சரிதான்.” தாமோதரன் சொன்னான்: “வளர்றப்போ நம்ம மூளையோட சுருள்ல இதெல்லாம் வந்து ஒட்டிக்குது!”
ஜோஸ் சொன்னான்: “அதுக்குப் பிறகு காமம்!”
தாமோதரன் சொன்னான்: “குரோதம்!”
ஜோஸ் சொன்னாள்: “பொய்.”
தாமோதரன் சொன்னான்: ஆணவம்.”
இப்படியே பேசிக்கெண்டிருந்த அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துப் பெருமூச்சு விட்டுக்கொண்டார்கள்.
ஜோஸ் இருவரின் கண்ணாடி டம்ளர்களிலும் ரம் ஊற்றினான். தாமோதரன் இரண்டிலும் சோடாவைக் கலந்தான். ஒரு வெயிட்டர் வந்து அவர்களைப் பார்த்தான். எதுவும் வேண்டாம் என்று அவர்கள் தலையை ஆட்டியவுடன் அவன் திரும்பிப் போனான்.
அப்போது அவர்கள் அமர்ந்திருந்த மேஜைக்கு பக்கத்து மேஜையில் தனியே அமர்ந்திருந்த ஒரு நடுத்தர வயது மனிதர், அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றி ஒரு முடிவுக்கு வர முடியாமல் அவர்களைப் பார்த்துப் புன்சிரித்தார். அவர் பீர் குடித்துக்கொண்டிருந்தார். பீரை குடித்து முடித்து கழுத்தில் கட்டியிருந்த மஃப்ளரை இலோசாகக் கைகளால் தளர்த்திய வண்ணம் பக்கத்தில் வந்து அவர்கள் முன் நின்றவாறு சொன்னார்: “மன்னிக்கணும். நீங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருந்ததை நானும் கேட்டேன். நீங்க பேசிக்கிட்டு இருந்த விஷயத்தோட தொடர்புள்ள மாதிரியான அனுபவம் என் வாழ்க்கையிலயும் நடந்திருக்கு. உங்களுக்கு ஒண்ணும் பிரச்சினை இல்லைன்னா, அந்த விஷயத்தை நான் சொல்லலாமா?”
அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்தவாறு இது என்ன புதுக்கதை என்பது மாதிரி அவரைப் பார்த்தார்கள். அவர் கேட்டதற்கு அவர்கள் பதில் எதுவும் கூறவில்லை. சரி என்று சம்மதமும் சொல்லவில்லை. அவர் அப்போது அங்கேயே நின்றிருந்தார். அவரின் புன்சிரிப்பு கொஞ்சம் கொஞ்சமாக மறைந்தது. அவர் திரும்பிப் போகலாம் என்று முடிவெடுத்து பின்னோக்கித் திரும்பவே, அவர்கள் இருவரும் புன்னகை தவழ அவரைப் பார்த்தவாறு, அவரை அமரும்படி கைகளால் சைகை செய்தார்கள். அவர் தான் அமர்ந்திருந்த மேஜையில் இருந்த கண்ணாடி டம்ளரில் பீரை ஊற்றியவாறு திரும்பி வந்து, டம்ளரை அவர்கள் இருந்த மேஜைமேல் வைத்து, ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு உட்கார்ந்தார். டம்ளரில் கையை வைத்துக்கொண்டு அவர் சொன்னார்: “தேங்க்ஸ்...” ஜோஸும் தாமோதரனும் தங்களின் டம்ளர்களை உயர்த்திப் பிடித்தவாறு சொன்னார்கள்: “சியேர்ஸ்...” “சியேர்ஸ்” -அவரும் சொன்னார். சொல்லிவிட்டு அவர் கொஞ்சம் பீரைக் குடித்தார். அவர்கள் அவர் என்ன சொல்லப்போகிறார் என்ற எதிர்பார்ப்புடன் அவரின் முகத்தையே