பார் - Page 3
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 8822
அவர் மீண்டும் பீர் குடித்தார். ஜோஸ் சொன்னான். “நான் கொஞ்சம் டாய்லெட் வரை போயிட்டு வர்றேன்.” தாமோதரனும் நடுத்தர வயது மனிதரும் இப்போது தனியே அமர்ந்திருந்தார்கள். தாமோதரன் பார் கவுன்டர் அருகில் இருந்த கூட்டத்தைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தான். ஜோஸ் திரும்பவும் வந்து சொன்னான்: “ஸாரி...”
அந்த மனிதர் தொடர்ந்தார். “கடைசில, ஒரு நாள் என்னோட தண்டனைக்கான நாள் வந்தது. கயிறு என் கழுத்தை இறுக்கி னப்போ, நான் இலேசாக அதிர்ந்தேன். காரணம், என்னோட ரெண்டு கண்களையும் அவங்க கட்டியிருந்ததால, நான் எதிர் பார்க்காத ஒரு சம்பவம்போல எனக்கு அது இருந்துச்சு. என் முகத்தை முழுவதையும் மூடி, கையையும் கால்களையும் கட்டி இருக்குறப்பவே எனக்கு பட்டுருச்சு- மரணமும் நானும் கருப்புதான்னு. அதாவது மரணமும் நானும் ஒண்ணா சங்கம மாயிட்டோம்னு. பிறகு எதற்கு தேவையில்லாம இந்தக் கயிறு? அந்தக் கயிறும், அதுல போடப்பட்டிருந்த முடிச்சும், எனக்கும் மரணத்துக்குமிடையே உண்டாகியிருந்த ஒரு ஒருங்கிணைப்புக் குள்ளே அனாவசியமா தலையை நீட்டின மாதிரி நான் உணர்ந்தேன். ஆனா, அது என்னோட கழுத்தை இறுக்கினப்போ அதுவும் அந்தக் கருப்போட பாகமாகவே மாறிடுச்சு. அதற்குப் பிறகு... தூக்குமரக் குழியில் விழப்போறதுதான். அதை நினைச்சு நான் விரைச்சுப் போனேன். அப்படி விழறதுல இருந்து தப்பிக்க கையையும் கால்களையும் வேகமா ஆட்டினா என்னன்ன நினைச்சேன். கழுத்தை வேகமாக இறுக்கும் கருப்பு... இதுதான் என்னோட இறுதி தண்டனை பற்றி எனக்கிருக்கும் நினைவு...”
ஒரு வெயிட்டர் வந்து அவர்களையும், மேஜைமேல் இருந்தவற்றையும் பார்த்துவிட்டுப்போனான். ஜோஸ் தன் கண்ணாடி டம்ளரில் இருந்த மதுவையே பார்த்துக் கொண்டிருந்தான். டம்ளருக்கு அடியில் என்னவோ ஒளிவீசிக் கொண்டிருப்பதுபோல உணர்ந்தான் ஜோஸ். மதுவிற்குள் ஒரு விரலை நுழைத்து ஒளிவீசிக்கொண்டிருப்பதை எடுத்தால் என்ன என்று அவன் நினைத்தான்.
அவர் சொன்னார்: “இந்தியாவைவிட வறுமையும், பாதுகாப்பற்ற தன்மையும், குற்றச் செயல்களும் நிறைஞ்ச நாடு அது. என் கழுத்தில் போட்டிருந்த கயிறு அறுந்து, நான் மயக்கமடைஞ்சு தூக்கு மரக்குழியில கிடக்குறேன். உயிரோட இருக்குற என் உடலைத் தூக்கிக்கிட்டு சிறை அதிகாரிங்க நெஞ்சு பதைபதைக்க இப்படியும் அப்படியுமா ஓடுறாங்க. அந்த நாட்டோட சட்டப்படி என்னை இன்னொரு தடவை தூக்குப் போடவோ தண்டனை கொடுக்கவோ முடியாது. இப்போகூட குளிர்காலம் வந்துட்டா, என் கழுத்துல தாங்க முடியாத அளவுக்கு வேதனை உண்டாகுது. அதற்காகத்தான் நான் கழுத்துல இந்த மஃப்ளரைச் சுத்தி வச்சிருக்கேன்.” அவர் தான் கழுத்தில் சுற்றியிருந்த மஃப்ளரை அவிழ்த்தார். ஜோஸும் தாமோதரனும் அவரின் கழுத்தையே உற்றுப் பார்த்தார்கள். அவர் மீண்டும் மஃப்ளரைச் சுற்றிவிட்டுத் தொடர்ந்தார்.