பார்த்தவாறு அமர்ந்திருந்தார்கள். அப்போது அவர் சொன்னார்: “நான் தண்ணி அடிச்சிட்டு இதைச் சொல்றேன்னு நினைக்காதீங்க. நீங்க தீவிரமா சிந்திச்சுப் பேசுறதைக் கேட்டதும் எனக்கும் ஒரு தைரியம் வந்துச்சு. நான் இந்த சம்பவத்தை இதுக்கு முன்னாடி யார்கிட்டயும் சொன்னதில்ல. உங்கக்கிட்டதான் முதல் தடவையா சொல்றேன். நான் இதை எப்படி உங்கக்கிட்ட விவரிக்கப் போறேன்றதைத் தெரிஞ்சுக்க நானே ஆர்வமா இருக்கிறேன். காரணம்- நம்முடைய அனுபவமும், அந்த அனுபவத்தை விவரிச்சுச் சொல்றதும் ரெண்டு மாறுபட்ட அனுபவங்கள் இல்லையா? நீங்க பேசிக்கிட்டு இருந்ததைக் கேட்டப்போ, உங்களுக்கு இப்படிப்பட்ட ஒரு அனுபவத்தை தெரிஞ்சுக்கிறதுல நிச்சயம் ஆர்வம் இருக்கும்னு அந்த நிமிஷத்திலேயே நான் புரிஞ்சுக்கிட்டேன். என்னோட ஞாபகத்துல இருந்து எப்பவோ நடந்த சம்பவத்தை விவரிச்சு சொல்றப்போ, என்னோட அனுபவத்தை நானும் புதுப்பிச்சுக்கிட்ட மாதிரியும் இருக்கும். நான் வேகமா நடந்த சம்பவத்தைச் சொல்றேன்.” அவர், அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்ற எதிர்பார்ப்புடன் அவர்களைப் பார்த்தார். அவர்கள் சம்மதம் என்கிற மாதிரி தலையை ஆட்டினார்கள்.
அவர் டம்ளரில் இருந்த பீரைக் குடித்து முடித்தார். தன் மேஜையில் இருந்த குப்பியில் இருந்து பீரை மீண்டும் டம்ளரில் ஊற்றினார். குப்பியை மீண்டும் அதே மேஜையில் திரும்பவும் வைத்தார். ஜோஸும் தாமோதரனும் தங்கள் டம்ளர்களில் இருந்த மதுவை ஒரே மூச்சில் குடித்து முடித்தார்கள். மீண்டும் மதுவை ஊற்றி சோடாவைக் கலந்தார்கள். ஜோஸ் வறுத்த மாமிசம் இருந்த பாத்திரத்தை அவருக்கு நேராக நீட்டினான். அவர் தலையை ஆட்டியவாறு சொன்னார்: “தேங்க்ஸ்... நான் மாமிசம் சாப்பிடுறதை நிறுத்தி ஆறு வருடங்களாச்சு...”
ஜோஸ் கேட்டான்: “நீங்க இப்போ என்ன சொல்லப்போறீங்க?” இந்தக் கேள்வியை அவரைப் பார்த்துக் கேட்ட அவன், கைகள் இரண்ûயும் மார்பின்மேல் கட்டியவாறு நாற்காலியில் பின்னோக் கிச் சாய்ந்தான். தாமோதரன் கண்ணாடியைக் கழற்றி கண்களைத் துடைத்து மீண்டும் கண்ணாடியை முகத்தில் அணிந்தான். அவன் சொன்னான்: “உண்மையாகச் சொல்லப் போனால், எங்களுக்கு இதெல்லாம் புரியக்கூடிய விஷயங்களே இல்ல... தெரியுதா...” அவர் புன்னகைத்தவாறு சொன்னார். “நான் ஆசிரியராகப் பணியாற்றிய ஆளுன்றதுனால, என்னால ஆளுகளோட முகங்களைப் பார்த்தே ஓரளவுக்குப் புரிஞ்சுக்க முடியும்!”
சிறிது பீர் குடித்துவிட்டு, அவர் தொடர்ந்தார்:
“நான் ஆறு வருடத்திற்கு முன்னாடி வரை, பதினைஞ்சு வருடங்கள் ஆஃப்ரிக்கா...ன்ற நாட்ல ஆசிரியரா வேலை பார்த்தேன்.