“நான் சிறையைவிட்டு வெளியே வந்தேன். எனக்கு எங்கே போறதுன்னே தெரியல. போறதுக்கு ஒரு இடமும் இல்ல. என்னோட பழைய நண்பர்களைத் தேடிப்போனேன். என் முகத்தைப் பார்த்த அடுத்த நிமிடமே, அவங்க தங்களோட கதவை அடைச்சிடுவாங்க. நான் மரணத்தில இருந்து தப்பிச்சு வந்ததைப் பார்த்து சந்தோஷப்படுறதுக்கு இந்த உலகத்துல யாருமே இல்ல... அனாதைகள் தங்கி இருக்குற ஆதரவு இல்லங்கள்ல, அவங்ககூட நான் தங்கினேன். ஒரு நாள் என்கூட உயிர் தப்பிச்ச சிறுவர்கள்ல ஒருத்தனோட அப்பா என்னைப் பார்த்துட்டு, என் பக்கத்துல வந்தார்.. என் கையில் ஒரு கவரை அவர் தந்தார். அதுல, இந்தியா வுக்கு நான் போறதுக்கான டிக்கெட்டும், கொஞ்சம் பணமும் இருந்துச்சு. அவர் என்னைப் பார்த்துச் சொன்னார். “நாங்க எல்லாரும் சேர்ந்து பணம் போட்டு உங்களுக்காக இதை செஞ்சிருக்கோம். உங்களை வழியில வச்சு பார்க்கக்கூட நாங்க விரும்பல. தயவு செஞ்சி இந்த நாட்டைவிட்டு உடனே போங்க...”
நான் திரும்பவும் இந்தியாவுக்கு வந்தேன். எனனோட மனைவி என்னைப் பார்க்க விரும்பல. ஆனா, என் மகன் என்னைப் பார்த்து ஓடி வந்தான். என்னோட ரெண்டு கைகளையும் பிடிச்சுக்கிட்டு அவன் கேட்டான். “அப்பா நான் உங்களுக்குப் போட்ட கடிதம் கிடைச்சுதா?” நான் அவனைத் தூக்கி முத்தம் கொடுத்தவாறு சொன்னேன்: “ஆமா மகனே...” அவன் கேட்டான்: “அப்பா... நீங்க சாகுறதுக்கு முன்னாடியே அது உங்களுக்குக் கிடைச்சிருச்சா?”
“ஆமா மகனே.” நான் சொன்னேன்: “நான் சாகுறதுக்கு முன்னா டியே கிடைச்சிருச்சு. ஆனா நீ எழுதின எழுத்துக்கள் அழிஞ்சு போயிருந்துச்சு. நீ என்ன எபதியிருந்தே?” “அப்பா... நீங்க சாகக்கூடாது... அப்படின்னு நான் எழுதியிருந்தேன். அதை எழுதி முடிச்சப்போ எனக்கு அழுகை அழுகையா வந்துச்சு. அப்பா, இனி நீங்க சாவீங்களா என்ன?”
“இல்ல மகனே......” நான் சொன்னேன். ரெண்டு நாட்கள் கழிச்சு, என் மனைவி அவனையும் தன்னோட அழைச்சிட்டுப்போய், புகை வண்டிக்கு முன்னாடி பாய்ஞ்சு தற்கொலை செஞ்சிக்கிட்டா...”
அவர், அவர்களைப் பார்த்து உயிரே இல்லாமல் ஒரு புன்சிரிப்பைத் தவழவிட்டார். ஜோஸ் டம்ளருக்குள் ஒளிர்ந்து கொண்டிருந்தது என்ன என்று சுண்டுவிரலை உள்ளே விட்டுப் பார்த்துக் கொண்டிருந்தான். தாமோதரன் தன் மீசையின் ஒரு ஓரத்தை உதடுகளுக்கு நடுவில் வைத்துக் கடித்துக்கொண்டிருந்தான். அடுத்த நிமிடம் அவன் ஜோஸின் டம்ளரிலும், தன் டம்ளரிலும் மதுவை ஊற்றினான். அந்த மனிதரின் டம்ளர் காலியாக இருந்தது. அவரின் மேஜை மேல் இருந்த பீர் குப்பியும் காலியாகிவிட்டிருந்தது. தாமோதரன் அவரைப் பார்த்துக் கேட்டான்: “கொஞ்சம் ரம்?” “தேங்கஸ்...” அவர் சொன்னார். “வேண்டாம்.” டம்ளர்களில் சோடா வைக் கலந்து அவர்கள் சிறிது நேரம் மவுனமாக அமர்ந்திருந்தனர். கடைசியில் தாமோதரன் சொன்னான்: “பயங்கரம்...” ஜோஸ் தலையைக் குலுக்கியவாறு சொன்னான்: “பயங்கரம்... உண்மை யிலேயே பயங்கரமான சம்பவம்தான்...”
தாமோதரன் கையை நீட்டி அந்த நடுத்தர வயது மனிதரின் கையைத் தொட்டவாறு சொன்னான். “ஸாரி..” ஜேம்ஸ் அவரின் முகத்தை ஒருவித கூச்சத்துடன் பார்த்தவாறு சொன்னான். “வெரி ஸாரி...” அதற்குப் பிறகு என்ன பேசுவது என்று தெரியாமல் அவர்கள் மேஜையையும் தூரத்தையும் திரும்பத் திரும்பப் பார்த்தார்கள். அவரிடம் இன்னும் நிறைய கேள்விகள் கேட்க வேண்டும் என்று அவர்கள் நினைத்தார்கள். மனித மாமிசத்தைப் பற்றி... ரத்தத்தைப் பற்றி... மரணத்தைத் தழுவுவதற்காக கயிறில் தொங்கிய பிறகு... கண்களைத் திறந்த தருணத்தைப்பற்றி.. புகைவண்டிக்குக் கீழே இறந்த மகனைப் பற்றி... ஆனால், பதில்களைக் கேட்பதற்கான ஆர்வம் அவர்களைவிட்டுப் போய்விட்டது. அவருக்கு ஆறுதலாக என்ன சொல்வது என்றே அவர்களுக்குத் தெரியவில்லை.
வெயிட்டர் பில்லைக் கொண்டு வந்தான். அந்த மனிதர் அவனிடம் பணத்தைத் தந்தார்.
“ஒரு ஸ்மால் குடிக்கலாமா?” ஜோஸ் கேட்டான். “ஒன் ஃபார் தி ரோட்...”
“தேங்க்ஸ்...” -அவர் சொன்னார். “வேண்டாம்.. இன்னைக்கு உள்ள என்னோட அளவு முடிஞ்சிடுச்சு...”
“நாங்க ஏதாவது உங்களுக்குச் செய்யணுமா?” தாமோதரன் கேட்டான்.
“ஒண்ணும் செய்ய வேண்டியது இல்ல... கேட்டதற்கு ரொம்பவும் நன்றி...” அவர் சொன்னார். “மீண்டும் எங்கேயாவது சந்திப்போம்.”
அவர்கள் அவரின் கையைப் பிடித்துக் குலுக்கியவாறு சொன்னார்கள். “குட்லக்... எல்லாம் ஒழுங்கா நடக்கும். நாங்க கிளம்புறதுக்கு இன்னும் கொஞ்சம் நேரமாகும்.”
அவர் மஃப்ளரை கழுத்திலிருந்து அவிழ்த்து, மீண்டும் சுற்றியவாறு அவர்களிடம் விடை பெற்றுக்கொண்டு கிளம்பினார்.
அவர்கள் மீண்டும் மது ஆர்டர் பண்ணிவிட்டு ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தவாறு அமர்ந்திருந்தனர். டம்ளர்களில் ரம்மை ஊற்றியவாறு தாமோதரன் கேட்டான். “இனி இந்த ஆளு என்ன செய்வார்னு நீ நினைக்கிறே?”
ஜோஸ் சொன்னான். “தற்கொலை பண்ணிக்குவாரா?”
தாமோதரன் சொன்னான்: “இவ்வளவு நாள் கழிச்சா? அது இருக்கட்டும். ஒரு விஷயத்தை நீ கவனிச்சியா? இந்த ஆளு கடவுள் நம்பிக்கை உள்ள ஒரு மனிதன். அந்தச் சிறுவனைக் கொல்றப்போ, இவர் கடவுளை நினைச்சு பிரார்த்தனை பண்ணினதா சொன்னாரு. கேட்டியா?”
ஜோஸ் சொன்னான்: “ஆமா... அவர் சொன்னது ஞாபகத்துல இருக்கு...” சில நிமிடங்கள் அவர்கள் இருவரும் ஒன்றுமே பேச வில்லை. அப்போது ஜோஸ் சொன்னான்: “இதெல்லாம் கடவுளுக் குத் தெரிஞ்சுதான் நடக்குதாடா?” தாமோதரன் டம்ளரில் இருந்த மதுவைக் குடித்தவாறு சொன்னான்: “பிறகு?” ஜோஸ் சொன்னான்: “அப்படின்னா பரவாயில்ல...” இப்படிச் சொன்ன அவன், என்ன காரணத்தாலோ அழத் தொடங்கினான். தாமோதரன் அவன் அழுவதையே சிறிது நேரம் பார்த்தவாறு அமர்ந்திருந்தான். பிறகு... அவன் தோளைத் தட்டி ஆறுதல் சொன்ன அவன், ஜோஸையும் அழைத்துக்கொண்டு பாரைவிட்டு வெளியேறினான்.